தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 1 juli 2012

பிள்ளையின் கதை (மட்டுமல்ல)

 (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) சுவரில் சாய்ந்து ஒரு காலை நீட்டிக் கொண்டு மற்றக்காலின் முழங்காலில் ஒரு கையை வைத்து முகட்டை வெறித்துப்பார்த்துக் கொண்ண்டிருந்தான். இன்று நேற்றல்ல 17 வருடமாக அவனிருக்கும் அந்த செல்லும், அந்த முகடும்தான் அவனது உலகம்.

அடிக்கடி எழும்பி தனது காலும் இடுப்பும் சரியாக வேலை செய்யுதா என்று பார்த்துக் கொள்வான். இருந்திருந்து எப்பவாவது இடுப்புக்கு கீழ் இயங்காமல் போய்விடும் என்றொரு பயம் அவனுக்கு. அப்படி எழும்பி எழும்பி இருப்பது அவனுக்கு சுகமாககவும் இருக்கும். இரண்டு கைகளையும் மேலுக்கு உயர்த்தி ஒரு கையால் இன்னொரு கையைப்பிடித்து இடுப்பை இரண்டு பக்கமும் வளைத்து ஒரு பெருமூச்சோடு சோம்பல் முறித்துக் கொண்டால் அவனுக்கு ஒரு புத்துணர்ச்சி வந்தமாதிரியிருக்கும்.
மிஞ்சிப் போனால் யன்னல் கம்பியைப் பிடித்து வெளியை வெறித்துப் பார்த்துக்கொள்வான். அவனது வெளி, யன்னலில் இருந்து இரண்டடி தூரத்திலுள்ள சுவர்தான்.
1995ம் ஆண்டு மகஸீன் சிறையில் "G" செல்லுக்கு வந்த பிள்ளையை, அவனது வீட்டிலிருந்தோ அல்லது சொந்தக்காரர் என்றோ யாரும் வந்து பார்த்தது கிடையாது. சிறையிலிருக்கிற மற்றப் பொடியனுகள்தான் இப்பவரைக்கும் அவனது சொந்தங்கள். அவர்களுக்கும் இவன்தான் மூத்தபிள்ளை.
"இன்னும் எத்தனை நாளுக்குத்தான் இந்த நாலு சுவரும் கம்பியும் முகடும். என்னொடொத்த வயதுக்காரங்கள் எல்லோரும் இரண்டு மூன்று பிள்ளைகளோட இருக்கிறாங்கள். என்ர வயதின்ர பாதிக்கு மேலான காலத்தை சிறையில கழிச்சிற்றன்" என்று அடிக்கடி சொல்லி சலித்துக் கொள்வான்.
எல்லாத்துக்கும் மேலாக தான் வருத்தம் வந்து இதுக்குள்ளயே செத்துப் போயிடுவனோ என்ற பயமும் அவனுக்கு இருக்கு. தனக்கு சீனி வருத்தம். இது வந்தால் மற்ற வருத்தமெல்லாம் தானாக வந்து ஒட்டிக் கொள்ளும். சிறைக்குள்ள மருத்துவ வசதி தமிழ் கைதிகளுக்கு மறுக்கப்பட்டிருக்கு. தன்னுடன் இருந்த ஒருவர் ஹாட்டில வருத்தம் வந்து சரியான மருத்துவ வசதியில்லாமல் செத்ததையும் நினைத்து அவன் நாளும் பொழுதும் வேதனைப் பட்டுக்கொண்டிருப்பான்.
சாப்பாட்டு நேரம் வரும்போதெல்லாம் 'பருப்பையும் சோத்தையும் தின்ன தின்ன இன்னும் சீனிதான் கூடுதே ஒழிய குறைந்தபாடில்லை' என்று பிள்ளை அடிக்கடி சிறைச் சாப்பாட்டை சொல்லிச் சலித்துக் கொள்வான்.
சிறையில் மூன்று நேரமுமே வெள்ளை தாய்லாந்து அரிசிச்சோத்தையும் பருப்பையுமே கொடுப்பார்கள். காலையில் தேங்காய்ப்பூச்சம்பலும், மதியம் கங்குண் இலை வறுவலும், பருப்பு ஆணமுமே கூடுதலாக இருக்கும். சோற்றுக்குள் கல்லும், கறிக்குள் வண்டுகளுமே மிதக்கும். எல்லாத்தையும் சகிச்சுட்டுத்தான் சாப்பிடணும். இதுவுமில்லையெண்டால் சாப்பாடில்லை. எப்பவாவது இருந்து போட்டுத்தான் மீன். அதுவும் மாதக்கணக்காக டீபிறிச்சில் வைத்ததாக இருக்கும். ஒரு வகையான நாற்றமே வரும். அனேகமாக அந்தக் கறியை யாரும் எடுப்பதேயில்லை. எப்பவாவது வரும் போஞ்சிக் கறிக்குள் புழு தவிர்க்க முடியாதது.
