தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 2 juni 2012

சட்டத்தை மதிக்காத இலங்கை மீது சர்வதேச விசாரணையை கோருவதே யதார்த்தம்: சர்வதேச மன்னிப்பு சபை




மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களில் இருந்து இலங்கை மீளாமையே, அந்த நாட்டின் மீது போர்குற்றச்சாட்டு விசாரணையை கோருவதற்கான காரணம் என்று சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
தமது அமைப்பு இந்த விசாரணையை கோருவதற்கு இதுவே காரணம் என்று மன்னிப்பு சபையின் இலங்கை விடயங்களுக்கு பொறுப்பான நிபுணர் யோலண்டா போஸ்டர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மனிதஉரிமை மீறல்களுக்கு உரிய நீதி கிடைப்பதில்லை.குற்றங்கள் தொடர்பான நீதிமுறை சீரற்றுள்ளது. இந்தநிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று யோலண்டா சுட்டிக்காட்டியுள்ளார்.

போர் முடிவடைந்து மூன்று ஆண்டுகளில் இலங்கை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருக்க முடியும். எனினும்,  அதனை இலங்கை நிறைவேற்றவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

போரில் முக்கிய பங்கை வகித்த சரத் பொன்சேகா தற்போது விடுதலையாகியுள்ளார். அவரும் போர்க்குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளார்.

இந்தநிலையில், தொடர்ந்தும் சர்வதேச மன்னிப்புசபை, சர்வதேச போர்க்குற்ற விசாரணையை கோருவதில் என்ன அர்த்தம் என்று போஸ்டரிடம் கேட்டபோது,

 இலங்கையில் உள்ளக நீதி விசாரணைகள் செயலிழந்துள்ளன. எனவேதான சர்வதேச விசாரணை கோரப்படுகிறது.

குறிப்பாக இலங்கையின் பொலிஸ் ஆணைக்குழு கூட இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்குவதை போஸ்டர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர் முடிவடைந்தப்பின்னரும் கடந்த சில மாதங்களில் காணாமல் போதல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன. இவையாவும் இலங்கையின் பாதுகாப்பு படையினரும் ஆயுதக்குழுக்களும் மேற்கொள்ளும் செயல்கள் என்று குற்றம் சுமத்தப்படுகின்றன.

உதாரணமாக முன்னிலை சோசலிஸக் கட்சியின் லலித்குமார் மற்றும் குகன் ஆகியோர் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளமை தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படாமையை போஸ்டர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் சர்வதேச விசாரணைகள் அவசியம் என்பதை அவர் கோரியுள்ளார். சரத் பொன்சேகா,  இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் போர்க்குற்றத்தில் ஈடுபட்டார் என்று கூறியமைக்காகவே சிறைவைக்கப்பட்டார். எனினும் அவர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் சரத் பொன்சேகாவின் விடுதலை என்பதைக்காட்டிலும், போரின் போது என்ன நடந்தது என்பதை அறியவேண்டிதே முக்கியமானது என்று யோலண்டா போஸ்டர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அரச நிர்வாகம் உள்ளூரில் நீதியை நிலைநாட்டுவதை விட்டுவிட்டு குறுக்கு வழிகளில் செயற்படுகிறது.

இதற்கு உதாரணமாக அண்மையில், திருகோணமலையில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்றின் பின்னர் பலர் படையினரால் கைதுசெய்யப்பட்ட சம்பவத்தை குறிப்பிடலாம். இதன்போது கைதுசெய்யப்பட்டவர்கள் எங்கு வைக்கப்பட்டிருந்தார்கள் என்று அவர்களின் குடும்பங்களுக்கு தேடக்கூடிய வழியைக்கூட இலங்கையின் படைத்தரப்பு ஏற்படுத்தியிருக்கவில்லை.

எனினும் இந்த சம்பவத்தின் போது கைதுசெய்யப்பட்ட பலர் குற்றச்சாட்டுக்கள் இன்றி விடுவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் நடைமுறையில் உள்ள குற்றவியல் முறைகளுக்கு மதிப்பளிக்காமல் குறுக்கு வழிகளை கையாள்வதை காணமுடிகிறது என்று சர்வதேச மன்னிப்பு சபையின் இலங்கைக்கான நிபுணர் யோலண்டா போஸ்டர் குற்றம் சுமத்தியுள்ளார்.

http://news.lankasri.com/show-RUmqyGTWOWkx2.html

Geen opmerkingen:

Een reactie posten