வெற்று உயிர்களாக, வெந்த உடல்களாகத் தமிழர்கள் இலங்கையிலே துடிதுடிக்கின்றனர் என்று, நான்கு சுவர்களுக்குள் நாம் அழுதபோது, உடம்பிலே நெருப்பைப் பற்ற வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் ஒருவன் தெருவுக்கு வந்தான். அவன் பெயர் முத்துக்குமார். அந்தப் பெயர் ஈழத்து மண்ணில் மக்களின் மனதில் கல்வெட்டாக வாழ்கிறது.
இதுவரை இறந்த மாவீரர்களின் பெயரோடு முத்துக்குமார் பெயரும் இணைந்துவிட்டது. ''இனியும் எங்களுக்காகத் தமிழ்நாட்டில் ஓர் உயிரும் போகக்கூடாது என்று எங்கள் அவலங்களுக்கு மத்தியிலும் அவருக்காகத் தீபம் ஏந்தினோம். என்றும் அவருக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டவர்கள்'' என்று என்னிடம் ஒரு ஈழத்தமிழர் கையைப் பற்றிக் கொண்டு சொன்னபோது, கண்கள் பனித்தன.
போர்க்குணத்தோடும் நன்றி உணர்வோடும் இருக்கும் அந்த மக்கள் கண் முன்னாலேயே தமது சொந்த பந்தங்களைப் பறிகொடுத்த வடுக்களை மட்டும் மறக்க முடியாமல் தவிக்கின்றனர். ஒரு போர் முடிந்த பிறகும் அவர்களின் மனதில் அது உளவியல் போரை நிகழ்த்துவதைப் பார்க்க முடிகிறது. மனரீதியாக எதையோ இழந்தவர்களைப் போலத் தான் இப்போது அவர்கள் உலா வருகிறார்கள்.
தொண்டு நிறுவன ஊழியர் ஒருவர் என்னிடம் இதுபற்றி விவரித்தார்.
2009-ம் ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை தமிழ் மக்களின் உளவியல் நிலைகள் தொடர்பாக 'அமெரிக்க மருத்துவக் கூட்டமைப்பு’ என்ற அமைப்பினர் ஓர் ஆய்வு நடத்தினர். அமெரிக்க மருத்துவர் பராசெய்ன் இந்த ஆய்வுக்குத் தலைமை வகித்தார். வடக்கு மாகாணம் மற்றும் இடம்பெயர் முகாம்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 92 சதவிகித மக்கள் உளவியல் ரீதியான பிரச்சினைகளில் பாதிக்கப்படும் மோசமான நிலையில் உள்ளனர் என்று குறிப்பிட்டு உள்ளனர்.
இந்த ஆய்வுக் கருத்தைப் போன்றே வவுனியாவைச் சேர்ந்த உளவியல் மருத்துவரும் ஓர் கருத்தை முன் வைத்தார். 'யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் மனோநிலை சீரடைய இன்னும் இருபது ஆண்டுகளாவது தேவைப்படும்’ என்று அவர் சொல்லி இருக்கிறார்'' என்று அந்த ஊழியர் சொன்னார்.
ஏக்கம் நிரம்பிய விழிகள், அச்சம் போர்த்திய முகங்கள், தயங்கித் தயங்கி வரும் பேச்சுக்கள் அனைத்துமே ஒருவகையில் விரக்தியையே வெளிப்படுத்துகின்றன. சிலநேரங்களில் வீரமாகவும் பல நேரங்களில் விரக்தியாகவும் பேசுகிறார்கள். உளவியல் போர் கண்ணுக்குத் தெரியாமல் நடந்து கொண்டிருப்பதையே இது காட்டுகிறது.
புதுமாத்தளனில் இருந்து புதுக்குடியிருப்புக்கு நகர்ந்தேன். சுதந்திரபுரம், உடையார்கட்டு, வள்ளிபுனம் என பரந்தன் முதல் முல்லைத்தீவு வரை உள்ள 'ஏ35’ நெடுஞ்சாலையில் எல்லாமே அழிவுகளின் காட்சிகள்தான். ஓடு வேய்ந்து இருந்த கூரைகள் எல்லாம் இன்று கீற்றுக் கூரைகளாக உள்ளன. புதுக்குடியிருப்பு நகர் மட்டுமே ஊர் போலத் தெரிந்தது. மக்கள் கூட்டமும் ஓரளவுக்குத் தென்பட்டது.
தொண்டு ஊழிய நண்பர் அவசர வேலை காரணமாக விடைபெற்றுக் கொண்டார். அவரே ஒரு கிளிநொச்சி நண்பரை எனக்கு வழிகாட்ட ஏற்பாடு செய்திருந்தார். ஏனெனில், நம் தமிழ்நாட்டின் பேச்சு வழக்கு எளிதில் காட்டிக் கொடுத்துவிடும். தனியே சென்றால் பேச இயலாதவர்போல செல்ல வேண்டும். முன்பின் அறிமுகம் இல்லாத மக்கள் நம்மிடம் பேசுவதும் சிரமம். தவிர, நாம் யார் என்று தெரியாமல் நம்மையே சந்தேகத்தோடும் பயத்தோடும் பார்ப்பார்கள். எனவேதான் யாராவது ஒரு ஈழ நண்பரை உடன் வைத்துக்கொண்டே என்னுடைய பயணத்தைத் தொடர வேண்டி இருந்தது.
தொண்டு ஊழிய நண்பர் சொன்ன உளவியல் பிரச்சினைகள் பற்றி கிளிநொச்சி நண்பரிடம் கேட்டேன்.
பிள்ளையின் முன்னே தாயும், தாயின் முன்னே பிள்ளையும் கற்பழிக்கப்படும்போது மனம் எப்படி தாங்கும்? சொந்தங்கள் எல்லாம் உறுப்புகளை இழந்து துடித்தபோதும் கண்முன்னே உயிர்களைவிட்ட போதும் பார்த்துப் பார்த்துத் துடித்தது எங்கள் சனம்... தங்களோட உற்றவர்கள் உயிரோடு இருக்கிறார்களா? இல்லையா? என்பது தெரியாமல் வாழும் மனசு எப்படி நன்றாக இருக்கும்?'' என்றார்.
உளவியல் என்பது உயிர்ப் பிரச்சினை. தனிப்பட்ட மக்களின் பிரச்சினை என்று இதை சாதாரணமாக நினைக்க முடியாது. இது ஒரு காலகட்டத்தின் சமூகத்தையே பாதிக்கும் அல்லவா? இதை இலங்கை அரசாங்கமோ, இராணுவமோ உணர்ந்ததாகத் தெரியவில்லை. இராணுவ வெற்றியின் இருப்பையும் தங்கள் கருத்துப்படி பிரபாகரனின் இறப்பையும் நினைவுப்படுத்தி தொடர்ந்து பெரும் உளவியல் போரை மக்கள் மீது தொடுத்து வருகிறது.
இப்பொழுது இராணுவம் புதிதாக வரைப்படக் கண்காட்சி நிலையம் ஒன்றைப் புதுக்குடியிருப்பில் திறந்துள்ளது. அதில் 2009 போரின்போது ராணுவ நகர்வுகள் எப்படி எல்லாம் இருந்தன, எந்தெந்த படையணி எந்தெந்த வழியில் முள்ளிவாய்க்காலை சுற்றி வளைத்தது, நந்திக்கடல் ஓரத்தில் எங்கு பிரபாகரனைக் கண்டெடுத்தோம் என வரைபடத்தோடு விளக்கி அந்தத் தகவல் நிலையத்தில் விளக்கி வருகின்றனர்.
இராணுவம் போரின் வடுக்களைப் போக்காமல் போர் முறைகளையே மீண்டும் மீண்டும் காட்டி, மக்களின் மன ரணத்தை கீறிக் கீறி மகிழ்ந்தபடி இருக்கிறது.
ஆனால், போரால் பாதிக்கப்பட்ட தமிழ் பகுதி களில் மருத்துவர்களோ, மனநல மருத்துவர்களோ அவ்வளவாக இல்லை.
இதைப்பற்றி புதுக்குடியிருப்பு ஊர்வாசி ஒருவரிடம் கேட்டேன்.
அவர், ''மருத்துவமனைகளே இல்லாத இடத்தில் மருத்துவர்கள் எப்படி இருப்பார்கள்? இருக்கிற தமிழ் மருத்துவர்களையும் சிங்களப் பகுதிகளில் நியமித்துவிட்டு, சிங்கள மருத்துவர்களை தமிழ் பகுதிகளில் நியமிக்கிறது அரசு.
உயிரைக் காப்பத்துற மருத்துவர்கிட்டகூட எங்கப் பிரச்சினை என்னன்னு சொல்ல முடியல. அதுலகூட சிங்கள திணிப்பு. அரசு பணியில இருக்கிறதால தமிழ் மருத்துவர்கள் சிங்களம் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால், சிங்கள மருத்துவர்கள் தமிழ் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. நாங்க தமிழ் மருத்துவர்களைக்கூட கேட்கலை. தமிழ் தெரிந்த மருத்துவரைத்தான் கேட்கறம்'' என்றார்.
'போருக்குப் பிறகும் இன முரண்பாட்டை காட்டிக்கொண்டிருந்தால் அது இன்னொரு போராளிக் குழு உருவாக்கத்துக்கு வழி வகுக்கும்’ என்னும் சந்திரிகா குமாரதுங்கவின் பேச்சை இங்கு குறிப்பிட வேண்டியது அவசியம்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, 'அயோ ஒகுலஜா (AYO OKULAJA)’ என்ற நைஜீரிய ஊடகத்துக்கு அளித்த பேட்டி 'இலங்கை எப்படி உள்ளது?’ என்பதை நிதர்சனமாக உணர்த்துகிறது.
தமிழ்ப் புலிகளுக்கு எதிரான மகிந்த ராஜபக்சவின் தாக்குதல் இப்போது அனைத்துலக சமூகத்தில் மிகப் பெரிய விவகாரமாக உள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அதை இன்னமும் விசாரித்துக் கொண்டிருக்கிறது. நாம் போரை முடிவுக்கு கொண்டுவந்த போதிலும், இது வேறொரு போருக்கான ஒரு நீண்ட ஆயத்தமாக இருக்கக்கூடும் என்றே நம்புகிறேன். தமிழ்மக்கள் நீண்ட காலமாகவே பாரபட்சமாக நடத்தப்பட்டனர். அவர்கள் தமது உரிமைகளைக் கேட்டனர்.
அவர்களின் உரிமைகளை வழங்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற எனது அரசாங்கம் முதன்முதலாக ஒப்புக்கொண்டது. முழு உரிமைகளையும் கொண்ட ஒரு சமமான ஆட்சியை நிறுவ ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், ராஜபக்ச சிறுபான்மையினரின் உரிமைகளில் நம்பிக்கை கொண்டவரல்ல. அவர் ஒருவரே எனது அமைச்சரவை பேச்சுக்களுக்கு எதிராக இருந்தார். அவரது தேவை, தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்பதாகவே இருந்தது.
இப்போது ஒட்டுமொத்த உலகமுமே, இராணுவத் தாக்குதலுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறது. புலம்பெயர் தமிழர்கள் மீண்டும் இணைகிறார்கள். தாக்குதல்களைக் கண்டிக்கிறார்கள். இலங்கை அரசாங்கம் தனது திட்ட வகுத்தலின்படியே தொடர்ந்து நடக்குமானால், இன்னும் சில ஆண்டுகளில் இன்னொரு போராளிக்குழு உருவாகும். இறுதித் தாக்குதலின்போது பொதுமக்களின் மனிதஉரிமைகள் மீறப்பட்ட சம்பவங்கள் நிறையவே இடம்பெற்றன.
என் தாய் தந்தைக்குப் பிறகு, அரசியல் தேவையில்லை என்று நான் ஒதுங்கியபோதும் மூன்று ஆண்டுகளுக்குப் பின் அரசியலுக்குள் இழுத்து வரப்பட்டேன். அப்போதே என்னுடன் இந்த வம்சஆட்சி முடிவுறும் என்று கூறினேன். என் பிள்ளைகளை அரசியலுக்குக்கொண்டு வர எனக்கு விருப்பமில்லை. வம்ச அரசியல், எல்லாவற்றையும் ஒரு குடும்பத்துக்குள் அபகரிக்க இடமளிக்கிறது.
இலங்கையின் இப்போதைய ஜனாதிபதி மிகப் பெரிய ஊழல்களை செய்துள்ளார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 2,000 பேர் அரசாங்கப் பதவிகளில் உள்ளனர். நான்கு சகோதரர்கள் அமைச்சரவையில் இருக்கின்றனர். அவர்களின் பிள்ளைகள் நாடாளுமன்றத்தில் பதவி வகிக்கின்றனர். இந்தமுறையில் இங்கு தீமைகளே அதிகம் நடக்கிறது'' என்று அவர் கூறி இருக்கும் உண்மை யோசிக்கத்தக்கது.. குறிப்பாக ராஜபக்ச.
அன்று மாலை மீண்டும் கிளிநொச்சிக்குத் திரும்பினேன்.
அடுத்த நாள் காலை, அதே புதுக்குடியிருப்புப் பகுதிக்குத்தான் பயணம் என்றாலும் செல்லக்கூடியது புலிகள் வலுவாக நிலை கொண்டிருந்த காட்டுக்கு. அந்தக்காட்டில்தான் பிரபாகரனின் நிலத்தடி வீடு உள்ளது. 'நீங்கள் செல்வது இப்போது சுற்றுலா தலமாக உள்ள பகுதிகள் என்பதால் நீங்கள் தனியாகச் செல்லலாம்.
ஆனால், யாரிடமும் எதையும் பேச வேண்டாம். பேருந்திலிருந்து இறங்கியதும் ஆட்டோ பிடித்துக் கொள்ளுங்கள்’ என்று எனக்குச் சொல்லப்பட்டு இருந்தது. புதுக்குடியிருப்பில் இறங்கியதும் ஆட்டோ பிடித்துக் கிளம்பினேன்.
நகரைக் கடந்து மண்பாதையில் ஆட்டோ சென்றது. மீண்டும் காட்டுக்குள் ஒரு பாதை. அந்தப் பாதை ஓரங்களில் கண்ணிவெடிகளை அகற்றும் பணி இன்னமும் நடக்கிறது. அடுக்கடுக்காய் பதுங்குக் குழிகளோடு காவல் அரண்கள். ஆறு அடுக்கு பாதுகாப்பு அரண்கள் உள்ளதை இராணுவம் கண்டறிந்ததாக ஆட்டோ ஓட்டுநர் சொன்னார். '
இந்தக் காட்டுப்பாதையின் ஒரு கிலோ மீட்டருக்கு முன்னால்தான் மக்கள் குடியிருந்தனர். ஆனால் புதுக்குடியிருப்பில் வாழ்ந்த மக்களுக்கோ, நகரில் வாழ்ந்த எங்களுக்கோ இப்படி ஒரு வீடு இருந்தது தெரியாது.
முன்பு இது ஒத்தையடிப் பாதையாகப் புதர் மண்டிக் கிடக்கும். ஆனால், இப்போது இராணுவம் வந்து பாதையை அகலப்படுத்தி விட்டது'' என்று சொல்லியபடியே ஆட்டோவை ஓட்டினார்.
பிரபாகரன் இருந்த வீடு நெருங்கிக்கொண்டு இருந்தது.
ஊடறுத்துப் பாயும்...
ஜூனியர் விகடன்
http://news.lankasri.com/show-RUmryBSdNWkt0.html
Geen opmerkingen:
Een reactie posten