தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 23 november 2012

இந்தியா பற்றி புலிகள் வெளியிட்ட அதிர்ச்சிதரும் தகவல்கள்: (அவலங்களின் அத்தியாயங்கள்- 43) – நிராஜ் டேவிட் !!!


இவர் கதைப்படி இவர்களின் உளவாளிகள் இந்தியாவின் சகல துறைகளிலும் ஊடுருவி இருந்திருக்கவேண்டும்,அத்துடன் இவ்வளவு தெளிவானவர்கள் இந்தியாவை பகைத்தால் என்னென்ன இன்னல்கள் நேருமென கணித்து அதற்கு தயாராக இருந்திருக்கவேண்டும்,இன்று இந்த மாற்று மதக்காரர் இக்கதைகளை சொல்லி எதற்கு ஜால்ரா போடுகிறார்,புலிகள் கீஎதம் பாடுகிறார்,அவர்களை உசுப்பேத்தி அழித்தது போதலையோ!!!எதிரியைக்கூட நோகடிக்காமல் வெல்வதே ராஜ தந்திரம்,அது நமக்கு எப்போது வருமோ!!
ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசாங்கம் மேற்கொண்டிருந்த துரோக நடவடிக்கைகள் பற்றி நிறைய விடயங்களைக் கூறமுடியும்.
இந்திய அரசியல்வாதிகளும், இந்தியப் புலனாய்வு பிரிவினரும் ஈழத் தமிழரின் விடுதலைப் போருக்கு எதிராக மேற்கொண்டிருந்த வரலாற்றுத் துரோகங்கள் பற்றி அக்காலத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வெளியாகி இருந்தன.
இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, புலிகளுக்கும் இந்திய படைகளுக்கும் இடையில் யுத்தம் ஆரம்பமானதைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளால் ஒரு நூல் வெளியிடப்பட்டது. தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிராகரித்து இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் பற்றியும், இதில் தமது நிலைப்பாடு பற்றியும் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்கும் முகமாக புலிகள் இந்த நூலை வெளியிட்டிருந்தனர்.
`இந்தியாவும் ஈழத்தமிழர் பிரச்சனையும்` என்ற தலைப்பில் 1987 டிசம்பர் மாதம் தமிழ் நாட்டின் தலைநகர் சென்னையில் இந்த நூல் புலிகளால் வெளியிடப்பட்டது.
அதிர்ச்சி தரக்கூடியவைகளும், சர்ச்சைக்குரியவைகளுமான பல தகவல்கள் இந்த நூலில் தெரிவிக்கப்பட்டிருந்தன. இந்திய அரசின் துரோக நடவடிக்கைகள் பலவும் இந்த புத்தகத்தில் தோலுரித்துக் காட்டப்பட்டிருந்தன.
அந்தப் புத்தகத்தில் தொரிவிக்கப்பட்டவைகளுள் சில:

‘’1987 ஜனவரியில் சிங்கள இனவாத அரசு யாழ் குடாநாட்டில் பொருளாதார முற்றுகையை ஏற்படுத்தியருந்ததுடன், வடக்கிலும் கிழக்கிலும் பெரியளவிலான இராணுவப் படையெடுப்பையும் மேற்கொண்டிருந்தது. வடக்கில் மாத்திரம் இருபதினாயிரத்திற்கு மேற்பட்ட ஸ்ரீலங்காத் துருப்பினர் யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஆனால் எமது விடுதலைப் புலிகள் அணியினரோ, பல்வேறு அரங்குகளில் ஸ்ரீலங்கா அரச படையினரை எதிர்த்து வீராவேசத்துடன் போரிட்டு வந்தனர். ஆயுதங்கள், வெடிமருந்துகள் பற்றாக்குறையுடன் கூட எமது எதிரியை நாம் மிகவும் வெற்றிகரமாகச் சமாளித்துக்கொண்டிருந்தோம்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் இந்திய அரசிடம் ஆயுத உதவி கோரினோம். எமது மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகின்றார்கள் என்பதைச் சுட்டிக் காண்பித்து எமது மக்களை காப்பாற்ற உதவிசெய்யுமாறு நாம் பாரதத்திடம் பலதடவைகள் கோரிக்கைவிடுத்திருந்தோம்.
