காலங்காலமாகவே யுத்தத்தில் தோற்கடிக்கப்படும் எதிரியின் உடமைகளைச் சீரழிப்பதை ஒரு வெற்றியின் சின்னமாகக் கொண்டாடும் மரபு உலகெங்கிலும் இருந்து வந்திருக்கின்றது.
அதிலும் குறிப்பாக தோல்வியடைந்த எதிரியின் தேசத்தில் வாழும் பெண்களை மானபங்கப்படுத்தி, பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்துவதென்பது, வெற்றி பெற்ற தரப்பு தனது வெற்றியை களிப்புடன் கொண்டாடும் ஒரு நடைமுறையாகவே புராதன காலங்களில் இருந்து வந்தது.
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-24
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-25
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-26
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-27
அவலங்களின் அத்தியாயங்கள்- 28
ஆனாலும் இந்தியா போன்ற - தன்னை ஒரு புனிதமான தேசமாகக் கூறிக்கொண்டு திரியும் புதினமான ஒரு நாடு, அதிலும் குறிப்பாக இந்த இருபதாம் நூற்றாண்டில், தன்னிடம் அடைக்கலம் தேடிவந்த ஒரு இனத்தின் மீதே இதுபோன்ற பாலியல் கொடுமைகளை இந்தியப் படையினர் செய்ததும், அதனை இந்திய ஆட்சி அனுமதித்ததும் உண்மையிலேயே மன்னிக்க முடியாத ஒரு குற்றம் என்றே கூறவேண்டும்.
வடக்கு கிழக்கில் களம் இறக்கப்பட்டிருந்த இந்தியப் படையினர், “செக்கிங்”, “தேடுதல் நடவடிக்கைகள்” என்ற பெயர்களில் ஏராளமான பாலியல் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தச் சம்பவங்களில் ஒரு சில மட்டுமே அதில் சம்பந்தப்பட்ட ஜவான்களுக்கு எதிராகத் தண்டணையைப் பெற்றுத்தந்தனவாக இருந்தன. ஆனால் இதுபோன்ற பாலியல் சம்பவங்கள் யுத்த சூழ்நிலையில் தவிர்க்க முடியாதவை என்பதே அனேகமான இந்தியப் படை அதிகாரிகளின் நிலைப்பாடாக இருந்தது.
ஈழத்தில் இந்தியப் படை ஜவான்கள் மிகவும் மோசமாகப் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டுத் திரிவதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்த காலப்பகுதியில், இந்தியப் படை உயரதிகாரி ஒருவர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்:
“பாலியல் வல்லுறவு என்பது ஒரு குற்றம் என்பது உண்மைதான். அதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. ஆனால் இது எல்லா யுத்தங்களின் போதும் சாதாரணமாக நடைபெறுகின்ற ஒரு விடயம். யுத்தத்தின் போது படையினருக்கு ஏற்படுகின்ற களைப்பு, மன உளைச்சல் போன்ற உளவியல் விளைவால் இது ஏற்படுகின்றது. இது தவிர்க்க முடியாத ஒன்று என்றே கூறவேண்டும்.” என்று அவர் தெரிவித்திருந்தார்.
இது விடயமாகக் கருத்து வெளியிட்ட மற்றுமொரு அதிகாரி, “இத்தகைய கதைகள் வெகுவாக மிகைப்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற பாலியல் வல்லுறவுச் சம்பவம் பற்றிய குற்றச்சாட்டு ஒன்றை நேற்றைய தினம் நாங்கள் விசாரணைக்கு உட்படுத்தியிருந்தோம். ஆனால் விவாசணையின்போதுதான் தெரிந்தது அது பாலியல் வன்முறை அல்ல. வெறும் மானபங்கப்படுத்தல் மட்டுமே என்று.
