தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 30 juli 2012

ஈழத் தமிழர்களை அழிக்க இந்தியப்படையினரால் களமிறக்கப்பட்ட தமிழ் அமைப்புக்கள்!- அவலங்களின் அத்தியாயங்கள்- 30: நிராஜ் டேவிட்!!



ஈழ மண்ணில் தமிழ் பெண்களுக்கு எதிராக இந்தியப் படையினர் மேற்கொண்ட பாலியல் வன்முறைகள் பற்றி இத்தொடரில் நிறையவே பார்த்திருந்தோம்.
இன்னும் ஒரு சில சம்பவங்களையும் தொடர்ந்து பார்க்க உள்ளோம். ஆனால் அதற்கிடையில், இது தொடர்பான முக்கியமான ஒரு விடயத்தையும் இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டேயாக வேண்டும்.
ஈழத்தில் தமிழ் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்ட விடயங்களிலும், பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட விடயங்களிலும் இந்தியப் படையில் இணைந்து வந்திருந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் பெருமளவில் சம்பந்தப்படவில்லை என்ற உண்மையையும் இச்சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்தியேயாக வேண்டும்.
அவர்கள் தமிழ் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களில் பெருமளவில் ஈடுபடவில்லை என்பதுடன், பல தமிழ் பெண்களை தமது தகுதிக்கும், அதிகாரத்திற்கும் உட்பட்ட வகையில் காப்பாற்றி உதவி புரிந்திருந்தார்கள் என்ற உண்மையையும் நன்றியுடன் இந்த இடத்தில் சுட்டிக்காண்பித்தேயாக வேண்டும்.
இந்தியப் படையில் மெட்ராஸ் ரெஜிமென்ட் ஆரம்பத்தில் களமிறக்கப்பட்டிருந்தாலும், பின்னர் அது நடவடிக்கைகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்படவில்லை. இந்தியப் படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஆரம்ப காலப்பகுதியில் பெருமளவு தமிழ் வீரர்களைக் கொண்ட மெட்ராஸ் ரெஜிமென்ட் வீரர்களே தமிழ் மக்களின் மனங்களை வெல்லும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.
புலிகளுடனான சந்திப்புக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது, இந்தியப் படை தங்கியுள்ள முகாம்களுக்கு வெளியே பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுவது, உணவு வாங்கச் செல்வது, நிவாரணம் வழங்குவது என்று பொதுமக்கள் மற்றும் விடுதலைப் புலிகளைச் சந்திக்க வேண்டிய இடங்களில் அனேகமாக தமிழ் பேசத் தெரிந்த ஜவான்களே கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள்.
தமிழர்களைக் காப்பாற்றவே இந்தியப் படையினர் வந்துள்ளார்கள் என்ற உணர்வு தமிழ் மக்கள் மனங்களில் ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்ற ஏற்பாடுகள் ஆரம்பத்தில் செய்யப்பட்டிருந்தன. இந்தியப் படையினரை தமிழ் மக்கள் அன்னியமாக நினைத்துவிடக்கூடாது என்பதும் இந்தியத் தலைமையின் நோக்கமாக இருந்தது.
ஆனால் விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை இந்தியப் படையினர் ஆரம்பித்ததைத் தொடர்ந்து, சண்டை நடவடிக்கைகளில் தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்தியப் படையினர் ஈடுபடுத்தப்படுவதை இந்தியப் படைத்துறைத் தலைமை தவிர்க்க ஆரம்பித்தது.
இந்தியப் படையில் உள்ள தமிழ் நாட்டு வீரர்கள் புலிகள் மீதும், தமிழ் மக்கள் மீதும் அனுதாபம் கொண்டு செயற்பட்டு விடுவார்களோ என்கின்ற ஒருவித அச்சமும், சந்தேகமும் இந்தியப் படைத்துறைத் தலைமையிடம் ஏற்பட்டிருந்தது. எனவே புலிகளுடனான சண்டை நடவடிக்கைகளில் இந்தியப் படையில் தமிழ் வீரர்களைக் கொண்ட பிரிவுகள் பெருமளவில் ஈடுபடுத்தப்படவில்லை.
ஆனால் பிரதான யுத்தம் முடிவடைந்து தேடுதல் நடவடிக்கைகள், சுற்றிளைப்புக்கள் என்று இந்தியப் படையினர் இறங்கியபோது மறுபடியும் தமிழ் வீரர்கள் துணைக்கழைக்கப்பட்டிருந்தார்கள். மொழி பெயர்பு சேவையே அனேகமான தமிழ் படை வீரர்களின் பிரதான கடமையாக இருந்தது.
