தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 27 januari 2013

"டெசோ' மாநாட்டுத் தீர்மானங்களை ஐ.நா.வின் 47 உறுப்பு நாடுகளிடம் வழங்க முடிவு!


ஐ.நா., சபையிடம் அளிக்கப்பட்ட, "டெசோ' மாநாட்டுத் தீர்மானங்களை அடுத்த கட்டமாக, ஐ.நா.வின் உறுப்பு நாடுகளிடம் அளிக்கிறது, டெசோ அமைப்பு. இதற்காக, அந்த அமைப்பின் உறுப்பினர்கள், டில்லியில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு செல்கின்றனர்.
இதுகுறித்து, தி.மு.க., தலைமை வெளியிட்டுள்ள அறிக்கை:-
ஈழத் தமிழர் வாழ்வுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு எடுக்க வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து, டெசோ மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இத்தீர்மானங்களை, இலங்கை அரசு செயல்படுத்த, ஐ.நா., சபை வலியுறுத்த வேண்டும் என, தீர்மான நகல்களை ஐ.நா., சபையிடம், கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் தலைமையிலான இருவர் குழு அளித்தது.
ஐ.நா., சபைக்கு, அதன் உறுப்பு நாடுகள் அழுத்தம் தர வேண்டும் என்பதற்காக, டில்லியில் உள்ள, 47 நாடுகளின் தூதரகங்களுக்கு சென்று, டெசோ தீர்மானங்களை அதன் உறுப்பினர்கள் அளிக்கவுள்ளனர்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், சல்மான் குர்ஷித்தையும், டெசோ குழு, நாளை மற்றும் நாளை மறுநாள் சந்திக்கிறது.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2ம் இணைப்பு
47 நாடுகளின் தூதர்களைச் சந்திக்க ஸ்டாலின் இன்று டில்லி பயணம்
ஐ.நா.வின் 47 உறுப்பு நாடுகளின் தூதர்களைச் சந்தித்து, டெசோ மாநாட்டின் தீர்மானங்களைக் கொடுப்பதற்காக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டெசோ அமைப்பினர் இன்று ஞாயிற்றுக்கிழமை  டில்லி செல்கின்றனர்.
இது தொடர்பாக நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு நேற்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
டெசோ மாநாடு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அதில் ஈழத் தமிழர் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதற்காக 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அந்தத் தீர்மானங்களைக் கொண்ட மனுக்கள், ஐ.நா.வின் துணைப் பொதுச்செயலாளர் யான் லியா சன், ஜெனிவா மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளை ஆகியோரிடம் கொடுத்து நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டன.
அதைத் தொடர்ந்து ஐ.நா.வின் 47 உறுப்பு நாடுகளின் தூதர்களையும் டில்லியில் நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம்.
இதற்காக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டெசோ அமைப்பைச் சேர்ந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன், முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலஷ்மி ஜெகதீசன், நானும் (டி.ஆர்.பாலு) இன்று ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் செல்கிறோம்.
வரும் 28, 29 ஆகிய தேதிகளில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் டில்லியில் உள்ள 47 நாடுகளின் தூதர்களையும் சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளிக்கிறோம்.
இலங்கையில் புனரமைப்பு பணிகளைத் தீவிரப்படுத்தவும், இலங்கை பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவும் தூதர்களுடனான சந்திப்பின்போது வலியுறுத்துவோம் என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten