தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 4 november 2012

இன்னும் ஈழத்தை அழிப்பது ஏன்?



இன்றைய ஈழத்தைப் பொறுத்தவரை நாங்கள் எப்படியான அடக்குமுறையில் இருக்கிறோம் என்பதைப் பற்றியே முடியாத நிலைமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் இந்தத் தருணத்தில்தான் தமிழீழ விடுதலைப் புலிகளை பலரும் பல்வேறு அரசியல் நோக்கங்களுக்காக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். யார் விமர்சிக்கிறார்கள் என்பதை வைத்தே ஏன் விமர்சிக்கிறார்கள் என்பதை மிகச் சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது.
விடுதலைப் புலிகளை விமர்சிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு விடுதலைப் புலிகளை நிராகரிப்பதன்மூலம் ஈழத்தையும் அதற்கான போராட்டத்தையும் பலர் நிராகரிக்கிறார்கள். இதுவே இத்தனையாண்டு விடுதலைக்காக மிகப் பெரும் போராட்டத்தை நடத்திய இனத்தையும் ஈழத்தையும் அழிக்கும் அரசியலை செய்கிறது. 
அண்மையில் நோர்வே நாட்டின் முன்னாள் அமைச்சரும் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் வகித்தவருமான எரிக்சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகள் குறித்து ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் பொழுது இறுதிவரை சரணடைய மறுத்து போராடியதன்மூலம் பிரபாகரன் வரலாற்றுத் தவறை செய்துவிட்டார் என்று அவர் சொல்லியுள்ளார். இறுதிவரைப் போராடுவதையே தவறாகச் சொல்லும் பொழுது அவரிடம் நாம் எதை எதிர்பார்க்க முடியும்? என்று முதற்கேள்வி எழுகிறது.
இலங்கை அரசோடும் இந்த உலகத்தோடும் இறுதிவரை போராட வேண்டும் என்கிற ஈழத் தமிழர்களின் அரசியல் துர்பாக்கிய நிலையை தலைவர் பிரபாகரன் உணரச் செய்திருக்கிறார்.  ஈழப்போரின் இறுதிவரை பேரழிவுகளின் மத்தியில் களமாடிய விடுதலைப் புலிகள் ஈழத் தமிழினத்திற்கான தீர்வையே கோரினார்கள். யுத்த நிறுத்தத்தையும் சமாதான வழிமுறைகளையும் விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக கோரிவந்தார்கள். இலங்கை அரசே யுத்தத்தில் பெரும் குறியாய் இருந்தது.
சரணடைவது தொடர்பில் எடுத்த முடிவுக்கு புலிகள் இணங்கவில்லை என்றும் அப்படிச் சரணடைந்திருந்தால் பலர் இன்று உயிரோடு இருந்திருப்பார்கள் என்று எரிக்சொல்ஹெய்ம் குறிப்பிட்டார். கோலாம்பூரில் நடந்த சந்திப்பில் விடுதலைப் புலிகள் சரணடைவது தொடர்பில் எழுத்து மூலமாக எந்த திட்டமும் முன்வைக்கவில்லை என்று புலிகளின் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் சொல்லியிருக்கிறார். விடுதலைப் புலிகள் சரணடைவது மட்டுமல்ல இலங்கை அரசின் இன அழிப்பு யுத்ததிலிருந்து மக்களை காப்பாற்ற எந்தத் திட்டமும் முன்வைக்கவில்லை.
இப்பொழுது எரிக்சொல்ஹெய்ம் சொல்வதுபோல விடுதலைப் புலிகள் சரணடைந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? முள்ளிவாய்க்கால் இறுதி யுத்ததின் பொழுது சர்வதேச உடன்பாட்டுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் சமாதான செயலாகப் பொறுப்பாளர் புலித்தேவன் மற்றும் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் உள்ளிட்ட போராளிகளுக்கு யுத்தகளத்தில்  என்ன நடந்தது? அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதுபோல ஆயிரக்கணக்கானவர்களும் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பார்கள்.
எப்படியாவது முள்ளிவாய்க்கால் படுகொலையை நடத்துவதன் மூலம் ஈழமக்களை இனப்படுகொலை செய்து அழிப்தோடு ஈழப்போராட்டம் பற்றிய கனவை அழிக்கும் எச்சரிக்கையை உருவாக்க சிங்கள அரசு உறுதிபூண்டிருந்தது.