சண்டைகளிலும், சுற்றிவளைப்புக்களிலும் இந்தியப்படைகளில் அங்கம் வகித்த தமிழ்நாட்டுப் படைவீரர்கள் கடமையுணச்சியுடன் ஈடுபட்டார்கள் என்றாலும், ஈழத்தமிழ் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு செயல்களில் அவர்களில் பெரும்பாலானவர்கள் மிகவும் கண்ணியமாகவே நடந்து கொண்டார்கள்.
பல சந்தர்ப்பங்களிலும் அவர்கள் தமிழ் பெண்களைக் காப்பாற்றியிருந்தார்கள். இந்தியப் படையினரிடம் இருந்து பெண்களை விடுவித்து, அவர்களின் மானத்தைக் காப்பாற்றிய தமிழ் வீரர்கள் இன்றும் பல பெண்களால் நினைவு கூறப்படுகின்றார்கள்.
நீளப் பாவாடையே அணிய வேண்டும்
ஈழத்தில் பெண்கள் அணிவதுபோன்ற “மிடி ஸ்கேட்ஸ்” போன்ற ஆடைகளை அக்காலத்தில் இந்தியாவில் தமிழ்நாட்டுப் பெண்கள் அணிவது குறைவு. பாவாடை தாவணி, சுடிதார், சேலை என்பனதான் தமிழ் பெண்கள் அதிகம் அணியும் ஆடைகளாக இருந்தன.
ஆனால் இலங்கையில் சிறிது நாகரீகமாக பெண்கள் ஆடை அணிவதே இந்தியப் படையினரை பாலியல் இச்சைக்குத் தூண்டுவதாக நினைத்த பல தமிழ் இந்தியப் படையினர், இங்கு பெண்கள்
சேலை அல்லது நீளப் பாவாடை அணிய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்கள். சிறிது கவர்ச்சியாக ஆடைஅணிந்து சென்ற சில இளம் பெண்களை அவர்கள கண்டிக்கவும் செய்தார்கள்.
பெண்கள் பொட்டு வைத்தே வெளியில் வரவேண்டும் என்றும் அவர்கள் கண்டிப்பாக உத்தரவிட்டார்கள்.
ஹிந்திச் சிப்பாய்களுடன் தமிழ் பெண்கள் சிரித்துப் பேசினால் அவர்களுக்கு நல்ல திட்டுக் கிடைத்தது தமிழ் சிப்பாய்களால்.
பல சந்தர்ப்பங்களில் ஈழத்திலுள்ள தமிழ் பெண்களுக்கு இந்தியப் படையிலிருந்த தமிழ் நாட்டு வீரர்கள், அண்ணன்களாகவும், தந்தைகளாகவும் இருந்து பல சிக்கல்களில் இருந்த அவர்களைக் காப்பாறிய கதைகள் நிறைவே கூறப்படுகின்றன.
மலையாள அதிகாரிகளின் நடத்தை
இந்த விடயத்தில் கேரளாவைச் சேர்ந்த மலையாளிகளையும் சேர்த்துக்கொள்வது பொருத்தமாக இருக்கும். இந்தியப் படையில் மலையாளப் படை அதிகாரிகள் பலர் இருந்தார்கள். விடுதலைப் புலிகள் விடயத்தில் அவர்கள் மிகவும் கடுமையாக நடந்து கொண்டாலும்கூட தமிழ் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு விடயத்தில் அவர்கள் மிகவும் கண்டிப்பாக நடந்துகொண்டதுடன், தமிழ் பெண்களுக்கு பலவழிகளிலும் பாதுகாப்பாகவும் அவர்கள் இருந்திருக்கின்றார்கள்.
தென் இந்தியப் படை வீரர்கள் என்று பார்க்கும் போது கர்னாடக வீரர்கள் தமிழ் பெண்கள் விடயத்தில் ஓரளவு கடுமையாகவும், பழிவாங்கும் மனப்பான்மையுடனும் நடந்து கொண்டிருந்ததாக அறிய முடிகின்றது. வட இந்தியப் படைவீரர்களுக்கு சற்றும் சளைக்காமல் அவர்கள் ஈழத்தில் கொடூரமாக நடந்து கொண்டதாகவே கூறப்படுகின்றது.
