தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 14 juni 2012

இலங்கைத்தீவில் மீள எழும் தமிழர்களின் உரிமைக் குரல்கள்: வீக்கென்ட லீடர்



இலங்கைத்தீவில் மீள எழும் தமிழர்களின் உரிமைக் குரல்கள்: வீக்கென்ட லீடர்
06 06 12
சிங்கள அரசின் கொடுஞ்செயல்களுக்கு எதிராக போர்க் கொடி ஏந்துபவர்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும், தமிழகத் தமிழர்கள் மட்டுமல்ல, இலங்கைத்தீவில் உள்ள ஈழத் தமிழர்களும் தங்கள் உரிமைக் குரலை உயர்த்த தொடங்கிவிட்டனர் என்பதுதான் என இந்தியாவின் வீக்கென்ட லீடர் ஊடகம் கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த யூன் 1ஆம் நாள் வெளிவந்த குறித்த ஆக்கத்தின் தமிழாக்கம்:

முள்ளிவாய்க்கால் படுகொலை முடிந்து மூன்றாண்டுக்குப் பிறகு, தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்படும் அரசு ஒடுக்குமுறையை மீறி, தமிழீழத் தாயகம் தொடர்ந்து இராணுவமயமாக்கலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலும், ஈழத்தமிழர்கள் தங்களின் உரிமைகளுக்காக உரத்த குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

கடந்த மே மாதம் 27ஆம் திகதி, பல்லாயிரக் கணக்கானோர், இலங்கை இராணுவத்தின் அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல், மன்னார் நகரியத்தில் மாபெரும் கண்டன பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இலங்கையின் தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாத் பையூதீன், இலங்கைப் பாராளுமன்றத்தில், மன்னார் பேராயர அருள்திரு ராயப்பு யோசேப்பு அவர்களை இழிவாக கடிந்து பேசியதைக் கண்டித்து இம்மாபெரும் ஆர்பாட்டம் நடத்தப் பட்டது.

மசூதி ஒன்றை தாக்குவதற்கு புத்த காடையர்களை ஏவி விட்ட தம்புள்ள பொற்கோவிலின் புத்த பிக்குவான வேன் இன்னாமலுவே சுமங்கலா நாயக் தேரோ என்பவரோடு மன்னார் பேராயரை ஒப்பிட்டு இவ்வமைச்சர் பாராளுமனறத்தில் வசைப்பாடியதை கண்டித்து இவ்வார்பாட்டம் நடந்தது.

இக்கூட்டம், முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகு நடந்த கூட்டங்களிலேயே, மிகப்பெரிய கூட்டமாகும். கடந்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட இம்மாபெரும் கூட்டத்திற்கு ஐந்தாயிரம் முதல் ஆறாயிரம் வரை மக்கள் திரண்டதாக பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இக்கூட்டத்தில் பல தமிழ் அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர். தமிழீழ விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி, பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் (வவுனியா தொகுதி), செல்வம் அடைக்கலநாதன் (மன்னார் தொகுதி), வினோ நொஹரதலிங்கம் (வன்னி மாவட்டம்), சுரேஷ் பிரேம சந்திரன் (யாழ்ப்பாணம்) மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும் ப. சூசைநாதன் ஆகியோரும் கண்டனக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தை நடத்தவிடாமல் தடுப்பதற்கு அதிகார வகுப்பினர் தம்மால் இயன்ற அனைத்து தந்திரங்களையும் கையாண்டனர் என்று விஷயம் தெரிந்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இக்கூட்டத்தை முன்னின்று நடத்திய ஐந்து பாதிரிகள் மீது காவல் துறை வகுப்புவாத மோதல் உருவாக்க முயற்சித்தார்கள் என்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்த முயற்சி செய்தார்கள் எனவும் வழக்கு பதிவு செய்துள்ளது.

இவற்றையெல்லாம் மீறி மன்னாரைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரளாக பங்கேற்ற மக்கள், சிங்கள அரச பயங்கரவாத சூழ்ச்சிகளுக்கு தாங்கள் அடிபணிய மாட்டோம் என்பதை தெளிவாகப் பறைசாற்றியுள்ளனர்.

செப்டம்பர் 2008க்குப் பிறகு காணாமல் போன 1,46,679 பொது மக்களின் கணக்கெடுப்பை அம்பலப்படுத்தியதின் விளைவாக மன்னார் மறை மாவட்ட பேராயர் ஆளும் வர்க்கத்தின் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளார்.