எமது கோரிக்கையைப் பரிசீலிப்பதாகக் கூறிக்கொண்ட பாரதம் மௌனமாகவே இருந்துவந்தது. நாம் கோரிய ஆயுதப் பட்டியல் விபரங்கள், எமது வெடிமருந்துப் பற்றாக்குறைகள் போன்றவற்றைச் சேகரித்த ’’றோ’’ அதிகாரிகள் அதனை ஸ்ரீலங்கா அரசிடம் சமர்ப்பித்திருந்தார்கள். ’’றோ’’ அதிகாரியான உன்னிக்கிருஷ்ணனே இந்த விடயத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இவர் வழங்கியிருந்த தகவல்களின் அடிப்படையில் ஸ்ரீலங்கா இராணுவம் தமது போர் உபாயங்களை வகுத்து யுத்தத்தை தீவிரப்படுத்தியது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், களத்தில் நின்று போராடிய எமது இயக்கத்திற்கு ஆயுத உதவி அளித்து எமது மக்களைப் பாதுகாக்கத்தயங்கிய இந்தியா, தமிழ் நாட்டில் செயலிழந்து கிடந்த இயக்கங்களுக்கு பயிற்சியும், ஆயுத உதவியும் வழங்க முன்வந்தது.
அத்தோடு இந்த இயக்கங்களை தமிழ் மக்களுக்காகப் போரடிவரும் எமது அமைப்பிற்கெதிராகத் திருப்பிவிடுவதிலும் இந்தியா கவனம் செலுத்தியது. இந்த நடவடிக்கையானது எமக்கு இந்தியா மீதிருந்த நம்பிக்கையை தகர்த்தது. இதன் மூலம் இந்திய அரசின் நோக்கம் எமக்கு தெளிவானது.
விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பலம்வாய்ந்த இராணுவ சக்தியாக உருவெடுத்து ஸ்ரீலங்காப் படையினரைத் தோற்கடிப்பதை இந்தியா விரும்பவில்லை. ``ஸ்ரீலங்காப் படையினர் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து, புலிகளை அழித்து, அவர்களை இராணுவரீதியாகப் பலவீனப்படுத்தவேண்டும். புலிகளால் தமிழ் மக்களைப் பாதுகாக்கமுடியாத சூழ்நிலை உருவாகவேண்டும். மக்கள் மத்தில் புலிகள் மீதிருந்த நம்பிக்கை தளரவேண்டும். அந்தச் சூழ்நிலையில் தமிழ் மக்களின் இரட்சகர் என்ற போர்வையில் நேரடியாக இராணுவரீதியில் தலையிட்டு தனது நலன்களைப் பேணிக்கொள்ளவேண்டும்’’.- இப்படித்தான் இந்திய அரசு திட்டமிட்டது.
அதேசமயம் இந்திய அரசு ஜயவர்த்தனவை மிரட்டி ’’ஏவுகணைகள் உட்பட நவீன ஆயுதங்களை ஈழப் போராட்ட அமைப்புக்களுக்கு வழங்கி ஸ்ரீலங்கா இரணுவத்தை முறியடிப்போம். பெரிய அழிவுகளை உண்டுபண்ணுவோம். எந்தவொரு ஏகாதிபத்திய சக்தியிடம் உதவிபெற்றாலும் யுத்தத்தில் வெல்லமுடியாமல் பண்ணுவோம்’’ என்று மிரட்டும் நடவடிக்கையிலும் ஈடுபட்டது.
தமிழர் நலனில் இந்தியா உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால் விடுதலைப் புலிகளுக்கு ஆயுத உதவி வழங்கி தமிழ் மக்களின் அழிவைத் தடுத்திருக்க முடியும். ஆனால் இந்தியா அதனை விரும்பவில்லை. புலிகளின் வெற்றிக்கு வழிவகுத்துக்கொடுத்துவிட்டால் தனது தலையீட்டுக்கு வாய்ப்புகள் இல்லாமல்போய்விடும் என்று இந்தியா கருதியது.
ஒரு அப்பட்டமான இனப்படுகொலையைத் தடுக்க வேண்டும் என்கின்ற மனிதாபிமான நிலைப்பாட்டைக் கைவிட்டு, தனது பூகோள நலன்களில் மட்டுமே இந்தியா அக்கறை காண்பித்தது.
இலங்கை-இந்திய ஒப்பந்தமானது தமிழீழ மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கவில்லை. இலங்கையில் வாழும் பல்லின மக்களில்; ஒரு சமுகக் குழுவாகவே தமிழீழ மக்கள் கணிப்பிடப்படுகின்றார்கள்.
இந்த ஒப்பந்தமானது தமிழர் தாயகத்தையும், அந்தத் தாயகத்தில் தமிழரின் ஒருமைப்பாட்டு உரிமையையும் அங்கீகரிக்கவில்லை.
தற்காலிக வடக்கு-கிழக்கு இணைப்பு பற்றிக் குறிப்பிட்டபோதும், கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் தமிழர் தாயகத்தை பிரிவுபடுத்தும் ஆபத்தான விதிகளையும் கொண்டிருக்கின்றது. இப்படி தமிழீழ மக்களுக்கு பாதகமான பல குறையாடுகள் இந்த ஒப்பந்தத்தில் காணப்படுகின்றது.
இந்திய அரசானது எம்மை ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணாகதியடையச் சொல்லுகின்றது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நிபந்தனையின்றி ஆதரிக்கச் சொல்லுகின்றது.
நாம் ஆயுதத்தில் காதல்கொண்ட அராஜகவாதிகள் அல்லர். நாம் பலாத்காரத்தை வழிபடும் பயங்கரவாதிகளும் அல்லர். நாம் யுத்த வெறிகொண்ட, இரத்த வெறிகொண்ட வன்முறையாளர்களும் அல்லர். நாம் சமாதானத்தையே விரும்புகின்றோம். எமது மக்கள் சமாதானமாக, நிம்மதியாக, சுயகௌரவத்துடன் சுதந்திரமாக வாழ்வதையே விரும்புகின்றார்கள்.
ஒடுக்கப்பட்ட எமது மக்களின் உரிமையை மீட்டெடுக்கவே நாம் ஆயுதங்களை ஏந்தினோம். அந்த இலட்சியத்திற்காகவே நாம் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வருகின்றோம். அந்த இலட்சியத்திற்காக இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட எமது வீரர்கள் தமது உயிரை அற்பனித்துள்ளார்கள்.
எமது வீரவரலாற்றிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு எம்மைச் சரணாகதி அடையச் சொல்லுகின்றது இந்திய அரசு.
நாம் பாரத நாட்டுடன் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. அவர்களுடன் போர் புரியவும் விரும்பவில்லை. நாம் ஆயுதங்களைக் கீழே போடத் தயாராக இருக்கின்றோம். ஆனால் நாம் ஆயுதங்களைக் கையளித்துவிடுவதால் எமது மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு தரப்பட்டுவிடுமா? எமது மக்கள் நிம்மதியாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழ வழி பிறக்குமா?
நாம் ஆயுதங்களைக் கீழே போடத் தயாராக இருக்கின்றோம். ஆனால் எமது மக்களின் பாதுகாப்பிற்கான உத்தரவாதம் அளிக்கப்படவேண்டும். இந்திய அரசு தனது இராணுவ நடவடிக்கைகளைக் கைவிட்டு, புலிகளை வேட்டையாடுவதைக் கைவிட்டு, எமது மக்களுக்கு சுபீட்சமான ஒரு வாழ்வை, ஒரு நிரந்தரமான தீர்வைக் காண்பதற்கு முன்வரவேண்டும். அப்பொழுது நாம் ஆயுதங்களைக் கீழே போடுவோம்.
இந்திய இராணுவம் எமது மண்ணில் நிகழ்த்திவரும் அடாவடித்தனங்களைக் கண்டு நாம் அஞ்சி அடிப்பணிந்து போனால், ஜயவர்த்தன அரசிற்கு எமது தமிழ் இனம் அடிமைகளாகப் போக நேரிடும். இத்தனை காலமாக நாம் இரத்தம் சிந்திப் போராடியதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். இன்று நாம் இந்தியாவிற்கு அடிப்பணிந்து போய்விட்டால் அடுத்த எமது தலைமுறை எம்மை மன்னிக்கப்போவதில்லை. நாம் இந்திய இராணுவத்தின் அடாவடித்தனங்களுக்கு அஞ்சப்போவதில்லை.
இந்தியா ஒரு அந்நிய நாடு. இங்கு வந்து எமது மண்ணை ஆக்கிரமித்துக்கொண்டு இந்திய இராணுவம் எம்மை அடிமைப்படுத்துவதை நாம் அனுமதிக்க முடியாது.
எமது மக்களுக்கு எதிராக தான் செய்யும் அட்டூழியங்களையும், அநியாயங்களையும் இந்திய அரசு உலகின் முன்பாக இருட்டடிப்புச் செய்கின்றது. அபாண்டமான பொய்களைக் கூறிவருகின்றது.
பொய்மையின் திரைகளைக் கிழித்துக்கொண்டு உண்மை ஒருநாள் வெளிவரத்தான் செய்யும். அப்பொழுது பாரதம் உலக மனச்சாட்சியின் முன்பு தலை குணிந்து நிற்கும். அப்பொழுது வரலாறு எமது பக்கம் திரும்பும். அன்றுதான் எமது மக்களுக்கு விடிவு பிறக்கும். அதுவரை நாம் உண்மைக்காக, நீதிக்காகப் தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்போம்.|``

இவ்வாறு புலிகள்; 1987 டிசம்பர் மாதம் சென்னையில் பிரசுரித்திருந்த ’’இந்தியாவும் ஈழத்தமிழர் பிரச்சனையும்’’ என்ற தமது புத்தகத்தில் தெரிவித்திருந்தார்கள்.
இதேபோன்று, இந்தியா தமிழ் மக்களுக்கு எதிராக தமிழ் ஈழ மண்ணில் மேற்கொண்டிருந்த அட்டூழியங்களை எல்லாம் பட்டியலிட்டு, புலிகள் ஆங்கிலத்திலும் ஒரு நூலை வெளியிட்டிருந்தார்கள்.
‘’இந்தியா....நீயுமா???``(You too India?) என்ற தலைப்பில் வெளியான இந்த நூலும் இந்தியாவின் பல துரோக நடவடிக்கைகளை தோலுரித்துக் காட்டுவதாக இருந்தது. 
ஈழத்தமிழர் பற்றி ஒன்றுமே தெரியாத ராஜீவ் காந்தி
ஈழத் தமிழர் பிரச்சனையில் அர்ப்பணிப்புடன் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதாக வெளி உலகிற்கு காண்பித்துக்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி, உண்மையிலேயே ஈழத்தின் வராலாறு பற்றி ஒன்றுமே தெரியாதவராக இருந்தார். புலனாய்வு அதிகாரிகள் வழங்கும் தரவுகளை மட்டும் வைத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு தீர்மானங்களை எடுக்கும் ஒரு நிலையிலேயே ராஜீவ் காந்தி இருந்துவந்தார்.
இந்தியாவின் பிராந்திய நலன்களை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடுகளை மட்டுமே முன்னெடுக்கும் நோக்கத்தில் காய்களை நகர்த்திக்கொண்டிருந்த இந்திய புலனாய்வுப் பிரிவினரின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கண்களை மூடிக்கொண்டு அவர் அனுமதி வழங்கிவந்தார். இதனால் ஈழத் தமிழர் பற்றி உண்மையான அக்கறை எதனையும் அவரால் காண்பிக்கமுடியாமல் போயிருந்தது.
‘’ஈழப்பிரச்சனையில் இந்தியா முழுமூச்சுடன் இறங்கியிருந்த ஒரு சந்தர்ப்பத்தில், இந்தியாவின் தலைவர் ராஜீவ் காந்தி அவர்களுக்கு ஈழத்தின் நிலப்பரப்பு பற்றிய அறிவு போதியளவு இல்லாது இருந்திருந்தது’’ என்று ஈழத் தமிழர்களின் முக்கிய தலைவர் ஒருவர் ஒரு சந்தர்ப்பத்தில் தெரிவித்திருந்தார்.
அந்தத் தமிழ் தலைவர் வேறு யாரும் அல்ல! இந்தியாவின் அத்தனை ஈழ விரோத நடவடிக்கைகளுக்கும் துணை போய்கொண்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் திரு.அ.அமிர்தலிங்கம் அவர்களே, ராஜீவ் காந்தி பற்றி இவ்வாறு தெரிவித்திருந்தார். ’’செல்வா ஈட்டிய செல்வம்’’ என்ற தலைப்பில் இலங்கை-இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு பற்றி அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் எழுதியிருந்து நூல் ஒன்றிலேயே இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
‘’செல்வா ஈட்டிய செல்வம்’’
தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மகாநாடு இந்தியாவின் பெங்களுர் நகரில் 1986ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. அந்த மாநாட்டின்போது ஈழப் பிரச்சனைக்கான தீர்வு சம்பந்தமாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனாவுடன் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி பலமணிநேரம் பேச்சுவார்த்தை நடாத்தனார்.
