இலங்கை தொடர்பான விடயத்தில் இனிமேல் இறுக்கிப் பிடிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை தயாராகி வருகின்றது என்பது ஐ.நாவின் முகவர் அமைப்புக்கள் மேற்கொண்டு வரும் அண்மைக்கால செயற்பாடுகளிலிருந்து தெட்டத் தெளிவாகிறது.
இலங்கையுடன் முட்டி மோதி அதனை ஒரு கை பார்ப்பதற்கு ஐ.நா. முகவர் அமைப்புக்கள் ஐ.நா. சபையுடன் இணைந்து இப்போது பல்வேறு திட்டங்களையும் முன்னெடுத்து வருவது இலங்கை அரசுக்கும் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.
இதுவரை காலமும் இலங்கையை விட்டுப் பிடித்து வந்தது ஐ.நா. இலங்கையின் இன நல்லிணக்கத்தையும் அமைதியையும் ஏற்படுத்துவதற்கு பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுக்குமாறும் இறுதிப் போரில் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுமாறும் ஐ.நா. இலங்கைக்கு ஆலோசனை தெரிவித்ததுடன் அதற்கான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தான் தயாராக இருப்பதாகவும் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்தது.
ஐ.நாவின் இந்தத் தன்மை வழமையான ஆலோசனைகள் இலங்கை அரசுக்கு "செவிடன் காதில் ஊதிய சங்கு" போலவே இருந்து வந்தன. ஐ.நா.வின் இந்த ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் இலங்கை தொடர்ந்து தட்டிக்கழித்து வந்ததுடன் புறம் தள்ளியும் வைத்தது.
பயங்கரவாதத்தை உள்நாட்டில் தோற்கடித்தது போல இனப்பிரச்சினைக்கான தீர்வையும் நாங்கள் உள்நாட்டிலேயே காண்போம். அதற்கு வெளிநாடுகளினதும் வெளிநாட்டு நிறுவனங்களினதும் ஆலோசனைகள், ஒத்துழைப்புக்கள் எமக்குத் தேவையே இல்லை எனப் பகிரங்கமாகத் தெரிவித்து வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஐ.நா.வின் கோரிக்கைகளையும் கவனத்தில் கொள்ளாமல் தான்தோன்றித்தனமாகச் செயற்பட்டு வந்தார்.
இலங்கை அரசின் இந்தச் செயற்பாடு ஐ.நா.வையும் அதன் முகவர் அமைப்புக்களையும் பெரும் சினத்துக்குள் தள்ளியது. இதனால் இலங்கைக்கு ஒரு நாணயக் கயிற்றை கட்டுவதற்குத் தயாராகியது ஐ.நா. அந்த நாணயக் கயிற்றை கட்டும் பொறுப்பு அமெரிக்காவிடம் வழங்கப்பட்டது.
தனக்கு வழங்கப்பட்ட பணியைத் தோல்வியின்றிச் செய்து முடிப்பதுதானே அமெரிக்காவின் இராஜதந்திரம். அதனை அது செவ்வனவே செய்தது. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 19 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை மீதான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி இலங்கை அரசுக்கு ஒரு நாணயக் கயிற்றை இட்டது அமெரிக்கா.
இந்த நாணயக் கயிற்றுக்கும் இலங்கை அடங்காவிட்டால் வேறு வழிகளில் அதனை அடக்குவதற்கும் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் தீர்மானித்திருந்தன. இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை மீது மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் இலங்கை தொடர்ந்து அசமந்தப் போக்கைக் காட்டி வந்தமை ஐ.நா. வட்டாரங்களை மேலும் வெறுப்பேற்றி விட்டிருக்கிறது.
தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல், அதற்குத் தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளுதல் ஆகிய முக்கிய விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசு தொடர்ந்தும் இழுத்தடித்து காலம் தாழ்த்தி பூச்சாண்டி காட்டி வந்தமை ஐ.நா. வட்டாரங்கள் சினம் அடைய மிக முக்கிய காரணிகளாக அமைந்தன.
இலங்கையின் இந்த சித்து விளையாட்டை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்ற நிலையில் இலங்கையுடன் நேருக்கு நேரே மோதி அதனை ஒரு வழிக்குக் கொண்டுவர இப்போது ஐ.நா. தயாராகிவிட்டது. அண்மைய நாள்களாக வெளிவரும் செய்திகள் இதனை நன்கு வெளிப்படுத்துகின்றன.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இதற்காக நேரடியாகக் களத்தில் இறங்கியிருக்கிறார். இரண்டாவது தடவையாகவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக எதிர்ப்புக்கள் எதுவுமின்றி அண்மையில் பதவியேற்றுக் கொண்ட அவர் இலங்கை விடயத்தில் இந்தப் பதவிக்காலத்தில் மேலும் கடும் போக்குடன் நடந்துகொள்ள தீர்மானித்திருக்கின்றமை அவரது கருத்துக்களிலிருந்து தெளிவாகிறது.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 20 ஆவது மீளாய்வுக் கூட்டத்தொடர் இப்போது ஜெனிவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தொடர்ந்து ஒரு மாதம் இந்தக் கூட்டத் தொடர் நடக்கும். கூட்டத்தொடரின் தொடக்க உரையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை குறித்து எந்தவொரு விடயத்தையும் தெரிவித்திருக்கவில்லை.
இலங்கை பற்றி அவர் எதுவும் கூறாமையால் நிம்மதி அடைந்திருந்தது இலங்கை அரசு. தப்பிப் பிழைத்து விட்டோம் என்று பெரும்மூச்சு விட்டிருந்தது. ஆயினும் அந்தப் பெரும் மூச்சு அடுத்த நாளே கலைந்துவிட்டது.
