[ நக்கீரன் ]
இந்த வருடம் பிரபாகரனின் பிறந்தநாளையும் மாவீரர் நாளையும் நினைவுகூரும் விழாக்கள் எதுவும் நடத்தக்கூடாது என்று இலங்கையில் தமிழர்களை சிங்கள ராணுவத்தினர் கடந்த இருவாரங்களாக அச்சுறுத்தினர். இதற்கெல்லாம் கட்டுப்பட மறுத்தனர் தமிழர்கள்.
இந்த நிலையில், போராளிகளுக்கிடையே 1982-ல் நடந்த துப்பாக்கி மோதல் தொடர்பான வழக்கிலிருந்து பிரபாகரனின் பெயரை நீக்கி உத்தரவிட்டிருக்கிறது சென்னை கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம். சென்னை பாண்டிபஜாரில் கடந்த 1982, மே 19-ந் தேதி விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், ராகவன் என்கிற சிவக்குமார் மற்றும் பிளாட் இயக்கத் தின் தலைவர் உமாமகேஸ்வரன், ஜோதீஸ்வரன் ஆகியோருக்கு மிடையே நடந்த துப்பாக்கி மோதலில் ஜோதீஸ்வரன் படு காயமடைந்தார்.
உமாமகேஸ் வரன் எஸ்கேப் ஆனார். போராளிகளுக்கிடையே நடந்த இந்த மோதல் சென்னையில் மிகுந்த பரபரப்பையும் அதிர்ச்சி யையும் ஏற்படுத்தியது. போராளிகள் இரு தரப்பினர் மீதும் ஆயுத தடைச் சட்டம் உள் ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய் தனர் மாம்பலம் போலீஸார். இந்த வழக்கில் பிரபாகரன், ராகவன், உமாமகேஸ்வரன், நிரஞ்சன், ஜோதீஸ்வரன் ஆகிய ஐவர் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர்.
பிரபாகரன் மீதான வழக்கு விவகாரங்களை அப்போது பார்த்துக்கொண்டவர் தற்போது தி.மு.க.விலுள்ள வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். அவரிடம் பழைய சம்பவங்கள் குறித்து நாம் பேசியபோது, ""1980-களில் போராளி இயக் கங்கள் சென்னையில்தான் இயங்கிக் கொண்டிருந்தன. மைலாப்பூரிலுள்ள சாலை வீதியில், எண் 39 என்ற முக வரியில் இருந்த வீட்டில் பழ.நெடுமாறன் தங்கியிருந்தார். அப்போது அவரோடு நான் இருந்தேன். பழ.நெடுமாறன், தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து வேறு ஒரு வீட்டிற்கு மாற வேண்டியிருந்தது. அப்படி மாறும்போது அந்த வீட்டில் என்னை தங்கிக்கொள்ளச் சொன்னார் நெடுமாறன்.
அப்படி சொன்னபோது,’"விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் வருவார்கள் அவர்களையும் உங்களோடு இந்த வீட்டிலேயே தங்க வைத்துக்கொள்ளுங்கள்'’என்று சொல்லியிருந்தார். அதற்கேற்ப பிரபாகரன், ராகவன் என்கிற சிவக்குமார், மாத்தையா, கிட்டு, குமரப்பா புலேந்திரன், பேபி சுப்ரமணியம், செல்லக்கிளி அம்மான், யோகி, திலகர், ஜானி, நேசன், தங்கவேலு, ரகு, கரிகாலன் ஆகியோர் தங்கியிருந்தனர். அமிர்தலிங்கம், சந்திரகாசன், யோகேஸ்வரன், ஈழவேந்தன் உள்ளிட்டவர்கள் கோடம்பாக்கத்திலும், எம்.எல்.சி.யாக இருந்த ஜனார்த்தனன், எம்.எல்.ஏ.க்களான விருதுநகர் பெ.சீனிவாசன், செஞ்சி ராமச்சந்திரனுக்கு ஒதுக்கப்பட்ட எம்.எல்.ஏ. விடுதியிலுள்ள அறைகளில் மற்ற போராளிகளும் தங்கியிருந்தனர்.
பாண்டி பஜாரில் நடந்த துப்பாக்கி மோதல்தான் விடுதலைப்புலிகள் இயக்கத்தை பரவலாக தெரிய வைத்தது. இந்த மோதல் தொடர்பாக தம்பியும் (பிரபாகரன்) ராகவனும் கைது செய்யப்பட்டதை யடுத்து போராளிகள் என்னோடு தங்கியிருந்ததால் மே 22-ந் தேதி மைலாப்பூர் வீட்டில் ரெய்டு நடத்தினார்கள் போலீஸார். அந்த ரெய்டில் தம்பியும் மற்றவர்களும் பயன்படுத்திய பொருட்கள், புத்தகங்கள் என அனைத்தையும் அள்ளிக்கொண்டு போனார்கள். அதில் நான் கவனித்து வந்த வழக்குகள் தொடர்பான ஆவணங்கள், பல்வேறு சட்டப் புத்தகங்கள், ராம்மனோகர் லோகியா, இந்திராகாந்தி, காமராஜர், கண்ணதாசன் ஆகியோருடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் உட்பட எல்லாத்தையும் எடுத்துக்கொண்டனர்.