இனப்பிரச்சனைக்கு தீர்வாக தெரிவிக்கப்பட்டிருந்த உத்தேச மாநில சுயாட்சி பற்றி அங்கு ஆராயப்பட்டது. காணிப் பங்கீடு, கவர்ணரின் அதிகாரம் போன்ற விடயங்களுக்கு ஸ்ரீலங்கா தரப்பில் இருந்து சில மாற்று யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அதாவது, வடக்கு கிழக்கு மாகாண இணைப்புப் பற்றிய யோசனைக்கு மாற்றாக, கிழக்கு மாகாணத்தை மூன்று மாகாணங்களாகப் பிரிக்கும் ஓர் ஆச்சரியமான திட்டம் ஸ்ரீலங்கா அரசினால் முன்வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தோடு திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் உள்ள தமிழ் பகுதிகளை இணைத்து ஓர் தமிழ் மாகாணமும், எஞ்சிய திருகோணமலை மாவட்டம் ஒரு சிங்கள மாகாணமாகவும், அம்பாறை மாவட்டம் ஒரு முஸ்லிம் மாகாணமாகவும் பிரிக்கப்படுவதற்கான யோசனையை ஜே.ஆர். முன்வைத்திருந்தார்.
கிழக்கு மாகாணக் குடிசன இனவாரி அமைப்பு பற்றி மிகத் தவறான கருத்தைக் கொடுக்கக்கூடிய வரைபடங்களையும் ஜே.ஆர். இந்திய அதிகாரிகளிடம் வழங்கியிருந்தார். இந்த பொய்யான வரைபடங்கள் பற்றி தமிழர்கள் தரப்பு எவ்வளவோ எடுத்துக் கூறியபோதிலும், ராஜீவ் காந்தி அவர்களும், இந்திய அதிகாரிகளும் அதனை ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை.
இந்த பொய்யான வரைபடங்களின் அடிப்படையில், ஜே.ஆர். முன்வைத்த காணிப்பங்கீட்டுத் திட்டத்திற்கு தமிழ் அமைப்புக்களைச் சம்மதிக்கவைக்க இந்திய அரசு அவசரம் காண்பித்தது. இரவோடு இரவாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் திரு.வே.பிரபாகரனை பெங்களூருக்கு அழைத்து இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளும்படி அவரை இந்திய அரசு நிர்ப்பந்தித்தது.
ராஜீவ் காந்தி மற்றும் இந்திய அதிகாரிகளுடன் திரு.பிரபாகரன் நீண்ட விவாதங்களை நடாத்தியபோதும், இதற்கு தீர்வெதுவும் காணப்படவில்லை. இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கு திரு.பிரபாகரன் ஒரேயடியான மறுப்புத் தெரிவித்து விட்டார்.
திருகோணமலையை சிங்கள மாகாணமாக்கித் தன்பிடிக்குள் வைத்திருக்கும் ஜே.ஆரின் திட்டத்தில், நீண்ட கால நோக்கத்தில் அமைந்த சதி ஒன்றும் காணப்பட்டிருந்தது.
வடக்கையும், கிழக்கையும் இணையவிடாது, இடையில் சிங்கள பிரந்தியம் ஒன்றை அமைத்து வடக்கு கிழக்கை நிரந்தரமாகக் கூறு போட்டுவிடும்; திட்டத்திலேயே ஜே.ஆர். அந்த மூன்று கிழக்கு மாகாணங்களின் யோசனையை முன்வைத்திருந்தார். ஜே.ஆரின் இந்த கபட திட்டம் பற்றி பிரதமர் ராஜீவ் காந்தியிடம் தமிழ் தலைவர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த யோசனையை ஏற்றுக்கொண்டேயாகவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றார்.
