தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 15 mei 2013

சிங்கள நிலத்தில் பூக்குமா தமிழ் பூ? மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு-6


 [ விகடன் ]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வைக்கும் கற்பனாவாதக் கோரிக்கைகளில் ஒன்று....'இரு பகுதிகளிலும் உள்ள உழைக்கும் மக்களும், ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்று சேர்ந்து இந்த அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்’ என்பது.
மேலோட்டமாகப் பார்த்தால் சரியான விஷயம்தானே என்று சொல்லத் தோன்றும். இலங்கை வரலாற்றை உன்னிப்பாகக் கவனித்து வருபவர்களுக்குத் தெரியும், இது போகாத ஊருக்கு வலிந்து காட்டப்படும் தப்பித்தல்வாதம்.
“சிங்களப் பாட்டாளியும் தமிழ்ப் பாட்டாளியும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.”
“இலங்கையின் ஜனநாயக சக்திகள் அணி திரள வேண்டும்.”
“தமிழீழம் கோருவதைவிட இலங்கையில் ஜனநாயகப் புரட்சி நடத்துவதே சரியானது.”
“இனப் பிரச்சினை என்பது குறுங்குழு வாதம். வர்க்கப் பிரச்சினையை முன்னெடுக்க வேண்டும்.”
கடந்த 40 ஆண்டு காலமாக கேட்டுக்கேட்டுப் புளித்துப்போன பசப்பு வார்த்தைகள் இவை. இந்தப் பிரச்சினையை சிறு அங்குலத்துக்குக்கூட இந்த கோஷங்கள் நகர்த்தவில்லை.
இலங்கையைப் பொறுத்தவரை உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள், மதச்சார்பற்ற சக்திகள். என்று அரங்கத்தில் செயல்பட்டவர்கள்கூட அந்தரங்கத்தில் இனவாத சக்திகளாகவே இருந்தனர். விரல்விட்டு எண்ணக்கூடிய சில விதிவிலக்குகள் மட்டுமே அன்றும் இன்றும் உண்டு.
சிங்களத் தொழிலாளர்களும் தமிழ்த் தொழிலாளர்களும் சேர்ந்து போராட வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கை. இலங்கைச் சமூக அமைப்பில் இனவாதம் தலைதூக்கி முதலில் தனித்தனியாய்ப் பிரிந்தவர்கள் தொழிலாளர்கள்தான் என்பதை “வர்க்கம்” பேசுபவர்கள் நினைவில் வைக்க வேண்டும்.
இலங்கைத் தொழிலாளர்கள் வர்க்க ஒற்றுமையுடன் செயல்பட்ட உன்னதமான காலம் என்பது 1890 முதல் 1930 வரை. சிங்களர், இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர், மலையாளிகள், முஸ்லிம்கள், மலாயர், பறங்கியர் என அனைவரும் ஒரு குடையின் கீழ் இருந்தனர். 1919-ல் உருவாக்கப்பட்ட இலங்கைத் தொழிலாளர் நலச் சங்கத்தின் தலைவராக பொன்னம்பலம் அருணாசலம் என்ற தமிழர் இருந்தார்.
இவர் தலைமையை அனைத்து தொழிலாளர்களும் ஏற்றுக்கொண்டனர். ஏ.ஈ.குணசிங்க போன்றவர்கள் இந்த இயக்கத்தில் தீவிரமாகச் செயல்படும்போது, முரண்பாடுகள் இனரீதியாகத் தலைதூக்குகிறது. தொழிற்சங்கச் செயல்பாடுகளில் இருந்தும் இலங்கை தேசிய காங்கிரஸில் இருந்தும் 1923-ல் பொன்னம்பலம் அருணாசலம் விலகுகிறார்.
