ஆனால், இலங்கையில் தமிழர்கள் கணிசமாக வாழும் தேசிய தலைநகரில் வீதியொன்றுக்கு சட்டவிதிகளின் படிகூட ‘தமிழ்ச் சங்க வீதி’எ னப் பெயரிடப்படுவது தடுக்கப்பட்டுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் உபபொதுச் செயலாளரும், கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான சண். குகவரதன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதோர் நிலையில் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைப்பதென்பது ஒருபோதும் நடக்காத காரியமென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, சண். குகவரதன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கில் அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்துமா? என்பதும் சந்தேகத்துக்குரியதாகவே உள்ளது. யுத்தம் முடிந்து நான்கு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் கூட தமிழ் மக்களின் வாழ்வில் இன்னும் விடியல் ஏற்படவில்லை.
நமது தலைநகர் கொழும்பில் வீதியொன்றுக்கு ‘தமிழ்ச் சங்க வீதி’ எனப் பெயரிடுவதற்கு நமது கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் வேலணை வேணியன் அவர்களின் முயற்சியால் கொழும்பு மாநகரசபையில் ஏகமனதான பிரேரணை நிறைவேற்றப்பட்டு பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்யவிருந்த தருணத்தில், இது பேரினவாத சக்திகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இன்று தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இந்த விடயத்தை பொறுப்பேற்று இது தொடர்பாக நியாயம் பெற்று தருகின்றோம், பொறுமையாக இருங்கள் என நமது தலைவர் மனோ கணேசனிடம் வேண்டுகோள் விடுத்தும்கூட, கடந்த ஆறு மாதங்களாக இன்னமும் நியாயம் நிலைநாட்டப்படாத நிலைமை நிலவுகிறது.
நம் நாட்டில் சட்டப்படி மாநகரசபையில் நிறைவேற்றப்பட்ட ஒரு பிரேரணை மூலமாகக்கூட ஒரு வீதிக்கு பெயர் சூட்ட முடியாமல் உள்ளது. இதற்கும் மாகாண அரசும், மத்திய அரசும் தடை போடுகின்றன.
ஆனால், அந்நிய நாடான கனடாவில் ஒரு வீதிக்கு ‘வன்னிவீதி;’ எனப் பெயர் சூட்டி தமிழ் மக்கள் கௌரவப்படுத்தப்பட்டுள்ளார்கள். வெளிநாட்டவர்களுக்கு உள்ள இந்த மகிழ்ச்சிக்குரிய பரந்த மனப்பான்மை, தமிழர்களின் சொந்த நாடான இலங்கையில் ஆட்சி செய்கின்ற அரசுக்கும், இங்குள்ள பேரினவாத சக்திகளுக்கும் இல்லை. இந்தச் செயற்பாடு தமிழர்களுக்கு எதையும் வழங்கக்கூடாதென்ற, இலங்கை அரசின் இறுக்கமான இனவாதமான மனநிலையை வெளிப்படுத்தியுள்ளது.
எனவே, வடக்கில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படப் போவதில்லை என்றும், அப்படியே நடத்தப்பட்டாலும் சட்டப்படி 13ம் திருத்தத்தில் உள்ள அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு கிடைக்கப்போவதில்லை என்பதும் தெட்டத்தெளிவாகத் தெரிகின்றது.
தமிழ் மக்களும் எமது நாட்டு மக்கள். அவர்களும் உரிமைகளோடும், அதிகாரங்களோடும் வாழ வேண்டும் என்ற மனப்பான்மை பேரினவாத சக்திகளுக்கு கிடையாது என சண். குகவரதன் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten