தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 15 juli 2013

தீவிரவாதிகளை எப்படிக் கொல்கிறார்கள் !


அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரம் என்றவுடன் உங்களுக்கு ஞாபகம் வருவது என்ன ? சூதாட்ட அரங்கங்களின் சொர்க்கம்… நகரம் முழுவதும் பளிச்சிடும் நியான் லைட்கள்… உலகம் முழுவதிலுமிருந்து சூதாட வரும் பலதரப்பட்ட மக்கள்… கேளிக்கை விடுதிகள்…

இவை லாஸ்வேகாஸ் அமைந்திருக்கும் நெவாடாவின் ஒரு முகம். கேளிக்கை முகம். நெவாடாவுக்கு மற்றுமோர் முகமும் உண்டு. அதுவும் லாஸ் வேகாஸ்ஸூக்கு அருகே. அதை பயங்கர முகம் என்றும் சொல்லலாம். பிரமிக்க வைக்கும் தொழில்நுட்ப முகம் என்றும் சொல்லலாம். அதுவும் சாதாரண தொழில்நுட்பம் அல்ல. உளவு பார்க்கவும், உயிர்களைக் குடிக்கவும் உதவும் யுத்த சம்மந்தமான தொழில்நுட்பம். ஆப்கானிஸ்தானில் தலிபான் கட்டுப்பாட்டு பகுதிகள் மேலாகவும், பாகிஸ்தானின் எல்லையோர பகுதிகள் மேலாகவும் பறந்து கொண்டிருக்கும் அமெரிக்க உளவு விமானங்கள், ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இங்குள்ள ஆபரேஷன் சென்டர் ஒன்றிலிருந்துதான் இயக்கப்படுகின்றன என்பது பலருக்குத் தெரிந்திராத ரகசியம்.

அதாவது ஆசியாவில் வானில் பறக்கும் அமெரிக்க உளவு விமானங்களின் கண்கள் இங்கே அமெரிக்காவிலுள்ள ஆபரேஷன் சென்டரில் இருக்கின்றன. அங்கே தரையில் நடக்கும் அசைவுகள் இங்கேயிருந்துதான் பார்க்கப்படுகின்றன.
தரையில்யில் வில்லங்கமான காரியம் ஏதாவது நடைபெறுகின்றதா ? உடனடியாக விமானத்திலிருந்து தரையை நோக்கி ஏவுகணை ஒன்றை அனுப்ப வேண்டுமா ? விமானத்துக்கு அதற்கான உத்தரவு போவதும் நாங்கள் கூறும் இந்த பில்டிங்கில் இருந்துதான். பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட, அதி ரகசிய காரியங்கள் நடைபெறும் இந்தக் பில்டிங்குக்குள் சமீபத்தில் முதல் முறையாக செய்தியாளர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். அமெரிக்க உள்ளக பாதுகாப்பு இலாகாவிடம் அனுமதி கோரி சில மாதங்களுக்கு முன்பே விண்ணப்பித்திருந்த சில செய்தியாளர்களுக்கு, இப்போது திடீரென இந்த அனுமதி கிடைத்தது.

உள்ளே நடைபெறுபவை முழுவதையும் காண்பிக்கவில்லை, ஆனால், ஓரளவு நடவடிக்கைகளை பார்க்க வாருங்கள் என்று இந்த தரைக்கட்டுப்பாட்டு மையத்தின் கதவுகள் செய்தியாளர்களுக்காக இலேசாகத் திறக்கப்பட்டன. உளவு விமான ஆபரேஷன் சென்டர் பில்டிங் அமைந்திருப்பது, லாஸ் வேகாஸ் அருகிலுள்ள நெலிஸ் விமானப்படை முகாமில். உயரமான பில்டிங் இல்லை. சிறிதாக இருக்கின்றது. வெளியே பெயர்ப்பலகை இல்லை. அதீத காவல் இருப்பதாக வெளிப்படையாகத் தெரியவுமில்லை. முதல் பார்வையில் பார்த்தால் ஒரு சாதாரண அலுவலகம் போலவோ, ராணுவ அதிகாரிகளின் பொழுது போக்கு கிளப் போலவேதான் தெரிகின்றது. ஆனால் பில்டிங்குக்கு உள்ளே நுழையும் போதுதான் உள்ளேயுள்ள கட்டுக்காவலின் தீவிரம் தெரிகின்றது.

முழுமையாக கம்ப்யூட்டர்களால் கட்டுப்படடுத்தப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள். தேவையற்ற யாரும் தேவையற்ற இடத்துக்கு செல்ல முடியாதபடி பலமான காவல் ஏற்பாடுகள். பில்டிங்குக்கு உள்ளே நுழைவதற்காக கொடுக்கப்படும் அடையாள அட்டையை கதவின் அருகேயுள்ள ரீடரில் வைத்தால்தான் முதலாவது கதவே திறக்கின்றது. இரண்டாவது கதவு, மூன்றாவது கதவுகளைத் திறக்கவைக்க அடையாள அட்டை மாத்திரம் போதாது. உள்ளே நுழைபவரின் கைவிரல் ரேகைகள் கண் ஆகியவற்றையும் கதவருகிலுள்ள ரீடர்களில் காண்பிக்க வேண்டியிருக்கிறது. அவ்வளவு கட்டுக்காவல். உள்ளே அழைத்துச் செல்லப்பட்ட செய்தியாளர்களுக்கு போட்டோ எடுக்க அனுமதி இல்லை. ஆனால், பார்ப்பதற்கு சில வீடியோ கிளிப்பிங்குகளை தயாராக வைத்திருந்தார்கள்.

