இலங்கை வந்த அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தூதுக்குழுவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று இடம்பெற்றது.
இன்று நண்பகல் அமெரிக்க தூதராலயத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
கூட்டமைப்புத் தூதுக்குழுவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமை வகித்தார். அமெரிக்காவின் உயர்மட்டக்குழு தனது இலங்கை பயணத்தின்போது முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழுவை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் தான் ஏனையவர்களுடனான சந்திப்பு என்று கூறப்படுகின்றது.
அமெரிக்காவின் தூதுக்குழுவில் அமெரிக்க இராஜாங்க அமைச்சின் தெற்காசியா மற்றும் பசுபிக் விவகாரங்கள் பிரிவின் மூன்று வெளியுறவு பிரதிச் செயலாளர்கள் அங்கம் வகித்தனர்.
இச்சந்திப்பு தொடர்பாக இரா.சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கை தமிழர்கள் பிரச்சினை பற்றி நாடு சுதந்திரம் பெற்ற நாட்தொடக்கம் இன்று வரை இடம்பெற்று வருகின்ற அநீதிகள், துயரங்கள், அறவழியில் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள அன்று நடத்திய போராட்டங்கள், அது பின்னர் ஆயுதப் போராட்டமாக மாற வேண்டிய நிர்ப்பந்தங்கள், முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னரும் தமிழ் மக்கள் தங்கள் சொந்த நிலங்களை பறிகொடுத்து பாரம்பரிய இடங்களில் மீளக்குடியமரமுடியாமல் பாரம்பரிய பிரதேசங்களை பெரும்பான்மை இனத்திடம் பறிகொடுக்கும் நிலையில் எல்லாரும் கைவிட்ட நிலையில் அனாதரவாக வாழ்கின்ற அவல நிலை பற்றியெல்லாம் அமெரிக்கத்தூதுக்குழுவின் முன்னால் ஆதாரபூர்வமாக முன்வைத்தோம் என குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten