தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 29 mei 2013

மரணத்தின் வாசலில் 17 நாட்கள்!




ரேஷ்மா பேகம் அன்று வேலைக்குக் கிளம்ப தாமதமாகி விட்டது. பதற்றத்தில் அவர் சாப்பிடவில்லை. சூப்பர் வைசர் எப்படி திட்டப் போகிறாரோ என்ற பதற்றத்துடன் நடந்தவர், பசித்தால் என்ன செய்வது என நான்கு பிஸ்கெட் பாக்கெட்டுகளை வாங்கிக் கொண்டார். ரேஷ்மாவுக்கு அப்போது தெரியாது... அந்தத் தாமதமும் பிஸ்கெட் பாக்கெட்டுகளும்தான் தன் உயிரைக் காப்பாற்றப் போகின்றன என்பது ! சரி வாருங்கள் விடையத்துக்குப் போகலாம் !

வங்க தேசத் தலைநகர் டாக்காவின் புறநகர்ப்பகுதியான சவர் என்ற இடத்தில் கார்மென்ட் நிறுவனங்கள் இயங்கிய ஒரு பெரிய வணிக வளாகம் நொறுங்கி விழுந்ததில் 1127 பேர் இறந்தனர். இடிபாடுகளில் சிக்கியிருந்து, 17 நாட்கள் கழித்து உயிரோடு மீட்கப்பட்ட ரேஷ்மாவின் மன உறுதி அனைவரையும் மலைக்க வைக்கிறது.ராணா பிளாசா என்ற அந்த எட்டு மாடிக் கட்டிடத்தில் வழக்கம் போல அன்றும் 9 மணிக்கு ஷிப்ட் ஆரம்பித்தது. சில நிமிடங்களில் பவர்கட். மொட்டை மாடியில் இருந்த ஜெனரேட்டர்கள் இயக்கப்பட, அடுத்த சில நிமிடங்களில் அந்த அதிர்வு தாங்காமல் நொறுங்கியது கட்டிடம். கான்க்ரீட் தளங்கள் அப்படியே உள்வாங்க, பிஸியான முதல் ஷிப்ட்டுக்கு வந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளிகள் உள்ளே சிக்கினர். 

லேட்டாக வேலைக்கு வந்து, அப்போதுதான் உள்ளே நுழைந்த ரேஷ்மா, மூன்றாவது தளத்தில் இருந்தார். கட்டிடம் இடிந்ததும் பீதியில் படிகளில் இறங்கி ஓடினார். இரண்டாவது தளத்தை அவர் அடையும்போது, அந்தத் தளமும் அப்பளமாக நொறுங்கி உள்வாங்கியது. இரண்டு கான்க்ரீட் தூண்களுக்கு இடைப்பட்ட ஒரு இடைவெளியில் அவர் நின்றிருந்தார். பயத்தில் மரண ஓலம் எழுப்பிவிட்டு அமைதியானபோதுதான் அவருக்கு ஒரு விஷயம் புரிந்தது. இத்தனை மோசமான விபத்திலும் தனக்கு சின்ன கீறல் கூட விழவில்லை. இடிபாடுகளுக்கு இடையே தான் உட்கார்ந்திருக்கும் அளவுக்கு இடம் இருக்கிறது என்பது தான்.

எங்கும் புழுதி பறந்ததால், எதுவுமே தெரியவில்லை. எல்லா திசைகளிலும் அழுகைக் குரல்கள்தான் கேட்டன. குரல்கள் கொஞ்ச நேரத்தில் அடங்கிவிட்டன. அவர்கள் இடிபாடுகளில் நசுங்கி இறந்துவிட்டனர் என்பது புரிந்தது. புழுதி பறந்ததில் எதுவுமே புரியவில்லை. வெளிச்சம் புகாத கும்மிருட்டு. எனக்கு மிக அருகிலேயே மூன்று பேர் இருந்தனர். பார்க்க முடியவில்லை. மூன்றுவிதமாக வந்த குரல்களை வைத்துப் புரிந்துகொண்டேன். பலத்த அடிபட்டு, சுவாசிக்கக் கூட காற்று இல்லாத நிலையில் அவர்கள், ‘தண்ணீர்... தண்ணீர்...’ என்று கதறினர். நான் இருந்த இடத்தைத் தடவிப் பார்த்தேன். தண்ணீர் பாட்டில்கள் கிடந்தன. ஆனால் என்னால் நகர முடியவில்லை. என் தலைமுடி இடிபாடுகளில் சிக்கியிருந்தது. கைகளால் துழாவிப் பார்த்து கத்தரிக்கோல் எடுத்து முடியை வெட்டி என்னை விடுவித்துக் கொண்டு நகர்ந்தபோது அவர்களின் குரல் அடங்கியிருந்தது. செத்துப் போய்விட்டனர். 

இன்னும் சில நிமிடங்களில் என் கதியும் இதுதான் என நினைத்தேன். திரும்பவும் வெளிச்சத்தைப் பார்க்காமல் அப்படியே மரணித்துவிடுவோமோ என்ற பயம் என்னை நொறுக்கியது’’ என்று மீண்டபிறகு சொன்னார் ரேஷ்மா. இந்த பயத்தையும் தாண்டி, வாழ வேண்டும் என்ற வேட்கை அவருக்குள் இருந்தது. தன் ஒரே பெண் குழந்தையை ஊரில் அம்மாவிடம் விட்டுவிட்டு, அவளது எதிர்காலத்துக்காக இந்த வேலைக்கு வந்தவர் ரேஷ்மா. ‘என்னை விட்டால் குட்டிப் பெண்ணுக்கு யாருமில்லை. அவளுக்காக நான் வாழ வேண்டும் ! மன உறுதியோடு காத்திருந்தால், யாராவது வந்து மீட்பார்கள். தான் அடைபட்டுக் கிடந்த இடிபாடுகளுக்குள் நத்தை போல நகர்ந்து பார்த்தார். கையில் கிடைத்த தண்ணீர் பாட்டில்களை எடுத்து வைத்துக் கொண்டார், காலையில் அவர் வாங்கிவந்த பிஸ்கெட் பாக்கெட்டுகள் பத்திரமாக இருந்தன. 

கூடவே தரையில் சிதறியிருந்த ஸ்நாக்ஸ், பிரெட் துண்டுகளையும் சேகரித்துக் கொண்டார். காப்பாற்ற எப்போது ஆள் வரும் என்று தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாக பிஸ்கெட் கொறித்து, தண்ணீர் குடித்து காத்திருந்தார். இடிபாடுகள் வழியே வெளியில் போக முடியுமா என்றும் முயற்சித்தார். உடலெங்கும் சிராய்த்துக் கொண்டு உடைகளையும் கிழித்துக் கொண்டதுதான் மிச்சம். வெளிச்சமே எங்கும் தெரியாத நிலையில் அந்த ஆபத்தான முயற்சியைக் கைவிட்டார். பகலா, இரவா... தெரியாது. எத்தனை நாட்கள் ஆனது என்பதும் தெரியாது. படுத்தால் தூக்கமும் வராது. இடிபாடுகளை அகற்றும் மீட்புக் குழுவினரின் குரல் கேட்கும்போதெல்லாம் ‘‘என்னைக் காப்பாற்றுங்கள்’’ என்று அடித் தொண்டையில் கத்துவார். ஆனால் கட்டிட இடிபாடுகளின் மிக மிக அடியில் அவர் கிடந்ததால், யாருக்கும் அவர் குரல் கேட்கவில்லை. பிஸ்கெட் எல்லாம் தீர்ந்து போய் கடைசியில் இரண்டே இரண்டு தண்ணீர் பாட்டிகள் மட்டும் மிஞ்சின. 

வெறும் தண்ணீர் மட்டுமே குடித்து ஜீவித்திருந்தது மூன்று நாட்கள் என்பதும் அவருக்குத் தெரியாது. சூரியனே எட்டிப் பார்க்காத ஒரு படுகுழியில் அவர் இருந்தார். கடைசியாக மிக அருகில் குரல்களைக் கேட்டபோது, உள்ளே கிடந்த குச்சிகளையும் கம்பிகளையும் எடுத்து கான்க்ரீட் கட்டைகளில் தட்டினார். இடிபாடுகளை புல்டோசர்கள் அகற்றுவதை மேற்பார்வையிட்ட அப்துர் ரசாக் என்ற ராணுவ சார்ஜென்ட்டுக்கு இந்த சத்தம் கேட்டது. எல்லா இயந்திரங்களின் இயக்கத்தையும் நிறுத்திவிட்டு, சத்தம் கேட்ட இடத்தை நெருங்கினார். ‘‘காப்பாற்றுங்கள்’’ என்ற மெல்லிய குரலைக் கேட்டதும் அவருக்குள் பரபரப்பு எகிறியது. சுத்தியல்களால் லேசாகத் தட்டி இடைவெளி ஏற்படுத்தி, உள்ளே டார்ச் லைட் வெளிச்சத்தைப் பாய்ச்சினார்கள். 408 மணி நேரம் கழித்து ரேஷ்மா பார்த்த வெளிச்சம் அது! ‘‘வாழ்க்கை மீதான இந்த 19 வயதுப் பெண்ணின் நம்பிக்கை அபாரமானது’’ என வங்க தேசமே வியக்கிறது இப்போது.





Geen opmerkingen:

Een reactie posten