[ வெள்ளிக்கிழமை, 01 யூன் 2012, 09:03.41 PM GMT ]
யாழ் குடாவில் இந்திய இராணுவத்தின் படை நடவடிக்கைகளை வேகப்படுத்துவதற்கென்று ஐந்து முக்கிய இராணுவ அதிகாரிகள் தமது படையணிகளுடன் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
இதுபற்றி இத்தொடரின் 21வது பாகத்தில் ஆராய்ந்திருந்தோம்.
இதில் பிரிகேடியர் மஜித் சிங் தலைமையிலான 41வது காலாட் படைப்பிரிவிற்கு யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டிருந்த பின்னடைவு பற்றியும் அந்தப் படைப்பிரிவு மேற்கொண்ட படுகொலைகள் பற்றியும் ஆராய்வது பொருத்தமாக இருக்கும்.
யாழ் குடாவைக் கைப்பற்றுவதில் இந்தியப் படையினருக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை நிவர்த்தி செய்யும் நோக்குடன் இந்திய இராணுவத்தில் முன்னணி வகித்த ஐந்து உயரதிகாரிகள் அவசர அவசரமாக இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுடன் அவர்களது பிரத்தியோகப் படை அணிகளும் இலங்கையில் வந்திறங்கின.
பிரிகேடியர் மஜித் சிங் தலைமையிலான 41வது காலாட் படைப்பிரிவும் யாழ் குடாவில் வந்திறங்கியது. இந்தப் படைப்பிரிவு ஏற்கனவே களத்தில் இருந்த இந்தியப் படையின் 72வது காலாட் படைப்பிரிவுடன் இணைக்கப்பட்டது. யாழ்பாணத்தின் வடகிழக்கு திசையில் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட இந்த படைப்பிரிவுகளுக்கு பிரிகேடியர் மஜித் சிங் நேரடியாகவே தலைமை தாங்கினார்.
கவச வாகனம் ஒன்றினுள் பாதுகாப்பாக அமர்ந்து கொண்டு களமுனைகளில் படை நடவடிக்கைகளை இவர் நெறிப்படுத்தி வந்தார்.
கடந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டது போன்று கள முனைகளில் பல்வேறு தர்மசங்கட நிலைகள் இந்தியப் படையினருக்குத் தோன்றியிருந்தன. ஏற்கனவே களத்தில் இருந்த 72வது படைப்பிரிவு புதிதாக வந்திறங்கிய 41வது பிரிவுடன் இணைக்கப்பட்டது மட்டுமல்லாது புதிதாக வந்திறங்கிய 41வது படைப்பிரிவின் தளபதியான பிரிகேடியர் மஜித் இனது தலைமையின் கீழ் செயற்படவும் நிர்ப்பந்திக்கப்பட்டது. இது இந்தியப் படையணியினரிடையே பலத்த குழப்ப நிலையைத் தோற்றுவித்திருந்தது.
பல சிக்கல்கள் ஏற்பட்டன. சில சந்தர்ப்பங்களில் இரண்டாம் மட்டத் தளபதிகள் பிரிகேடியர் மஜித்தின் கட்டளைகளை ஏற்பதற்கு நேரடியாகவே எதிர்ப்பைவெளிப்படுத்தியிருந்தார்கள். யாழ் கள நிலவரத்தைப் புரிந்துகொள்ளாது பிரிகேடியர் மஜித் இடும் கட்டளைகள் இந்திய ஜவான்களின் உயிர்களை அநியாயமாகவே காவுகொண்டுவிடும் என்றே அவர்கள் நினைத்தார்கள். பயப்பட்டார்கள்.
புதிதாக களம் இறங்கியிருந்த பிரிகேடியர் மஜித்திற்கு கெரில்லாத் தாக்குதல்களில் புலிகள் எந்த அளவிற்கு முன்னேற்றகரமானவர்கள் என்பது பற்றி எந்தவித அறிவும் இருக்கவில்லை. சகட்டுமேனிக்கு உத்தரவுகளாக இட்டுத்தள்ளிக்கொண்டு இருந்தார்.
கடந்த சில நாட்களாக களத்தில் இருந்து புலிகளின் புதிய தாக்குதல் முறைகளினால் திகைப்படைந்திருந்த இந்திய ஜவான்களுக்கு அது முட்டாள்தனமாகவேபட்டது. பிரிகேடியர் உத்தரவுப்படி முன்னேறுவது என்பது நிச்சயம் தம்மை கொலைக்களத்திற்கு கொண்டு செல்லும் ஒரு செயல் என்றே நினைத்தார்கள். உத்தரவிற்கு கீழ்ப்படிய மறுத்தார்கள். சில சதி வேலைகளிலும் இறங்கினார்கள். கண்டபடி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு எதிரில் புலிகள் வந்ததாகத் தெரிவித்தார்கள். பொதுமக்கள் மீது தமது இயலாமையை வெளிப்படுத்தினார்கள்.