அடுத்து, ஏ.ஈ.குணசிங்கவின் தலைமையை அனைவரும் ஏற்றனர். துறைமுகத் தொழிலாளர் வேலை நிறுத்தம் இவர்களது குறிப்பிடத்தக்க சாதனை. “மிகவும் கூர்மையான கட்டத்தில் நடந்த வர்க்கப் போராட்டத்தின் விளைவு” என்று இடதுசாரித் தலைவர்கள் ஒருவரான பிலிப் குணவர்த்தன குறிப்பிட்டார்.
“இலங்கையில் இன வர்க்க முரண்பாடுகள்” குறித்து வரலாற்றுப்பூர்வ ஆய்வு நடத்திய குமாரி ஜெயவர்த்தனா, “வர்க்கத் தீவிரத்தன்மையின் ஒப்பற்ற வெளிப்பாடு, இன ஒருமைப்பாடு, தொழிலாளர் வர்க்க ஒற்றுமை ஆகியவற்றை நீண்ட காலத்துக்கு நிரூபிக்கும் கடைசிச் செயலாக இது அமைந்தது” என்று எழுதுகிறார்.
அதாவது, 1930-க்குப் பிறகே இலங்கைத் தொழிலாளர்களிடம் இனப் பகைமை உணர்வு தலைதூக்கத் தொடங்கியது. விலைவாசி உயர்வு, ஆள் குறைப்பு, நாடெங்கும் பரவிய மலேரியா நோய்...
மூன்றும் உள்நாட்டுக் கொந்தளிப்பை உருவாக்கி நெருக்கடியை ஏற்படுத்தியது. இலங்கையைச் சேர்ந்தவர் அல்லாத, குடிபெயர்ந்து வந்த தொழிலாளர்களை எதிர்த்து சிங்களத் தொழிலாளர்களே தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தனர். இந்தக் காலகட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது மலையாளிகள். பல பகுதிகளில் உதிரி வேலைகளில் இருந்தவர்கள் அவர்கள். (இன்று தமிழகத்தில் பீகாரிகள், நேபாளிகள் வேலை பார்ப்பதைப் போல!)
மலையாளிகள் அனைவரையும் நாடுகடத்தி அவர்களது வேலைகளை உள்ளூர்க்காரர்களுக்கு வழங்க வேண்டும் என்று பேசியது யார் தெரியுமா? ஏக இலங்கைக்கும், அனைத்து இனத் தொழிலாளி வர்க்கத்துக்கும் தலைவராக முன்பு செயல்பட்ட ஏ.ஈ.குணசிங்கா. தொழிற்சங்க இயக்க ஏடாக அடையாளப்படுத்தப்பட்ட “வீரயா” - மலையாளித் தொழிலாளர்களை எதிர்க்கும் வீரனாக இருந்தது.
மே தின ஊர்வலங்களில் மலையாளிகளுக்கு எதிரான முழக்கங்கள் ஒலித்தன. “எங்களுக்கு ஹிட்லர் போன்ற ஒரு தலைவன் வேண்டும்“ என்று “வீரயா” எழுதியது. இலங்கைக்கு வந்த மலையாளிகள், சிங்களப் பெண்களை மயக்கித் திருமணம் செய்வதாக இந்தத் தொழிலாளிவர்க்கப் பத்திரிகை எழுதியது.
1980 காலகட்டத்தில் இலங்கையில் இருந்து தமிழர்கள் வெளியேறியதைப் போல 1940-களில் மலையாளிகள் இலங்கையில் இருந்து வெளியேறி இந்தியா வந்தனர். மிகக் குறைவான எண்ணிக்கை கொண்டவர்கள் அங்கேயே தங்கினர். சிலர் சிங்களர்களைத் திருமணம்செய்து இனம் மாறினர்.
இப்படியாக, சிங்களத் தொழிலாளி வர்க்கத்தில் படிந்த இனவாதம் மலையாளத் தொழிலாளி வர்க்கத்தை இலங்கையில் இல்லாமல் துடைத்தது. அதுதான் இன்று தமிழர்களுக்கு நடந்துகொண்டிருக்கிறது.
இந்தத் தொழிற்சங்க இனவாதத்தை 1936-ல் உருவான இடதுசாரிக் கட்சியான சமசமாசக் கட்சி மட்டுமே அப்போது கண்டித்தது. இலங்கை விடுதலைக்குப் பின், இந்திய வம்சாவழித் தமிழர் குடியுரிமை பறிக்கப்பட்டது.
சிறுபான்மை இனத்தின் பலம் மட்டுமல்ல தொழிலாள வர்க்கத்தின் பலமும் இதன் மூலம் குறைந்தது. இந்தச் சட்டங்களில் வகுப்புவாத நோக்கம் இருப்பதாக இடதுசாரித் தலைவர் என்.எம்.பெரோரா மட்டுமே கண்டித்தார்.
“இவ்வகையான இனவாதம் ஹஸ்டன் சம்பர்லேன், ஹிட்லர் போன்றோரின் இனவாதமாகவே முடியும்” என்று நாடாளுமன்றத்திலேயே அவர் எச்சரித்தார். ஆனால், தொழிற்சங்கத் தலைவராக வளர்ந்த ஏ.ஈ.குணசிங்க, 'இந்த நாட்டுத் தொழிலாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் நான் இனவாதியாக இருக்க வேண்டியவனாகிறேன். உண்மையான இனவாதியாக இருக்கிறேன். தொடர்ந்தும் இனவாதியாகவே இருப்பேன்” என்று பகிரங்கமாகக் கொக்கரித்தார்.
லங்கா சமசமாசக் கட்சி, போல்ஷ்விக் லெனினிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்து மகத்தான தனித்தன்மையை நிலைநாட்டியது. இதை சிங்களத் தொழிலாளர்கள் விரும்பவில்லை.
1956-ல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி ஆனது. குடியுரிமைப் பிரச்சினையில் தமிழர் பக்கம் நின்ற இடதுசாரித் தலைவர் பிலிப் குணவர்த்தன, “சிங்களம் மட்டுமே” என்பதை ஆதரிக்க ஆரம்பித்தார். மற்ற இடதுசாரிக் கட்சிகள் இதைக் கடுமையாக எதிர்த்தன.
அதாவது, 1936 முதல் 1965 வரை இடதுசாரிகளின் நிலைப்பாடு அனைவருக்குமானதாக இருந்தது. சிங்கள, பௌத்தப் பேரினவாதச் சூழல் அதிகமாக அதிகமாக, அவர்களால் எதிர்த்து நிற்க முடியாமல் காணாமல்போயும், கரைந்துபோயும், திரிந்துபோயும் இடதுசாரி அந்தஸ்தை இழந்தனர்.
மதம், இனம், சாதி போன்ற அம்சங்களுக்கு எதிராக இருக்க வேண்டிய தொழிலாளர் இயக்கம், முதலில் இனரீதியாக வளர்ந்தது. அதேபோக்கில் இடதுசாரி கட்சிகளும் நகர்ந்தது. நடந்த இனப் படுகொலைகளை அவர்களால் வேடிக்கை பார்க்கவே முடிந்தது.
இனக்கொலைகளில் சிங்களத் தொழிலாளிகள் இறங்கியபோது கைகட்டி கையறு நிலையில் நின்றனர். மைய நீரோட்டத்தில் இருந்து ஒதுங்கி நிற்கும் சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக, ஆட்சிகளில் பங்கேற்கும் மோசமான நிலைப்பாட்டை, 1964 காலகட்டங்களில் இடதுசாரிகள் எடுத்தனர்.