அதேவேளை, ஈழத்தில் தமிழ் பெண்கள் இந்தியப் படையினரால் கொடுமைகளை அனுபவித்த காலங்களில், அதனை உணர்வு பூர்வமாக வெளிக்கொணர்ந்த சில தமிழ்நாட்டுப் பத்திரிகைகளையும் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவு கூர்ந்தேயாக வேண்டும். ஜூனியர் விகடன், நக்கீரன் என்ற பெயர்கள் உடனடியாக ஞாபகத்திற்கு வந்தாலும், பல ஊடகங்கள் இந்த விடயத்தில் தமது நாட்டுப் பற்றையும் மீறி இன உணர்வுடன் செயற்பட்டிருந்தன.
ஈழத்தில் இந்தியப் படையினரின் அட்டூழியங்கள் என்று இந்தத் தொடர் முழுவதும் குறிப்பிடப்படும் போது தமிழ் நாட்டில் வசிக்கும் எமது சகோதரத் தமிழர்கள் நிச்சயம் அசொகரியப்படுவார்கள் என்று எனக்குப் புரிகின்றது. இந்த விடயம் பற்றி பலரும் தமது ஆதங்கத்தை எனக்கு வெளிப்படுத்தியும் இருக்கின்றார்கள்.
ஈழத்தமிழர்களுக்கு எதிரான இந்தியாவின் துரோகங்கள் என்ற இந்தத் தொடரின் நிறைவின் போது, தமிழ் நாட்டுத் தமிழர்கள் ஈழத்தமிழர்களுக்காக ஆற்றியிருந்த வரலாற்றுக் கடமைகள் பற்றிய பல அத்தியாயங்களும் நிச்சயம் நன்றியுடன் நினைவுகூறப்படும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.
தமிழ் ஆயுதக் குழுக்கள்
ஈழ மண்ணில் இந்தியப் படையினர் ஆடியிருந்த கோரதாண்டவங்களின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும் போது, அவற்றில் இந்தியப் படையினருடன் கைகோர்த்தபடி தமிழ் குழுக்கள் நடத்தியிருந்த மனித வேட்டைகள், தமிழ் விரோத செயற்பாடுகள் மிக முக்கியமாக வெளிப்படுத்தப்பட வேண்டியவைகளாகவே இருக்கின்றன.
ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈ.என்.டீ.எல்.எப்., டெலோ போன்ற தமிழ் இயக்கங்கள் இந்தியப் படையினருடன் தம்மை முழுவதுமாக இணைத்துக்கொண்டு விடுதலைப் புலிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் எதிராக முழு அளவில் களமிறங்கி இருந்தார்கள்.
இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோவின் வழி நடத்தலின் கீழ் இந்தியப் படைகளுடன் இணைந்து செயற்பட்ட இந்த தமிழ் ஆயுதக்குழுக்கள், இயக்கங்கள் ஈழத்தில் புரிந்திருந்த அட்டுழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
இந்தியப் படையினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், ஈழத்து மக்களுக்கு எதிராகவும் அக்காலகட்டத்தில் மேற்கொண்ட பலவிதமான நடவடிக்கைகளுக்கு, இந்த தமிழ் அமைப்புக்கள் பல வழிகளிலும் துணைபோயிருந்தன.
இந்தியப் படையினரின் ஒரு படைப்பிரிவைப் போலவே இயங்கிவந்த இந்த தமிழ் ஆயுதக் குழுக்கள் இந்தியப் படையினரை விடவும் அதிகமாக தமிழ் விரோத நடவடிக்கைகளிலும், அட்டூழியங்களிலும்; ஈடுபட்டிருந்தன. கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், சித்திரவதை, பாலியல் வல்லுறவு என்று, எந்த ஆக்கிரமிப்புப் படையினருக்கும் சளைக்காத வகையில் இந்த தமிழ் இயக்கங்கள் அக்காலகட்டத்தில் அட்டகாசங்கள் புரிந்திருந்தன.
றோவும் தமிழ் இயக்கங்களும்:
அக்காலகட்டங்களில் இந்த தமிழ் இயக்கங்கள் மற்றும் அவற்றின் நடவடிக்கைகள் அனைத்துமே இந்திய உளவுப் பிரிவான றோவின் பூரண கட்டுப்பாட்டின் கீழே அமைந்திருந்தன. விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்ட நிலையில் வடக்கு கிழக்கில் கால்வைக்க முடியாதிருந்த இந்த அமைப்புக்களை இணைத்து “திறீ ஸ்டார்” (Three Star) என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, அவற்றிற்கு பயிற்சிகள் வழங்கி விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய றோ களமிறக்கியிருந்தது.
இந்த திறி ஸ்டார் தொடர்பான விடயங்களை விரிவாகப் பார்ப்பதற்கு முன்னதாக, இந்திய உளவு அமைப்பான ஆய்வு பகுப்பாய்வு பிரிவு (Research and Analyse Wing -RAW) றோ இனது கட்டமைப்பு (structure) பற்றி ஓரளவு தெளிவைப் பெற்றுக்கொள்வது, மாற்றுத் தமிழ் இயக்கங்கள் றோவின் கீழ் செயற்பட்ட விதம் பற்றிய அடிப்படைத் தெளிவைப்; பெற்றுக்கொள்வதற்கு உதவியாக இருக்கும்.
இந்திய பிரதமரின் அலுவலகத்தில் உள்ள வெளிவிவகார அமைச்சு செயலகத்தில் பிரத்தியோகமாக உள்ள தலைமைச் செயலாளரின் கட்டுப்பாட்டின்கீழ் செயற்படும் றோவின் செயற்பாடுகள் ஆரம்பத்தில் இலங்கை மற்றும் மாலைதீவு போன்ற இரண்டு நாடுகளையும் கவனிக்கும்படியான ஒரு பிரிவின் (Subject area) கீழ்தான் செயற்பட்டது. பின்னர் அவசியம் கருதி இலங்கை விவகாரங்களைக் கவனிப்பதற்கென்று தனி பிரிவு (Subject area) உருவாக்கப்பட்டது.
இலங்கையில் றோ மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கென்று பல பிரத்தியோகப் பிரிவுகள் இருந்தன. தொலைத்தொடர்புப் பரிவர்த்தனைகளை ஒட்டுக்கேட்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகளுக்கென்று இலத்திரனியல் தொழில்நுட்ப பிரிவு (Electronic Technical Section -ETC) என்றொரு பிரிவும், விஷேட நடவடிக்கைகளுக்காக (Office of Special Operations- OSO) என்றொரு பிரிவும் செயற்பட்டன.
இரகசிய சதி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென்று (Field Intelligence Bureau- FIB) என்றொரு பிரிவும் செயற்பட்டு வந்தது. ஈழத்தில் களமிறக்கப்பட்ட தமிழ் இயக்கங்கள் றோவின் OSO (Office of Special Operations) பிரிவின் கீழ் நேரடியாகவே செயற்பட்டு வந்தன. இந்த இயக்கங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட சில உறுப்பினர்கள், விஷேட பயிற்சி அளிக்கப்பட்டு, FIB (Field Intelligence Bureau)என்ற இரகசிய சதி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பிரிவின் கீழ் செயலாற்றி வந்தார்கள்.
முக்கிய சவால்கள்:
வடக்கு கிழக்கில் இந்தியப் படையினர் எதிர்கொண்ட மூன்று முக்கிய சவால்களை நிவர்த்திசெய்வதற்கு என்றே இந்த தமிழ் இயக்கங்கள் களமிறக்கப்பட்டிருந்தன.
1. இந்தியப் படையினருக்கு வடக்கு கிழக்கு மக்களால் பேசப்பட்ட மொழி அதாவது தமிழ் தொழி போதிய அளவிற்கு தெரிந்திருக்கவில்லை.
2. வடக்கு கிழக்கு பிரதேச நிலம் பற்றிய அறிவும் அவர்களுக்கு இருக்கவில்லை.
3. வடக்கு கிழக்கு மக்களுடன் தொடர்பாடலை மேற்கொள்வதற்கு அந்த மக்களில் இருந்து ஒரு தரப்பினர் இந்தியப் படையினருக்கு தேவைப்பட்டார்கள்.
இதுபோன்ற மூன்று முக்கிய காரணங்களுக்காகவே தமிழ் இயக்கங்கள் இந்திய றோவினால் களமிறக்கப்பட்டிருந்தன.