சென்னை மத்திய சிறையில் இருந்த தம்பியையும் மற்றவர்களையும் பெயிலில் எடுக்கும் பணி என்னிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த காலகட்டத்தில் ஈழ விடுதலைக்கான இரண்டு நாள் மாநாட்டை ராமநாதபுரத்தில் நடத்தியது தி.மு.க. அந்த மாநாட்டிற்கு போவதற்கு முன்பு மத்திய சிறையில் இருந்த தம்பியை சந்தித்து விட்டு செல்ல விரும்பினார் வைகோ. அப்போது பெயில் மூவ் பண்ணுவது தொடர்பாக தம்பியை பார்க்க சிறைக்கு நான் போய்க்கொண்டிருப்பதை அறிந்து வைகோவும் என்னோடு வந்தார்.
நாங்கள் இருவரும் தம்பியை சந்தித்தோம். அப்போ, "உங்களை சந்தித்து விட்டு மாநாட்டிற்கு வருமாறு எனக்கு கட்டளையிட்டி ருக்கிறார் அண்ணன் கலைஞர். மாநாட்டில் ஈழப் பிரச்சினை தொடர்பாக நிறைய விஷயங்கள் பேசப்போகிறோம். நீங்கள் ஏதேனும் சொல்வதாக இருந்தால் சொல்லுங்கள். அதை மாநாட்டில் வலியுறுத்தலாம்' என்றார் வைகோ. அதன்பிறகு இருவரும் நிறைய பேசிக்கொண்டனர்.
பிரபல வழக்கறிஞர்கள் என்.டி.வானமாமலை, என்.நடராசனின் வாதங்களில் பிரபாகரனுக்கும் மற்றவர்களுக்கும் நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. நிபந்தனை ஜாமீனால் மதுரையில் தங்கியிருந் தார் பிரபாகரன். அந்த நேரத்தில், தி.மு.க. மாவட்டச் செயலாள ரான பொன்.முத்துராமலிங்கம் ஒரு பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். அதில் கலந்துகொள்ள மதுரை வந்த கலைஞர், பிரபாகரனை சந்திக்க வேண்டும் என வைகோவிடம் சொல்ல, கலைஞர்-பிரபாகரன் சந்திப்பு நடந்தது.
மதுரையில் தங்கி வழக்கை எதிர்கொண்ட தம்பி, வழக்கின் விசாரணைக்காக சென்னை வரும்போது காலையில் மைலாப்பூர் வீட்டிற்கு வந்து குளித்து முடித்துவிட்டு கிளம்புவார். அப்போது நானும் அவ ரோடு கிளம்பிவிடுவேன். இப்படி மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து போய்க்கிட்டிருந்த சூழலில், ஒரு முறை அவர் வருவதற்கு தாமதமானதால் கோர்ட்டுக்கு கிளம்பிவிட்டேன். நேரம் ஆகிக்கொண்டே இருக்கிறது. தம்பி வரவில்லை. அதனால், பிரபாகரனுக்கு பிடி வாரண்ட் பிறப்பித்தார் நீதிபதி. நான் ரொம்பவும் கவலையடைந்துவிட்டேன். (அந்த வழக்கில்தான் இன்றைக்கு பிரபாகரனின் பெயரை நீக்கியிருக்கிறது நீதிமன்றம்.) கோர்ட் பிடிவாரண்ட் போட்டிருக்கிறதை கவலையுடன் நெடுமாறனை சந்தித்து சொன்னபோது, அவர் சிரிக்கிறார். நான் விவரம் கேட்டபோது, "தம்பி இந்நேரம் நாட்டுக்குள் (இலங்கை) போயிருப்பார்' என்றார். மதுரையிலிருந்து கிளம்பி வந்த பிரபாகரன், விழுப்புரத்திலிருந்து அப்படியே கிளம்பிவிட்டதை பின்னர் தெரிந்துகொண்டேன்.
நாங்கள் எல்லோரும் ஒன்றாகத் தங்கியிருந்த போது, கலைஞரை முதல் முதலாக தான் சந்தித்ததை விவரித்தார் பிரபாகரன். அப்போது 1972-76 கால கட்டம். "தமிழ் புதிய புலிகள்' என்ற அமைப்பை நடத் திய பிரபாகரனின் துப்பாக்கி சிங்களவர்களுக்கு எதிராக வெடித்துக்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் அடிக்கடி தமிழகம் வந்து போனதையும் முதல்வராக இருந்த கலைஞர் ஈழப்பிரச்சினையில் அக்கறையுடன் இருந்ததால் சில கோரிக்கைகளுக்காக மாவைசேனாதி ராஜாவுடன் சென்று மெரினா பீச்சில் சந்தித்துப் பேசி யதையும் நிறைய முறை சிலாகித்து சொல்லியிருக்கிறார் பிரபாகரன்.
மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தின் வடிவம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கலைஞர் தம்மிடம் விவரித்ததை எங்களிடம் பிரபாகரன் சொல்லும்போது அவ்வளவு வலிமையாக இருக்கும். புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே திம்புவில் பேச்சுவார்த்தை நடந்தபோது, மாநில சுயாட்சி தொடர்பாக கலைஞர் அமைத்த ராஜமன் னார் குழுவின் பரிந்துரைகளை சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையை ஆராய்ந்து ஒரு அறிக்கை தருமாறு கேட்டுக்கொண்டார் பிரபாகரன். கலைஞரின் தீர்மானத்தை ஆராய்ந்து நாங்கள் ஒரு அறிக்கை தயாரித்தோம். அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் தங்களது வாதத்தை திம்பு பேச்சுவார்த்தையில் முன்வைத்தனர் புலிகள்.
1986, மே 12-ல் நெடுமாறன் தலைமையில் எனது திருமணத்தை கலைஞர் நடத்திவைத்தார். அந்தத் திருமணத்தில் தமிழ் இயக்கங்களின் அத்தனை தலைவர்களும் மேடையில் அமர்ந்திருந்தனர். பிரபாகரன் மட்டும் கீழே பார்வையாளராக அமர்ந்திருந்தார். அவரை மேடையில் அமரும்படி நான் அழைத்தும் "கீழிருந்தே தங்கள் திருமணத்தை பார்க்கிறேன்' என்று கூறி மறுத்துவிட்டார் பிரபாகரன்.
தம்பியோடும் புலிப் போராளிகளோடும் நான் தங்கியிருந்த நாட்கள் ரொம்பவும் பசுமையானவை. அதிகம் பேசமாட்டார் தம்பி பிரபாகரன். வெளிநாடுகளில் செயல்படும் ராணுவம் தொடர்பாகவே எப்போதும் சிந்திப்பார். ராணுவத்தைப் பற்றியும் அதன் தாக்குதல்கள் குறித்தும் வெளிவந்துள்ள நூல்களை தேடித்தேடி படிப் பதில்தான் அவருக்கு ஆர்வம் அதிகம். ஒருமுறை ஜப்பான் மற்றும் சீன நாடுகளின் எழுத்துருக்கள் கொண்ட புத்தகங்களை ஆராய்ந்துகொண்டிருந்த தம்பியிடம், "சீன, ஜப்பான் மொழிகள் தெரியுமா உங்களுக்கு?' என்று கேட்டபோது, "மொழிகள் தெரியாது. அதன் வடிவத்தை இயக்கத்தின் ரகசிய வார்த்தைகளாக (கோட் வேர்ட்) பயன்படுத்த முயற்சிக்கிறேன்' என்றார் பிரபாகரன்.
அதே மாதிரி யுத்தம் தொடர்பான சினிமாக்களை மட்டும்தான் விரும்பிப் பார்ப்பார். ராயப்பேட்டை பைலட் தியேட்டரில் பல படங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். சென்னையில் இரவு நேரங்களில் எவ்வளவு தூரமானாலும் நடந்து செல்வதையே வழக்கமாக வைத்துக்கொண்டவர் பிரபாகரன். டீ, காஃபி சாப்பிடமாட்டார். சைவ உணவுகளை அதிகம் விரும்பும் தம்பி, எப்போதாவதுதான் அசைவ உணவுகளை ருசிப்பார். அதுவும் நண்டு என்றால் அவருக்கு கொள்ளைப் பிரியம். ஒரே ஒரு டைப்ரைட்டர் மெஷினும் ஒரே ஒரு டி.வி.எஸ். வண்டியும் வைத்துக்கொண்டு தான் இயக்கத்தை கட்டியெழுப்பினார். அந்த டி.வி.எஸ்.ஸை ஜானிதான் பயன்படுத்துவார். அவரை ரன்னர் என்றுதான் இயக்கத்தில் அழைப்பார்கள். அப்படி சிட்டாக பறப்பார் ஜானி.
உலகத்தில் எந்தவொரு விடுதலைப் போராட்ட இயக்கமும் கட்டியெழுப்ப முடியாத முப்படைகளும் கொண்ட ஒரு அரசாங்கத்தை நடத்திக் காட்டியவர் தம்பி பிரபாகரன் என்று நினைக்கும்போது மெய்சிலிர்க்கிறது'' என்கிறார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
நக்கீரன்
28/11/2012.
28/11/2012.
http://news.lankasri.com/show-RUmqzBRcNUko1.html
Geen opmerkingen:
Een reactie posten