அழிக்கப்படும் நினைவுகள்! - கந்தரதன்
இன்று தமிழர் தாயகப் பகுதியின் பட்டிதொட்டி எங்கும் சிங்கள மயமாகி வருகின்றமை குறித்து தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் மக்கள் கொதிப்படைந்துபோயுள்ளனர். தாயகத்தில் சிங்களத்தின் அத்து மீறல்களுக்கு சிறிதளவேனும் எதிர்ப்புக் குரல் எழுப்புபவர்கள், படையினராலும் படைப் புலனாய்வாளர்களாலும் அச்சுறுத்தப் படுவதுடன், மறைமுகமான கொடுமைகளுக்கும் ஆளாகிவருகின்றனர்.
இதனால், அங்கு சிங்களவர்கள் செல்லப்பிள்ளைகளைப் போன்று தமது விருப்பத்திற்கு நடந்துகொள்கின்றனர். முன்னர் யாழ்ப்பாணம் என்ற பெயரைச் சொன்னாலே தென்பகுதியில் கலவரமடையும் இனவாத சிங்களவர்கள் இன்று யாழ்மண்ணிலேயே தமது குறளிவித்தைகளைக் காட்டுமளவிற்கு படையினர் பின்புலமாக நிற்பது தெட்டத் தெளிவாகின்றது. இவ்வாறே, யாழ் கொக்குவில் பகுதியில் தலையாழி ஞான வைரவர் ஆலயத்தின் கதவினை அத்து மீறி உடைத்து உட்சென்ற சிங்களக் காடையர்கள், ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு கேடு விளைவித்ததுடன் அவர்களுடைய செயற்பாடுகளை தட்டிக் கேட்ட அப்பகுதி மக்களையும் ஆலய நிர்வாகத்தினரையும் அப்பகுதியில் நிலைகொண்டுள்ள படையினரின் துணையுடன் மிரட்டி விரட்டியுள்ளனர்.
குறித்த ஆலயத்திற்குச் சொந்தமான மடத்தில் அப்பகுதியில் உள்ள ஒருவருடைய துணையுடன் கடந்த 3 நாட்களுக்கு மேலாக தங்கியுள்ள சுமார் 80 வரையான சிங்களவர்கள் அங்கு தங்கி நின்று ஆலயத்தின் புனிதத் தன்மைக்குக் கேடு விளைவிக்கும் விதத்தில் தமது செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக ஆலயச் சூழலிம் மாமிசம் சமைத்து உண்ணுதல், மது அருந்துதல், ஆலயக் கிணற்றில் நீராடுதல், ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு விளைவிப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை தட்டிக் கேட்ட அப்பகுதி மக்களுக்கும் ஆலய நிர்வாகத்தினருக்கும் அப்பகுதியில் உள்ள படைமுகாமில் உள்ள படையினர் மிரட்டல் விடுத்துள்ளார்கள். குறிப்பாக தென்னிலங்கையில் இருந்து வடபகுதி நோக்கி செல்லும் சிங்கள இனத்தவர்கள் தங்குவதற்கான இடங்கள் இல்லை என்றால் இந்து ஆலயங்களில் தங்கிவிட்டு செல்கின்றார்கள் இதேபோல்தான் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலும் சிங்களவர்களின் செயற்பாடுகள் மற்றும் அத்துமீறல்கள் மேலும் மேலும் அதிகரித்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, வடக்கில் இந்துக்கோவில்களை இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் சிங்கள அரசும், அரச படைகளும் திட்டமிட்டு செயற்படுகின்றார்கள், தமிழ்மக்களின் வரலாற்றில் ஒன்றாக இந்துசமய வரலாறும் காணப்படுகின்றது. அண்மையகாலத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்து ஆலயங்களில் இடம்பெற்ற கொள்ளைகள் மற்றம் சிலைகள் உடைப்பு எல்லாமே வடக்கில் பௌத்த மதத்தின் ஆதிக்கத்தை எடுத்துக்காட்டுவதாகவே அமைகின்றது. இந்த நிலையில் யாழ் சாவகச்சேரியில் உள்ள அரச மரத்தின் கீழ் உள்ள இந்து ஆலயத்தினை காவல்துறையினர் உடைத்துவிட்டு புத்தரை குடியமர்த்தும் நடவடிக்கை ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஏ - 9 வீதியில் சாவகச்சேரி காவல்துறை நிலையத்துக்கு முன்பாக நீண்டகாலமாக இருந்த இந்துக் கோவிலின் ஒருபகுதி இடிக்கப்பட்டு அதன் அருகில் உள்ள அரசமரத்தின்கீழ் விசாலமான புத்தர் கோயில் ஒன்று அமைக்கப்பட்டுவருகின்றது. சாவகச்சேரி காவல் துறையினரின் மேற்பார்வையில் நடைபெற்றுவரும் இச்செயற்பாட்டுக்கு, சமய அமைப்புகளும் பொது அமைப்புகளும் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்துக் கண்டனம் வெளியிட்டுள்ளன. இதுவரை காலமும் பொதுமக்கள் நடமாட்டம் அற்ற பகுதிகளிலும் இராணுவம் மற்றும் பொலிஸ் நிலையங்கள் உள்ள பகுதிகளில் சிறு புத்தர் சிலை அமைத்து அவர்களுடைய வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டுவந்தது.
அதன் பின்னர் பொதுமக்களுடைய இடங்களைச் சுவீகரித்து இவ்வாறான புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டுவந்தன. ஆனால் தற்போது தமிழ்மக்கள் வழிபாடு செய்துவரும் இந்துக் கோவிலொன்று உடைக்கப்பட்டு அக்கோயில் அமைந்திருக்கும் இடத்தில் புத்தகோயில் அமைக்கப்படுகிறது. இச்செயற்பாடு, இந்து சமயத்தினை இழிவுபடுத்தும் அதேவேளை பௌத்த பேரினவாதத்தின் மிதமிஞ்சிய செயலாகவே கருதப்படவேண்டும் என்று மேற்படி அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
முற்றுமுழுதாக குறித்த பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களின் மேற்பார்வையில் மிகவும் விசாலமாக அமைக்கப்பட்டுவரும் இப்பௌத்த விகாரை அமைப்பு நடவடிக்கை உடனடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டும். முன்னர் அமைந்திருந்த குறித்த இந்து ஆலயத்தினை மீண்டும் பழைய இடத்தில் முன்பிருந்த விதமாக அமைக்கவேண்டும் என்றும் இந்த அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில், யாழ் சாவகச்சேரி இந்து ஆலய உடைப்புச் சம்பவத்திற்கு சாவகச்சேரி நகரசபை கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன் காவல் துறையினருடைய தன்னிச்சையான செயற்பாடு உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இவ்வாறான ஒரு அறிவுறுத்தல் கடிதம் ஒன்றினை மேற்படி சாவகச்சேரி நகர சபை, சாவகச்சேரி காவல்துறை நிலையத்திற்கு அனுப்பிவைத்துள்ளது. சாவகச்சேரி நகரசபையின் அனுமதி பெறப்படாமல் சட்டவிரோதமான முறையில் இந்துக் கோவிலை உடைத்து புத்தவிகாரை கட்டுவது தமிழர் சிங்களவர்களாகிய இரு இனங்களுக்கும் இடையில் இன வன்முறையைத் தூண்டும் ஒருசெயலாகவும் இச் செயற்பாட்டினை உடனடியாக காவல்துறையினர் நிறுத்தாவிட்டால் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறீலங்காப்படையினரால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நீண்டகாலப் போர் நடவடிக்கையின் நினைவுச்சின்னமாகக் காணப்படும் கிளிநொச்சி மத்திய கல்லூரியின் கட்டடம் சிறிலங்கா அரசினால் அடையாளம் தெரியாத வகையில் அழிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடம் 1996 இல் ‘சத்ஜெய` இராணுவ நடவடிக்கையின் போது, பலத்த சேதங்களுக்கு உள்ளானது. அதற்கு முன்பும் நடந்த சில யுத்த நடவடிக்கைகளில் பாதிப்படைந்திருந்தது. சிறிலங்கா அரச படைகளின் வான் தாக்குதல்கள் மற்றும் எறிகணை வீச்சுகளால் கடும் சேதங்களுக்கு உள்ளான அக்கட்டடம் போர் நினைவுச்சின்னமாக தமிழீழ விடுதலைப் புலிகளால் பேணப்பட்டுவந்தது.
(மிகுதி அடுத்த இதழில்)
நன்றி : ஈழமுரசு
Geen opmerkingen:
Een reactie posten