கற்பிற்கு இலக்கணம் வகுத்ததாக தம்மைப்பற்றி பெருமைப்பட்டுக் கூறிக்கொள்ளும் இந்தியா போன்ற ஒரு தேசத்தின் புதல்வர்கள், பெண்கள் மானபங்கப்படுத்தப்படுவதை வெறும் சாதாரண ஒரு விடயமாக எடுத்துக்கொண்டது மட்டுமல்ல, அவற்றை நியாயப்படுத்தியதும் உண்மையிலேயே கொடூரமானதுதான்.
மற்றொரு இந்தியப்படை அதிகாரி இந்த விடயம் பற்றி இவ்வாறு தெரிவித்திருந்தார்:
“நாங்கள் வேண்டுமென்றே பெண்களை இவ்வாறு சோதனையிடுவதில்லை. இதோ பாருங்கள்... எங்கள் அதிகாரி ஒருவர் வாகனத்தில் செல்லும் போது வீதியில் இரண்டு பெண்கள் நின்று கொண்டிருக்கின்றார்கள். ஒரு பெண் கையசைக்க மற்றப் பெண் ஸ்கேர்ட்டை உயர்த்தி தானியங்கித் துப்பாக்கியை எடுத்து எங்கள் அதிகாரி மற்றும் ஜவான்கள் மீது சுட ஆரம்பிக்கின்றாள்.
பெண்களையும் நாங்கள் சோதிக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா? தொடைகளுக்கு இடையேயும், ஜாக்கட்டுக்குள்ளும் ஆயுதங்களை மறைந்து வைத்திருப்பவர்கள் பெண்களாகவே இருக்கின்றார்கள்“ என்று அந்த அதிகாரி தெரிவித்திருந்தார்.
இந்தியப் படை அதிகாரிகளின் அனுமதியுடன் நடைபெற்ற சோதனை நடவடிக்கைகள் பெண்களை பெரும்பாலும் மானபங்கப்படுத்துவதாகவே அமைந்திருந்தன. தமது சோதனை நடவடிக்கைகளின் போது பெண்கள் துன்பப்படுவதையும், வேதனையில் துடிதுடிப்பதையும், அவமானத்தால் புரள்வதையும் கண்டு இந்தியப் படை ஜவான்கள் களிப்புற்றார்கள்.
தமிழ்ப் பெண்களைப் பாலியல் இம்சைக்கு உள்ளாக்கும் போது தமது பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளும் அதேவேளை, தமது கண்களுக்குத் தெரியாமல் தம்மைச் தோல்வியடையச் செய்துகொண்டிருக்கும் எதிகளான விடுதலைப் புலிகளின் உறவுகளை ஒருவகையில் பழிவாங்கிவிட்டோம் என்கின்ற திருப்தி இந்தியப்படையினருக்கு ஏற்பட்டது.
சோதனை நடவடிக்கைகள்:
ஈழத்தில் இந்தியப் படையினர் அமைத்திருந்த சோதனைச் சாவடிகளில் பெண்களைச் சோதனையிடுவதை ஆண் இந்தியச் சிப்பாய்களே செய்துவந்தார்கள். “ஆயுதங்களைத் தேடுதல்” என்பது- சகல பெண்களின் உடல்களிலும் கைவைத்தல் என்பதற்கான அனுமதியாகி விட்டிருந்தது.
இந்தியப் படையினரின் சோதனைச் சாவடியை தனது சிறு தங்கையுடன் தாண்டிச் சென்ற ஒரு இளம் பெண், இந்தியப்படையினரின் அத்துமீறல்கள் தொடர்பான ஆராய்ச்சிப் பதிவினை மேற்கொண்ட யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்களிடம் இவ்வாறு தெரிவிக்கின்றார்: “எங்களுடைய அந்தரங்கப் பகுதிகளை எல்லாம் எவ்வாறு இந்த இந்தியப் படையினர் நகங்களால் கீறியும், தடவியும், அநாகரிகமாக நடந்துகொள்ள முடியும்?” என்று அந்தப் பெண் குமுறியிருக்கின்றார்.
