தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 8 juni 2012

தமிழீழமெங்கும் விடுதலைக்காய், களமாடிய வீரத்தளபதி பிரிகேடியர் பானு!!



நீண்ட வரலாற்றையும், காலத்திற்குக்காலம் எழுச்சிகொண்டு அரசாட்சி உரிமையையும் தன்னகத்தே கொண்டுள்ள தமிழினம், தமிழீழத்தில் எழுச்சிகொண்டபோது தாய்மண்ணின் விடுதலைக்காக எழுந்த மாபெரும் விடுதலைப்போரில் விடுதலைப் புலிகள் இயக்கம்
தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் உறுதியான வழிநடத்தலில் இலக்குத்தவறாத இலட்சியப் பாதையில் முள்ளிவாய்க்கால் வரை பயணித்தது.
தமிழ்மக்களின் விடுதலைக்காகப் போராளியாகப் பிறந்தவர் எமது தேசியத் தலைவர். அவரினால் உருவாக்கப்பட்ட போராளிகளில் இணைந்த காலம்முதல் இறுதிவரை பயணித்த தளபதிகளில் பிரிகேடியர்.பானு அவர்களும் ஒருவராகவிருந்தார்.
உலகில் அடக்கப்பட்டு,அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போர் பற்றிய வரலாறு என்பது காலம் குறித்து எழுதி முடிக்கப்படக்கூடிய ஒன்றல்ல,விரிவாக ஒவ்வொரு காலகட்டத்தையும் வைத்து எழுதப்பட வேண்டிய ஒன்றாகும்.தளபதி பானு அவர்களைப் பற்றி எழுதுகின்றபோது, முழு வரலாறும் எழுத வேண்டிய நிலை இருந்தும் இத் தொடரில் அதனை எழுத முடியாது என்பதனால் அவருடைய விடுதலை சார்ந்த சில நிகழ்வுகளை இங்கு பதிவாக வைப்பதற்கு விரும்புகின்றோம்.இணைந்த காலம் முதல் இறுதிவரை பயணித்த தளபதிகளில் ஒருவரான பானு அவர்களைப் பற்றி குறிப்பிடுகின்றபொழுது மாபெரும் விடுதலை இயக்கத்தின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளிலும் அவருடைய பங்களிப்பு இருந்திருக்கின்றது.
தமிழீழத்தின் யாழ் மண்ணின் பெருமைக்குரிய தளபதிகளில் ஒருவரான பானு அரியாலை என்னும் ஊரைப் பிறப்பிடமாகக்கொண்டவர்.காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்தபோது 1983 ம் ஆண்டு யூலை மாதத்தில் இடம்பெற்ற தமிழின அழிப்பின் கோரத்தைக்கண்டு சினந்தெழுந்த இளைஞர்களில் ஒருவராக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
யாழ்ப்பாணத்தில் அரியாலை என்கின்ற ஊர் போராட்ட வரலாற்றில் புதிய அத்தியாயம் ஒன்றை ஆரம்பித்து அழியாத பதிவைக் கொண்டுள்ள விடுதலைப் புலிகளின் ஆரம்ப மறைவிடங்களில் ஒன்றாகவும் பதியப்பட்டுள்ளது. மூத்த மாவீரர்களான லெப்.சீலன், லெப் .கேணல் புலேந்திரன் போன்ற முன்னணிப் போராளிகள் விடுதலைக்கான செயல்பாடுகளுக்காக இங்கு தங்கியிருந்து செயல்பட்டனர். யாழ்ப்பணத்தில் ஏனைய பகுதிகளில் தாக்குதல்களை நடத்தியபோதும், போராளிகளின் மறைந்த வாழ்விடம் அரியாலையிலும் அமைந்திருந்தது. இந்தவகையில் போராட்ட வரலாற்றில் முக்கிய இடத்தையும் அரியாலை பெற்றுள்ளது.தமிழ்மக்களின் விடுதலைக்காக முழு மூச்சாக எழுந்த மூத்த போராளிகளான லெப்.கேணல் சந்தோசம், தளபதி பொட்டம்மான் போன்றவர்கள் அரியாலை மண்ணில்தான் பிறந்தார்கள் என்பதில் இந்தமண்ணுக்கு மேலும் சிறப்பான ஓர் இடம் வரலாற்றில் கிடைத்திருக்கின்றது.
இந்தியாவில் விடுதலைப் புலிகளின் இரண்டாவது பாசறையில் படைத்துறைப் பயிற்சியைப் பெற்றுக்கொண்ட தளபதி பானு மன்னார் மாவட்டத்தளபதி லெப்.கேணல் விக்டர் அவர்களின் குழுவில் இணைக்கப்பட்டார். லெப்கேணல்.விக்டர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பணியை மேற்கொண்டிருந்தவேளையில் தேசியத் தலைவர் அவர்களின் ஆணையின்படி மன்னார் மாவட்டத் தளபதியாக விக்டர் நியமனம் பெற்றார். அந்த வேளையில் தளபதி பானு லெப்கேணல் விக்டர் அவர்களுடன் மன்னார் மாவட்டத்திற்குச் சென்று விடுதலைக்கான பணியை மேற் கொண்டிருந்த வேளையில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கான பொருளாதார மேம்பாட்டைக்கருத்தில்கொண்டு விவசாயப் பண்ணைகள்,நெற்செய்கை ,வியாபாரம் சிறு கைத்தொழில் போன்றவைகளை தனது இளம் வயதில் மிகுந்த திட்டமிடலில் மேற்கொண்டு ஏனைய மாவட்டப் போராளிகளுக்கு முன்மாதிரியாகவிருந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழீழத்தில் யாழ்ப்பாணம், வன்னி, மன்னார்,திருகோணமலை,மட்டக்களப்பு-அம்பாறை ஆகிய ஐந்து பெரும்பிரிவுகளுக்கும் பொறுப்பாக தளபதிகள் பணிநியமனம் செய்தபோது மன்னார் மாவட்டத்திற்குத் தளபதியாக லெப் கேணல் விக்டர் பொறுப்பேற்றுக்கொண்டார். தேசியத்தலைவர் அவர்களின் மிகவும் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் லெப் கேணல் விக்டர் அவர்களும் ஒருவர் என்பதில் மன்னார் மண் பெருமிதம் கொள்ளுகின்றது.
இக் காலத்தில் மன்னார் மாவட்ட விடுதலைப்புலிகள் என்றால் அவர்களுக்கு ஒரு அதிரடி அடையாளத்தை பெற்றுக்கொடுத்ததற்கு தளபதி விக்டர் அவர்களின் விடுதலையிலிருந்த பற்றும்,தீவிர தாக்குதல் நடவடிக்கைகளும்,தேசியத் தலைவர் மீது வைத்திருந்த மதிப்பும் காரணமாக அமைந்திருந்தன.விடுதலை புலிகள் இயக்கத்தின் முதல் லெப் கேணல் என்ற நிலையிலும் தளபதி விக்டர் போராட்ட வரலாற்றில் முக்கிய பதிவாகவும் இடம்பெற்றார்.
தளபதி விக்டர் உடன் களமாடிய பானு அன்று ஒவ்வொரு தாக்குதல்களிலும் விக்டருக்கு பாதுகாப்பு அரணாகவே பங்கெடுப்பார். தளபதி விக்டர் அவர்களைப் பாதுகாப்பதற்காக முன்னேறிய நிலையிலே தனது தாக்குதலை மேற்கொள்ளுவார் என்பதை அக் காலத்தில் போர்ப் பணியிலிருந்த போராளிகள் மூலமாக அறிந்துகொள்ளமுடிகின்றது.
தமிழீழத்தில் தாய்த் தமிழகத்துக்கு மிக நெருக்கமாக அமைந்துள்ள மன்னார் தமிழர்களுடைய வரலாற்றில் எல்லோராலும் அறியப்பட்ட மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் விளங்குகின்றது. தாய்த் தமிழகத்திற்கும், தமிழீழத்திற்குமான போக்கு வரவு த்துத்துறைமுகமாக இருக்கவேண்டிய நிலையிலுள்ள மன்னார் பல உலக நாடுகளின் எதிர் பார்ப்பில் எண்ணை வளமுள்ள இடமாகவும் மன்னார் வளைகுடா இருப்பதும்,இதற்கு ஒரு காரணமாக அமைகின்றது.
