|
| 03.07.2013 - புதன்கிழமை
தமிழ் மக்களுக்காக பாராளுமன்றத்தில் உரத்து குரல் கொடுப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவுச்சபையின் தேவநாயகம் மண்டபத்தில் நேற்றைய தினம் (2) நடைபெற்ற பனம் கைப்பணி கிராம சான்றிதழ் மற்றும் உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது வழிகாட்டலுக்கு அமைவாக ஒழுங்குசெய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வானது மகிழ்ச்சியானதும் முக்கியமானதுமான நிகழ்வாகும். மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை பனைவளத்தை எவரும் பொருட்டாக எண்ணாத நிலையில் அமைச்சர் அவர்கள் தனது அமைச்சு பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் பனைசார்ந்த அபிவிருத்தி செயற்திட்டங்கள் அவரது வழிகாட்டலுக்கு அமைவாக திட்டமிடப்பட்ட முறையிலும், ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகின்றது என்றும் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே 1991 ம் ஆண்டிலிருந்து அரசாங்களுடன் இணைந்து செயற்படும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பல அமைச்சுக்களை பொறுப்பேடுத்து அவற்றின் ஊடாக மக்களுக்கு பல சேவைகளை செய்துள்ளார்.
ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்த்தன, ஜனாதிபதி பிரேமதாசா, ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா முதல் தற்போது ஜனாதிபதியாகவுள்ள மகிந்த ராஜபக்ஷ அவர்கள் வரையிலான பல அரசியல் தலைவர்களுடன் கடமையாற்றி பல்வேறு உயிராபத்துக்களை எதிர்கொண்டிருந்த நிலையில் இற்றைவரை மக்களது மேம்பாட்டுக்காக தொடர்ச்சியாக உழைத்து வருகின்றார்.
அவரது தலைமையின் கீழ் குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் பல்வேறு அபிவிருத்தி மேம்பாட்டு திட்டங்கள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாராளுமன்றத்தில்; அங்கத்துவம் வகித்த நாள் முதலாக தமிழ் மக்களுக்காக உரத்து குரல் கொடுப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே என்றும் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை ஒருபோதும் செய்ய வேண்டாமென முதல் முதலாக கூறியவரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் என்றும் முரளிதரன் இதன்போது சுட்டிக்காட்டினார்.
ஆனால் இந்த விடயத்தில் காலம்தாழ்த்தியே தமிழ் கூட்டமைப்பினர் தற்போதுதான் பேசிவருகின்றார்கள். எதிர்க்கட்சியிலிருந்து எதையும் பேசிவிடலாம் ஆனால் எதையும் செய்ய முடியாது. எமது உரிமைகளை கல்வியாலும், பொருளாதாரத்தினாலுமே மேம்படுத்த முடியும். வடபகுதி யுத்தத்தினால் முழுமையாக சேதமடைந்த போதிலும் தற்போது அங்கு பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆளும்கட்சியில் வடக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் கிழக்கில் நானும் பங்கெடுத்திருப்பதனால் தான் வடக்கு கிழக்குப் பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் தமிழ் மக்களுக்காக தலைநிமிர்ந்து உழைத்துக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல் தலைவர்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முக்கியமானவர் என்றும் சுட்டிக்காட்டினார். http://www.epdpnews.com/news.php?id=20647&ln=tamil
http://www.epdpnews.com/news.php?id=20647&ln=tamil
|
|
| |
Geen opmerkingen:
Een reactie posten