அவனுக்கு தெரிந்த பக்கத்து நண்பர்களுக்கூடாக தன்ர வீட்டைப் பற்றி அடிக்கடி விசாரித்துக் கொள்வான். அம்மாவும் சீனி வருத்தத்தாலயும், கைப்பிறசராலயும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறா. தங்கச்சியின்ர புரிசன், அவளை ஒரு பிள்ளையோட விட்டுட்டு போட்டான். அவளும் அம்மாவோடதான். அதுகளும் இருக்க வீடில்லாமல் அங்க இங்கை எண்டு சாப்பாட்டுக்கும் கஷ்டப்பட்டு அத்தலைந்து திரியுதுகள் என்று அறிந்து வைத்திருந்தான். இந்த 17 வருடத்தில வீட்டாக்கள் யாரையும் பார்த்ததில்ல. எட்டு வருடத்துக்கு முன் அப்பா இறந்தபோது கொண்டு போய் காட்டச் சொல்லியும் சிறை நிருவாகம் கொண்டுபோய்க் காட்டல்ல என்ற வேதனைகளும் சேர்ந்து அவனை நாளுக்கு நாள் கொன்று கொண்டிருந்தது. மற்ற பொடியனுகளுடைய அம்மா அப்பா சகோதரங்கள் எப்பவாவது வந்து சிறையில் பார்க்கும் போது பிள்ளையின் கண்கள் பனித்திருக்கும். அவனுக்கும் எத்தனை ஆசைகள். எல்லாத்தையும் கன்ணீராலே கரைசேர்க்கின்றான்.
பிள்ளை உட்பட குடும்பத்தில் மொத்தம் ஒன்பது பேர். மட்டக்களப்புக்கு தெற்கே பதினேழு கிலோமீற்றர் தூரத்திலுள்ள வந்தாறுமூலைதான் இவர்களின் இருப்பிடம். இதுவும் இவர்களின் சொந்த இடமில்லை. சீவல் தொழில் செய்யும் குடும்பம். தொழிலுக்கேற்ப இவர்கள் இடத்தையும் மாற்ற வேண்டியிருக்கும். 1990 ஆம் ஆண்டு இடம் பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது மட்டக்களப்பின் தென்மேற்கு பிரதேசமான சிறுதேன்கல் என்னுமிடத்துக்கு இடம் பெயர்ந்திருந்தார்கள்.
1990 இல் மட்டக்களப்பபின் தென் பகுதியில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது, பயத்தினால் இடம் பெயர்ந்த அப்பிரதேச மக்கள் 55,000 பேர்வரை வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாகத்தினுள் அகதிகளாக தஞ்சமடைந்திருந்தனர். இரு வெவ்வேறு தடவைகளில் இலங்கை இராணுவம் சுற்றி வளைத்து 174 அப்பாவி பொதுமக்களை கைது செய்து படுகொலை செய்தது. பிளையின் குடும்பமும் சிறுதேன்கல்லுக்கு இடம் பெயராவிட்டிருந்தால் இந்த 174 பேரில் பிளைகூட ஒருவராக இருந்திருக்கலாம்.
சிறுதேன்கல்லில் ஓலைக் கொட்டில் போட்டு இருந்த இவர்களால் தொடர்ந்து அங்கு இருக்க முடியவில்லை. அவர்களது தொழிலுக்கு அந்த இடம் சாதகமாகப் படாததனால் வறுமையும் நோயும் பீடிக்க 1991 முற்பகுதியிலே தங்களது பழைய இடமான வந்தாறு மூலைக்கு திரும்பி வந்து விட்டார்கள். ஆனால் தங்களது மூன்றாவது மகனான பிள்ளை இல்லாத சோகத்திலே வந்து சேர்ந்தார்கள். பிள்ளை குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையானலும் மூத்த ஆம்பிளைப்பிள்ளை. பிள்ளையின் குடும்பம் இடம் பெயர்ந்து இருந்த சிறுதேன்கற் பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த நேரத்தில் போராட்டத்திற்கு ஆட்கள் சேர்க்கும் போது பிள்ளையையும் கூட்டித்துப் போனது அவர்களால் தடுக்க முடியாது போயிருந்தது.