மார்ச் திங்கள் 2012ம் ஆண்டு ஜெனீவாவில் நடந்த 19வது ஐ.நா வின் மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசால் அமைக்கப்பட்ட ஆணைக்குழு அறிக்கையை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டுமென மன்னார் மறை மாவட்ட பேராயரும் மற்றும் முப்பது தமிழ் பாதிரிகளும் வற்புறுத்தினர்.

அக்கூட்டத்திலேயே அமைச்சர் மேர்வின் சில்வா உட்பட சில சிங்கள இனவெறியர்கள் பேராயரை 'துரோகி' என்று முத்திரைக் குத்தி இழிவாகப் பேசினர்.

அதே மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், மிகவும் பிரசித்திப் பெற்ற மனித உரிமை அமைப்பான 'ஃபோரம் ஆசியா' என்னும் அமைப்பினர் பேராயரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை எடுத்துரைத்தனர்.

அதே போல், தமிழ் மக்களுக்கு பேராயர் ஆற்றிவரும் அரியப் பணிகளைக் குறித்தும், அதன் காரணத்தினாலேயே அவருடைய உயிருக்கு உள்ள அச்சுறுத்தல் பற்றியும் வீக்கெண்ட் லீடர் வார இதழில் இரண்டு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

மத நல்லிணக்கத்தின் ஓர் அடையாளமாகத் திகழும் மற்றும் மனித உரிமை மீறல்களைப் பற்றி சமரசமின்றி விமர்சித்துவரும் பேராயரை தாக்கும் முயற்சியை கண்டித்து, ஹாங்காங்கை தலைமையிடமாகக் கொண்டுள்ள, ஆசிய மனித உரிமை ஆணையம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மாணவர் சங்கத்தின் செயலாளரான தர்ஷானந்த் மீது தொடுக்கப்பட்ட கொடும் தாக்குதலுக்குப் பிறகும், பல்கலைக் கழக மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை மே 18ம் நாள் நடத்தினார்கள். இச்சம்பவம், தமிழர்களிடையே பற்றிக்கொண்டுள்ள வற்றாத சுதந்திர தாகத்தின் சாட்சியாக அமைந்தது.

பல்கலைக்கழக வளாகம் சிங்கள் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த சூழலிலும், மாணவர்கள் பெருந்திரளாக கூடி, தீச்சுடர்களையும் மெழுகுவர்த்திகளையும் ஏந்தி வந்த காட்சி, விடுதலை யுத்தத்தில் குருதி சிந்தியவர்களுக்கான நினைவேந்தலை அடக்குமுறைக் கொண்டு ஒடுக்கிவிட முடியாது என்னும் செய்தியை, உரக்க ஒலித்தது.

அதே நாளில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாகத்தில் நூற்றுக்கணக்கான மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் வடித்தார்கள்.

இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏதோ இங்கொன்றும் அங்கொன்றுமாக நடந்தவை அல்ல. அதிகரித்து வரும் இராணுவமயமாக்கலுக்கு எதிராக, இவ்வாண்டு பிப்ரவரி திங்கள் ஒன்பது கிராமங்களிலிருந்து 564 பெண்கள், வெளிப்படையாக ஆர்பாட்டம் நடத்தி, தாங்கள் கையொப்பமிட்ட ஓர் அறிக்கையை சமர்ப்பித்தார்கள்.

பெப்ரவரி 14ம் தேதி, ஐநூறுக்கும் மேற்பட்ட மன்னார் பகுதி மீனவர்கள் தெருக்களில் வந்து பெட்ரோல் விலை மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டங்கள் அனைத்தும் உணர்த்தும் தெளிவான செய்தி இதுதான்: சிங்கள அரசின் கொடுஞ்செயல்களுக்கு எதிராக போர்க் கொடி ஏந்துபவர்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும், தமிழகத் தமிழர்கள் மட்டுமல்ல, ஈழத் தமிழர்களும் தங்கள் உரிமைக் குரலை உயர்த்த தொடங்கிவிட்டனர் என்பதுதான்.

தமிழாக்கம் : பொன் சந்திரன்

நன்றி தமிழ் இணையங்கள்

Geen opmerkingen:

Een reactie posten