கிழக்கு மாகாணம்
இந்த விடயம் பற்றி திரு. அமிர்தலிங்கம் அவர்கள் தனது நூலில் குறிப்பிடும் போது, ’’........ இந்திய அதிகாரிகளும், இந்தியப் பிரதமரின் ஆலோசகர்களும், கிழக்கு மாகாணம் பற்றிய மிகத் தவறான கருத்தையே கொண்டிருந்தார்கள். வடக்கு மாகாணத்தில் இருந்து நிலத்தொடர்புகள் எதுவும் அற்ற ஒரு தனி பிரதேசமே இந்தக் கிழக்கு மாகாணம் என்று அவர்கள் எண்ணியிருந்தார்கள்.
கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றத்தின் வரலாறும் அதன் தாக்கமும் பற்றியும், அங்கு புதிதாக ஏற்படுத்தப்பட்ட தேர்தல் தொகுதிகள் மற்றும் நிர்வாகப் பிரிவுகள் பற்றியும், புதிய சிங்கள நிர்வாகப் பிரிவுகளில் அபிவிருத்தி செய்யப்படாத தமிழ் நிலங்களையெல்லாம்; சேர்த்த சிங்கள அரசின் சூழ்ச்சி பற்றியும், 1983ம் ஆண்டு கலவரங்களின் பின் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் பற்றியும், இந்திய அதிகாரிகளுக்கு முதலில் இருந்து விரிவாக விளக்கவேண்டி இருந்தது..’’ என்று திரு. அமிர்தலிங்கம் குறிப்பிட்டிருந்தார்.
1986ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் திகதியே இதுபற்றி இந்திய அதிகாரிகளிடம் தாம் இந்தத் தரவுகளை வழங்கியிருந்ததாக திரு.அமிர்தலிங்கம் தனது நூலில் தொவித்திருக்கின்றார்.
அப்படியானால், ஈழமக்கள் போராட்டம் மேற்கொள்வதற்கு அடிப்படையாக இருந்த காரணங்கள் தெரியாத நிலையிலேயே இந்தியா இலங்கை விவகாரத்தில் தலையிட்டிருந்ததா என்கின்ற சந்தேகம் ஏற்படுகின்றது.
1986ம் ஆண்டு டிசம்பரில், இனப்பிரச்சனைத் தீர்வு பற்றி பேச்சுவார்த்தை நடாத்துவதற்கென்று இந்திய அமைச்சர்களான சிவசிதம்பரமும், நட்வர்சிங்கும் கொழும்பு செல்வதற்கு முன்னர், சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்தில் அவர்களைச் சந்தித்து, இலங்கையின் கிழக்கு மாகாணம் பற்றிய உண்மையான வரைபடத்தையும், அதன் பூகோள விபரத்தையும் தாம் வழங்கியதாக திரு.அமிர்தலிங்கம் தனது நூலில் மேலும் தெரிவித்திருக்கின்றார்.
இது, ஈழத்தமிழர்களுக்கு சார்பாகவென்று கூறிக்கொண்டு பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருந்த இந்திய அதிகாரிகளுக்கும், அதன் தலைவர்களுக்கும், ஈழநாட்டின் வரைபடம் முதற்கொண்டு ஈழ வரலாறு பற்றிய எந்தவித அடிப்படையும் இல்லாது இருந்திருக்கின்றது என்பதை புலப்படுத்துவதாக உள்ளது.
அதுவும் இலங்கை நாட்டில், ஈழ மண்ணில் இந்தியாவின் நேரடித் தலையீடு இடம்பெறுவதற்கு சில மாத காலம் வரை கூட ஈழத்தின் பூகோள வரைபடவிபரம் இந்தியாவிடம் இல்லாதிருந்தது ஆச்சரியமான விடயம்தான்.
அப்பொழுது இந்தியாவிடம் இருந்ததெல்லாம் இந்திய நாட்டின் பூகோள நலன் மட்டும்தான் என்பது இதிலிருந்து தெளிவாகவில்லையா?
தொடரும்..
nirajdavid@bluewin.ch
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-24
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-25
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-26
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-27
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-28
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-29
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-30
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-31
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-32
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-33
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-34
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-35
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-36
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-37
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-38
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-39
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-40
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-41
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-42
  • http://news.lankasri.com/show-RUmqzBRVNUnqy.html
  • Geen opmerkingen:

    Een reactie posten