வீட்டின் தலைப்பிள்ளை வீட்டுக் கஷ்டத்தை பொறுப்பெடுத்து நாலு பெண்பிள்ளைகளையும் கரைசேர்ப்பான் என்றிருந்த அம்மாவுக்கு விடுதலைப் புலிகள்  இயக்கத்துக்கு தன்ர பிள்ளையை சேர்த்தெடுத்து விட்டார்கள் என்ற கவலை இருந்து கொண்டேயிருந்தது. தினமும் குடித்து அழிந்து கொண்டிருந்த அப்பாவைவிட தன்ர மூத்த மகனையே அந்த அம்மா நம்பியிருந்தார்.
பிள்ளைக்கு கொடுக்கப்பட்ட ஆயுள் தண்டனையும், அதோடு சேர்த்த 50 வருடத்தண்டனையையும் பற்றி அறியாத அந்த அம்மா இப்பவும் தன்ர மகன் வந்து தங்களைப் காப்பாற்றுவான், கஷ்டங்களைப் போக்குவான் என்ற நம்பிக்கையில்தான் இருக்கிறார். கண்முழித்து பார்க்க முடியாத வெயிலில், நிழலுக்கு எந்த மரம் செடிகொடிகளின் ஆதரவுமில்லாத வெளியில் ஒரு கொட்டில் போட்டு அதில்தான் பிள்ளையின் அம்மாவும், தங்கச்சியும், மருமகனும் வாழ்கின்றனர். கொட்டிலுக்குள்ளும் சீமெந்து போட அவர்களிடம் காசில்லை. காணிச் சொந்தக்காரன் எப்பவந்து எழுப்புவானோ என்ற பயமும் அவர்களுக்கு இல்லாமலில்லை. நாளாந்த சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் இவர்கள், உடுத்த துணி கிழிந்தால் மாற்று துணிக்கு என்ன செய்வதென்று யோசிப்பதில்லை. பிள்ளையின் தங்கச்சியை யாராவது கூப்பிட்டு வீட்டு வேலை செய்வித்தால்தான் அவர்களுடைய வயிற்றுக்கு கஞ்சி, அதத்தள்ளி அரசாங்கம் மாதா மாதம் அம்மாவுக்கு கொடுக்கும் 150 ரூபா தாவரிப்பு பணம். ஒரு இறாத்தல் பாணின்ர விலையே 60 ரூபா. இதைத் தவிர அவர்களின் வருமானத்துக்கு வேறு வழியில்லை. இந்த இலட்சணத்தில் கொழும்புக்கு வந்து மகனை எங்கு பார்க்கிறது.
பிள்ளை அடிக்கடி தன்ர நிலமை பற்றி எல்லோருக்கும் சொல்லிக் கொண்டிருப்பான். அவன்தான் இந்த மகஸீன் சிறையின் "G" செல்லின் சீனியர். எல்லோருக்கு இவனில அனுதாபமும்கூட. "இயக்கத்துக்கு என்னை கூட்டிப்போக்குள்ள 15 வயது. நான் இயக்கத்த விட்டு விலகிவரக்குள்ள பதினெட்டு தொடங்கல்ல. இதுக்கான தண்டனை இதனை வருடமா" என்று அடிக்கடி தன்னையே நொந்து கொள்வான். எங்கையாவது செத்து தொலைஞ்சிருக்கலாம் என்று கோபப்பட்டும் கொள்வான். சில வேளைகளில் அழுதும் தீர்ப்பான். இந்த நிலமையில் யார் யாருக்கு ஆறுதல் என்று எல்லோரும் மௌனமாகிவிடுவார்கள்.
பிள்ளை புலிகள் இயக்கத்தில் பயிற்சி எடுத்த பின்னர் புலிகளின் மருத்துவப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தான். 1991ஆம் ஆண்டு மட்டக்களப்பிலிருந்து இயக்கத்தின் ஒரு தொகுதி யாழ்ப்பாணம் அனுப்பப் பட்டபோது அதில் பிள்ளையும் சேர்க்கப்பட்டிருந்தான். 1993ஆம் ஆண்டு மட்டக்களப்புக்கு திரும்பி வரும் வரை யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரியில் இருந்த புலிகளின் மருத்துவ முகாமிலே பிள்ளை  பணியாற்றினான்.