இந்த பில்டிங்குக்கு உள்ளே இருந்து இயக்கப்படும் விமானியற்ற உளவு விமானங்கள் (ட்ரோன்) என்ன செய்கின்றன என்பதற்கு ஒரு சாம்பிள் காட்டும் வீடியோ கிளிப்பிங்குகள் அவை. சில நிமிடங்களே ஓடக்கூடியவை. ஆசியாவில் பறக்கும் உளவு விமானத்தை இங்கே அமெரிக்காவில் இருந்து இயக்கும் ஆபரேட்டர், எந்தக் காட்சியை பார்த்து இயக்குவார் என்பதற்கு ஒரு சாம்பிள் இந்த வீடியோ கிளிப்பிங்குகள். முதலாவது வீடியோ, ஆப்கானிஸ்தானுக்கு மேலே பறக்கும் உளவு விமானம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றது. தரையிலிருந்து விமானம் ஆயிரக் கணக்கான அடிகள் உயரத்தில் பறந்தாலும் கிழேயுள்ள பிம்பங்கள் மிகத் தெளிவாகவே தெரிகின்றன. அருமையாக ஸூம் பண்ணப்பட்டு அருகிலிருந்து பார்ப்பதுபோல தெரிகின்றன.

ஆப்கானிஸ்தானின் காபுல் அருகேயுள்ள சிறு நகரம் ஒன்றில் உளவு விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா ஒவ்வொரு பில்டிங் பில்டிங்காக நகர்கிறது. இப்போது திரையில் ஒரு நபரின் உருவம் தெரிகின்றது. பில்டிங் ஒன்றின் மொட்டைமாடியில் தரையில் படுத்திருக்கின்றார் அந்த நபர். படுத்தபடியே கிழே வீதியை நோக்கி ஸ்னைப்பர் துப்பாக்கி ஒன்றால் எதையோ இலக்கு வைக்கிறார். உளவு விமானத்தின் கேமரா அவரை ஸூம் பண்ணுகிறது. துப்பாக்கியுடன் படுத்திருக்கும் நபர் மிகவும் தெளிவாகத் தெரிகின்றார். அவரது ஒவ்வொரு அசைவும் தெளிவாக தெரிகின்றது அவர் அணிந்திருக்கும் தலைப்பாகையின் கலர்கூட தெளிவாக தெரிகிறது. அந்தளவுக்கு அருமையான ஸூம் லென்ஸ்கள்.

அந்த நபர் துப்பாக்கியின் டெலஸ்கோப்பிக் லென்ஸ் ஊடாக பார்ப்பதும், கீழே வீதியை எட்டி பார்ப்பதுமாக இருப்பதில் இருந்து ஒன்று புரிந்து விடுகின்றது. இவர் கீழே வீதியில் போகப்போகும் யாரையோ இலக்கு வைத்துச் சுடுவதற்காக மேலே காத்திருக்கிறார். அவரின் தோற்றத்தை பார்த்ததும், தீவிரவாத இயக்கம் ஒன்றின் ஆள் என்பதை சுலபமாக ஊகித்து விடலாம். எனவே மீதியையும் ஊகிப்பது கஷ்டமல்ல – அவர் காத்திருப்பது வீதியில் ரோந்து வரப்போகும் அமெரிக்க அல்லது நேட்டோ ராணுவ வீரர்களை சுட்டுக் கொல்வதற்கு. அதற்காகத்தான் துப்பாக்கி சகிதம் பில்டிங் ஒன்றின் மொட்டை மாடியில் மறைந்திருக்கின்றார் என்று யோசித்து கொண்டிருக்கும்போதே திரையில் ‘கிளிக்’ என்று ஒரு சிவப்பும் புள்ளி தோன்றி மறைகிறது.