இந்திய ஜவான்களின் உண்மை நிலையைப் புரிந்துகொண்ட இரண்டாம் மட்டத்தளபதிகள் பிரிகேடியரிடம் நிலமையை விளக்க முயன்றார்கள். நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டிய களநிலை யதார்த்தத்தை எடுத்துரைத்தார்கள். ஆனால் எதனையும் கேட்கும் நிலையில் பிரிகேடியர் இருக்கவில்லை. இந்தியப் படையினரின் விஷேட நடவடிக்கைக்குத் தலைமைதாங்க இந்திய இராணுவ மட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட முக்கிய ஐந்து அதிகாரிகளுள் தானும் ஒருவராகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பதையிட்டு மிகவும் பெருமைப்பட்ட அந்த உயரதிகாரி தன்மீது இந்திய இராணுவத் தலைமையும் இந்திய அரசியல் தலைமையும் வைத்திருந்த நம்பிக்கையைச் சிதறடிக்க விரும்பவில்லை. எப்படியாவது தனது துணிவைக் களமுனையில் நிரூபித்து பெயர்வாங்கிவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
உத்தரவுகளை பிறப்பித்துக்கொண்டே சென்றார். தனது உத்தரவுகளை சரியானமுறையில் கடைப்பிடிக்காத சில இராணுவ உத்தியோகத்தர்களைப் பதவி நீக்கம் செய்துவிடவும் அவர்
தயங்கவில்லை. அவரின் கீழ் பணியாற்றிய பிரிகேட் மேஜர் (Brigade Major), மற்றும் சமிஞைகளுக்குப் பொறுப்பான அதிகாரி (Signals officer) போன்றவர்களும் இவரால் பதிவி நீக்கம் செய்யப்பட்டார்கள்.
இறுக்கமாக உத்தரவுகளுடன் அவர் படை நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். பல வெற்றிகளைக் கண்டார். அவரின் கீழ் இருந்த படையணிகள் வேகமான பல முன்னேற்றங்களைக் கண்டன.
யாழ் படைநடிவடிக்கைகளில் இவர் வெளிப்படுத்தியிருந்த வீரத்தையும், திறமையையும் கருத்தில் கொண்டு பின்நாளில் இவருக்கு வெற்றிகரமான இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படுகின்ற உயர் இராணுவ விருதான மகா வீர சக்ரா (Maha Vir Chakra -MVC) விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
வெற்றியின் பின்னால்:
ஆனாலும் இவரது வெற்றியின் பின்னால் கவனிக்கப்படாத வேறு பல செய்திகளும் காணப்படவே செய்தன.
பிரிகேடியர் மஜித் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது அவரின் கீழ் செயற்பட்ட படைஅணியைச் சேர்ந்த 272 இந்திய ஜவான்கள் கொல்லப்பட்டு அல்லது மோசமாகக் காயம் அடைந்து யுத்தக்களத்தில் இருந்து அகற்றப்பட்டிருந்தார்கள்.
இது அவரின் கீழ் செயற்பட்ட மொத்தப் படையினரில் 17 வீதம் என்று கூறப்படுகின்றது. அடுத்ததாக யாழ்குடாவில் இந்தியப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட பல மனிதப் படுகொலைகள் உட்பட வேறு பல மனித அழிவுகளிலும் இவரது கட்டளையின் கீழ் செயற்பட்ட படையினரே சம்பந்தப்பட்டிருந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
புலிகளின் அறிவிப்பு
இவை ஒரு புறம் இருக்க, அக்டோபர் 24ம் திகதி விடுதலைப் புலிகள் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள்.
இந்தியப் படையினரின் மோசமான தாக்குதல்களில் 900 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 451 பொதுமக்கள் மிக மோசமாக் காயமடைந்துள்ளதாகவும்ää 144 பாலியல் வல்லுறவுச்
சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியிருந்தார்கள்.
இந்தியப் படையினர் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பாவிப்பதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியிருந்தார்கள்.
பிரச்சார ரீதியாக புலிகளின் குற்றச்சாட்டுக்கள் இந்தியாவை ஒரு வகையில் பாதித்திருந்தாலும் தனது நடவடிக்கைகளின் வீச்சைக் குறைப்பதற்கு இந்தியத் தலைமை சிறிதும் விரும்பவில்லை.
இழப்புக்களைப் பற்றிக் கவலைப்படவேண்டாம் புலிகளை அழித்தொழித்து யாழ் குடாவைப் பூரண கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவாருங்கள்|| - என்று புதுடில்லியில் இருந்து கண்டிப்பான உத்தரவுகள் இந்தியக் களமுனைத் தளபதிகளுக்கு பறந்தன.
யாழ் ரயில் நிலைய தாக்குதல்:
இந்தியப் படையினர் யாழ்பாணத்தில் மேற்கொண்ட மனித படுகொலைகளுள் யாழ் ரயில் நிலையத்தில் தங்கியிருந்த அகதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலும் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தன.
இந்தச் சம்பவம் அக்டோபர் மாதம் 22ம் திகதி இடம்பெற்றது.
யாழ்பாணத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட செல்வீச்சுக்கள் சுற்றிவழைப்புக்கள் என்பனவற்றால் வீடுகள் பாதுகாப்பான ஒரு இடமாக மக்களுக்கு தென்படவில்லை. வீடுகளில் தங்கியிருந்த மக்களுக்கு இந்தியப் படையினர் இழைத்த அநீதிகள் பற்றி யாழ்மக்கள் மத்தியில் செய்திகள் பரவியிருந்தன. அதனால் வீடுகளில் தங்கியிருக்க மக்கள் பெரிதும் பயந்தார்கள்.
அதேவேளை கோயில் மற்றும் பாடசாலை அகதி முகாம்களும் ஜனவெள்ளத்தால் நிறைந்து வழிந்துகொண்டிருந்தன. பலர் தங்குவதற்கு ஓரளவு வசதியாகத் தென்பட்ட அதேவேளை மறைவாகவும் இல்லாத இடங்களையெல்லாம் பாதுகாப்பு மையங்களாகக் கருதி அங்கு தஞ்சமடைய ஆரம்பித்திருந்தார்கள்.
யாழ் புகையிரத நிலையத்திலும் பெருமளவு மக்கள் தஞ்சமடைந்து இருந்தார்கள். ஆரம்பத்தில் புகையிரத குடிமனையில் தங்கியிருந்த புகையிரத நிலைய ஊழியர்களின் குடும்பங்கள்தான் புகையிரத நிலையத்தில் ஒன்று கூடித் தங்கியிருந்தார்கள்.
பின்னர் படிப்படியாக பல குடும்பங்கள் சேர்ந்து நூற்றுக்கணக்காணவர்களைக் கொண்ட ஒரு அகதி முகாமாகவே யாழ் புகையிரத நிலையம் மாறியிருந்தது. அப்பிரதேசத்தில் இருந்த பெரிய கட்டிடம் என்பதாலும் அது மறைப்பில்லாத கட்டிடம் என்பதாலும் முன்னேறி வரும் இந்தியப் படையினருக்கு அது அகதிகள் தங்கியிருக்கும் ஒரு இடம் என்பது இலகுவாக விளங்கிவிடும். எனவே ஆபத்தில்லை என்று அங்கு வந்து தங்கியிருந்த மக்கள் நினைத்திருந்தார்கள்.
அத்தோடு புகையிரத நிலைய மேடைகளின் இடைநடுவே அமைந்திருந்த சுரங்கப் பாதை ஆபத்திற்கு பாதுகாப்புத் தேடிக்கொள்ள சிறந்த இடம் என்பதால் பலர் புகையிரத நிலையத்தை நல்லதொரு பாதுகாப்பு புகழிடமாகத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். அத்தோடு புகையிரத நிலையம் யாழ் பிரதான பாதைகளில் இருந்து சற்றுத் தள்ளி ஒதுக்குப் புறமாகவே இருந்ததால் அந்தப் பக்கம் இந்தியப் படையினர் வருவதற்குச் சந்தர்ப்பம் இல்லை என்றே அங்கு தங்கியிருந்த சுமார் 600 இற்கும் மேற்பட்ட அகதிகள் நம்பிக்கொண்டிருந்தார்கள்.
ஆனால் இந்தியப் படையினர் இரயில்; தண்டவாளங்கள் வழியாகவே முன்னேறிக்கொண்டிருந்தது பாவம் அவர்களுக்கு தெரியாது. வீதிகளில் விடுதலைப் புலிகள் கண்ணிவெடிகளைப் புதைத்துவைத்துக்கொண்டு பதுங்கிருப்பதால் வீதிகளைத் தவிர்த்து இந்தியப் படையினர் கூடிய வரையில் புகையிரத பாதைகளையே உபயோகிக்க ஆரம்பித்திருந்தார்கள்.
புலிகளுக்குத் தெரியும்:
ஆனால் இந்தியப்; படையினர் இரயில் பாதைவழியாக முன்னேறிக்கொண்டிருந்த விடயம் புலிகளுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. அவர்கள் தொலைத்தொடர்புக் கருவிகள் இந்தியப் படையினரின் நகர்வுகள் பற்றிய விபரங்களை ஒலித்தபடியே இருந்தன.