மற்றொரு இந்தியப் படைச் சோதனைச் சாவடியில் ஒரு சிறு பெண் அழுதுகொண்டு நின்றிருக்கின்றார். அந்தச் சிறுமியின் மாதவிலக்குக்குப் பயன்படுத்தப்படும் உள்துணியைக்கூட காட்டச்சொல்லிக் கேட்டார்களாம்.
இதேபோன்று தனிமையாக உள்ள இந்தியப் படையினரின் காவல் அரணில் காவல் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வீரர்கள் தெருவில் செல்லும் பெண்களுக்கு தமது ஆடைகளைக் களைந்து எதுவோ அசிங்கமாகச் செய்து காண்பிப்பார்களாம். இந்த அசிங்கங்களைக் கண்டு சங்கடப்படும் பெண்களைப் பார்த்து சிரித்து கேலி செய்வார்களாம்.
இந்தியப் படையினருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, ஈழத்தில் பெண்களைச் சேதனையிடுவதற்கென்று இந்தியப் மத்திய ரிசர்வ் பொலிஸ் படையின் பெண்கள் பிரிவு வெகு அமர்க்களமாகக் கொண்டுவரப்பட்டது.
தொலைக்காட்சிகளிலெல்லாம் இந்தப் பெண் படையினரே ஈழத்தில் பெண்களைச் சேதானையிடுவதுபோன்று காண்பிக்கப்பட்டது. ஆனால் நடைமுறையில் தொடர்ந்தும் ஆண் சிப்பாய்களே சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்கள்.
ஆங்காங்கு அமைக்கப்பட்டிருந்து சில சோதனைச் சாவடிகளில் மட்டுமே இந்திய ரிசர்வ் பொலிசின் பெண் படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டார்கள். பெண் பொலிசார் பெண்களைச் சோதனையிடும்பொது ஆண் சிப்பாய்கள் அந்தக் கூண்டுக்குள் நின்று பார்த்துக்கொண்டிருப்பார்கள். சோதனை நடவடிக்கைகளை பார்த்து ரசித்து சிரித்துக்கொண்டிருப்பார்கள்.
விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பாக ஏதாவது மாற்றுக் கருத்துக்கொண்டிருக்கும் எவராவது தனது மனைவி, சகோதரி அல்லது மகளுடன் ஒருதடவை இந்தியப் படையினரின் சோதனைச் சாவடி ஒன்றைக் கடந்து சென்றிருந்தால், நிச்சயம் அவர்கள் “புலிகள் செய்வது சரி” என்ற முடிவிற்கே வருவார்கள். அந்த அளவிற்கு இந்தியப் படையினரின் சோதனைக் கொடூரங்கள் அமைந்திருந்தன.
அம்மாவின் அச்சம்
இந்தியப் படைகள் ஈழத்தை ஆக்கிரமித்த காலப்பகுதியில் நான் இந்தியாவில் தங்கியிருந்து கல்வி கற்றுக்கொண்டிருந்தேன். அப்பொழுது இலங்கையில் இருந்து எனது அம்மா கடிதம் எழுதும் போது, இந்தியப் படைகள் பற்றி மக்கள் மத்தியில் பரவியிருந்த அச்சம் கலந்த வதந்திகள் பற்றியும் குறிப்பிட்டு எழுதியிருந்தார்.
இந்தியப் படைகள் வீட்டுச் சோதனை என்று வீடுகளுக்குள் நுழைந்தால், அம்மா எனது சகோதரனை அழைத்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியில் முற்றத்திற்கு வந்து நின்றுவிடுவதாக அந்தக் கடிதத்தில் எமுதியிருந்தார். இதேபோன்றுதான் அங்கு வீடுகளில் உள்ள அனைவருமே நடந்துகொள்வதாக அவர் எழுதியிருந்தார்.
அப்பொழுது எனது தம்பிக்கு மிகவும் குறைந்த வயது. அதேவேளை எனது அம்மாவிற்கோ 54 வயது. இவர்கள் வீட்டிற்குள் இருப்பதற்கு எதற்காகப் பயப்பட வேண்டும் என்று எனது மனதினுள் கேள்வி எழுந்தது.
அக்காலகட்டத்தில் இந்தியப் படையினர் வயது முதிர்ந்த பெண்களைக்கூட விட்டுவைப்பதில்லை என்பது எனக்குப் பின்னரே தெரியவந்தது.
எமது பிரதேசத்தில் வயது வந்த பெண்கள் மீது இந்தியப் படையினர் புரிந்திருந்த பாலியல் கொடூரங்கள் பற்றி மக்கள் மத்தியில் உலாவியிருந்த செய்திகளே இதுபோன்ற அச்சத்தை எனது தாய் உட்பட பல மூதாட்டிகளுக்கும் ஏற்படுத்தியிருந்தது.
வீடுகளைச் சோதனையிட வரும் இந்தியப் படையினர் உள்ளே அழைத்தால்கூட எவருமே உள்ளே போவது கிடையாது. வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை அவர்கள் களவாடிச் சென்றாலும் பறவாயில்லை என்று தங்கள் மானத்தைக் காப்பதிலேயே அவர்கள் கரிசனை செலுத்துவது வளக்கம்.
வித்தியாசமான ரசனைகள்
இந்தியப் படையினரில் சிலருக்கு வித்தியாசமான ரசனைகள் இருந்தன. குறிப்பாக வயது முதிர்ந்த சில அதிகாரிகளுக்கு இளம் பெண்களில் நட்டம் இல்லை. அவர்கள் முதிய பெண்களைக் குறிவைத்துத்தான் சேஷ்டைகளை விடுவது வளக்கம்.
அதேபோன்று வேறு சில இந்தியப் படையினருக்கு பராயமடையாத சிறுமிகளை குதறுவதில் அலாதி பிரியம். எனவே அக்காலகட்டத்தில் வடக்கு கிழக்கில் இந்தியப் படையினர் என்றால் பராயமடையாத சிறுமிகள் முதல் 50 வயதைக் கடந்த முதிய பெண்கள்வரை அச்சத்துடன் நடுங்கினார்கள்.
இந்தியப் படைகளை மிகவும் வெறுத்தார்கள். இன்றுவரை இந்தியர்களையும், இந்தியாவையும் அவர்கள் வெறுத்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். ஏனெனில் அவர்கள் அனுபவித்த கொடுமைகள், கொடூரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
38 வயதுப் பெண்மணியின் வாக்குமூலம்:
இந்தியப் படையினர் மேற்கொண்ட பாலியல் கொடுமைகள் பற்றி 38 வயதுப் பெண்மணி ஒருவர் “முறிந்த பனை” ஆராய்ச்சியாளர்களுக்கு இவ்வாறு விபரித்திருந்தார்:
“1987ம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம் திகதி காலை 8 மணியளவில் மூன்று இந்திய இராணுவத்தினர் எங்களுடைய வீட்டிற்குள் வந்தார்கள். அப்பொழுது எனது அம்மா சமையல் அறையில் இருந்தார். நானும் எனது மகளுமே அவர்களைப் பார்த்தோம்.
“செக்கிங்” என்று மட்டுமே சொல்லிவிட்டு எனது மகளை ஒரு அறைக்குள் தள்ளினார்கள். நான் அவளைப் பற்றி இழுத்துக்கொண்டு கத்தினேன். “அம்மா..அம்மா.. தேடுகிறார்கள்..” என்று உரக்கக் கத்தினேன்.
உடனே அருகில் இருந்த இந்திய இராணுவத்தின் காவல் அரணில் இருந்து வேறு சில படையினர் எமது வீட்டுக்குள் ஓடி வர ஆரம்பித்தார்கள்.
எனது வீட்டிற்குள் இருந்த மூன்று படையினரும், “தாங்கள் சோதனையிட மட்டுமே வந்திருந்ததாகவும், உடனடியாகப் போய்விடுவதாகவும்” கூறினார்கள். அவர்கள் கூறியபடியே “சோதனையை” முடித்துக் கொண்டு அவர்கள் சென்றும் விட்டார்கள். ஆனால் அவர்கள் “சோதனை” முடித்துக் கொண்டு செல்லும் போது எனது தங்கச் சங்கிலியைத் திருடிக்கொண்டு சென்றுவிட்டார்கள்.
நாங்கள் நன்றாகப் பயந்து போயிருந்தோம். பின்னர் எனது மகளை பெட்டி போன்றிருந்த பின்பக்க சிறிய அறை ஒன்றினுள் ஒழித்து வைத்துக்கொண்டேன். அன்று இரவு 9.30 மணியளவில் அதே மூன்று இராணுவத்தினரும் மீண்டும் எனது வீட்டை நோக்கி வருவதைக் கண்டேன். ஆனால் அவர்கள் இம்முறை இராணுவக் காவல் அரணி இருந்த பகுதி வழியாக வராமல், மற்றொரு பக்கத்தில் காலியாக இருந்த வீட்டின் வழியாக, சுவரைத் தாண்டிக் குதித்து வந்தார்கள்.
ஆயுதங்களுடன் வந்த அவர்கள் எனது பெற்றோரை ஒரு அறையிலுள் தள்ளிப் பூட்டினார்கள். என்னை ஒரு அறைக்குள் இழுத்துக்கொண்டு போய், என்மீது பாலியல் வல்லுறவு புரிந்தார்கள். துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டிருந்த என்னை ஒருவர் பின் ஒருவராக மூன்று பேரும் வார்த்தையால் விபரிக்க முடியாத அளவிற்குத் துன்புறுத்தினார்கள்.
நான் கூச்சல் போடவில்லை. நான் கூச்சல் போட்டு அதனால் அவர்கள் எனது பெற்றோரைச் சுட்டுவிட்டால் என்ன செய்வது? யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு பஸ் ஓட ஆரம்பித்த முதல் நாளே நான் எனது கிரமத்தை விட்டுப் போய்விட்டேன்.
பயங்கரக் கனவுகள் அடிக்கடி தோன்ற ஆரம்பித்தன. அந்த இந்தியப் பாதகர்களின் முகங்கள் அடிக்கடி தோன்ற ஆரம்பித்தன. அவர்களுடைய குரல்கள் அடிக்கடி கேட்பது போல் தோன்றின.
எங்கள் ஆண்களைப் பற்றி..
பின்னர் எனது மகளைக் கூட்டிக்கொண்டு வெளிநாடு போனேன். ஒரு மனநிலை வைத்திய நிபுணரைச் சந்தித்தேன். அவர் ஒரு அந்நியராக இருந்ததால் அவரிடம் என்னால் அனைத்தையும் கூற முடிந்தது. அவர் எனக்கு மருந்துகளைத் தந்தார்.
அவை ஓரளவு என்னைச் சாந்தப்படுத்தினாலும், என்னுடைய மனநிலைப் பாதிப்பை முற்றாக நீக்கிவிடவில்லை. என் நிலமையோ இன்னும் மோசமாகிக்கொண்டே போகின்றது. எனது மகளையாவது காப்பாற்ற முடிந்ததே புண்ணியம்.
என்னுடைய கணவருக்கு இதுபற்றி எழுதியபோது, “ஒன்றுக்கும் கவலைப்படாதே” என்று எழுதியிருந்தார். உங்களுக்குத் தெரியுத்தானே எங்களுடைய ஆண்களைப் பற்றி? அவர் என்னை ஏற்றுக் கொள்வார் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? இந்த உலகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டவள் மாதிரி உணர்கின்றேன்.எனக்கு என்னவோ மாதிரி இருக்கின்றது” என்று அந்தப் பெண்மணி தெரிவித்திருந்தார்.
தொடரும்...
Geen opmerkingen:
Een reactie posten