கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரையும் விடுதலை செய்யுமாறு கோரி, போர்க்குற்றம் மற்றும் இனப் படுகொலைக்கு எதிரான இளைஞர் இயக்கம் சார்பில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் இன்று முற்றுகை இடப்பட்டது.
கடந்த நவம்பர் மாதத்தில் யாழ். பல்கலைகழகத்தில் மாணவர்கள் மாவீரர் நாள் அனுசரித்தபோது. இலங்கை இராணுவம் அவர்களை கைது செய்தது. குறிப்பாக மாணவர் தலைவர்களை குறிவைத்து கைது செய்தது.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்ற செய்தியும் கசிந்தது. மேலும் அவர்களின் நிலை இப்போது எப்படி உள்ளது என்ற செய்தியும் அறியமுடியவில்லை. அவர்களை பற்றி இலங்கை அரசு செய்தியும் வெளியிடாமல், அவர்களில் சிலரை விடுவித்த இலங்கை அரசு, ஏனையோரை விடுதலையும் செய்யாமல் இழுத்தடித்து வருகிறது. பல்வேறு மனித உரிமை அமைப்புகள் இது குறித்து கண்டனம் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டு, விடுதலை செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மாணவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று போற்குற்றம் இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர் இயக்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் இலங்கை தூதரகம் முற்றுகை செய்யப்பட்டது.
இந்த போராட்டத்தில் பல்வேறு இயக்கங்கள், அமைப்புகள் கலந்து கொண்டன. தமிழ் தேசிய விடுதலை இயக்கம், தந்தை பெரியார் திராவிடக் கழகம், உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம், மே 17 இயக்கம், தமிழ்த் தேசிய பொதுவுடமைக் கட்சி, தமிழ்நாடு மக்கள் கட்சி மற்றும் பல மாணவர் இயக்கங்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் பங்குபெற்ற சுமார் 100 பேர்களை பொலிஸார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten