தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 24 januari 2013

தமிழ் இனி மெல்லச் -----! பூநகரான் !!


தமிழ் இனி மெல்லச் ………..! அமங்கலமான வார்த்தைகளை பாவிக்கவே பலர் அஞ்சுவது இயல்பு. இருந்தும் தமிழ் இனி மெல்ல மறைந்து போகும் என்பது என்றோ எதிர்வு கூறப்பட்டது தான்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் எங்கும் காணோம் என்ற அதே பாரதி தான் இதையும் பாடினானா? என்று எண்ணத் தோன்றுகிறது.
இருந்தாலும் தனது முடிவிற்கு பாரதி காட்டும் காரணங்கள் வேறு. அதனால் இதை ஒரு அச்ச ரீதியில் எழுந்த எச்சரிக்கையாகக் கருதி தமிழ் வாழும் என நம்புவோம்.
பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் வரிசையில் இன்றிருப்பவர் வைரமுத்து.
கனடாவிலிருந்து தமிழகம் சென்ற கனடா உதயன் பத்திரிகையின் ஆசிரியர் திரு லோகேந்திரலிங்கம் கவிஞரைச் சந்தித்தது தொடர்பான பார்வையிது.
முதலில் திரு நெடுமாறன் அவர்களைச் சந்தித்த போது, புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர் அமைப்புக்கள் முதலில் தங்களிற்குள் பேசி ஒற்றுமையாக வேண்டும் என்று கோரிக்கை விட்டதாகத் தெரிகிறது. அடுத்து அவர்கள் விரைந்து செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாக செய்தி வெளியாகியிருந்தது.
அதனைத் தொடர்ந்து இன்று கவிஞர் வைரமுத்துவின் கவலையும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. யாரும் இதற்கு என்ன தீர்வு, என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக கூறவில்லை.
ஈழத் தமிழர் விவகாரம் பற்றி பிரஸ்தாபிக்கையில் நடிகர் கமலஹாசன் ஒரு தடவை வருமாறு கூறியிருந்தார். தமிழர் அவலங்களை பட்டியலிட்ட அவர், இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கூறும் அளவிற்கு எனக்கு சர்வதேச அரசியல் தெரியவில்லை என்று உண்மையை உரைத்தார். திரு கமலஹாசன் அவர்களிடம் உள்ள திறமைகளில் இந்த உண்மையைச் சரியாக இனங் காண்பதும் அதனைத் தயங்காது உரைப்பதும் முதன்மையானவை.
இந்தியாவை உலுக்கிய அண்மைய வல்லுறவைப் பற்றி கருத்து தெரிவிக்கும் போது, இதைச் செய்தவன் எனது சகோதரர்களில் ஒருவன். பாதிக்கப்பட்டவள் இன்னொரு இந்தியச் சகோதரி இதற்காக நான் வெட்கப்படுகிறேன்….என்று தொடர்ந்தவர் கமல்.
பழுத்த அனுபவப் பழம் எனப்படும் கலைஞரும் ஒரு தடவை டெல்லிக்கு எப்படி ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பில் வலுவான அழுத்தம் கொடுக்கலாம் என்று தெரியவில்லை அங்கலாய்த்திருந்தார்.
இன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மிகவும் இறுக்கமாக நகர்ந்து வந்தார். அதையும் அதே கருணாநிதியை வைத்து “டொசோ” மாநாட்டின் வாயிலாக முள்ளிவாய்க்காலைப் போல் மத்திய காங்கிரஸ் இந்திய அரசு குழப்பி அழித்து விட்டது.
அண்மையில், பொங்கலுடன் புலம்பெயர் நாடுகளில் வெளியான ஒரு அறிக்கை ஒன்றில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் அது எப்படி என்று தெளிவுபடுத்தப்படவில்லை. அந்த அறிக்கை தமிழ் மக்களை நோக்கி தயாரிக்கப்பட்டதே ஒழிய சர்வதேசத்தை நோக்கியதாகத் தெரியவில்லை.
இவர்கள் தான் தனிநாடு தான் தீர்வு என்பதை உலகிற்கு 2013ல் தான் எடுத்து உரைக்கப் போகிறார்களாம். இவர்களை எந்த நாடும் ராஜீக ரீதியாக சந்திக்க இயலாத நிலையில் இவர்களின் இந்தப் பிரகடனம் வெளியாகியுள்ளது.
வெளிநாடுகளில் தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்த, தாயகத்தில் கூட்டமைப்பை போல வெளிநாடுகளிலும் ஒரு பிரதிநிதித்துவம் தேவை என்பது, 2009 மே மாதத்திற்கு பிறகு இப்போது தான் 2013ல் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது போலும்.
அவர்களே வெள்ளைக் கொடி ஏந்தி இராஜதந்திர ரீதியில் நகருங்கள் என்ற பின்னரும் எதுவித மாற்றமுமின்றி கொள்கைப் பிடிப்புடன் அங்குள்ள இனவாதப் பேய்களிற்கு மேலும் ஆத்திரமூட்டி தமிழ் இன அழிப்பிற்கு உத்வேகம் கொடுப்பவர்கள் வெளிநாட்டில் வாழும் நாங்கள் தான். நிற்க!
மக்கள் தெரிவு செய்தவர்களை பிரதிநிதிகள் என்று எற்றுப் பேசிய காலம் என்றோ மலையேறிவிட்டது. இதனை எழுதும் போது கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதியிருந்த இந்த “மலையேறுசாமிகளின்;” யதார்த்த அன்னியம், நிஜத்திற்கும் அவர்களிற்குமான இடைவெளிகள் தான் துல்லியமாகத் தெரிகிறது.
ஹிஸ்புல்லா அமைப்பு முறைப்படி தேர்தல் வாயிலாக ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்டு ஆட்சி அமைத்த பின்பும் அதனை கனடா அங்கீகரிக்கவில்லை. புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதால் பாராம்பரிய ஜனநாயகவாதிகளான கூட்டமைப்பினரையே காங்கிரஸ் இந்தியா சந்திக்காது தவிர்த்ததை நாங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.
ஆயுதப் போராட்டம் சோவியத் உடைவுடன் மலையேறிவிட்டது. இரட்டைக் போபுரங்கள் தரையிறங்கியதோடு போராட்டம் பயங்கரவாதமாக்கப்பட்டு விட்டது. இந்தப் பின்லாடனின் வேள்வியிலும் பலி தமிழர் தான் , ……….புலிகள் தான்.
சுய நிர்ணயக் கோட்பாட்டின் தாய் தந்தையரான ரஷ்யாவும், சீனாவும் தான் ஈழத் தமிழரின் போர்க்குற்ற விசாரணைக்கும், மனித உரிமை மீறலிற்கும் எதிராக சிறீலங்காவுடன் கைகோர்த்துக் கொண்டு நிற்கின்றன.
எதிர்க்கட்சி தலைவரானதும் அமரர் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரிற்கான “டிப்ளோமற் பாஸ் போட்டுடன்” வெளிநாடுகளை சுற்றி வரப பிளேன் ஏறினார்.
ஈழம் வாங்கப் போனவர் ஜே ஆரிற்கு தாளம் போட்டுக் கொண்டு வந்து இறங்கினார். இது ஜே ஆரின் கெட்டித்தனமோ அமிரின் முட்டாள்த்தனமோ அல்ல. உலக நிலைவரம் அப்படியிருந்தது இப்போதும் இருக்கிறது.
அந்த உலக நாடுகளை வட்டுக்கோட்டைக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டுமாயின் முதலில் உலகுடன் நாங்கள் பேச வேண்டும். அவர்கள் எங்களுடன் பேச வரக் கூடியதான வேஷத்தை நாங்கள் முதலில் போட்டேயாக வேண்டும்.