கொலை வெறியாக இனவாதம் தலைதூக்கியதை எதிர்த்துப் பிரசாரம் செய்யாமல், தேர்தல் வெற்றி, அதிகாரத்தில் பங்கு பெறுதல் என்ற நாடாளுமன்றவாதத்துக்குள் தங்களை மறைத்து இடதுசாரிகள் தப்பித்துக்கொண்டனர். ஒரு பக்கம் இடதுசாரிகளின் ஐக்கிய முன்னணி அமைத்துக்கொண்டே, இன்னொரு பக்கம் ஸ்ரீமாவோ பண்டார நாயகா அரசாங்கத்தில் மூன்று மந்திரி பதவிகளை சமசமாசக் கட்சி ஏற்றுக்கொண்ட நிகழ்வு, இடதுசாரி இயக்க சரிவின் தொடக்கம். பௌத்த சிங்கள சிந்தனை காரணமாக இடதுசாரிப் பத்திரிகைகள், கிறிஸ்தவர்களை அதிகமாகத் தாக்கி எழுதும் கொடுமையும் நடந்தது.
இந்திய வம்சாவழியினர் திருப்பி அனுப்பிவைக்கப்பட்ட ஒப்பந்தத்தை ஆதரிக்கும் நிலைக்கு சில இடதுசாரி அமைப்புகள் போயின. வடக்கு, கிழக்கு மாகாணத்தில் தமிழைப் பயன்படுத்துவதற்கான உரிமையை டட்லி - செல்வநாயகம் ஒப்பந்தம் வழங்கியது. “அந்த ஒப்பந்தத்தை கிழித்தெறி” என்று இடதுசாரிப் பத்திரிகையான “ஜனதின” எழுதியது.
இனவாதப் பத்திரிகைக்கும் இடதுசாரிப் பத்திரிகைக்கும் வித்தியாசம் பார்க்க முடியாத அளவுக்கு அந்தக் காலகட்டம் இருந்தது. 1965 மே தின ஊர்வலம் சிங்கள இனவெறி ஊர்வலமாக மாறியது. தொழிலாளர் வர்க்கத்தை இனவெறிக் கூட்டரசாங்கத்தின் பங்காளிகளாக மாற்றியதன் மூலமாக, இடதுசாரி இயக்கங்கள் கொள்கைரீதியான இறுதிச்சடங்கு நிலையை எட்டியது.
அதன் பிறகு முழுக்க இனவாதத்தில் சரணாகதி அடைந்தது. இதுவும் போதாது என்று ஜனதா விமுக்தி பெரமுனா என்ற பெயரில் ஓர் அமைப்பு உருவானது. இவர்களும் சிங்கள இனவாதத்தை இறுக்கமான வார்த்தைகளில் வெளிப்படுத்தினர்.
எஸ்.எல்.எல்.பி, எல்.எஸ்.எஸ்.பி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இணைந்த ஸ்ரீமாவோ பண்டார நாயகா தலைமையிலான ஆட்சிக் காலத்தில்தான் (1972-ம் ஆண்டு) இலங்கையின் புதிய அரசியல் சட்டம் நிறைவேறியது. இந்த அரசியல் யாப்பை எழுதியவர் இடதுசாரிக் கட்சியான லங்கா சமசமாசக் கட்சியின் தலைவர் டாக்டர் கெல்வின் ஆர்.டி.சில்வா. பௌத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த ஒர் அரசியல் சட்டத்தை இடதுசாரி எழுதிய துரதிர்ஷ்டம் அது.
வர்க்க அரசியலைப் பேசி தான் அடைய வேண்டிய அரசியல் நன்மைகளை நீண்ட காலத்துக்கு இழக்க வேண்டுமா அல்லது வலதுசாரிகளைப் போலப் பேசி தங்களை மைய நீரோட்டத்தில் இருத்திக்கொள்ள வேண்டுமா என்ற இரண்டில், இரண்டாவது வழியை இலங்கை இடதுசாரிகள் மேற்கொண்டதால்தான், இலங்கை அரசியலில் ஜனநாயக சக்திகளின் ஐக்கியம் 50 ஆண்டுகளுக்கு முன்னாலேயே பட்டுப்போனது.
கொள்ளுகூட விளையாத நிலத்தில் நெல்லு விளைவிக்கலாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்னும் நம்பச் சொல்கிறது!
தொடரும்

Geen opmerkingen:

Een reactie posten