போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கில் அதிகளவு படையினரை நிலைநிறுத்தியுள்ளதும் பொதுமக்களின் அன்றாட வாழ்வில் அவர்களின் தலையீடுகள் இருப்பதும் சர்வதேச அளவில் இலங்கைக்கு கடும் நெருக்கடியான விவகாரமாகி வருகிறது.
போர் முடிந்த பின்னர் கணிசமானளவு படையினரை வடக்கில் இருந்து குறைத்து விட்டதாக அரசாங்கம் சொல்லிக்கொள்ளும் அதேவேளை இனிமேலும் படைக்குறைப்பை மேற்கொள்ளத் தயாரில்லை என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.
ஆனாலும் வடக்கில் படைக்குறைப்பை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்து சர்வதேச அளவில் வலுப்பெற்று வருவதை அரசாங்கத்தினால் இலகுவாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. வடக்கைத் தொடர்ந்தும் இறுக்கமான இராணுவச் சூழலுக்குள் வைத்திருப்பதே அரசாங்கத்தின் திட்டம்.
இதனால் படையினர் தமிழ் மக்களுடன் நெருங்கிப் பழகுகின்றனர், வடக்கின் அபிவிருத்தி, மீள்கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று காட்டுவதே இன்று அரசின் முக்கிய தேவையாகியுள்ளது.
அதைவிட வடக்கு மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று காட்ட வேண்டிய தேவையும் அரசாங்கத்துக்கு உள்ளது. இதன் அடிப்படையில் கடந்த வாரம் இரண்டு முக்கிய நிகழ்வுகள் வடக்கில் நடந்தேறியுள்ளன.
முதலாவது109 தமிழ் பெண்கள் இராணுவத்தின் 6வது பெண்கள் படைப்பிரிவில் சோ்த்துக்கொள்ளப்பட்டது. இரண்டாவது கிளிநொச்சிப் படைத் தலைமையகத்தின் சார்பில் நடத்தப்பட்ட தீபாவளி விழா.
இலங்கை இராணுவத்தில் முதன்முறையாக தமிழ் பெண்கள் சிப்பாய்களாகச் சோ்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இதுவரையில் இராணுவத்தில் தமிழ்ப் பெண்கள் எவரும் இருக்கவில்லை.
இலங்கையில் பிரதானமாக மூன்று இனமக்கள் வசித்து வந்தாலும், இராணுவம் தனியே சிங்களவர்களைக் கொண்டதாக மட்டுமே இருந்து வந்துள்ளது. சிங்கள் இராணுவமாக அடையாளப்படுத்தப்பட்டது இதுவே இன முரண்பாட்டை மேலும் தீவிரப்படுத்தக் காரணமாகியது என்ற கருத்து வலுவாக உள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூட இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழர்களையும் பொலிஸ், இராணுவம் ஆகியவற்றில் சோ்த்துக்கொள்ள வேண்டும் என்ற பரிந்துரையும் அதில் கூறப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் எத்தகைய காரணத்தைக் கருத்தில் கொண்டோ இராணுவம் தமிழ்ப் பெண்களை சோ்த்துக் கொண்டுள்ளது.
ஆண்கள் சோ்த்துக் கொள்ளப்படுவதற்கு முன்னதாகவே இராணுவத்தில் பெண்கள் சோ்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். குடும்ப வறுமை போன்ற காரணங்களைக்ப் பயன்படுத்திக் கொண்டு பெருமளவு சம்பளம் கிடைக்கும் என்று எஆசை வார்த்தை கூறி இவர்கள் ஏமாற்றபக்பட்டதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
சிவில் பணிகளுக்கு என்று கூறிவிட்டு கிளிநொச்சியில் உள்ள மேலதிக காலாட்படைப் பயிற்சிப் பாடசாலைக்கு இராணுவப்பயிற்சிக்கு இவர்கள் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இராணுவத்தில் சோ்பவர்களுக்கு இராணுவப் பயிற்சி கட்டாயமானது என்ற அடிப்படை உண்மை கூடத் தெரியாதவர்கள் தான் இவ்வாறு சோ்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதேவேளை இராணுவத்தின் இத்தகைய ஆட்சோ்ப்பு முயற்சிகளை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.
இதனிடையே ஏனைய விடயங்களில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் தமிழ் பெண்களை இராணுவத்தில் சோ்க்க முற்படுவது குறித்து பலரும் சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் ஏற்கனவே பொலிஸில் 1500 தமிழர்கள் சோ்க்கப்பட்டுள்ளதாக உலகெங்கும் கூறிவருவதைப் போலவே இராணுவத்தில் தமிழ்ப் பெண்களை சோ்த்துள்ளதாக அரசாங்கம் கூறித் திரிவதற்கு இது வசதியாகியுள்ளது. இரண்டாவதாக கிளிநொச்சியில் கடந்த வாரம் நடந்துள்ள தீபாவளிக் கொண்டாட்டம்.
சுமார் 600 பேரை அழைத்து விருந்து கலை நிகழ்ச்சிகள் என்று நடத்தியுள்ளார் கிளிநொச்சி படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா.
இவர் மலேசியாவில் முன்னர் துணைத் தூதுவராகப் பணியாற்றியதுடன், அங்கிருந்து புலிகள் இயக்கத்தை மீள ஒன்றிணைக்க முயன்ற கேபி எனப்படும் செல்வராசா பத்மநாதனைக் கைது செய்து கொழும்புக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றியவர். இப்போது கேபியும் கிளிநொச்சியில் தான் தங்கியுள்ளார்.
பூநகரி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் இருந்தும் இந்தத் தீபாவளி நிகழ்வுகளுக்காக பொதுமக்களும் பிரமுகர்களும் அழைத்து வரப்பட்டனர். படையினரும் பொதுமக்களும் ஒன்றாக இணைந்து வாழ்கிறார்கள். பொதுமக்களுடன் படையினர் நல்லுறவை வளர்த்துக் கொண்டுள்ளனர் என்ற கருத்தை வலுப்படுத்தவே இந்த தீபாவளிக் கொண்டாட்டம் இடம்பெற்றது.
முன்னர் வடக்கில் இராணுவத்தினர் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடுவதே வழக்கம். அது இரு இனங்களுக்கும் பொதுவான விழாவாகும்.
இம்முறை தமிழர்களால் கொண்டாடப்படும் தீபாவளிக்கு படைத்தரப்பினரால் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது.
இது வடக்கில் பொதுமக்களின் அன்றாடக் கருமங்களில் படைத் தலையீடுகள் உள்ளன என்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தடையாக அவர்கள் உள்ளனர் என்றும் கூறப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளை வலுவிழக்கச் செய்வதற்கான முயற்சி என்பதில் சந்தேகமில்லை.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான எண்ணம் இதில் எந்தளவுக்கு உள்ளது? என்பது கேள்விக்குரியது.
அத்துடன் வடக்கில் இராணுவம் அபிவிருத்தி புனர் நிர்மானப் பணிகளில் தான் ஈடுபட்டுள்ளது என்று காட்டுவதற்காகவே வீடுகளை அமைத்தல் வீதிகள் அமைத்தல் பொது இடங்களைச் சுத்தஞ செய்தல் போன்ற பொதுமக்களுக்கு நன்மையளிக்கும் பணிகளை மேற்கொளவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவம் பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகளுக்காக தங்க வைக்கப்படவில்லை என்றும், அபிவிருத்தி சார்ந்த பணிகளில் பொதுமக்களுக்கு உதவும் வகையிலேயே நிலைகொண்டுள்ளதாகக் காட்டுவதற்கு முயற்சிக்கப்படுகிறது. வடக்கில் மட்டும் இராணுவம் 2430 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கைகளையும் மேற்கொள்கிறது என்ற தகவலும் உள்ளது.
இவையெல்லாம் வடக்கில் இலங்கை இராணுவத்தின் அடர்த்தி தொடர்பாக எழுப்படும் கேள்விகளை அடக்குவதற்கான முயற்சிகளாகவே உள்ளன.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் இராணுவத்தரப்பு பெருமளவில் ஒத்துழைக்கிறது என்ற கருத்தை சர்வதேச அளவில் ஏற்படுத்துவதற்கு பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கு நெருக்கமானவரும் இறுதிப்போரின்போது நடவடிக்கைப் பணிப்பாளராக இருந்தவருமான மேஜர் ஜெனரல் உதய பெரேரா கடும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். ஆனால் இம்முறை வடக்கில் இராணுவத்தின் நல்லிணக்க ஒத்துழைப்புக்கு ஒரு சவாலும் காத்திருக்கிறது.
இந்துக்களால் கார்த்திகை மாதத்தில் வீடுகள் கோவில்களில் விளக்கேற்றி வழிபாடு நடத்தும் விளக்கீடு பண்டிகை எதிர்வரும் 27ம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இந்த 27ம் திகதி விடுதலைப்புலிகளால் மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டு போரில் இறந்த போராளிகளை நினைவு கொள்ளும் வழக்கம் இருந்து வந்தது.
