[ விகடன் ]
இத்தகைய சூழலில் இரு பகுதிகளிலும் உள்ள உழைக்கும் மக்களும் ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றுசேர்ந்து அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதே பொருத்தமான அணுகுமுறையாக இருக்கும்’ என்கிறார்.
அதாவது, இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர், இனரீதியாக ஒடுக்கப்படுகிறார்கள் என்று பேசினாலே, 'தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் ஒடுக்கப்படுகிறார்களே’ என்று திசை திருப்புவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கமாக இருக்கிறது.
அந்தக் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'தீக்கதிர்’ தீட்டி இருக்கும் தலையங்கத்தில் (20.3.2013) 'இலங்கையில் உள்ள ராஜபக்ச அரசு தமிழ் மக்களுக்கு எதிராக மட்டுமின்றி, அந்த நாட்டிலுள்ள அனைத்துப் பகுதி மக்களுக்கு எதிராகவும் எதேச்சதிகாரப் பாதையில் நடந்து அனைத்துப் பகுதி மக்களின் மனித உரிமைகளையும் மறுத்து வருகிறது என்பது கண்கூடு.
இதற்குப் பல ஆதாரங்களைக் கூற முடியும்’ என்கிறது. தமிழர்கள் மீது நடத்தப்பட்ட பச்சைப் படுகொலைகளைப் பட்டியலிட்டால், 'சிங்களவர்கள் மீது மனித உரிமைத் தாக்குதல் நடந்துள்ளதே’ என்று சொல்வது தமிழர் படுகொலைச் சம்பவங்களின் வீரியத்தைக் குறைக்கும் திசை திருப்பும் காரியமே தவிர, வேறல்ல.
கொத்துக் குண்டுகளை முள்ளிவாய்க்காலில்தான் போட்டனர். அனுராதபுரத்தில் அல்ல. வெள்ளை பாஸ்பரஸ் தூவப்பட்டது வன்னி நிலத்தில்தான். சிங்களப் பகுதியில் அல்ல. எதைவைத்து தமிழர்களையும் சிங்களவர்களையும் பொதுமைப்படுத்துவீர்கள்?
ஜனதா விமுக்தி பெரமுனாவைச் சேர்ந்த சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட உதாரணத்தை உ.வாசுகி காட்டுகிறார். 1971 மற்றும் 1987 ஆகிய ஆண்டுகளில் நடந்தது ஒரு திடீர் கலகம். அவசர அவசரமாக உருவாக்கப்பட்டு அப்படியே உருக்குலைக்கப்பட்ட கொடூரம்.
அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கத்துடன் வீடுகளில் தயாரிக்கப்பட்ட குண்டுகள், உள்ளூர் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு திடீரென ஒருநாள் தேதி குறித்து, 'அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களையும் கைப்பற்றுவோம்’ என்று 1971ல் அறிவித்தது ஜே.வி.பி.
இடதுசாரி சித்தாந்தம் என்று சொல்லிக்கொண்ட இனவாதம்தான் அதற்குள் இருந்தது. 'இந்திய விஸ்தரிப்புவாதம்’ என்று சொல்லி தமிழர் எதிர்ப்பு வகுப்புகளைத்தான் அவர்கள் நடத்தினர். 1987 காலகட்டத்தில் நடந்ததும், ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தின் மூலமாக தமிழர்களுக்கு சலுகைகள் தரப்படக் கூடாது என்பதே நோக்கம்.
எனவே, அவர்களை இடதுசாரிப் புரட்சியாளர்கள் என்று சொல்ல முடியாது. இரண்டு தடவை நடந்த அந்தக் கலவரங்களும் நூற்றுக்கணக்கான சிங்கள இளைஞர்களைப் பலிவாங்கி அடக்கப்பட்டது. அதன் பிறகு, ஜே.வி.பி. இலங்கை அரசியலில் முக்கிய இனவாத இயக்கமாக வளர்ந்தது.
இன்று இவர்கள் ராஜபக்சவின் சலுகைகளுக்காக அவரது கூட்டணியில் கும்பிடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த இரண்டு கலகங்களும் அந்த நாட்டைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்குப் பிரச்னையே தவிர, வர்க்கப் போராட்டம் அல்ல.
சிங்கள இளைஞர்கள் மீது இத்தகைய கொடும் தாக்குதல் தொடர்ந்து நடந்ததா? ஆனால் கடந்த 40 ஆண்டுகளில்தானே ஓர் இனம் மொத்தமாக கருவறுக்கப்பட்டது. இரண்டையும் எப்படிப் பொதுமைப்படுத்த முடியும்?
விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு சிங்கள மனித உரிமையாளர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் தமிழர் துன்பங்களை உணர்ந்தனர். அவர்களைச் சிங்கள பேரினவாத அரசு விட்டுவைக்கவில்லை. லசந்த விக்கிரமசிங்கே மாதிரியான பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
சுனந்த போன்ற சில பத்திரிகையாளர்கள் நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டனர். தமிழர்களுக்கு ஆதரவான எண்ணம் துளிகூட வந்துவிடக் கூடாது என்ற சிங்களப் பேரினவாதத்தின் இரக்கமற்ற தன்மையை காட்டுகிறது என்றுதான் இதைப் பார்க்கவேண்டுமே தவிர, தமிழர்களைப் போல சிங்களர்களும் சிதைக்கப்பட்டனர் என்று சொல்வது மழுப்பல்.
ஒடுக்கும் நாட்டின் தொழிலாளர்களையும் ஒடுக்கப்படும் நாட்டின் தொழிலாளர்களையும் பிரித்துப் பார்க்க வேண்டும் என்பதுதான் மார்க்சியப் பாலபாடம். இரண்டு தரப்புத் தொழிலாளர்களையும் எப்படிப் பார்க்க வேண்டும்? இரண்டும் ஒன்றாக வா இருக்கின்றன?’ என்று தனக்குத்தானே கேள்வி கேட்டுக்கொண்ட லெனின், ''இல்லை; இவை இரண்டும் ஒன்றே அல்ல'' என்றும் சொன்னார்.
ஒடுக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களையும் பெருந்திரள் மக்களையும் சூறையாடுகின்ற சொந்த நாட்டு முதலாளி வகுப்பினரின் கூட்டாளியாகவே, ஒடுக்குகின்ற நாட்டைச் சேர்ந்த தொழிலாளிகள் ஓரளவுக்கு இருக்கின்றனர்.
ஒடுக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுடன் ஒப்பிடும்போது, அரசியல் வாழ்க்கையில் பல்வேறு துறைகளில் மேலுரிமையைப் பெற்றிருக்கிற ஒரு நிலையைக்கொண்டிருப்பதே அந்த வேற்றுமை'' என்று லெனின் எழுதியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கொள்கைவாதிகள் படிக்க மறந்தார்களா? படித்ததை மறுக்கிறார்களா?
தமிழர் படுகொலையின் வீரியத்தைக் குறைக்கும் உத்தியாகவே, 'சிங்களர்களும் பாதிக்கப்படுகிறார்கள்’ என்ற சமாளிப்பைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. இதில் மட்டுமல்ல, பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொலை குறித்த நிலைப்பாட்டிலும் இது தெரிகிறது.
தமிழர்கள் குருதியில் மூழ்கடிக்கப்பட்ட அந்த நாட்களில் இழைக்கப்பட்ட அநீதிகள், பறிக்கப்பட்ட மனித உயிர்கள் குறித்து வெளிவரும் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் மனித இதயம் படைத்த யாரையும் நடுங்கவைப்பதாக உள்ளன.
அதில் ஒன்றுதான் எல்.டி.டி.இ. தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான படங்களாகும்'' என்று தலையங்கம் தீட்டிய 'தீக்கதிர்’, உடனே அந்தப் பக்கம் திரும்பி, ''ஆனால் இந்தப் படம் போலியானது என்று இலங்கை கூறுகிறது'' என்கிறது (9.3.2013).
அது போலியானது என்று இலங்கை அரசு சொல்லட்டும். அப்படித்தான் சொல்லும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதை உண்மையான படம் என்கிறதா? போலி என்கிறதா?
மதுரை லீலாவதி கொலை பற்றி எழுதும் போதும் போராடும் போதும்... அரிவாள் எடுத்த ரௌடிகளின் மறுப்பு வாக்குமூலங்களைச் சேர்த்துச் சொல்வார்களா? மேற்கு வங்க இந்திய மாணவர் சங்கத் தலைவர் மரணம் தொடர்பாக மம்தா செய்த சமாளிப்பை, தலையங்கத்தில் சேர்ப்பார்களா? சேர்த்தாலும் மம்தா எத்தகைய பொய் சொல்கிறார் என்பதை நிரூபிக்க முயற்சிக்க மாட்டார்களா? அந்தத் துடிப்பு, ஈழத் தமிழர் பிரச்னையில் மட்டும் இல்லாமல்போகிறதே?
தமிழ்நாட்டு மாணவர்கள் அதிசயமாக, தெருவுக்கு வந்தனர். அந்தப் போராட்டம்தான் மத்திய அரசிடமும் கருணாநிதியிடமும் தவிர்க்க இயலாத சூழ்நிலையில் மனமாற்றத்தை ஏற்படுத்தியது. இதில் குறிப்பிட வேண்டிய செய்தி...
அனைத்து அரசியல் கட்சிகளும், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதையே வழிமொழிந்துகொண்டிருந்தபோது, இந்த மாணவர் அமைப்புகள்தான் மாறுபட்டு, 'உலகம் முழுக்க மனித உரிமை மீறல்களைச் செய்துகொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு இந்த தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கு எந்த யோக்கியதையும் இல்லை.
அமெரிக்கத் தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை’ என்று பகிரங்கமாக அறிவித்தனர். அமெரிக்க எதிர்ப்பில் (மட்டும்!) தீவிரமாக இருக்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடும் இதுதானே? அவர்கள் இந்தப் போராட்டத்தை ஆதரித்து வளர்த்தெடுத்திருக்க வேண்டும்.
இப்போது தேர்வுகள் நெருங்கிக் கொண்டுள்ளதால் மாணவர்கள் போராட்டங்களை விலக்கிக்கொண்டு கல்வி நிலையங்களை அமைதியான முறையில் நடக்க முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்’ - இப்படிப் பேசியது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அல்ல. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. கே.பாலகிருஷ்ணன்தான் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இப்படி பேசினார்.
மாணவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்’ என்று அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை விடுத்தார். மேற்கு வங்க மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டதை ஒட்டி, இந்தியா முழுக்க மாணவர் புரட்சி நடப்பதாகக் குதூகலிப்பதும்... தமிழகத்தில் 17 நாட்கள் அனைத்துக் கல்லூரிகளும் செயல்படாத நிலை ஏற்பட்டதை உணர மறுத்து, 'படிப்பு முக்கியம்’ என்றதும், தமிழர் பிரச்சினைக்கு ஒரு சிந்தனை... மேற்கு வங்கத்துக்கு மறுசிந்தனை அல்லாமல் வேறு என்ன?
இந்த இரட்டை அளவுகோல் தானே ஈழத் தமிழர் தீர்விலும் எதிரொலிக்கிறது. பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்துப் புரிந்துவரும் அட்டூழியத்தைக் கண்டிப்ப வர்களுக்கு சிங்களப் பேரினவாதத்தின் கூரிய நகம் கண்ணுக்குத் தெரியாமல் போவதால்தானே, தமிழர் நிம்மதியைவிட சிங்களர் நிலம் துண்டாடப்படக் கூடாது என்ற அக்கறையே அதிகம் இருக்கிறது.
சமீபத்தில் ஒரு கார்ட்டூன் வெளியானது. 'தனி ஈழத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா ஒரு தீர்மானம் கொண்டுவந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதை ஏற்க மறுத்து வெளிநடப்பு செய்தது.
இது ராஜபக்ச மகிழ்ச்சி அடையும் முடிவு என்று கிண்டலடிக்கிறது அந்தக் கார்ட்டூன். ராஜபக்ஷேவின் இரு புறத்திலும் நின்று பிரகாஷ் காரத்தும் ஜி.ராமகிருஷ்ணனும் டான்ஸ் ஆடுவதுபோல வரையப்பட்டு இருந்தது. 'இது கேலிச்சித்திரம் அல்ல, கேலிக்கூத்து’ என்று அந்தக் கட்சியின் எம்.பி.யான டி.கே.ரங்கராஜன் எழுதி இருக்கிறார்.
கார்ட்டூன் பார்த்துக் கோப்படுகிறார் தோழர் டி.கே.ஆர். ஆனால், கம்யூனிஸ்ட் மூலவரான லெனினே அப்படித்தான் சொல்கிறார்.
ஒடுக்கப்பட்டுள்ள தேசிய இனங்களின் பூர்ஷ்வா தேசியவாதத்துக்கு உதவி விடுவோமோ என்ற அச்சத்தால் சில ஆட்கள், ஒடுக்கும் தேசிய இனத்தின் பூர்ஷ்வா தேசியவாதத்துக்கு உதவிவிடுகிறார்கள்’ என்பது லெனின் வாதம்.
ஆசான் சொன்னதும் கேலிக்கூத்தா?
- தொடரும்
Geen opmerkingen:
Een reactie posten