தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 26 juli 2012

ஈழத்தமிழ் மக்கள்மீது அந்நிய சக்திகள் திணிக்கவிழையும் அரசியல்தீர்வின் சூழ்ச்சி!


ஈழத்தமிழ் மக்கள்மீது அந்நிய சக்திகள் திணிக்கவிழையும் அரசியல்தீர்வின் சூழ்ச்சி!

இலங்கைத்தீவு விடயத்தில் அமெரிக்காவின் ஈடுபாடு தொடர்பில் பல்வேறு வியாக்கியானங்கள் வழங்கப்படுகின்றன. அவை ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துகளாக இருந்தபோதிலும், நீண்டகால மூலோபாய அடிப்படையிலேயே அமெரிக்கா தனது நாட்டின் நலன்கருதி ஈழத்தமிழர்கள் விடயத்தில் செயற்படுகின்றது என்பதில் கருத்து வேறுபாடுகளில்லை. மூன்றாம் உலக நாடுகளை தமது ஒழுங்குக்குள் கொண்டு வருவதற்கு அமெரிக்கா முற்படுகின்றது. அதனடிப்படையில் முரண்டு பிடிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க லிபியா உட்பட்ட சில நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள் போலன்றி முற்றிலும் வேறுபட்ட ஒரு புதிய மூலோபாயத்தைக் கையாண்டு வருகிறது. அந்த வழிமுறையானது ஈழத்தமிழர்களின் தமிழீழக் கோரிக்கையை நிரந்தரமாகவே நலிவடையச் செய்கின்ற ஒரு வழிமுறையாக உள்ளது. அதை ஏற்றுக்கொள்ள வைப்பதற்காக தமிழர்கள் தரப்புப் பிரதிநிதிகளாக சில தலைவர்களைத் தோற்றுவித்து, அதன்மூலம் ஒட்டுமொத்த தமிழர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்ற ஒரு விம்பத்தை உருவாக்கிவருவதை நாம் அண்மைய அரசியல் காய்நகர்த்தல்கள் ஊடாக அறியமுடிகிறது. அதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மாகாண மட்டத்திலான எந்தத் தீர்வையும் தமிழ்மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை நன்றாக அறிந்திருக்கும் அமெரிக்கா, இந்தியா உட்பட்ட நாடுகள் தமக்குச் சார்பாக தமிழ்மக்கள் மத்தியில் சில தலைமைகளை உருவாக்க முயற்சிக்கின்றன. அந்தத் தலைமைகள் ஏற்றுக்கொண்டால் எல்லா மக்களும் ஏற்றுக்கொண்ட மாதிரியான ஒரு தோற்றப்பாட்டை உருவாக்குகின்றன.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில் இலங்கைத்தீவு ஒற்றை ஆட்சிக்குள் இருக்கவேண்டும். அத்துடன், அந்த ஆட்சி இன்றைய சூழலில் ஐக்கிய தேசியக் கட்சியாக (UNP) இருக்கவேண்டுமென்பது. இதைச் சாதிப்பதற்கு கடந்த ஜெனாதிபதித் தேர்தலின் போது, 2009 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு (UPFA) எதிராக எதிர்க்கட்சிச் சிங்களவர்களை ஒன்றிணைக்க வேண்டிய தேவையிருந்தது. அதாவது, எதிர்க்கட்சிகள் என்னும்போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்கள் ஆதரவுகூடிய கண்டி மாகாணம், மேற்குமாகாணம் (நடுத்தரவர்க்கம், மேல்வர்க்கம் - middle class, up class)> அனுராதபுரம் உள்ளடக்கிய மத்திய மாகாணம், உழைக்கும் வர்க்கம், காலி மாவட்டச் சிங்கள மக்கள் அத்துடன், ஜே.வி.பி. கட்சி, சரத்பொன்சேகா ஆகியோரை ஒன்றிணைத்து ஓரணியில் நிற்கவைத்தது.

