தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 29 november 2012

புலிகளின் தலைவரை இந்தியா வஞ்சித்த சந்தர்ப்பங்கள்: (அவலங்களின் அத்தியாயங்கள்- 44): நிராஜ் டேவிட்!


தமிழீழ விடுதலைப் புலிகள், இந்தியாவை பகைத்துக் கொண்டதற்கும், இந்தியா மீது போர்தொடுத்ததற்கும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. புலிகள் இந்தியாவை தமது எதிரியாக ஆக்கிக்கொண்டதற்கு இந்தியா புலிகளுக்கு செய்த பல நம்பிக்கைத் துரோகங்களே காரணம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள்.
புலிகளின் தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உட்பட பல தலைவர்களது மரணத்திற்கும், புலிகளின் யாழ் அரசியல் பொறுப்பாளர் திலீபனது மரணத்திற்கும் இந்தியா நேரடியாகக் காரணமாக இந்ததும், இது இந்தியா மீது புலிகளை நம்பிக்கை இழக்கச்செய்திருந்ததும், அதனைத் தொடர்ந்து இந்தியப் படை- புலிகள் மோதல்கள் ஆரம்பமானதும் யாவரும் அறிந்ததே.
ஆனால் இந்திய அரசு மீது புலிகள் வைத்திருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் நீக்கிவிடக் கூடியதாக இருந்ததும், இந்தியா மீது புலிகளை தீராப் பகைகொள்ள வைத்ததுமான இரண்டு சம்பவங்களைக் முக்கியமாகக் குறிப்பிட முடியும்.
இந்தியாவை இனி நம்பிப் பிரயோஜனமில்லை என்று புலிகளை தீர்மானம் எடுக்க வைத்ததற்கும், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்று புலிகளை உறுதிபூணவைத்ததற்கும் அடிப்படையாக இரண்டு முக்கியமான சம்பவங்கள் ஆராய்ச்சியாளர்களால் சுட்டிக் காண்பிக்கப்படுகின்றன.
இந்திய விரோத உணர்வை ஏற்படுத்திய சம்பவங்கள்
•முதலாவது சம்பவம் 8.11.1986 அன்று இடம்பெற்றது. தமிழ் நாட்டில் தஞ்சம் அடைந்திருந்த புலிகளின் தலைவர் பிரபாகரனை இந்தியா கைது செய்தது. அவர்களது ஆயுதங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கருவிகளைக் கைப்பற்றியது.
•அடுத்த சம்பவம் 24.07.1987 இல் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் இருந்த புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை பேச்சுவார்த்தைக்கு என்று இந்தியாவிற்கு அழைத்துச் சென்று, அங்கு அவரை வீட்டுக்காவலில் வைத்ததுடன், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றேயாகவேண்டும் என்று நிர்ப்பந்தம் செலுத்தியது.
இந்த இரண்டு சம்பவங்களுமே, ராஜீவ் காந்தி தலைமையிலான இந்தியாவை எதிர்ப்பதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை என்பதை புலிகளுக்குப் புரியவைத்திருந்த சம்பவங்களாகும்.
இந்தியாவிற்கு எதிராகச் செயற்படும் பாதையை புலிகள் தெரிவுசெய்வதற்கும், இவ்விரு சம்பவங்களுமே பிரதான காரணங்களாகவும் அமைந்திருந்தன.
பின்நாட்களில் இந்தியாவிற்கு எதிராக ஒரு “துன்பியல் சம்பவம்” புலிகளால் மேற்கொள்ளப்படுவதற்கும், இந்த இரண்டு சம்பவங்களுமே பிரதான காரணங்களாக அமைந்திருந்தன.  இதிலே முதலாவதாகக் குறிப்பிடப்பட்ட சம்பவம், 1986ம் ஆண்டு இந்தியா பெங்களுரில் நடைபெற இருந்த “சார்க்” மகாநாட்டை அடிப்படையாகக்கொண்டு இடம்பெற்றிருந்தது.
1986ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம், 16ம், 17ம் திகதிகளில் பெங்களுரில் நடைபெற இருந்த “தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு (சார்க்) மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன இந்தியா வருவதாக இருந்தது. இவரது இந்திய விஜயத்தின் போது புலிகள் மற்றும் தமிழ் நாட்டில் தங்கியிருந்து செயற்பட்டுக் கொண்டிருந்த தமிழ் போராட்ட இயக்கங்கள் தரப்பில் இருந்து ஜே.ஆருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படக்கூடும் என்று இந்தியாவின் புலனாய்வுத் துறை இந்தியப் பிரதமரை எச்சரிக்கை செய்திருந்தது.
இவ்வாறு ஜே.ஆருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்துவிடச் சந்தர்பம் உள்ளது என்றே இந்தியப் பிரதமர் ராஜீவும் நம்பினார். அப்பொழுது ஈழப் போராட்ட அமைப்புக்களுக்கு எதிராக இந்தியா தனது நகர்வை ஆரம்பித்திருந்த காலம். ஆகவே, சார்க் மாநாட்டை அடிப்படையாக வைத்து புலிகளுக்கு ஒரு பாடம் படிப்பிக்கவும் ராஜீவ் காந்தி எண்ணினார்.
“தமிழ் நாட்டில் தங்கியிருக்கும் ஈழப் போராளிகள் “சார்க்” மாநாடு நடைபெறும் பெங்களுருக்குச் சென்றுவிடாமல் பார்த்துக் கொள்ளுமாறு, இந்திய மத்திய உள்துறையில் இருந்து தமிழ் நாடு தலைமைச் செயலாளருக்கு ரகசியத் தகவல் அனுப்பிவைக்கப்பட்டது. தமிழ் நாட்டிலுள்ள போராட்ட அமைப்புக்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு, தமிழ் நாட்டு உளவுத் துறைக்குப் பொறுப்பாக இருந்த டீ.ஜீ.பி. மோகனதாஸிடம் ஒப்படைக்கப்பட்டது.
நவம்பர் மாதம் 8ம் திகதி அதிகாலை தமிழ் நாட்டிலிருந்த ஈழ விடுதலை இயக்கங்களின் முகாம்கள் அனைத்தும் தமிழ் நாட்டுப் பொலிஸாரால் திடீரென்று சுற்றிவளைக்கப்பட்டன.
அதிலும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம்கள் ஒன்றுவிடாமல் முற்றுகையிடப்பட்டு அவர்களது ஆயுதங்கள் தமிழ் நாட்டுப் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன. சுமார் 40 கோடி ரூபாய் பெறுமதியான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக இந்தியப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதத் தொகுதியினுள், SAM-7 (Surface to Air Missile) விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் அடங்கி இருந்ததாக அப்பொழுது செய்திகள் வெளியாகி இருந்தன.
பிரபாகரன் கைது
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் தமிழ் நாடு பொலிஸார் கைது செய்தார்கள். பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட புலிகளின் தலைவரை தமிழ் நாடு பொலிஸார் புகைப்படம் எடுத்ததுடன், அவரை அங்கு அவமானப்படுத்தும் விதத்தில் பொலிஸார் நடந்துகொண்டதாகவும் அப்பொழுது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதன் பின்னர் சார்க் மாநாட்டுக்காக இந்தியா வந்திருந்த ஜே.ஆர்.ஜயவர்தனாவுடன் இந்தியப் பிரதமர் உடன்பாடு கண்டிருந்த ஒரு ஒப்பந்தத்திற்கு,  திரு.பிரபாகரனையும் சம்மதிக்கவைக்கும் நோக்கத்தில் திரு பிரபாகரன் அவர்கள் பெங்களுருக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். (திரு.பிரபாகரன் அவர்கள் பெங்களுர் அழைத்துச் செல்லப்பட்டது. அங்கு அவர் இந்த உடன்பாடை ஏற்க மறுத்தது போன்ற விடயங்கள் பற்றி இத்தொடரில் ஏற்கனவே விபரித்திருந்தேன்.)
விடுதலைப் புலிகள் மீது இந்தியாவின் தீர்மானங்களைத் திணிக்கும் நோக்கத்திலேயே, புலிகளின் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன், புலிகளின் தலைவரும் கைதுசெய்யப்பட்டிருந்தார் என்று புலி உறுப்பினர்கள் அப்பொழுது நம்பினார்கள். தமது அதிருப்தியையும். மனவருத்தத்தையும் பரவலாக வெளியிட்டிருந்தார்கள்.
ஆனால் தலைவர் பிரபாகரன் இந்தியாவின் எந்தவிதமான அழுத்தத்திற்கும் மசியவில்லை. தனது நிலையில் அவர் அசைக்கமுடியாத உறுதியையே கடைப்பிடித்தார். இந்தியாவினதும், ஸ்ரீலங்காவினதும் கூட்டுத்தந்திரத்திற்கு அகப்படாமல் சென்னை திரும்பிய திரு.பிரபாகரனுக்கு மற்றொரு அதிர்ச்சி வைத்தியம் செய்ய இந்தியா முடிவு செய்திருந்தது. “இந்தியாவின் பேச்சை மீறினால் இப்படியான இன்னல்களையெல்லாம் சந்திக்க நேரிடும்” என்பதை புலிகளுக்கு உணர்த்தவே இந்தியா இந்த நகர்வை எடுத்திருந்தது.
