தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 8 juni 2012

அமெரிக்க செனட் சபையில் ஒலித்த சிறிலங்கா விவகாரம் !


அமெரிக்காவின் செனட் சபையில் சிறிலங்காவின் விவகாரம் மீண்டும் ஒருதடவை ஒலித்துள்ளது.
பல்வேறு நாடுகளுக்கான புதிய தூதுவர்களின் நியமன அங்கீகாரத்திற்கான செனட் சபை அமர்வின் போது சிறிலங்காவுக்கான புதிய தூதராக துமிசேல் சிஸன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்காவுக்கான தனது நியமனம் தொடர்பில் செனட் சபையில் கருத்து தெரிவித்த துமிசேல் சிஸன் அவர்கள் சிறிலங்கா விவகாரத்தில் மனித உரிமைகளுக்கு முதலிடம் அளிக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை நிலைவரம் தொடர்பில் புதிய தூதுவர் துமிசேல் சிஸன் அவர்கள் அமெரிக்க செனட் சபையில் தெரிவிக்கையில் :
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை மீறியதாக கூறப்படும் கடுமையான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இன்னமும் விசாரணை நடைபெறவில்லை. நல்லிணக்க நடவடிக்கைகள் தாமதமடைகின்றன.
பொறுப்புக்கூறுதல் இன்றி ஒருபோதும் உண்மையான நல்லிணக்கத்தை அடைய முடியாது. சிறிலங்காப் படையினர் பொதுமக்களை இலக்குவைத்து மேற்கொண்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகியுள்ளதாக ஐ.நா. அறிக்கை கூறியுள்ளது.
தமிழ் போராளிகள் சிவிலியன்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
உலகத்திற்கு பெறுபேறு தெரியும்வரை இப்பிரச்சினை தொடர்ந்து காணப்படும். யுத்தக்குற்றம் குறித்து சுயாதீனமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
தான் உருவாக்கிய கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை சிறிலங்கா இன்னமும் அமுல்படுத்தவில்லை எனக் கூறிய அவர், 100,000 தமிழர்கள் மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளதாக சுவிஸ்லாந்தை தளமாகக் கொண்ட சர்வதேச இடம்பெயர்வை அவதானிக்கும் மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் வடக்கு, கிழக்கில் உள்ள இராணுவப் பிரசன்னம் அவர்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக உள்ளது.
குறிப்பாக முன்னாள் யுத்த வலயங்களில் இராணுவக் குறைப்பு மற்றும் வடபகுதியின் மாகாண சபைத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயிப்பது உள்ளிட்டவை தொடர்பில் சிறிலங்காவின் தற்போதைய அறிக்கையை அமெரிக்கா எதிர்பார்கின்றது.
மனித உரிமை விவகாரங்கள், சிவில் சமூகப் பாதுகாப்பு, ஊடக சுதந்திரம் ஆகியன எனது நிகழ்ச்சி நிரலில் முன்னிலையில் இருக்கும்.
இவ்வாறு சிறிலங்காவுக்கான தனது நியமனம் தொடர்பில் செனட் சபையில் புதிய அமெரிக்க தூதரினால் கூறப்பட்டுள்ள கூற்றுக்கள் நிச்சயமாக சிறிலங்காவுக்கு இனிப்பான செய்தியாக இருக்காது என்பது மட்டும் உறுதி.

Geen opmerkingen:

Een reactie posten