மட்டக்களப்புக்கு திரும்பி வந்த பிள்ளைக்கு 1000 ரூபா காசு கொடுத்து வீட்டுக்கு அனுப்பியிருந்தார் முகாம் பொறுப்பாளர் ஜீவன். பிள்ளையின் பக்கத்து ஊர்தான் ஜீவன். ஆனால் பிள்ளைக்கு பொறுப்பாளர். வீட்டுக்கு வந்த பிள்ளை வீட்டாக்களைக் கண்ட சந்தோசத்தில் ஒரு வாரம் இரு வாரமாக கழிந்தது. திடீரென ஒரு நாள் இரவு புலிகளின் அந்த ஏரியா பொறுப்பாளரக இருந்த வேங்கையன் பிள்ளையின் வீட்டுக்கு வந்து 'நீ ஏன் இங்கு நிக்கிறய்?' என்று கேட்டிருக்கிறார். 'நான் லீவிலதான் வந்தனான்' என்ற பிள்ளையின் பதிலோடு வேங்கையன் போய்விட்டார்.
மறுநாள் இரவு பிள்ளையின் வீட்டுக்கு வந்த வேங்கையன் 'உடனடியாக உன்னை பேசுக்கு வரட்டாம்' என்று கூட்டிற்று போயிருக்கிறார். இது பிள்ளைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தினாலும் பொறுப்பளரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு போயிருக்கிறார். அன்றிரவே பிள்ளையை குடாவெட்டை என்ற இடத்திலுள்ள புலிகளின் பொறுப்பாளர் ராம் என்பவரின் முகாமுக்கு கொண்டு போகப்பட்டார். அங்கு பிள்ளையை அடித்து உதைத்து பங்கரில் போட்டார்கள்.
சில நாட்களின் பின் பிள்ளையையும் இன்னும் சிலரையும் அங்கிருந்து கைகள் கட்டப்பட்ட நிலையில் ரக்டரில் ஏற்றி தரவைக்கு கொண்டுபோனார்கள். அங்கு புலிகளின் பொறுப்பாளர் உருத்திரா மாஸ்டரின் முகாமிலுள்ள பங்கரில் இவர்கள் போடப்பட்டனர். அங்கேயும் பிள்ளைக்கு அடியும் விழுந்திருக்கிறது. பணிஸ்மண்டாக அடிக்கடி கடினமான வேலைகளும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஒருநாள் பங்கரில் இருந்த இவர்களை வெளியே கூப்பிட்ட ரமணன் என்பவர் 50 ரூபா கசை கொடுத்து 'தரவைக்குள்ள ஆமி இறங்கிட்டான் நீங்களெல்லோரும் வீட்டுக்கு ஓடுங்கள்' என்றிருக்கிறார். பிள்ளை அங்கிருந்து எடுத்த ஓட்டமும் நடையும் வீட்டுலதான் நின்றிருக்குது. அப்போ ஏற்பட்ட வெறுப்பும் வேதனையும் பிள்ளையை புலிகளின் பக்கத்தையே திரும்பி நினைக்க விடவில்லை.
பிள்ளையுடன் விடுதலையாக்கப்பட்ட ஒரு சிலர் தாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் நேரடியாக இரணுவத்திடமே போய் சரணடைந்திருக்கிறார்கள். பிள்ளைக்கு இது தெரிந்திருந்தும் 'நான்தான் இயக்கத்தை விட்டு விலத்தித்தனே' என்ற தைரியத்தில் அப்பாவுடன் சேர்ந்து தொழிலுக்கு போகத்  தொடங்கியிருந்தார். வீட்டாருக்கு பெரும் சந்தோசம். மூத்த பிள்ளை வீட்டுச் சுமையை பொறுப்பெடுக்கிறானென்று. மூன்று மாதம் எந்த பிரச்சினையும் இல்லாமல் குடும்பம் சுமுகமாய் போய்க் கொண்டிருந்தது.
1993ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் இராணுவத்தினர் வந்தாறுமூலை, மாவடிவேம்பு, சித்தண்டி என்ற மூன்று கிரமங்களையும் ஒரே நேரத்தில் சுற்றிவளைத்து வீட்டிலிருந்த எல்லா ஆண்களையும் மாவடிவேம்பு சிவாநந்தா விளையாட்டு மைதானத்துக்கு கொண்டு வந்தனர். பட்டியில் மாடுகளை அடைத்த மாதிரி மைதானத்தில் எல்லோரையும் வெய்யிலுக்குள் குந்த வைத்திருந்தனர். மைதானத்தை சுற்றி நூற்றுகணக்கான இரணுவத்தினர் நின்றிருந்தனர். தங்களுடைய பிள்ளைகளையும் புருசனையும் விடும்படி தாய்மார் இரணுவத்திடம் மண்டாடிக்கொண்டிருந்தனர்.
மதியத்துக்குப் பின்னர் கவச வாகனத்தில் உடல் தெரியாமல் போர்த்து மூடிக்கட்டப்பட்ட 'முண்டம்' கொண்டு இறக்கப்பட்டு மைதான வாசல் பகுதியில் நிப்பாட்டி வைக்கப்பட்டிருந்தது. 'ஆருபெத்த பிள்ளையோ அடி தாங்க முடியாமல் காட்டிக்கொடுக்க வந்திருக்குது' என்ற புறுபுறுப்பு அம்மாக்களிடையே எழுந்தது. இருந்தாலும் தன்ர பிள்ளைக்கு ஒன்றும் நடந்திரக்கூடதென்று ஒவ்வொருத்தரும் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டனர்.
ஆமிக்காரர்கள் ஒவ்வொருத்தராக கூட்டி வந்து முண்டத்தின் முன் நிறுத்தப்படனர். 'முண்டம்' தன்னைப் பார்த்து தலையாட்டிடக்கூடாது என்று ஒவ்வொருத்தரும் சித்தாண்டி முருகனை வேண்டிக் கொண்டனர். ஒவ்வொரு சுற்றிவளைப்பிலும் சித்தாண்டி முருகனுக்கும் இலாபம்தான். ஆனாலும் இராணுவத்துக்கும் இலாபம் இல்லாமலிருக்கவில்லை. பத்துப் பதினைந்து பேருக்கொருத்தராவது கவசவாகனத்துக்குள் போய்க் கொண்டுதானிருந்தனர். அப்படி போனவர்களில் ஒருத்தன் பிள்ளை.
பிள்ளையை அன்று பின்னேரமே கொம்மாதுறை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு இரண்டு நாட்களாக சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டான். மட்டக்களப்பில் இருந்த இராணுவ முகாம்களில் முக்கியமானதாக கருதப்பட்ட இராணுவ முகாம்களில் இதுவும் ஒன்று. பிள்ளை பிடிபட்ட காலத்தில் இங்கு பிடிபட்டால் திரும்பி வருவதே அரிது. இந்த முகாமைக் கடப்பதற்கே அநேகமானோருக்கு பயம். அவ்வளவு கொடூரமானது.
பிள்ளையை இரண்டு நாட்களில் கொம்மாதுறை இராணுவ முகாமிலிருந்து மட்டக்களப்பிலுள்ள CID பிரிவுக்கு மாற்றினார்கள். அங்கும் அடியும் உதையுமாக இரண்டுமாதங்கள் கழிந்தது. மட்டக்களப்பிலிருந்து CID யினர் பிளையை களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றினர். களுத்துறைக்கு மாற்றப்பட்ட பிள்ளைக்கு 1995ஆம் ஆண்டு ஆவணிமாதம், பயிற்சி எடுத்தது, ஆயுதம் தூக்கியது என்ற குற்றங்களை சுமத்தி உயர் நீதிமன்றம் மிகப் பெரிய தண்டனையை வழங்கியது. அன்றிலிருந்து மகஸீன் சிறைச்சாலையின் "G" செல்தான் பிள்ளையின் உலகம். உலகத்திலே ஒரு சிறுவர் போரளியாக இருந்ததுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய தண்டனை இதுவாகத்தனிருக்கும்.
போரும் முடிந்து எத்தனையோ சிறுவர் போரளிகள் முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். உலகமறியா ஒரு சிறுவர் போராளியாக இருந்து விலகிய தனக்கு இவ்வளவு தண்டனை கொடுமையானது என்பதனை, போரட்ட நேரத்தில் தனக்கு தளபதியாகவிருந்து, தண்டனை அனுபவிக்கும் போது அமைச்சராக இருப்பவரிடமெல்லாம் கெஞ்சி மண்டாடி கடிதமெழுதியும் எந்த பயனுமில்லை என்று பிதற்றுவான்.
உச்சநீதி மன்றில் இந்த தண்டனைகளுக்கெதிராக முறையீடு செய்வதற்கு பல வகையிலும் முயற்சி செய்து தோற்றுப் போனவனாகத்தான் இருக்கிறான். சட்ட வல்லுனர்களுக்கோ பல இலட்சம் தேவைப் படுகிறது.  அவனுடைய குடும்ப நிலையில் அவனுக்கு பெரும் தொகைப் பணம் கொடுத்து வழக்காடுவது இயலாததொன்று. அவனும் பலருக்கூடாக அணுகிப் பார்த்து சலிப்படைந்து விட்டான்.
இந்த கதைகளையெல்லாம் திரும்பத்திரும்ப எல்லோருக்கும் சொல்லிக் கொண்டேயிருப்பான். கேட்டு அலுத்துப் போன கதையா இருந்தாலும்கூட அவனுக்கு அது ஒரு வடிகால்.
23.06.2012

Geen opmerkingen:

Een reactie posten