இதற்குப் பின்னால் ஒரு சக்தி இருப்பது எவ்வாறு புலப்படுகின்றதெனில், சரத்பொன்சேகா ஒரு காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியையும் அது சார்ந்தவர்களையும் கிட்டத்தட்ட 20 வருடங்களாக பெருமளவில் எதிர்த்துவந்த ஒருவர். அவருடைய மருமகன் அமெரிக்காவிலிருந்து கொழும்புக்கு அடிக்கடி வந்துசென்றதைத் தொடர்ந்து, பொன்சேகாவும் அமெரிக்கா சென்றுவந்த பின்னரே அவரது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு, ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்ததோடு மகிந்தவிற்கு எதிரான கருத்துமோதலில் ஈடுபட்டார். அதன் பின்னர் சரத்பொன்சேகா, ஜே.வி.பி. ஆகிய கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைந்து போட்டியிட்டன. பின்னர், ராஜபக்சவுக்கு எதிராகத் தேர்தலில் போட்டியிட்டதற்காக சரத்பொன்சேகா சிறைவைக்கப்பட்டதுடன், அவரது மருமகனும் தேடப்பட்டுவந்த வேளை, அவர் தலைமறைவாகி ஏதோவொருவகையில் அமெரிக்காவிற்குத் தப்பிச்சென்றிருந்தார்.மறுபுறமாக தமிழ்மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக இலங்கையில் இரா.சம்பந்தன் இருந்தார். அதேவேளை புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ்மக்கள் சார்புப் பிரதிநிதிபோல் காட்ட நாடுகடந்த அரசுத் தலைவர் உருத்திரகுமார் அவர்களை கொண்டுவர அமெரிக்கா முற்பட்டது. அதனைப் புலத்தில் உள்ள தமிழ்மக்கள் முற்றாக ஏற்றுக்கொள்ளவில்லை என்ற காரணத்தால் அங்கே இரண்டு தலைமைகள் இருப்பதான தோற்றப்பாடு உருவானது. அதாவது, ஒன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவு, இரண்டு நாடுகடந்த அரசுத் தலைவர் உருத்திரகுமார் என்று.

இதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவைப் பொறுத்தவரையில் அவர்கள் தலைவர்களை முந்நிறுத்துவதிலோ, வெறுமனே அறிக்கைகளை வெளியிட்டு மக்களைக் குளப்புவதிலோ ஈடுபடாமல், பெருமளவு பணிகளை மறைமுகமாக முன்னெடுத்துவருகின்றனர். அதாவது, தற்போதைய சூழ்நிலையில் எமது தேசம் சந்தித்துள்ள நெருக்கடியான கட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் வெறுமனே ஓரிரு தலைவர்களை முன்னிறுத்திக் காட்டுவதன் ஆபத்தையும் இடர்களையும் உணர்ந்து, ஈழத்தமிழர்களின் ஒருமித்த மக்கள் கட்டமைப்புகளின் சக்தியாக ஜனநாயக வழியில் எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழிகளில் செயற்படுகிறார்கள்.

ஆனால், கடந்த சில மாதங்களாக தென்னிலங்கை ஊடகங்கள் புலம்பெயர் தேசங்களில் இரு தரப்புத் தலைவர்கள் இருப்பதாகவும், அதில் ஒன்று அமெரிக்காவில் இருக்கும் திரு. உருத்திரகுமார் எனவும் இரண்டு ஜெர்மனியில் இருக்கும் உலகத்தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்துக்குரிய இம்மானுவேல் அடிகளார் எனவும் ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கிக் காட்டிவந்தன. அதன் ஒரு வெளிப்பாடாக சில தினங்களுக்கு முன்னர் திரு. உருத்திரகுமார் அவர்களும் இம்மானுவேல் அடிகளாரும் இணைந்து கூட்டறிக்கை விட்டிருந்ததை நோக்கத்தக்கதாக உள்ளது. மக்களுக்கு அறிக்கைகள் விடுவதற்கு அப்பால் எமது நேர்த்தியான செயற்பாடுகளே விடுதலையை வென்றெடுப்பதற்கு வழிசமைக்கும். அதையே எமது தலைவர் 'சொல்லுக்கு முன் செயல் இருக்கவேண்டும்' என எமக்குக் கற்றுத்தந்தார்.

அமெரிக்காவின் காய்நகர்த்தலின் மற்றுமொரு கட்டமாக, இலங்கையில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய ரணில் விக்கிரமசிங்கவையும் தமிழ்;மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களையும் யாழ்ப்பாணத்தில் மே-01 இல் ஒரேமேடையில் சிங்கக்கொடி பிடிக்கவைத்தது. அந்த நிகழ்வில் மலையகம், மேல்மாகண தமிழ்மக்களைப்; பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் திரு.மனோகணேசன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார். சிங்களவர் தரப்பு சார்பாகவும் தமிழர் தரப்பு சார்பாகவும் ஒரேமேடையில் இருவரும் சிங்கக்கொடி பிடிக்கவைத்ததன் நோக்கம் என்னவென்றால், தமிழர்கள் தமிழீழம் என்ற கோரிக்கையைக் கைவிட்டு நாங்கள் 'சிறீலங்கர்கள்' என்ற விம்பத்தைக் காட்டமுற்படுவது. அதேவேளை, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பாக சுபத்திரன் பேசுகையில், 'நாங்கள் தமிழீழத்தை ஒருபோதும் கேட்கவில்லை. நாங்கள் சிறீலங்காவுக்குள் தான் வாழ விரும்புகிறோம்,' என்றார். இதனூடாக ஒட்டுமொத்த தமிழர்களும் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்கிகிறார்கள் என்ற கருத்தியலை இந்த தலைவர்கள் ஊடாக அமெரிக்கா ஏற்றுக்கொள்ளச் செய்கிறது.

இதில் பார்த்தீர்களேயானால், இலங்கைத் தீவில் உள்ள பங்காளிகள்(stakeholders) யாவரும் ஒரு கோட்டிற்குள் வருவதை காணமுடிகிறது. தற்பொழுது ஆளுந்தரப்பில் மகிந்த ராஜபக்ச, மலையக மக்களை (Up-Country) பிரதிநிதித்துவப் படுத்தும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆறுமுகம் தொண்டமான், முஸ்லிம்களை பிரதிநிதித்துவப் படுத்தும் ரவூப் கக்கீம் ஆகியோர் உள்ளனர். இதற்கு எதிரணியாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில், சரத்பொன்சேகா அத்துடன், தமிழர்கள் சார்பாக வடகிழக்கைப் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய சம்பந்தன், அதேவேளை புலம்பெயர் தேசங்களில் அமெரிக்காவில் வசிக்கும் நாடுகடந்த அரசுத்தலைவர் திரு. உருத்திரகுமாரன் மற்றும் உலகத்தமிழர் பேரவைத் தலைவர் இம்மானுவேல் அடிகளார் ஆகிய ஐந்து தலைவர்கள் முன்னிறுத்தப்படுகிறார்கள். அத்துடன், சரத்பொன்சேகா சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக விடுதலை செய்யப்பட்டமை இங்கே குறிப்பிடத்தக்கது.

அந்த ஐந்து பேரும் ஒரு கோட்டிற்குள் வந்துவிட்டார்;கள் என்னும் நிலையில், இந்த அரசியல் மாற்றங்கள் நடைபெறுவதற்கு சற்று முன்னால் நடைபெற்ற நிகழ்வைப் பார்ப்போமானால், ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானம் என்பது. இந்த இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் இரண்டு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. ஒன்று மாகாணங்களுக்கு அதிகாரம் பகிர்ந்துகொடுப்பதிலான ஒரு அரசியல்;தீர்வை அடைவது, மற்றையது 2009 இல் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறவேண்டும் என்பது.

இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் எதிர்வரும் மார்ச் மாதம்வரை கொடுக்கப்பட்டுள்ளது. மார்ச்சுக்கு முதல் இராஜபக்சவுக்கு இருக்கின்ற ஒரேயொரு வழி, போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை தேவையென்பதில் மாற்றம் வேண்டுமானால், அந்தத் தீர்மானங்களில் அரைவாசியையாவது ராஜபக்ச அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்பது. அந்த அரைவாசி என்பது மாகாணங்களுக்கு அரசியல் தீர்வைப் பகிர்ந்துகொடுப்பதன் மூலம் ஓர் அரசியல் தீர்வை எட்டுவதாகும். அதாவது மகிந்த அரசு தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட பாரிய போர்க்குற்றத்திலிருந்து தப்புவதற்காக தனக்குச் சார்பாக அமைக்கப்பட்ட 'நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை' (LLRC) நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஆகும்.

இலங்கையரசின் 'நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை' பல்வேறு சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களாலும், பல்வேறு நாடுகளின் அரசியல் கட்சிகளாலும், அரசியல் பிரமுகர்களாலும் நிராகரிக்கப்பட்டு, அவர்களால் சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றே வலியுறுத்தப்படுகின்றது.

இனி, LLRC யின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் முதல்கட்டமாக பொன்சேகா விடுதலை செய்யப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து வடமாகாணத் தேர்தல் நடப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இவ்வாறு ஒன்று நடக்கும்போது, அமெரிக்காவின் அந்தத் தீர்மானத்தை சிங்களத் தலைமைகளிலிருந்து பெரும்பாலான சிங்கள மக்கள் ஆதரவைப் பெறக்கூடிய ரணிலும் பொன்சேகாவும் ஆட்சேபணைகள் இன்றி வரவேற்றுக்கொண்டார்கள் எனில் அதேவேளை, சம்பந்தன் அதை வரவேற்பார் அல்லது ஆட்சேபணை எதுவும் தெரிவிக்காமல் இருந்தால், ஒட்டுமொத்தமாக இலங்கையிலுள்ள அனைவரும், அனைத்துப் பங்காளிகளும் ஏற்றுக்கொள்ளுகின்ற தீர்வாக வந்துவிடும்.

அந்தநேரத்தில், புலம்பெயர்மக்கள் ஈழத்தில் உள்ள மக்களுக்கு நாங்கள் தான் குரல்கொடுக்க வேண்டும்; ஆக்கிரமிப்புக்குள் இருக்கும் அவர்களால் அங்கு நின்று ஒன்றும் செய்துவிட முடியாது; என்று குரல்கொடுக்கின்ற தருணத்தில் ஒன்றில், புலத்தில் அமெரிக்கா பின்னணியில் பிரதிநிதித்துவமாகும் இருதலைமைகளுமான திரு. உருத்திரகுமாரன் மற்றும் இம்மானுவேல் அடிகளார் ஆகியோர் ஒன்றில் அதை வரவேற்றாலோ அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தான் அந்த முடிவெடுக்கவேண்டும் என்று கூறிவிடுவார்களேயானால் புலம்பெயர் தமிழர்களும் அதை ஏற்றுக்கொண்ட மாதிரியாக வந்துவிடும். புலம்பெயர் மக்களும் அதை ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்னும்போது அதுதான் ஈழத்தமிழர்களுக்கான இன்றைய தீர்வு என்றாகிவிடும். அதன்பின்னர் தமிழீழம் என்ற பேச்சும் தமிழர்களின் வாழ்வும் கேழ்விக்குறியாகிப் போய்விடும். இவ்வாறான ஒரு மிகப்பெரும் சவாலை அல்லது பொறியை தாயகத்திலும் புலத்திலும் வாழ்கின்ற ஈழத்தமிழர்களாகிய நாம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றோம் என்பதுதான் தற்போது உள்ள மிகப்பெரும் கேழ்வி?

அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானம் ஒரு முதல்படி என்று கருதுவது முற்றிலும் தவறு. அதாவது, எல்லாவற்றையுமே இழந்து நிற்கும் தமிழ்மக்களுக்கு ஏதோவொன்று கிடைக்காதா என்ற அவாவில் சர்வதேச சமூகம் தருகின்ற எந்தத் தீர்வையாவது முதற்கட்டமாக வேண்டிக்கொண்டு அடுத்த கட்டத்தைப் பற்றிப் பின்னர் யோசிப்போம் என்ற நிலைப்பாடு என்பது எமது தமிழீழக் கோரிக்கையை வேரோடு நீர்த்துப்போக வைக்கும் என்பது வெள்ளிடமலை!

அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியா உட்பட்ட மேற்குலக நாடுகளைப் பொறுத்தவரை ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்ற கோட்பாட்டில் ஒருபோதும் மாற்றமில்லை என்ற நிலைப்பாட்டிலிருக்கும் வரை, அத்துடன் அமெரிக்கா மூன்றாம் உலகநாடுகளை தனது ஒழுங்கிற்குள் கொண்டுவர வேண்டுமென்ற தனது நலன்சார்ந்து செயற்படுகின்ற போக்கு, மற்றும் சிங்களப் பேரினவாதத்துடனான எமது பல தசாப்தங்கள் கொண்ட கசப்பான வரலாற்றுப் பட்டறிவுகள் என்பவற்றினூடாக தெளிவாக நோக்குமிடத்து யாவரும் விடைகாணக் கூடியதாக இருக்கும்.

அமெரிக்காவின் இந்தப் பொறிக்குள் இருந்து நாம் தப்பித்துக்கொள்ள வேண்டுமானால், முதலில் நாம் எம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதை உன்னிப்பாக அவதானித்து அறிந்துகொள்ளவேண்டும். புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்ற ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒருமித்து குரல்கொடுக்கக் கூடிய சக்தியாகத் தயாராகுவதோடு, சில அந்நிய நாட்டு சக்திகள் தமது நலன்சார்ந்து முன்னிறுத்தும் தலைமைகள் ஊடாக ஈழத்தமிழர்கள் மீது திணிக்க விழையும் தீர்ப்பு ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் பிரதிபலிப்பு இல்லை என்பதை காட்டும் சக்தியாக நாம் மாறவேண்டும்.

இதன்மூலம் எமது தேசியத் தலைவர் முள்ளிவாய்க்காலில் புலம்பெயர் மக்களிடம் ஒப்படைத்த கடமையை எமது தலைமை காட்டிய வழியில் பயணித்து நிறைவேற்றவேண்டும். நீதிவழிநின்று நாம் ஒன்றாகத் திரண்டு குரல்கொடுக்கின்ற போது நிச்சியமாக அமெரிக்கா உட்பட உலகம் எங்கள் பக்கம் சாயும் என்பது உறுதி. மாறாக எமது மென்போக்குத் தலைமைகள் ஏற்றுக்கொள்ளப் போகும் இடைப்பட்ட தீர்வுகள் தமிழீழமக்களின் வாழ்வி;ல் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தாது என்பதுடன், அவலங்கள் நிறைந்த போராட்டச்சக்கரத்தை நீட்டிச் சர்வதேச நலன்களுக்கு மட்டும் விலைபோன அவலவாழ்வாகவே தமிழர் நிலை தொடரும்.

Geen opmerkingen:

Een reactie posten