மறுவிநாடி அந்த நபர் துப்பாக்கியுடன் படுத்து இருந்த இடம் வெடித்துச் சிதறுகிறது. அந்த நபர் உடல் சிதறி இறந்து போகிறார். ஏதோ ஹாலிவூட் படத்தில் வரும் காட்சிபோல இருக்கிறதா? இது நிஜமான தாக்குதல். எப்படி நடைபெற்றது என்பதை வீடியோவை நிறுத்திவிட்டு ஆபரேஷன் சென்டர் அதிகாரி விளக்குகிறார். “காபுல் நகருக்கு அருகேயுள்ள மீடியம் சைஸ் நகரம் (பெயர் சொல்வதை தவிர்க்கிறார்கள்) ஒன்றின் மேலே வானத்தில் பறந்து கொண்டிருந்த விமானியற்ற உளவு விமானம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட காட்சிதான் அது. விமானம் தரையிலிருந்து வெகு உயரத்தில் பறப்பதால் தரையில் இருப்பவர்களுக்கு விமானத்தின் லென்ஸ்கள் எந்த இடத்தை பார்க்கின்றன என்று தெரியாது. அதே நேரத்தில் விமானத்தின் கீழே பியூசலேஜ் பகுதியிலுள்ள லென்ஸ் மூலமாக தெரியும் காட்சி இங்கே நெலிஸ் விமானப்படை முகாமிலுள்ள கட்டுப்பாட்டு மையத்தின் கம்பியூட்டர் திரை ஒன்றில் தெளிவாகத் தெரியும்.

அப்படி ஒவ்வொரு பில்டிங்காக பார்த்து கொண்டு வரும்போது ஒரு பில்டிங் மொட்டைமாடியில் இந்த நபர் துப்பாக்கியுடன் காத்திருப்பதை இங்கேயுள்ள விமான ஆபரேட்டர் ஒருவர் கவனித்து விட்டார். அதன் பிறகு அலுவல் சுலபம். அமெரிக்காவில் இருந்தபடியே, ஆப்கானில் உள்ள பில்டிங் மொட்டைமாடியில் படுத்திருந்த நபர்மீது இலக்கு வைக்கப்படுகின்றது. இங்குள்ள கப்ப்யூட்டரில் வீடியோ கேம் பானல் போல உள்ள ஒன்றில் ஃபயர் சுவிட்ச் ஒன்றை அழுத்தி சரியாக ஒரு விநாடியில் உளவு விமானத்திலுள்ள ஹெல்பயர் ஏவுகணை ஒன்று இலக்கை நோக்கிக் செலுத்தப்பட - இலக்கிலுள்ள நபர் உடனடியாகக் கொல்லப்படுகிறார்.

இரண்டாவது வீடியோ கிளிப்பிங்கில் காண்பிக்கப்படுவதும் கிட்டத்தட்ட இதுபோன்ற ஒரு காட்சிதான். அதுவும் ஆப்கானில் எடுக்கப்பட்ட காட்சிதான். இம்முறை பில்டிங் அல்ல. காபுல் புறநகர பகுதியிலள்ள வீதி ஒன்று. இரவு நேரம்.
இரவு நேரத்திலும் காட்சி தெரியும் நைட்விஷன் லென்ஸ் மூலமாக விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சி அது. இரவில் ஜன நடமாட்டம் இல்லாத வெறிச்சென்று இருக்கும் அந்த வீதியின் ஓரமாக ஒரு அசைவு தெரிகின்றது. அசைவு தெரியும் இடத்தை நோக்கி லென்ஸ் ஸூம் பண்ணப்படுகின்றது. இப்போது அந்த அசைவு ஒரு மனித உருவம் என்பது நன்றாகத் தெரிகிறது.அந்த நபர் செய்யும் காரியமும் தெரிகிறது.

இரவு வேளையில் வீதியின் ஓரமாக கண்ணிவெடி ஒன்றைப் புதைக்கிறார் அந்த நபர். மறுநாள் ரோந்து வரும் ராணுவ வாகனத் தொடர் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தவே அவர் கண்ணிவெடி புதைக்கிறார் என்று இலகுவாக ஊகித்து விடலாம். அவர் கிளைமோர் குண்டை வீதியில் புதைத்துவிட்டு நிமிரும்போது - திரையில் ‘கிளிக்’ என்று ஒரு சிவப்புப் புள்ளி. இப்போது அந்த நபர் நின்றிருந்த இடத்திலிருந்து தீச்சுவாலையும், புகையும் கிளம்புகிறது. அவரும் கொல்லப்படுகிறார். ஆயிரக் கணக்கான கிலோமீட்டர்களுக்கு அப்பால் அமெரிக்காவில் இருந்து ஒரு பட்டன் அழுத்தப்பட, ஆப்கான் வீதியிலுள்ள நபர் சிதறி விழும் தொழில்நுட்பம்.

பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால், நடக்கும் ஒரு காட்சியை வீடியோ மூலம் நாம் பார்க்கும்வேளை, அங்கே சில செக்கன்டுகள் தாமதமாகும். அதிலும் சிலவேளை 1 நிமிடம் கூடச் செல்லலாம். அப்படி என்றால் குறிப்பிட்ட ஒரு சம்பவம் நடந்து முடிந்து சுமார் 1 நிமிடத்துக்கு பின்னரே அமெரிக்க கட்டுப்பாட்டு அறைக்கு வீடியோ கிடைக்கிறது. இன் நிலையில், எவ்வாறு அவர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள் ? இதற்காக அவர்கள் பாவிக்கும் தொழில் நுட்ப்பங்கள் என்ன என்பது எல்லாம் வியக்கைவைக்கும் செயலாகவே இருக்கிறது.



Geen opmerkingen:

Een reactie posten