புலிகளின் தொலைத்தொடர்பு கருவிகள் பறிமுதல்
புலிகள் வைத்திருந்த தொலைத்தொடர்பு கருவிகளையும் இந்தியப் பொலிஸார் கைப்பற்றினார்கள். புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் தமது உயிரைப் போன்று மதிக்கும் முக்கிய விடயங்களான “ஆயுதங்கள்”, “சயனைட்” போன்று அவர்களது தொலைத்தொடர்பு சாதனங்களும் மிக முக்கியமான ஒன்று. அந்தக் காலத்தில் ஈழமண்ணில் நின்று போராடிய அத்தனை தமிழ் இயக்கங்களிலும் பார்க்க புலிகளது தொலைத் தொடர்பு வலைப்பின்னல்கள் பல மடங்கு முன்னேற்றகரமானவைகள் என்பதுடன் அக்காலத்திலேயே புலிகள் தமது தொலைத்தொடர்பு நடவடிக்கைகளுக்காக மிக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.
அந்த காலத்தில் யாழ் மண்ணில் புலிகளின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்து செயற்பட்டுவந்த கிட்டு அவர்கள், சண்டைக்கள நிலவரங்கள் பற்றி, இந்தியாவில் தமிழ் நாட்டில் தங்கியிருந்த தலைவர் பிரபாகரனுடன் உடனுக்குடன் தொடர்புகொண்டு உத்தரவுகளை பெற்றுக்கொள்ள அதி நவீன தொலைத் தொடர்புக் கருவிகளை கையான்டுவந்தது பற்றி அக்காலத்திலேயே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
அதேபோன்று இந்தியப் படைகள் ஈழமண்ணில் புலிகளிடம் அடிவாங்கிக் கொண்டிருந்த காலத்தில் புலிகள் தரப்பில் இருந்து இந்தியப் படைகளை ஆச்சரியப்பட வைத்திருந்த பல விடயங்களுள், புலிகளின் தொலைத் தொடர்பு செயற்பாடுகளும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி மிகவும் அக்கறையுடன் புலிகளால் கட்டியெழுப்பப்பட்டிருந்த புலிகளின் தொலைத் தொடர்பு சாதனங்கள் இந்தியப் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்ட விடயமானது, இனி இந்தியாவை நம்பிப் பிரயோஜனமில்லை என்று புலிகளை தீர்மானம் எடுக்கும்படி வைத்தது.இந்தியாவை நம்பி தொடர்ந்தும் தமிழ் நாட்டில் தங்கியிருந்து போராட்டம் நடாத்த முடியாது என்பதை
புலிகளுக்கு உணர்த்தும்படியாக இந்தச் சம்பவம் அமைந்திருந்தது.
பிரபாகரனின் உண்ணாவிரதம்.
இதனைத் தொடர்ந்து புலிகளின் தலைவர் பிரபாகரன் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னையில் இருந்த புலிகளது அலுவலகத்தில் ஆரம்பித்ததைத் தொடர்ந்து, இந்தியப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்து புலிகளின் ஆயுதங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் என்பனவற்றை புலிகளிடம் ஒப்படைக்கும்படி தமிழ் நாடு முதலமைச்சர் எம்.ஜீ.ஆர். உத்தரவு பிறப்பித்தார்.
புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் முதற் தடவையாக ஒரு சாத்விகப் போராட்டத்தை நடாத்தும்படியான சந்தர்பத்தை ஏற்படுத்தியிருந்த இந்தச் சம்பவமே, இந்தியா மீது புலிகளை பகைகொள்ள வைத்த முதலாவது சம்பவம் என்று அரசியல் ஆய்வாளர்கள் விமர்சிக்கின்றர்கள்.
இந்தியாவிற்கு எதிராக புலிகளை விரோதம் கொள்ள வைத்த இரண்டாவது சம்பவம் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-24
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-25
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-26
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-27
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-28
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-29
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-30
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-31
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-32
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-33
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-34
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-35
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-36
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-37
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-38
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-39
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-40
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-41
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-42
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-43
  • அவலங்களின் அத்தியாயங்கள்- 44
  • Geen opmerkingen:

    Een reactie posten