இவற்றிற்கு மேலாக இந்தியாவிற்குச் சாதகமான சில சதி நடவடிக்கைகயில் ஈடுபடவும், றோவிற்கு நம்பகமான சிலர் தேவைப்பட்டார்கள். இலங்கையில் இந்தியப் படையினர் எதிர் கெரில்லாப் போரியல் (Counter Insurgency) நடவடக்கைகளுக்கு உதவவும், அவர்களின் உளவியல் நடவடிக்கைகளுக்கு (Psychological Operation) உதவவும் இந்த தமிழ் இயக்கங்கள் மிகவும் இன்றியமையாதவர்களாகவே இருந்தார்கள்.
பயன்படாத இந்தியப் பிரிவுகள்
இந்தியப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சண்டைகள் மூண்டதும், இந்தியப் பாதுகாப்பு கட்டமைப்பில் உளவு நடவடிக்கைகளுக்கென்று பொதுவாக இயங்கிவிரும் வேறு சில பிரிவுகளிடம் இருந்து, இலங்கைக்காவென்று பிரத்தியோமாக இயங்கிய றோவின் பிரிவுகள் தகவல் உதவிகளைக் கோரிப் பெற ஆரம்பித்தன.
இலங்கையின் நிலமைகள், குறிப்பாக விடுதலைப் புலகளின் நடவடிக்கைகள், நடமாட்டங்கள், வெளித்தொடர்புகள் பற்றி அறிந்து கொள்வதற்கு இந்த பிரிவுகளும் முடுக்கிவிடப்பட்டிருந்தன.
உதாரணமாக இந்தியப் புலனாய்வு நடவடிக்கைகளுக்காகச் செயற்படும் (Aviation Research Centre-ARC) மற்றும் (Special Bureau Centre- SBC) போன்ற பிரிவுகளிடமும், இலங்கை மற்றும் சர்வதேச நாடுகளில் விடுதலைப் புலிகளின் நகர்வுகள் பற்றிய தகவல்கள் கோரப்பட்டிருந்தன. ஆனால் இந்தியப் படையினர் மற்றும் றோ பிரிவினருக்கு தேவையான போதிய தகவல்களை இந்தப் பிரிவினரால் வழங்க முடியாமல் போயிருந்தது.
விடுதலைப் புலிகள் தமக்கிடையேயாக தொடர்புகளைப் பேணுவதற்கு கையாண்ட முறைகள் இந்தியப் புலனாய்வுப் பிரிவின் கீழ் செயற்பட்ட தொழில்நுட்ப பிரிவினரால் அறிந்து கொள்ளமுடியாமலேயே இருந்தது.
விடுதலைப் புலிகளின் தொலைத்தொடர்பு பரிவர்த்தனைகளை ஒட்டுக்கேட்பதில் பலத்த பின்னடைவே இந்தியப் புலனாய்வுப் பிரிவினருக்கு ஏற்பட்டிருந்தது. எனவே அவர்கள் முழுக்க முழுக்க இதுபோன்ற மாற்று தமிழ் அமைப்புக்களிலேயே அனைத்திற்கும் தங்கியிருக்க வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது.
இவ்வாறு இந்திய உளவுப் பிரிவினரால் ஈழ மண்ணில் களமிறக்கப்பட்ட மூன்று முக்கிய தமிழ் இயக்கங்கள் ஈழத்தில் இந்தியாவின் கபட நாடகங்களுக்கு எப்படித் துணை போயின என்பது பற்றியும், அவர்கள் தமது சொந்த இனத்தை அழிப்பதற்கு எவ்வாறு துனை போயிருந்தார்கள் என்பது பற்றியும், இந்தத் தமிழ் இயக்கங்களின் கரங்களில் அகப்பட்ட ஈழத்தமிழ் இனம் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டது என்பதையும் இனி வரும் அதிதியாயங்களில் சற்று விபரமாகப் பார்ப்போம்.
இன்று தமிழர்களின் உரிமைகள் பற்றி வாய்கிழியக் கத்திக்கொண்டு ஈழ மண்ணில் அரசியல் நடாத்திக்கொண்டு இருக்கும் பல தமிழ் அரசியல்வாதிகள் அந்தக் காலங்களில் இந்த தமிழ் ஆயுதக் குழுகளில் அங்கம் வகித்தபடி எப்படியெப்படியெல்லாம் தமது உறவுகளுக்கு இன்னல் விளைவித்தார்கள் என்பது பற்றியும் ஆதாரங்களுடன் நாம் இந்தத் தொடரில் ஆராய இருக்கின்றோம்.

தொடரும்..

nirajdavid@bluewin.ch

Geen opmerkingen:

Een reactie posten