முள்ளிவாய்க்காலை எப்படியாவது நடத்த வேண்டும் என்று இலங்கை அரசு திட்டமிட்டது. அதையே உலகமும் விரும்பியிருந்தது. அது முன் பின்னாகவோ அல்லது வேறு வேறு இடத்திலோ நடந்திருக்கும். ஒட்டுமொத்த உலகமும் முள்ளிவாய்க்கால் படுகொலையை விரும்பியிருந்தது.
உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் விடுதலைக்காக போராடுபவர்களுக்கான எச்சரிக்கையாகவும் சுதந்திரத்திற்கான மறுப்பாகவும் ஈழத்தில் படுகொலை நிகழ்த்தப்பட்டது.  உலகில் போராடும், ஒடுக்கப்படும் எல்லாச் சனங்களுக்காகவும் ஈழமக்கள் எதிர்கொண்ட மனிதப்படுகொலைத் துயரமே முள்ளிவாய்க்கால். ஈழப்படுகொலை என்பது உலகின் கூட்டுச் சதியாகும்.
விடுதலைப் புலிகளை கண்மூடித்தனமாக விமர்சிக்கும் அரசியலில் இனப்படுகொலை அரசை நியாயப்படுத்தும் நோக்கம் உள்ளடங்கியிருக்கிறது. நடுநிலமை என்ற பெயரில் இன்று பலர் இதனைச் செய்து கொண்டிருக்கிறார்கள். தவிர புலிகளை நிராகரிப்பதனை தமது தகைமையாகவும் இந்தச் சிலர் நினைக்கின்றார்கள்.
எரிக்சொல்ஹெய்ம் போன்றவர்கள் புலிகள்மீது குற்றத்தை சுமத்துவதன் மூலம் நடுநிலையான போக்கை காட்டி அதன் மூலம் இலங்கை அரசை தமது காய் நகர்த்தல்களுக்காக பாவிக்க முனைகிறார்கள். இதைப்போலவே தம்மை நடுநிலையாளர்களாகக் காட்டிக்கொள்ளும் சிலர் இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சாதமாக செயற்படுகிறார்கள். சிலரோ அரசாங்கத்தின் நிழலில் இருந்துகொண்டே தம்மை அரசியல் புத்திஜீவியாகக்காட்டிக் கொண்டு ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு எதிராக செயற்படுகிறார்கள்.
ஈழப்போர் முடிந்து இன்று மூன்று வருடங்களைக் கடந்துள்ள நிலையில் விடுதலைப் புலிகளை ஒழித்துவிட்டேன் என்று இலங்கை அதிபர் ராஜபக்ச மமதையுடன் வெற்றிச் சூளுரைக்கும் நிலையில் யாரால் என்ன செய்ய முடிந்தது? ஈழத்தில் புலிகளை அழித்தோடு என்னவெல்லாம் அழிக்கப்பட்டன? ஈழ மக்கள் அழிக்கப்பட்டார்கள். அவர்களுக்கான பாதுகாப்பும் குரலும் அழிக்கப்பட்டது. இன்று ஈழத்தில் மக்களுக்காக உண்மையாக குரல் கொடுக்கவும் செயற்படவும் யார் உள்ளனர்? புலிகளை குற்றம் சாட்டியவர்கள் வந்து ஏன் இப்பொழுது போராடவில்லை. புலிகளை அழிக்கும்வரை முழங்கியவர்கள் இப்பொழுது ஏன் வாய்களை மூடிவிட்டார்கள்.
முள்ளிவாய்க்காலுக்கு முன்பாக விடுதலைப்புலிகளை குற்றம்சாட்டும் பெரும்பாலனவர்கள் தொடர்ந்தும் அதையே வேறுவிதமாக செய்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் எப்படிப் போராடுவோம்? என்றும் நான் தலைவனாக இருந்தால்? எப்படி நடத்துவோன் என்றும் சொன்னவர்கள் இப்பொழுது சிறு துரும்பைக் கூட அசைக்க முடியாதவர்களாக உள்ளனர். ஈழப்போராட்ட களம் இப்பொழுது புலிகள் இல்லாத வெறும் களமாகவே இருக்கிறது. இப்பொழுது யார் வேண்டுமானாலும் போராடலாம். ஆனால் யாரும் முன்வரவில்லையே! ஏன்?