போருக்குப் பின்னரான இலங்கையின் நிலை பற்றி நேரில் அறிந்து கொள்வதற்காக இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக நவநீதம்பிள்ளை அறிவித்திருந்தார். தனது பயணத்துக்கு முன்னர் அதற்கான ஆயத்தங்களையும் நிலைமைகளையும் அவதானிப்பதற்காக ஐ.நா. உண்மைகளைக் கண்டறியும் குழு ஒன்றையும் இலங்கைக்கு அனுப்ப அவர் திட்டமிட்டிருந்தார். இதற்கு இலங்கை அரசிடம் அனுமதியும் கோரியிருந்தார்.
ஆணையாளரின் வருகையையும் உண்மையைக் கண்டறியும் குழுவின் பயணத்தையும் அடியோடு நிராகரித்தது இலங்கை. இலங்கையிலுள்ள பேரினவாதக் கட்சிகள் இந்த இரண்டு குழுக்களின் பயணத்துக்கும் எதிராகக் கூச்சல் போடத் தொடங்கின. இவர்களை நாட்டுக்கு வரவிட்டால் பேராபத்து ஏற்படும் என்று முழங்கத் தொடங்கின. இலங்கை அரசும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தத் தொடங்கிவிட்டோம்.
ஆகவே இந்தப் பயணங்கள் இப்போது தேவையில்லை எனப் பல்லவி பாடியது. இதனால் ஆணையாளரினதும் உண்மையைக் கண்டறியும் குழுவினரதும் இலங்கைப் பயணங்கள் சிக்கலுக்குள்ளாகின. இது ஐ.நா.வுக்கு இலங்கை மீதான அதிருப்தியை மேலும் அதிகரித்தது. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இறங்கினார் நவநீதம்பிள்ளை.
ஐ.நா. உண்மையைக் கண்டறியும் குழுவையும் தன்னையும் இலங்கைக்கு பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டால் அதற்கு எதிராக இலங்கைக்குப் பதிலடி கொடுப்பதற்கு இரண்டு விடயங்களை அவர் திட்டமிட்டிருந்தார். அதில் முதலாவதாக இலங்கை அரசுக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விவகாரத்தை ஹேக்கில் அமைந்துள்ள சர்வதேச யுத்தக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்னால் கொண்டு செல்வதற்கு அவர் எண்ணியிருந்தார்.
அப்படியில்லாவிட்டால் அடுத்த ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வில் இலங்கை மீது மேலுமொரு தீர்மானத்தைக் கொண்டு வந்து அதன் மூலம் இலங்கைக்கு கட்டுப் போடவும் அவர் காத்திருந்தார். இந்த இரு விடயங்களும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்தன. நவநீதம்பிள்ளை இந்த இரு விடயங்களையும் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறார் என்ற செய்தி வெளியானதுதான் தாமதம் ஐ.நா.வின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்து விட்டது இலங்கை.
நவநீதம்பிள்ளை திட்டமிட்டிருக்கும் இந்த இரண்டு விடயங்களும் நடைபெற்றால் அது சர்வதேச ரீதியில் அரசுக்குப் பல ஆபத்தான நிலைமைகளை ஏற்படுத்தும் என்பதுடன் அரசு குற்றவாளிக் கூண்டில் ஏற வேண்டிய நிலையும் ஏற்படும் என்பதை நன்கு புரிந்துகொண்ட இலங்கை ஐ.நா. ஆணையாளர் நவநீதம்பிள்ளையை இலங்கைக்குப் பயணம் செய்யுமாறு உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்தது.
ஜெனிவாவில் உள்ள இலங்கை அரசின் பிரதிநிதிகள் இந்த அழைப்பை விடுத்துள்ளனர். அத்துடன் ஐ.நா.வின் உண்மையைக் கண்டறியும் குழுவையும் நாட்டுக்குள் அனுமதிப்பதற்கு இலங்கை அரசு எண்ணியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் நேற்று முன்நாள் ஊடகங்களுக்குத் தகவல்களைக் கசிய விட்டன. தொடர்ந்தும் ஐ.நா.வுடன் முரண்டுபிடித்தால் ஆபத்து தனக்கே என்பதை அறிந்துகொண்ட அரசு இந்தப் பயணங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
இந்த விடயங்கள் மூலம் இலங்கை அரசுடன் நேரடியாக மோதி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐ.நாவும் அதன் முகவர் அமைப்புக்களும் இப்போது திட்டமிட்டிருக்கின்றன என்பது தெரிகிறது. நவநீதம்பிள்ளையின் அறிவிப்பை அடுத்தே இலங்கை அரசு இப்படி இறங்கி வந்திருக்கிறது. இதுவரை காலமும் ஒவ்வொரு சாட்டுப் போக்குகளை கூறி தட்டிக்கழித்து வந்த அரசு இப்போது இந்த இரு விடயங்களிலும் இப்படி அடிபணிந்தமை குறித்து பரபரப்பாகப் பேசப்படுகிறது.
அதேபோன்றே பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் விடயத்திலும் ஐ.நா. இனி இறுக்கிப் பிடிக்கும் என்று ஐ.நா. முகவர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். இதுவரை காலமும் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கி வந்த ஐ.நா. இனிமேல் அதனைச் செய்வதற்குத் தயாரில்லை எனவும் தன்னால் முன்மொழியப்படும் செயற்றிட்டங்களை இலங்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றே அது எதிர்பார்க்கப்படும் எனவும் முகவர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.
ஐ.நா.வின் இந்தப் பயமுறுத்தல் இலங்கை அரசை எவ்வளவு காலத்துக்கு கட்டுப்படுத்தப் போகிறது என்பதை அடுத்துள்ள செயற்பாடுகளை வைத்தே அறிந்து கொள்ள முடியும்.
Geen opmerkingen:
Een reactie posten