இதைத் தான் சம்பந்தர் செய்கிறார். தமிழரசுக் கட்சி மாநாடொன்றிலும் பகிரங்கமாகவும் சொல்லிப்பாரத்தார். கொழும்பு எதையும் தமிழரிற்கு வழங்காது என்பதை சர்வதேச நாடுகள் உணரும் வரும் அவர்களோடு உலகோடு ஒத்தோடுவோம் என்றார். ஏங்களின் இன்ஜினியர் மூளைகளிற்குத் தான் அது ஏறுவதாக இல்லை.
வட்டுக் கோட்டைத் தீர்மானத்தை அன்றே அதாவது ராஜீவ் மறைவிற்கு முன்பே அது பிரிவினையை நாடுவதால் எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. அதை விடுத்து பிரிவினையின்றி தமிழர் கௌரவமாகவும் நிம்மதியாகவும் வாழ என்ன செய்ய வேண்டும் என்று தான் எல்லா நாடுகளும் அவரிடம் கேட்டன.
தீவுக் கிணற்றுக்கள் இருந்து வெளியே வந்த பின்பு தான் அந்த அரசியல் ஞானிக்கே உலகின் உண்மை நிலை தெரிந்தது. அதனாற் தான் அவர் கொண்ட கொள்கையில் இருந்து நழுவ வேண்டியிருந்தது.
தனி ஈழத்திலிருந்து மாவட்ட சபைகள் மட்டத்திற்கு வழுக்கி விழு வேண்டியிருந்தது. இதனை அவர் விரும்பிச் செய்யவில்லை. சிறீலங்கா அளவு இந்தியாவும் பிரிவினையை அனுமதிக்காத நிலையில் அவர் நகர ஆரம்பித்தார். அதனை நாங்கள் துரோகம், கொள்கையைக் கைவிடல் என்றோம். ஈற்றில் அவரையும் துரையப்பா போலவே சுட்டுக் கொன்றோம்.
இத்தனைக்கும் கலைஞர் பின்பு வள்ளுவரிற்கு கடலுள் வைத்த சிலையை யாழ்ப்பாணத்தில் அன்றே வைத்தவர் துரையப்பா தான். அவர் ஒரு கிறிஸ்தவர் பொன்னாலை வரதராஜப் பெருமாளிடம் போனவரை மேலே போகச் செய்தோம். இப்படியான கொலைகளால் தான் , இன்று முள்ளவாய்க்காலையும் தாண்டி எங்கோ வந்து நிற்கிறோம்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சரியான உத்தியோக ப+ர்வமான பெயர் சமஷ்டிக் கட்சி. “பெடறல் பாட்டி” என்பதன் சரியான பெயர்ப்பும் அது தான். ஆனால் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி என்றே அது முழங்கப்பட்டது.
இந்த தமிழ், அரசு, நாடு, ஈழம் என்ற சொற்களில் எந்தத் தமிழனிற்குத் தான் காதல் இல்லை? அதே சமயம் இதே சொற்களை இந்தியா, சிறீலங்கா மட்டுமன்றி அனைத்து நாடுகளுமே மிகவும் உக்கிரமாக எதிர்ப்பது பற்றியோ, அதனை ஏற்காமை பற்றியோ நாம் சிந்திப்பதுண்டா?
இந்தச் “சி” – “சீ” (சிறீலங்கா - சீனா) காதல் காரணமாக தமிழர் கேட்காவிடினும், தமிழரிற்கு ஒரு துண்டாவது கிடைக்க வாய்ப்பே அறவே இல்லை என்று கூறி விட இயலாது. பல் முணை உலகில் பல சாத்தியங்களில் அதற்கும் இடமுண்டு.
ஆனால் கவிஞர் வைரமுத்துவின் கவலையைப் போக்க வேண்டுமாயின் நாங்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு அரசியலையும் கோஜ அரசியலையும் தமிழரைக் கவர நமது அமைப்புக்களிற்கு பெயர் வைப்பதையும் கொடி பிடிப்பதையும் தொடர இயலாது.
சம்பந்தர் தேசியக் கொடியை ஏற்க மறுக்காது ஏந்தியதாலோ அன்றில் அன்றைய பழைய தமிழர் விடுதலைக் கூட்டணியும், இன்றைய புதிய கூட்டமைப்பும் தங்களது பிள்ளையான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை கைவிடுவதாக கூறுவதாலோ தமிழ் ஈழத்தை தமிழ் இனம் மறந்து விடப் போவதில்லை.