புலிகள் வெறும்பேச்சுகளுக்கு அப்பால் எல்லாவற்றையும் நிகழ்த்திய உன்னதமான போராட்ட இயக்கம். சிங்களப் பேரினவாத்திற்கு எதிராக நிழல் ஈழத்தை நிஜமாக்கிக் காட்டியவர்கள். இக்கொடும் உலகத்தில் வல்லாதிங்களின் - அரசியல்களின் மத்தியில் உலகச் சூழச்சிகளின் பொறிகளுக்கு இடையில் ஈழப்போராட்டத்தை இந்தளவுக்கு  நகர்த்தியவர்கள் விடுதலைப் புலிகள். ஈழத் தமிழனம் ஏன் ஆயுதம் ஏந்திப் போராடியது? எப்படிப் போராடியது என்ற வரலாற்று நிகழ்வை நிகழ்த்தியிருக்கிறார்கள். உண்மையில் அதன் தொடர்ச்சியாகவே ஈழப்போராட்டம் நகர்கிறது.
புலிகளை அழித்துவிட்டு 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக இலங்கை அரசாங்கம் சொன்னது. புலிகளை அழிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு ஈழத் தமிழர்களை வகைதொகையாய் கொன்று குவித்தது. புலிகளின் பாசறைகளை கைப்பற்றுகிறோம் என்று சொல்லிக் கொண்டு முழு ஈழநிலத்தை சிதைத்தது சிங்கள அரசு. இப்பொழுது 13ஆவது திருத்தச் சட்டத்தையும் அழிக்கப் போவதாக இலங்கை அரசு அறிவித்திருக்கிறது.
இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு சிறுதுரும்பையாவது கொடுக்கக்கூடிய சட்டத்தையும் வெளிகளையும் அழிப்பதுவே இலங்கை அரசின் திட்டம். 13ஆவது திருத்தச்சட்டத்தை தமழீழ விடுதலைப் புலிகள் நிராகரித்திருந்தார்கள். யுத்தம் முடிந்த நிலையில் 13ஆவது திருத்தச் சட்டதிற்காவது இலங்கை அரசு இறங்கி வருமா என்பதை வெளிக்காட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
ஆனால் ஈழயுத்ததின் முக்கிய கர்த்தாவும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் தம்பியும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச 13ஆவது திருத்தச் சட்டத்தை அழிக்க வேண்டும் என்று கூறினார்.
புலிகளை அழிக்க வேண்டும் என்பதைப்போலவும் ஈழமக்களை அழிக்க வேண்டும் என்பதைப் போலவும் ஏதுவுமே இல்லாத இந்தச் சட்டத்தை அழிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இதற்கு அரசாங்கத்தின் ஆதரவு வெளிப்பாடாக கோத்தபாயவின் தம்பியும் மகிந்த ராஜபக்சவின் இன்னொரு தம்பியும் பொருளாதார அமைச்சருமான பசில் ராஜபக்ச 13ஆவது திருத்தச்சட்டத்தை அழிப்பதில் எந்த தவறும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்.
இலங்கை- இந்திய ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மகாணசபையை நீதிமன்றம் மூலம் பிரித்தது சிங்கள அரசு. இலங்கையில் எந்த சட்டங்களும் உருவாவதையும் அழிப்பதையும் யாரும் இப்பொழுது தடுக்க முடியாது. ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக எந்த சட்டத்தையும் உருவாக்கவும் ஈழத் தமிழர்களுக்கு துளியளவு சார்பான எந்தச் சட்டங்களையும் அழிக்கவும் இலங்கை அரசுக்கு அதிகாரமுள்ளது.
அதற்கு சிங்கள மக்களினதும் சிங்களப் பேரினவாதிகளினதும் ஆதரவு எப்பொழுதும் உண்டு. எல்லாவற்றையும் இலங்கையின் ஜனநாயகப் பாராளுமன்றமே செய்தது என்று சிங்கள அரசு சொல்லும். ஏனெனில் இலங்கை பாராளுமன்றம் என்பது சிங்களப் பாராளுமன்றம். அது ஜனநாயகம் கொல்லப்பட்ட சிங்களப் பேரினவாதிகளின் பராளுமன்றம். அதனால் தமிழர்களுக்கு எதிராக அங்கு எதனையும் நிறைவேற்றக்கூடியதாக இருக்கிறது. இப்படித்தான் இன்றைய ஈழத்தில் ஜனநாயகத்தின் பெயரால் உரிமை மறுப்பும் இன அழிப்பும் தொடர்ந்து நடக்கிறது.
பிரபாரகன் ஈழத் தமிழர்களின் உன்னதமான தலைவராக யுத்தகளத்தில் நின்று இறுதிவரைப் போராடியவர். இன்று ஈழத் தமிழ் மக்கள் தலைமைத்துவம் இன்றி இருக்கிறார்கள். ஈழத் தமிழ் மக்கள் இன்று குரல் அற்ற மக்களாகிவிட்டார்கள்.
இன்று ஈழத் தமிழ் மக்களுக்காக பேசவும் செயற்படவும் யாருமில்லை. ஈழப்போராட்டத்தை அழித்ததன்மூலம் இந்த உலகம் இப்படியான சூன்ய காலத்தையும் கையறு நிலையையும் ஈழத் தமிழ் மக்களுக்கு கையளித்திருக்கிறது.
இன்றைய ஈழத்தில் சிங்கள அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைள் மிகுந்த அபாயகரமானவை. எல்லாவற்றுக்கும் அடிப்படையான நிலத்தை அங்குலம் அங்குலமாக இழந்து கொண்டிருக்கிறோம். முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் ஈடுபட்ட கொடும் இராணுவப்படைகள் இன்று தமிழர்களின் நிலத்தில் இன அழிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இரத்தம் இல்லாமல் பிணங்கள் வீழாமல் இந்த இன அழிப்பு தொடர்;ந்து நடந்து கொண்டிருக்கிறது.
எல்லாவற்றின் சாட்சிகளாகவும் இருப்பவர்கள் மக்களே. எல்லாவற்றையும் சுமந்து அதற்கு முகம்கொடுத்து பங்களித்து இயக்கியவர்கள் மக்களே. புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டதாக சொல்லப்படடும் இக்காலத்தில் ஈழமக்கள் எஞ்சியபடி இன்னும் ஈழத்தில் வாழ்கிறார்கள். அவர்கள் இன்று உண்மையில் எதை விரும்புகிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். புலிகள் ஈழமக்களின் பிரதிநிதிகளா? என்பதையும் ஈழம்தான் ஈழமக்களின் கோரிக்கையா? என்பதையும் யாவரும் அறிவார்கள்.
இலங்கை அரசாங்கம் ஏதுவுமற்ற 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு மட்டுமல்ல எதற்கும் ஒரு பொழுதும் இடமளிக்காது. எதுவுமற்ற இந்த சட்டத்தை அழிக்க முனையும் அரசு நாளை ஈழ மக்களை அழிக்கவும் இல்லாமல் ஒழிக்கவும்கூட சட்டத்தை உருவாக்கும். இந்த இக்கட்டான கால கட்டத்தில் ஈழமக்களுக்கு ஆதரவான உண்மையான சக்தி என்று எதுவுமில்லை.
உண்மையாக குரல் கொடுக்கவும் போராடவும் யாருமில்லை. ஆனால் என்றைக்குமான போராளிகளாக விடுதலைப் புலிகள் மக்கள் மனங்களில் இருக்கிறார்கள். மக்கள் தங்கள் மெய்யமான பாதுகாப்பாக விடுதலைப் புலிகளையே கருதுகிறார்கள்.
விடுதலைப் புலிகள் இயக்கமும் ஈழமக்களும் செய்த மாபெரும் தியாகத்தால் இதுவரையில் நகர்ந்த ஈழப்போராட்டத்தை தொடர்ந்தும் அதே வழியில் நகர்த்வதே அர்த்தமுள்ளது. அந்த வழிமுறையே விடுதலையை பெற்றுக் கொடுக்கும் சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது. ஈழ இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளுக்கும் மக்களுக்கும் எதிரான இனப்படுகொலை நடவடிக்கைகள்தான் இன்று இன அழிப்புக்கு எதிரான நீதியைக் கோரும் சாட்சியங்களாக உலகின் முன் நிற்கின்றன.
ஈழமக்கள் தனி ஈழத்திற்காகவே போராட வேண்டியிருக்கிறது. சிங்கள தேசம் எதையாவது ஈழமக்களுடன் பகிர முன்வராத நிலையில், ஈழமக்கள் வேறு எந்த வழியில் செல்வது? ஈழத் தமிழ் மக்களை மனிதர்களாகவேணும் கருதும் மாற்றம் வரும்வரை சிங்கள தேசத்துடன் போராடவேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.
ஒடுக்கப்படும் இனம் ஒடுக்கும் இனத்திற்கு எதிராகப் போராடியாக வேண்டும். நாங்கள் வாழும் நிலத்திலிருந்து இல்லாமல் செய்யும் பொழுது அதற்கு எதிராக போராடுவது எப்பொழுதுமே தவிர்க்க முடியாதது.
தீபச்செல்வன்

Geen opmerkingen:

Een reactie posten