1989 ம் ஆண்டு தொடக்கம் 2008ம் ஆண்டு வரையிலான 19 ஆண்டுகள் வடக்கில் இந்த மாவீரர் நாள் நிகழ்வுகள் பெருமெடுப்பில் இடம்பெற்ற வரலாறு உள்ளது.
கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் வடக்கில் உள்ள மக்களால் புனிதமான நாளாக கருதப்பட்டு வீடுகள் பொது இடங்களில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தும் ஒரு வழக்கம் இருந்து வந்தது.
விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் மாவீரர் நாளை எவரும் அனுஷ்டிக்க முடியாதவாறு படையினர் கெடுபிடிகளைக் காண்பிக்கின்றனர்.
இந்த ஒரு வாரகாலத்துக்கு வன்னியில் உள்ள ஆலயங்களில் மணி ஒலி எழுப்பக் கூடாது, தீபம் ஏற்றக் கூடாது என்றெல்லாம் கடந்த காலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அதனை மீறிய ஆலயப் பூசகர்கள் மிரட்டப்பட்டமை தாக்கப்பட்டமை போன்ற சம்பவங்களும் நடந்தேறின.
அதேவேளை கார்த்திகை மாதத்தில் வரும் விளக்கீட்டையும் மாவீரர் நாளையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரியாத படையினரால் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் விளக்கீட்டைக் கொண்டாடியவர்கள் தண்டிக்கப்பட்ட சம்பவங்களும் நிறையவே நடந்தன.
வீடுகளில் ஏற்றப்பட்ட விளக்குகள் பிடுங்கி எறியப்பட்டு அடித்து உடைக்கப்பட்ட சம்பவங்கள் யாழ். நகரில் கூட நடந்தன.
இப்படிப்பட்ட பின்னணிச் சூழலில் விளக்கேற்றும் மரபைக்கொண்ட இரு நிகழ்வுகளும் ஒரே நாளில் வரப்போவது இராணுவத்துக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
வரும் 27ம் திகதி மாலை ஆலயங்களிலும் வீடுகளிலும் விளக்குகளை ஏற்றுவதை இராணுவத்தினர் தடை செய்தால் அது மிகப்பெரிய மனித உரிமை மீறலாக கருதப்படும். மாவீரர் நாளில் விளக்கு ஏற்றக் கூடாது என்று படையினர் தடுத்தால் அதை வெளியுலகம் பெரிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை.
ஆனால் இந்துக்களின் ஒரு பாரம்பரிய விழாவை இராணுவம் தடுத்தால் கடந்த காலங்களைப் போன்று நடந்துகொண்டால் அது சர்ச்சைகளை உருவாக்கும்.
தமிழர்களின் மத உரிமைகள் ஒடுக்கப்படுவதாக அவர்களின் அன்றாட வாழ்வில் இராணுவம் தலையிடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழும்பும்.
அத்தகையதொரு குற்றச்சாட்டு கடந்த வாரத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக காட்டிக்கொண்ட இராணுவத்தை இன்னும் பின்னுக்குத் தள்ளிவிடும்.
எனினும் கிளிநொச்சியில் ஆலயங்களில் விளக்குகளை ஏற்ற அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது பொதுமக்களின் வாழ்வில் இன்னமும் நீடிக்கின்ற இராணுவத் தலையீட்டை வெளிப்படுத்தும் ஒரு அடையாளமாகவே பார்க்கப்படும்.
எது எவ்வாறாயினும் விடுதலைப்புலிகள் மோற்கடிக்கப்பட்ட பின்னர் அவர்களனின் நிகழ்வாக எதையும் விட்டுவைக்காமல் அழித்துவிட்ட இராணுவத் தரப்புக்கு இந்தமுறை மாவீரர் நாள் ஒரு சோதனை என்பதில் சந்தேகமில்லை.
கடந்த மூன்று ஆண்டுகளாக வீடுகளுக்குள் விளக்கேற்றி வந்த மாவீரர்களை நினைவு கூரும் மரபை இன்னமும் கடைப்பிடிக்கும் மக்கள் இம்முறை விளக்கீட்டைப் பயன்படுத்தி துணிச்சலாக விளக்குகளை வெளியே ஏற்றுவார்கள்.
இதற்குப் படையினர் அனுமதித்தாலும் பிரச்சினை. அனுமதிக்காது போனாலும் பிரச்சனை.
எதைச் செய்வது என்ற குழப்பம் கடைசிவரை படைத்தரப்பின் தலையைக் குடைந்து கொண்டிருக்கும்.
சுபத்ரா
http://news.lankasri.com/show-RUmqzBRZNUmt4.html
Geen opmerkingen:
Een reactie posten