மன்மதனையோ அன்றில் ரதியையோ கொண்டு வந்து கட்டி வைத்தாலும் மறையாத அழியாத முதற்காதலாய் என்றும் இருக்க வல்லது ஈழக் கனவு. எனவே கொள்கையை கை விடுதல் பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை. சம கால விரைவு அழிவைப் பற்றி கவலைப்பட்டே ஆக வேண்டிய நிலை இது.
இன்றைய முதற் தேவை இன அழிப்பு வேகத்தை குறைப்பதே. நாம் வெளிநாடுகளில் ஈழம் கேட்கக் கேட்க அங்கே தமிழ் இன அழிவு விரைவுபடுத்தப்படும். கலப்புத் திருமணம் துரிதப்படுத்தப்படும்.
வைரமுத்து கவிஞர் என்பதால் சிந்திக்கிறார். அன்றே பாரதியும் சிந்தித்தான். அதனால் தமிழ் இனி மெல்லச் சாகும் இல்லைச் சாதிக்கும் என்றான் என்று நம்புவோம்.
அதற்கு புலம் பெயரந்த தமிழர்கள் தாங்கள் வதியும் நாடுகளில் மிதவாத அல்லது அரசியற் கலப்பற்ற தமிழ் இன சமூக அமைப்புககளை அமைத்து அரசியல்வாதிகளுடன் உறவுகளை வளர்த்து தொடர்பாடல் மூலம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அவர்களிற்கு விற்க வேண்டும்.
இதையே முன்பொரு தடைவை நாங்கள் வட்டுக்கோட்டையிலிருந்தே மீண்டும் எழ வேண்டும் என எழுதியதாக ஞாபகம். அதற்கு முன் கூட்டமைப்புடன் இணைய வேண்டும் அல்லது அதற்கு சமாந்தரமாக நகர வேண்டும். கொள்ளை இலட்சியம் மாறத் தேவையில்லை.
பாதையை மாற்றினால் தமிழர்கள் வாதைகள் தீரலாம். உலகம் உண்மையை உணரும் வரையாவது……. இதற்குள் ஜென்ம பூமியிலிருந்து ஜெனீவாவிற்கு சென்று விட்ட தேர்தலை மறந்து விடாதீர்கள்.
இதற்கு நாடுகளைக் கடக்கக் கூடாது ஐநா வில் அங்கத்துவ வாக்காளராகவுள்ள உலக நாடுகள் ஒவ்வொன்றையும் அணுக வழியைத் தேட வேண்டும்.
ஏதோ அவர்கள் எங்களைக் கண்டு ஓட்டம் பிடிக்காதிருந்தால் அதுவே முதல் வெற்றியாகும். இதனை வாசித்து முடிய முன்னரே பலர் பூநகரானை துரோகி என்று கண்டு பிடித்து விடுவர்.
இந்தியாவிற்கு மாற்று வழி தேடிய கொலம்பஸ் அமெரிக்காவை இந்தியா என நினைத்ததால் தான் இன்று வரை அமெரிக்க பூர்வீகக் குடியினர் இந்தியர்கள் என அழைக்கப்படுகின்றனர் என்ற குறிப்புடன் நிறைவு செய்கிறேன்.
முடிவாக இலங்கைத் தீவில் இன அழிப்பை தொடர்பவர்களிற்கு அச்சத்தையோ ஆத்திரத்தையோ ஊட்டி அவர்கள் விரைவாக தமிழ் இன அழிப்பைத் தொடர காரணம் எங்களது கொடி பிடிப்பும், கற்பனை இராஜ்ஜிய அமைப்பும் தானோ என்னமோ? அது கூட இரண்டாக இருப்பது மட்டும் அவர்களிற்கு இனிப்பான செய்தியாகும்.
kuha9@rogers.com

Geen opmerkingen:

Een reactie posten