பிறப்பால் கிறிஸ்தவக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் எனது வாழ்க்கை என் கோப்பாய்க் கிராமத்திலுள்ள தேவாலயத்தினைச் சுற்றித்தான் அமைந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை ஆலயத்திற்குச் செல்வதுடன் ஆரம்பித்துப் பின்னர் வாலிபர் சங்கம், ஆலய நிர்வாகம் போன்ற பல மட்டத்திலும் சமூகம் எதிர்பார்த்த மாதிரி வாழவும் தொடங்கினேன். 1970களின் கடைசிப் பகுதியில் எமது ஆலயத்தில் கடமையாற்றிய மதகுருவும் அதற்குக் காரணம். அவரின் தமிழ் அறிவும் தமிழ்ப் பற்றும் மற்றைய மதங்களையும் மக்களையும் மதித்து நடந்து கொள்ளும் பண்பும் என்னையும் அவற்றில் ஈடுபாடு உள்ளவனாக ஆக்கியது.
எனது பெற்றோர்கள் எனது குடும்பத்தில் எவருக்குமே கிறித்தவப் பெயர்களை வைத்ததில்லை. எல்லோருக்குமே தமிழ்ப் பெயரைத்தான் வைத்தார்கள். அதனால் எங்களை யாருமே கிறிஸ்தவர்களாக அடையாளம் காண முடியாது. ஆலய நிர்வாக கமிட்டியில் 16 வயதில் உறுபப்பினராகச் சேர்க்கப்பட்டேன். அதேநேரம் GUES என்ற ஈழ மாணவர் பொது மன்றம் நடத்திய பல அரசியல் வகுப்புக்களிலும் கலந்து கொண்டேன். அந்தக் கால கட்டத்தில் YFC என அழைக்கப்படும் YOUTH FOR CHRIST என்ற கிறிஸ்தவ வாலிபர் சங்கமும் என்னைக் கவர்ந்தது. அது பைபிள் கல்வி, பிரார்த்தனைக் கூட்டங்கள், Born Again Christian என்ற ஆழமாகக் கிறிஸ்தவன் என்றால் என்ன என்று விளக்கமளிக்க மேலும் அவற்றின் மீதும் கவரப்பட்டேன்.
1981 ல் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் YFC நடத்திய இரண்டு நாட்கள் முகாமில் கலந்து மேலும் பல விடயங்களிற்கு பதில் தேட முயற்சித்தேன். ஒரு கிறிஸ்வதன் சமூகத்தில் நடக்கும் அடக்குமுறைகளுக்கு எதிராக எவ்வாறு போராட வேண்டும், பைபிளை வாசிப்பதன் மூலமும் பிரார்த்தனை செய்வதன் மூலமும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமா? இயக்கத்தில் சேர்வது சரியா? போராட்டத்தில் நேரடியாகப் பங்குபெறாமல் எவ்வாறு கிறிஸ்தவனாக வாழுவது? என்று பல கேள்விகள் எனக்குள் எழுந்தன. ஆனால் அவற்றுக்குப் பெரிதாக, என்னைத் திருப்திப்படுத்தும் பதில்கள் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் எனக்குச் சார்பாக அதில் கலந்துரையாடியவர்கள் என் நண்பர்களாக அறிமுகமானார்கள். அவர்களில் பலர் இன்று முழுநேர மதகுருமாராக உள்ளார்கள். இன்றும் என் நண்பர்களாக உள்ளார்கள்.
அந்தக் கால கட்டத்தில் இராணுவ, பொலிஸ் சோதனைக் கெடுபிடிகள் ஆரம்பித்து விட்டன. எவரும் தமிழன் என்பதற்காகவே கைது செய்யப்படலாம் என்ற நிலை ஆரம்பித்து விட்டது. நடந்து கொண்டிருந்த வாழ்க்கையில் நாம் இவ்வளவு பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும்போது நாம் இறந்த பின் கிடைக்கின்ற மோட்சம் தான் நிரந்தர வாழ்க்கை என என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
1983 இல் இனப் படுகொலைகளைத் தொடர்ந்து அகதிகளாக என் உறவினர்கள் நண்பர்கள் எனப் பலர் எனது கிராமத்திற்கு வந்தனர். அதேநேரத்தில் அவ்வாறு அகதியாக கொழும்பிலிருந்து வந்த ஒரு மத குருவும் எமது ஆலயத்திற்கு குருவானவராக நியமிக்கப்பட்டார். 1983 ஆம் ஆண்டு ய+லை மாதம் மட்டும் கொழும்பில் கடமையாற்றிய இம் மதகுரு அகதியாக்கப்பட்டமை, அவரைப் பாதுகாக்கத் தவறிய கிறிஸ்தவர்கள் என்ற சிங்களவர்கள், சிங்கள மதகுருக்கள், அவர்களின் மேலுள்ள சிங்கள பிஷப் எல்லாரும் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்வி என்னிடம் ஏற்பட்டது. அந்தச் சிங்கள கிறிஸ்தவர்களிடம் இன வெறியைத்தான் என்னால் காண முடிந்தது.
எனது கிராமத்தில் அப்போது கூட பேக்கரி நடத்திக் கொண்டிருந்தவர்கள் சிங்களவர்கள், அவர்களின் வீடுகள் உடைமைகள் எதுவுமே யாராலும் தாக்கப்படவில்லை. மாறாக, அவர்களை நாங்கள் பாதுகாத்தோம். 1984 களில் இராணுவத்தின் வற்புறுத்திலின் பின்னர்தான் அவர்கள் வெளியேறிச் சென்றனர்.
1984 ஆரம்பத்தில் கொழும்பிலிருந்து பிஷப் வட பகுதி வந்தபோது எமது ஆலயத்திற்கும் வந்தார். ஆலய நிர்வாகத்தில் உறுப்பினராகவும் வாலிபர் சங்கத் தலைவராகவும் இருந்த நான் அதேநேரம் அவர் வந்தபோது எமது ஆலயத்தின் கேற்றில் கறுப்புக் கொடி கட்டி பிஷப்பினை வரவேற்றேன். எமது ஆலய மதகுரு கறுப்புக் கொடியினைக் கட்ட வேண்டாம் என்று என்னைக் கேட்டுக் கொண்ட போதிலும் அவரால் எனது உணர்வுகளை மதிக்க வேண்டிய நிலையில் இருந்தார். அத்துடன், அவர் என்னுடன் பிரச்சினைப் படுவதையும் தவிர்த்தார்.
அந்தக் கால கட்டத்தில் அகதியாக வந்த நண்பர்கள் உறவினர்களின் உதவியுடன் எமது வாலிபர் சங்கத்தின் மூலம் ஒரு பாலர் பாடசாலையை எமது ஆலய கட்டிடம் ஒன்றில் ஆரம்பித்தோம். இந்த பாடசாலை இன்றும் இயங்கிக்கொண்டிருக்கிறது. எமது கிராமத்தில் ஒரு முதன்மை பாலர் பாடசாலையாக பின்னர் அது வளர்ந்தது. அடையாள அட்டை இல்லாமல் நாம் தெருக்களில் திரிய முடியாத கால கட்டம் அப்போது ஆரம்பித்து விட்டது.
எனது குடும்பப் பின்னணியைப் பற்றி பலரும் பலவாறாகச் சொல்லிக் கொள்வார்கள். நாங்கள் மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், எங்களுக்கு என்ன பிரச்சினைகள் இருந்தன, நாங்கள் சொகுசான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் என்றெல்லாம் சொல்வார்கள். அவர்களுக்காக மட்டுமல்ல எனக்குப் போராடக் கற்றுத் தந்த என் அம்மாவிற்காகவும் இந்தக் குறிப்புக்களை நான் எழுத வேண்டியுள்ளது.
என் அப்பா இறந்தபோது எனக்கு ஏழு வயது. என்னை மனிதனாக வளர்த்தெடுத்தது என் அம்மா தான். நான் எதைச் செய்தாலும் அதை என் அம்மாவிற்குத் தெரியப்படுத்துவேன். நான் பின்னர் இயக்கத்திற்குச் சென்றதையும் இந்தியா சென்றதையும் கூட அம்மாவிற்குத் தெரியப்படுத்தினேன். நான் அம்மாவிடம் அனுமதி பெறுவதில்லை. ஆனால் தெரியப்படுத்துவேன். அந்தளவு சுதந்திரம் எனக்கு வழங்கப்பட்டிருந்தது. பொருளாதாரரீதியில் நாம் ஒன்றும் வசதியானவர்கள் இல்லை.
1980 இல் ஏ.எல் படிப்பதற்கு முதலில் பரி யோவான் கல்லூரியில் அனுமதி கிடைத்தது. அவர்கள் இரண்டாயிரம் ரூபாய் டொனேசன் கேட்டார்கள். மாதம் இருநூறு ரூபாய்ப்படி பத்து மாதத்திற்குக் கட்டுவதாக எமது ஆலயத்தின் மூலம் கல்லூரி நிர்வாகத்துடன் ஒழுங்கு செய்யப்பட்டு அங்கு சென்றேன். 1980 இல் முதல் நாள் பாடசாலையில் அதன் அதிபர் முழுப் பணம் இரண்டாயிரமும் உடனே கட்ட வேண்டும், இல்லையேல் அங்கு படிக்க முடியாது எனச் சொல்லி என்னைப் போகச் சொல்லி விட்டார். நிர்வாகம் மாதம் இருநூறு ரூபாய்க்கு அனுமதி அளித்தும் அதிபர் அப்படிச் சொன்னதும் நான் உடனே பஸ் எடுத்து, யாழ் மத்திய கல்லூரிக்குச் சென்று அங்கு அனுமதி பெற்று ஏ எல் படிப்பினை ஆரம்பித்தேன். நான் வீட்டுக்குச் செல்லவில்லை, யாரும் என்னுடன் வரவும் இல்லை, நான் முடிவெடுத்து மத்திய கல்லூரியில் சேர்ந்தேன். நான் அன்று மாலை வீட்டிற்குச் சென்று நடந்தவற்றை அம்மாவிற்குச் சொன்னேன். அம்மா என்னை மகிழ்ச்சியுடன் கட்டித் தழுவினார்.
என்னைச் சொந்தக் காலில் நிற்கப் பண்ணியவர் அவர். அத்துடன் எப்போதும் ஆதரவாகவும் இருந்தார் என் அம்மா. 1980 ஆம் ஆண்டு இரண்டாயிரம் ரூபா பணத்தை என்னால் யாரிடமும் பெற்றிருக்க முடியும். ஆனால் நான் அதைச் செய்யவில்லை. பரி யோவான் கல்லூரியில் படிக்க முடியவில்லை என நான் ஒரு துளி கூடக் கவலைப்படவில்லை. என் ஏ எல் பரீட்சையில் எடுத்த புள்ளிகள் நான் பல்கலைக் கழகம் செல்வதற்குப் போதுமான இருந்தன. இருந்தும் நான் விரும்பிய பட்டய கணக்காளர் படிப்பினை ஆரம்பித்தேன். ஆனால் 1983 இனப் படுகொலைகள் அனைத்தையும் கைவிட்டு போராட்டத்தில் என்னை ஈடுபட வைத்தது.
மேற்கூறிய சம்பவங்களை நான் கூறியதற்கு காரணம் வெறும் ஆயுதக் கவர்ச்சியினால் திடீரென்று முடிவெடுத்து இந்தியாவிற்குச் போன படகில் ஏறிப் போராடப் புறப்பட்டவன் அல்ல நான். வாழ்க்கையில் சிறுவயதில் அப்பாவை இழந்தவன். பொருளாதார நெருக்கடிகளின் மத்தியில் யாழ்ப்பாணத்து சாதாரண நடுத்தர வர்க்கச் சூழ்நிலையில் வளர்ந்தவன். படிப்பிற்கு முக்கிய கவனம் கொடுத்தவன். அதேநேரம் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் பங்கெடுத்தவன். அத்துடன், இளம் பருவத்திற்குரிய அனைத்து நடவடிக்கைகளிலும் பங்கு பற்றியவன். பெண்கள் பின்னால் சுற்றுவது முதல் கொண்டு வீதிகளில் நின்று போவோர் வருவோரைப் பற்றி நக்கலடிப்பது வரையும் செய்த சாதாரண வாலிபன்; தான் நானும்.
சிறி லங்கா அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஆரம்பித்த எனது போராட்டம் பின்னர் இயக்க தலைமைகளுக்கு எதிரான போராட்டமாக மாறியது.
ரஞ்சித் என இயக்க பெயர் கொண்ட எல்லாளனாகிய நான் 1984 இல் ரெலோ இயக்கத்திலிருந்து வெளியேறினேன். 1983 இல் இணைந்து குறுகிய காலமே ரெலோவில் இயங்கியிருந்தாலும் 90 களில் அந்த அனுபவத்தை எழுதினேன். 2000 களில அது சரிநிகர் பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. நான் ஒரு எழுத்தாளன் அல்ல. இதைப் படிப்பவர்கள் இதற்கு ஓர் இலக்கிய வடிவத்தினைத் தேட வேண்டாம். நான் எடுத்த சில முடிவுகள் என்னை உயிருடன் வாழ வைத்துள்ளன. போராட்டத்தில் நம்பிக்கை வைத்து ஆயுதம் ஏந்தாமல் ஆயுதம் தரித்தவர்களுடன் போராடி வந்துள்ளேன். என்னைப் போல் போராடிய நீங்களும் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
- எல்லாளன் இராஜசிங்கம்
Geen opmerkingen:
Een reactie posten