ஏற்கனவே காங்கேசன்துறையில் இருந்து இரயில் பாதை வழியாகப் பயணம் செய்த இந்தியப்படையினர் கொக்குவில் பிரதேசத்தில் புலிகளினால் சுற்றிவழைக்கப்பட்டிருந்த பராக் கெமாண்டோக்களை மீட்டுக்கொண்டு சென்றதை அறிந்த புலிகள் இரயில் பாதைகளிலும் ஒரு கண்ணை வைத்திருந்தார்கள். இந்தியப் படையினர் தமது முன்னேற்றத்திற்கு இரயில் பாதைகளை நிச்சயம் பயன்படுத்தியே தீருவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
புலிகளின் தாக்குதல்:
காங்கேசன் துறை பகுதியில் இருந்து முன்னேறிக்கொண்டிருந்த இந்தியப் படையினர் யாழ் புகையிரத நிலையத்தை நெருங்கும் போது புலிகளின் கண்ணிவெடித்தாக்குதலுக்கு
உள்ளானார்கள். கண்ணிவெடித்தாக்குதலில் அகப்பட்டு தடுமாறிய இந்தியப் படையினர் மீது அங்கு பதுங்கியிருந்த புலிகள் கடுமையான தாக்குதலை மேற்கொண்டார்கள். இந்தச் சம்பவத்தில் பல இந்தியப் படையினர் கொல்லபட்டார்கள்.
சிறிது நேரம் சண்டை செய்து இந்தியப் படையினருக்கு இழப்புக்களை ஏற்படுத்திவிட்டு புலிகள் பின்வாங்கிச் சென்றுவிட்டார்கள்.
இப்பொழுது இந்தியப் படையினரின் கோபம் பொதுமக்கள் மீது திரும்பியது. சகட்டுமேனிக்குச் சுட்டுக்கொண்டு யாழ் புகையிரத நிலையம் இருந்த பிரதேசத்தை நோக்கி நகர ஆரம்பித்தார்கள்.
பெருமளவு மக்கள் தங்கியிருந்த யாழ் புகையிரத நிலையம் அவர்களது கண்களில் பட்டது. அவர்கள் சுமந்து வந்த 2 மி.மீ. மோட்டார்களை நிலத்தில் நிறுத்தி முதலில் செல் தாக்குதல்களை மேற்கொண்டார்கள்.
அவர்கள் ஏவிய முதலாவது செல் சரியாக புகையிரத நிலையத்திலேயே விழுந்து வெடித்தது. ஒரு தாயும் மகளும் உடல் சிதறி அந்த இடத்திலேயே பலியானார்கள்.
தொடர்ந்து ஏவப்பட்ட செல்கள் புகையிரத நிலையத்திற்கு அருகில் இருந்த வீடுகள் தெருக்கள் என்று பல இடங்களிலும் விழுந்து வெடித்தன. புகையிரத நிலையத்தில் தஞ்சமடைந்திருந்த மக்கள் அல்லோல்ல கல்லோல்லப்பட்டார்கள். என்னசெய்வதென்று புரியாமல் திகைத்தார்கள்.
புகையிரத நிலையத்திற்கு அருகில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழிகளுக்குள் சிலர் சென்று பதுங்கிக்கொண்டார்கள். சிலர் பாதுகாப்பான வேறு இடங்களுக்குச் சென்று அடைக்கலம் தேடிக்கொண்டார்கள். யாழ் ரயில் நிலையத்தில் இரண்டாவது புகையிரதம் நிறுத்தும் மேடைக்குச் செல்லுவதற்காக நிலத்தடி சுரங்கப்பாதை ஒன்று இருந்தது. பலர் அந்தச் சுரங்கப்பாதையினுள் சென்று தம்மைக் காப்பாற்றிக்கொண்டார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் பலர் அங்கேயே தங்கிவிட்டார்கள். இந்தியப் படையினரின் கைகளில் அகப்பட்டு மடிந்தவர்கள் இவர்கள்தான்.
சுட்டுக்கொண்டே புகையிரத நிலையத்திற்குள் வந்த இந்தியப்படையினர் பொதுமக்களைக் கண்டும் கூட சுடுவதை நிறுத்தவில்லை. நின்றவர்கள் படுத்துக்கிடந்தவர்கள் ஓடியவர்கள் முழங்கால் படியிட்டு இறைவனை வழிபட்டவர்கள் தங்களுக்கு உயிர்ப் பிச்சை வழங்கும்படி இந்திய வீரர்களிடம் மன்றாடியவர்கள்.... - அனைவர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள்.
இந்தச் சம்பவத்தில் சுமார் 50 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
தொடரும்...
nirajdavid@bluewin.ch
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-1
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம் 2
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-3
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-4
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-5
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-6
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-7
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-8
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-9
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-10
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-11
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-12
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-13
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-14
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-15
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-16
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-17
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-18
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-19
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-20
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-21
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-22
அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-23
Geen opmerkingen:
Een reactie posten