தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 29 mei 2013

ஈழ விடுதலைப் போராட்டம் தோற்றுப் போனதற்கு மிக முக்கியமான மூன்று காரணங்கள்!- மார்க்சிஸ்ட்கள் சிந்தனைக்கு-10 ]

[ விகடன் ]
ஈழப் பிரச்னை தொடர்பான விவாதங்களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு ஓர் அறிக்கையைத் தயாரித்து, அந்தக் கட்சியின் உறுப்பினர்களுக்குக் கடந்த ஆண்டு அனுப்பியது.
கட்சியின் முழுமையான நிலைப்​பாட்டை உள்வாங்கிக் கொள்ள இது பயன்படும். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை தொடர்பான அறிக்கையை, சர்ரியலிஸ பாணியில் எழுதியிருக்கிறார்கள்.
வரலாற்றை வரிசையாகவும் விமர்சன ரீதியாகவும் சொல்லாமல் புரிய வேண்டிய இடங்களில் மறைத்தும், தெளிய வேண்டிய இடங்களில் திரித்தும் இருக்கிறது அந்த அறிக்கை.
வர்க்கக் கண்ணோட்டத்துடன் ஏகாதிபத்தியம் பற்றிய புரிதலுடன் கூடிய அரசியல் நிலைப்பாட்டைக் கட்சி எடுப்பதால், அதிகம் விமர்சனத்துக்குள்ளாகிறது. கட்சியைத் தனிமைப்படுத்தவும் முயற்சிகள் நடக்கின்றன’ என்கிறது அந்த அறிக்கை.
அதாவது, 'தனித் தமிழீழத்தை நாம் ஏற்பது இல்லை, விடுதலைப் புலிகளை நாம் ஆதரிப்பது இல்லை, எனவேதான் நாம் விமர்சிக்கப்படுகிறோம்’ - என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனக்​குத்தானே காரணம் கற்பித்துக்கொள்கிறது. 'செம்மலர்’ பேட்டியிலும் இதை ஜி.ராமகிருஷ்ணன் சொல்கிறார்.
மார்க்சிஸ்ட்கள் மீதான விமர்சனம் இந்த இரண்டு காரணங்களுக்காகவும் இல்லை. அவர்கள் விமர்சிக்கப்படுவதற்குக் காரணம், ஈழப் பிரச்​சினையின் உண்மையான நிறத்தைச் சொல்ல மறுப்பது​தான். நோய் என்ன என்று சொல்வதிலேயே முரண்பாடு ​கொண்டவர்களால், தீர்வை மட்டும் சரியாக எப்படிச் சொல்ல முடியும்?
தமிழ் ஈழத்தை அங்கீகரிக்காத விடுதலைப் புலிகளைக் கடுமையாக விமர்சிக்கின்ற அமைப்புகள்கூட, இந்தத் தளத்தில் இயங்கு​கிறார்கள். தமிழர்களை ஒடுக்கிய சிங்களப் பேரினவாதக் கூட்டத்தை மிகத் தெளிவாக அம்பலப்படுத்தி வருகிறார்கள். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்னமும் மையமாகவே பேசி வருகிறது.
இறுதிக் கட்டத்தில் நடந்த கடுமையான மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பாளிகள் அடையாளம் காணப்பட்டு, உரிய தண்டனை தரப்பட்ட வேண்டும். இதற்கு நம்பகத் தன்மையுடன் கூடிய சுயேச்சையான உயர்மட்ட விசாரணை நடத்த இலங்கை அரசு முன்வர வேண்டும்’ என்று சொல்கிறார் உ.வாசுகி.
மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றம் செய்த பொறுப்பாளிகள் என்றால், யார்? இத்தனை லட்சம் பேரை இலங்கையில் கொன்று விட்டு யாராவது தப்பிப் போய்விட்டார்களா என்ன? இலங்கை அரசாங்கம் இதை விசாரிக்க வேண்டும் என்று சொன்னால், கொலை செய்ததற்கும் அதற்கும் சம்பந்தமே இல்லையா?
இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதீத அக்கறைதான் அந்தக் கட்சியைத் தனிமைப்படுத்திக் காட்டுகிறது.
தமிழர் படுகொலைகள் பற்றிப் பேசினால், 'சிங்களவர்களும்தானே அங்கு பாதிக்கப்படுகிறார்கள்’ என்று சொல்லும் அந்தக் கட்சி, தமிழகத்தில் இரண்டு புத்த பிக்குகள் தாக்கப்பட்டதை, 'இனவெறி தலை​தூக்கிவிட்டது’ என்று கண்டிக்கிறது. இந்த இரட்டை நிலைப்பாடுதான் கண்டிக்கப்படுவதற்குக் காரணமே.
1. இலங்கையில் சிங்களர், தமிழர் ஆகிய இரண்டு தேசிய இனங்கள் உண்டு.
2. இலங்கையில் நடந்தது மிகக் கொடூரமான இனப்படுகொலை.
-இவற்றை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்​கொள்கிறதா இல்லையா என்பதுதான் இங்கு மிக முக்கியமான முரண்பாடு. தமிழீழத்தை அவர்கள் ஆதரிப்பது அல்லது மறுப்பது, விடுதலைப் புலிகளை ஆராதிப்பது அல்லது நிராகரிப்பது அல்ல பிரச்சினை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள ஆவணத்தில் இனப்படுகொலை என்ற வார்த்தைப் பிரயோகமே இல்லை. உ.வாசுகியும் கவனமாக அதைத் தவிர்க்கிறார்.
இலங்கையில் நடந்த படுகொலைகளை, வெறுமனே 'தேசியப் பிரச்சினை’ என்று பொத்தாம்பொதுவாகச் சொல்ல முடியுமா? தேசியப் பிரச்சினை என்றால், அது தேசிய இனப் பிரச்சினையா, தேசிய வர்க்கப் பிரச்சினையா, தேசிய மதப் பிரச்சினையா, தேசிய வர்ணப் பிரச்சினையா... என்ன பிரச்சினை?
மருத்துவரிடம் போனால் 'வலிக்குது டாக்டர்’ என்றா சொல்வோம். தலை வலியா, கழுத்து வலியா, வயிற்று வலியா, கால் வலியா... என்ன வலி என்று அடையாளப்படுத்துவது இல்லையா? ஓர் உயிருக்கான உடல் நோவையே குறிப்பிட்டு விளக்கும்போது, லட்சக்கணக்கானவர் கொல்லப்​பட்ட பிரச்னையை தேசியப் பிரச்சினை என்று சொல்வதன் உள் அர்த்தம், அது புரிந்துவிடக் கூடாது என்பதுதானே?
இனப்படுகொலை என்ற வார்த்தையைப் பயன்படுத்தினால், என்ன ஆகும்? இன ரீதியான தீர்வைச் சொல்ல வேண்டும். அதனால் மனித உரிமை மீறல், போர்க் குற்றம் என்று சொல்கிறார்கள். போர் நியாயமானது என்று ஒப்புக்கொண்டால்தான், அதில் நடந்த தவறுகள் குற்றங்கள் ஆகும். போரை நியாயமானது என்று ஒப்புக்கொள்கிறார்களா?
மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் போன்ற வார்த்தைகள் இலங்கைக் கொடூரத்துக்குக் கொஞ்சம்கூட பொருந்தாதவை. 1980 முதல் 2008 வரை 80 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இறுதி யுத்தத்தில் மட்டும் ஒரு லட்சத்து 46 ஆயிரம் பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
2 லட்சத்து 56 ஆயிரம் பேர் வடக்கு மாகாணத்தில் அநாதைகள். வடக்கு, கிழக்கு இரண்டிலும் 60 ஆயிரம் பெண்கள் விதவைகளாகினர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குப் பெற்றோர் இல்லை.
கொல்லப்பட்டும், கொல்லப்​படாமலும், விதவை ஆக்கப்பட்டும், அநாதை ஆக்கப்பட்டும்கிடக்கும் மொத்தப் பேருமே தமிழர்கள். கடந்த 30 ஆண்டு காலத்தில் முடிந்த வரை கருவறுத்து முடித்துவிட்டனர். இதை இனப்படுகொலை என்று சொல்லாமல் என்னவென்று சொல்வது?
முல்லைத் தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசு முகவர் அலுவலகக் குறிப்பின்படி, 2008 அக்டோபர் மாதம் வன்னியின் மக்கள் தொகை 4,29,059. போர் முடிந்த பிறகு இலங்கையின் முகாமுக்குள் வந்தவர்களின் கணக்கு 2,82,380. அப்படியானால் 1,46,679 பேரின் கதி என்ன?’ என்று மன்னார் மாவட்ட கத்தோலிக்க பாதிரியார் ராயப்பா ஜோசப், இலங்கை அரசாங்கம் அமைத்த விசாரணைக் குழுவில் கேட்டார். அந்த 1,46,679 பேர்தான் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள்.
விழுப்புரம் காவல் நிலையத்தில் ஒரு கைதி அடித்துத் துன்புறுத்தப்படுவதை மனித உரிமை மீறல் என்று குற்றம் சாட்டுவோம். 1,46,679 பேர் கொலையையும் மனித உரிமை மீறல்கள் என்று சொன்னால், அதைவிட மனச்சாட்சிக்கு விரோதமான செயல் வேறு இருக்க முடியுமா?
சர்வதேச இனப்படுகொலை தடுப்புத் தண்டனைச் சட்டம், எது இனப்படுகொலை என்பதை வரையறுக்கிறது.
'ஒரு தேசிய இனம் அல்லது மதக் குழுவின் ஒரு பகுதியை அல்லது முழுவதும் அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்படுகின்ற செயல்​கள் இனப்படுகொலை ஆகும். அந்த இனக் குழுவின் உறுப்பினர்களைக் கொலை செய்தல், உடல், உளரீதியாக அந்த இனக் குழுவின் உறுப்பினர்களுக்குத் தீங்கு செய்வது, வேண்டுமென்றே அந்தக் குழுவின் வாழ்க்கை நிலையில் தாக்குதல் தொடுத்து, பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ திட்டமிட்ட உடல்ரீதியான அழிவை ஏற்படுத்துதல், அந்தக் குழுவுக்குள் பிறப்புகளைத் தடுக்கும் நோக்கத்துடன் நடவடிக்கை எடுத்தல், அந்தக் குழுவிலுள்ள குழந்தைகளை வேறு குழுக்​களுக்குக் கட்டாயமாக மாற்றுதல் - ஆகிய எந்த ஒரு செயலும் இனப்படுகொலை வரையறைக்கு உட்பட்டது’ என்று சொல்கிறது.
இதன் ஒவ்வொரு சொல்லும் ஈழத்தில் நடந்தது இனப்​படுகொலை என்றே சொல்லுமே. இதைப் புரிந்து கொள்ளும் சக்தி மார்க்சிஸ்டுகளுக்கு இல்லாமல் போனது ஏன்? வட கிழக்கு மனித உரிமைகள் செயலகம் என்ற அமைப்பு, 1956 முதல் 2008 வரை நடந்த அனைத்து இனப்படுகொலைச் சம்பவங்களையும், தேதி வாரியாகக் கொல்லப்பட்ட தமிழர்களின் பெயர்களுடன் வெளியிட்டுள்ளது. இதைப் பார்த்தால் மனச்சாட்சி உள்ளவர்கள் கலங்கிப்போவார்கள். மார்க்சிஸ்டுகள் அதைப் பார்க்கட்டும்.
இனப்படுகொலை என்று இதைப் பார்க்க மறுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னு​டைய அறிக்கையில், விடுதலைப் புலிகளை அடக்கு​வதற்காகத்தான் இந்த போர் நடத்தும் சூழ்நிலைக்கு இலங்கை அரசாங்கம் தள்ளப்பட்டது என்றும் காரணம் சொல்கிறது. ' புலிகளின் வன்முறையை எதிர்கொள்ள இலங்கை அரசு ராணுவரீதியில் தன்னைத் தயார்செய்துகொண்டது’ என்கிறது.
ஈழ விடுதலைப் போராட்டத்தையே, 'இலங்கை அரசுக்கும் எல்.டி.டி.இ. அமைப்புக்குமான உள்நாட்டு யுத்தம்’ என்று அடையாளப்படுத்துவதைப் போல வரலாற்று அசிங்கம் வேறு இருக்க முடியாது. புலிகள் அமைப்பு 1972-ல் மெள்ள உருவாகி, 1980-களின் தொடக்கத்தில் நிர்வாகக் கட்டமைப்பு கொண்டதாக மாறி, 80-களின் இறுதியில் ஆயுத பலம் கொண்டதாக மாறுகிறது.
அப்படியானால் அதற்கு முன் செத்தவர்கள் எல்லாம் தங்களைத் தாங்களே கொலை செய்துகொண்டார்களா? 1950 முதல் 1975 வரை அகிம்சைப் போராட்டம் நடந்தது. 1980 முதல் 2009 வரை ஆயுதப் போராட்டம் நடந்தது. அகிம்சைப் போராட்டம் ஆரம்பித்த போது, பிரபா​கரன் பிறக்கவே இல்லை. தமிழீழத்தை ஈழத் தந்தை பிரகடனம் செய்தபோது, போராளி அமைப்புகள் எதுவும் பலமாகவே இல்லை.
நிராயுதபாணியாக நின்ற தமிழர்களை நித்தமும் அடித்து அடித்து ஆயுதம் தூக்கவைத்தார்கள். இதைத்தான், 'நான் என்ன ஆயுதம் தூக்க வேண்டும் என்பதை என் எதிரி தீர்மானிக்கிறான்’ என்றார் மாவோ. இதைத்தான் லெனின், நீதியான போர், அநீதியான போர் என்று பிரித்துச் சொல்வார்.
இந்தப் பின்புலம் அனைத்தையும் உள்வாங்கிக் கொள்ளாமல், புலிகள் ஆயுதம் தூக்கியதால் இலங்கை ராணுவம் குண்டு போட்டது என்று தாக்குதலையும் எதிர்தாக்குதலையும் இடம் மாற்றிப் போடும் தந்திரம் மார்க்சிஸ்ட்களுக்கு அவசியம் இல்லாதது. தன்னுடைய வரலாற்றுக் கடமையை மறைக்க மட்டுமே இது உதவும்.
இன்னொன்றையும் அந்த அறிக்கை சொல்கிறது, 'இது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை. எனவே, சர்வதேசப் பிரச்னை என்ற முறையில் இங்கிருந்து தலையிடுவதற்கு ஓர் எல்லை உண்டு’ என்று.
அப்படியானால், இலங்கைக்கு இந்திய அமைதிப் படை அனுப்பி வைக்கப்பட்டதை அந்தக் கட்சி அப்போது வரவேற்றது ஏன்? உள்நாட்டுப் பிரச்​னையில் இந்தியாவுக்கு என்ன வேலை என அன்று ஏன் கேட்கவில்லை? இதைவிடக் கொடுமை....
'இலங்கைக்கு ஆயுதங்களை இந்தியா விற்பனை செய்யலாம்’ என்ற அரிய ஆலோசனையை வழங்கியவரும் ஒரு மார்க்சிஸ்ட் தலைவர்தான். 2000, ஜூன் மாதத்தில் விடுதலைப்புலிகளின் ராணுவரீதியான தாக்குதலில் தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை ராணுவம் ஆனையிறவு முகாமை இழந்தபோது உள்ளம் பதறிப்போய் இப்படிக் கோரிக்கை வைத்தவர், மரியாதைக்குரிய மார்க்சிஸ்ட் தலைவர் உமாநாத். அவரது மகள் உ.வாசுகி இப்போது சொல்கிறார், 'அந்த மக்களுக்கு எது தேவையோ, அதை அவர்கள் தீர்மானித்துக்​கொள்வார்கள்’ என்று.
தமிழன் படுகொலை செய்யப்படும்​போது 'அது அவர்களது உள்நாட்டுப் பிரச்னை’ என்பதும், இலங்கை ராணுவம் தோல்வியைத் தழுவும்போது, 'இந்தியா ஆயுதம் விற்கலாம்’ என்றும் ஆலோசனை சொல்வதும் யாருடைய நலனைப் பிரதிபலிக்கிறது? நமக்கு எதற்கு ஆயுதத் தரகு வேலை? ஆயுதம் விற்கலாம் என்று சொன்னால், இலங்கை அரசாங்கம் செய்வது அனைத்தும் சரியானது என்று அந்தக் கட்சி நம்பியதா? 'உமாநாத் அன்று சொன்னதைத்தான் நாங்கள் இன்று செய்தோம்’ என்று மன்மோகன்சிங் சொன்னால் ஏற்றுக்கொள்வார்களா?
ஜூன் மாதம் இந்த ஆலோசனையை உமாநாத் சொன்னார். டிசம்பர் மாதம் மிருசுவில் என்ற இடத்தில் ஒரு புதைகுழி தோண்டப்பட்டு, எட்டுப் பிணங்கள் எடுக்கப்பட்டன. ஒரு கை எலும்பு கிடைத்து, அந்த இடத்தைத் தோண்டியபோது எட்டுப் பேரின் எலும்புகள் கிடைத்தன. இந்தக் காட்டுமிராண்டித் தனத்துக்கா ஆயுதம் கொடுக்கச் சொன்னீர்கள்? அது என்ன சோஷலிஸ அரசா? தமிழர்கள், சோஷலிஸ அரசைக் கவிழ்க்கச் சதிசெய்தார்களா? ஏகாதிபத்தியம் அந்த ஆட்சிக்கு எதிராகத் தமிழர்களைத் தூண்டியதா?
இலங்கைக்கு ஆயுதம் விற்பனை செய்ய மாட்டோம் என்று அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி முடிவை எடுத்தவர் 'மதவாத’ப் பிரதமர் வாஜ்பாய். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற 'இடதுசாரி’ சுர்ஜித் அதை ஆதரித்தார். ஆனால், தமிழ்நாட்டு 'இடதுசாரி’ உமாநாத் அதற்கு விரோதமாகக் கருத்துச் சொன்னார் என்றால், கோளாறு எங்கிருந்து தொடங்குகிறது? 'அரசியலின் நீட்டிப்பே யுத்தம்’ என்றார் மாவோ. அது புரிந்திருந்தால், ஆயுத வர்த்தகம் பற்றி ஒரு கம்யூனிஸ்ட் பேச முடியுமா?
ஈழத்து விடுதலைப் போராட்டம் தோற்றுப்போனதற்கு மிக முக்கியமான மூன்று காரணங்கள்...
செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு அரசாங்கம் தவிர யாரிடமும் ஆயுதம் இருக்கக் கூடாது என்பது, அமெரிக்கா உருவாக்கிய உலக ஒழுங்கு. விடுதலைப் போராட்டம், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என எந்த வித்தியாசமும் பார்க்காதே, அனைவரிடமும் இருக்கும் ஆயுதங்களையும் பறிமுதல் செய் என்பதே அமெரிக்காவின் தீர்ப்பு. இதற்குப் பதிலடி கொடுக்கக்கூடிய சோஷலிஸ, ஜனநாயக மாற்று (முன்பு சோவியத் இருந்தது போல!) அரசியலமைப்புகள் இல்லை.
இருந்தால் அவர்கள் விடுதலைப் போராட்டத்தையும் பயங்கரவாத இயக்கங்களையும் பிரித்துப் பார்ப்பார்கள். இலங்கையை நிலைக்களனாகப் பயன்படுத்த சீனா துடித்தது. இது இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக மாறியது. இத்தகைய வெளிப்புறச் சக்திகளின் நலன்கள் சேர்ந்து 'பயங்கரவாத இயக்கத்தை அழிக்கிறோம்’ என்ற போர்வையில், லட்சக்​கணக்கான தமிழர்களைக் கொன்று குவிக்க பின்னணியில் இருந்தனர்.
இவை எதையும் உள்வாங்கிக் கொள்ளாமல் வறட்டுத்​தனமாக அனைத்துப் பழிகளையும் புலிகள் மீது போட்டுத் தப்பிக்கப் பார்ப்பது மரணித்த மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம்.
கட்டுரையை முடிக்கும்போது மாக்சிம் கார்க்கி நினைவுக்கு வருகிறார்..
அடிமைகளின் துன்பத்துக்கும் அடிமைப்படுத்துவோரின் கொடுமையான ஏமாற்று வித்தைக்கும் நடுவே சமரசத்தை உண்டுபண்ண வேண்டும் என்று நயவஞ்ச​மாகக் கூறுகிறார்கள். எதிர்ப்பு உணர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான நோக்கத்தை மனதில் வைத்துக் கொண்டு இவ்வாறு கூறுகிறார்கள்.
இது, பொய்களைக் கற்களாகக் கொண்டு மனிதனுடைய சுதந்திர உள்ளத்துக்குச் சமாதி கட்டி வைப்பதற்காகச் செய்யப்படும் கேவலமான சூழ்ச்சியைத் தவிர வேறொன்றும் இல்லை’.

Geen opmerkingen:

Een reactie posten