லெப்கேணல் விக்டர் அவர்களின் வீரச்சாவினைத் தொடர்ந்து லெப் கேணல் ராதா மன்னார் மாவட்டத் தளபதியாக பணிநியமனம் பெற்றார். இக் காலத்தில் பானு தளபதி ராதா அவர்களின் தலைமையில் நடந்த பல தாக்குதல்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
நேர்த்தியான திட்டமிடலிலும், நிருவாகத்திறமையிலும் சிறந்து விளங்கிய தளபதி ராதா தேசியத் தலைவரினால் இனங்காணப்பட்ட மற்றுமொரு சிறந்த தளபதியாகும், விடுதலைப் புலிகளின் ஐந்தாவது பாசறையில் பயிற்றுனராக பணியாற்றிய தளபதி ராதா தேசியத் தலைவரினால் மிகவும் விரும்பப்பட்டவர்களில் ஒருவராகவிருந்தார்.மன்னார் மாவட்டத்தில் தளபதி ராதா அவர்களின் தாக்குதல் பணிகள் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மேலும் ஒரு பலமான நிலையை உருவாக்கிக்கொடுத்தன. அமைதியும்,ஆற்றலும் நிறைந்த தளபதி ராதா அவர்களிடமிருந்து பல விடயங்களைக் கற்றுக்கொண்ட தளபதி பானு அவர்கள்,தளபதி ராதா அவர்கள் யாழ்மாவட்ட தளபதியாக தேசியத் தலைவரால் நியமிக்கப்பட்ட வேளையில் அவருடன் தான் பிறந்த மண்ணுக்கு பயணமானார்.அங்கும் தளபதி ராதா அவர்களின் தலைமையில் சிங்கள இராணுவத்தினருக்கெதிரான தாக்குதல்களில் பங்குகொண்டார்.
முகாமுக்குள் முடக்கி வைக்கப்பட்டிருந்த சிங்கள இராணுவத்தினரின் முன்னேற்ற நடவடிக்கைகளை தளபதி ராதா அவர்களின் தலைமையில் முன்னின்று தடுத்து ராதா அவர்களின் தாக்குதல் போராளிகளில் முதன்மைப் போராளியாக மாறியிருந்தார். யாழ்ப்பாணம் கட்டுவன் என்ற ஊரில் முன்னேறிய சிங்களப் படையினரை தடுத்து தாக்கும் பணியில் நடந்த சண்டையில் போராளிகளை தளத்திற்கு அனுப்பிவிட்டு திரும்பும் வேளையில் தளபதி ராதா தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.
வரலாற்றுக் கடமையைச் செய்வதற்காக,வரலாறு உருவாக்கிய தளபதிகள்,தங்கள் வீரச்சாவு வரை விழி மூடாது விடுதலைக்காக உழைத்தனர்.தங்கள் பாதம் பதிந்த தாய் மண்ணில் இறுதிவரை பயணித்தனர்.
1987 ம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய இராணுவத்தினருடனான போர் மூண்டது. தேசியத் தலைவர் அவர்கள் மணலாறு சென்றார். தேசியத் தலைவரின் அழைப்பின் பேரில் மணலாறு சென்ற தளபதி பானு தலைவர் அவர்களின் பாதுகாப்புப் படைப்பிரிவில் பணியாற்றினார்.மணலாற்றில் நடந்த பல தாக்குதல்களில் ஈடுபட்டு தலைவர் அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட தளபதிகளில் ஒருவரானார்.
மன்னார் மாவட்டத் தளபதியாக பானு தலைவரின் கட்டளைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். இக் காலத்தில் மன்னார் மாவட்ட போராளிகள் குழம்பிப் போயிருந்தனர்.வழிநடத்தல் ஒழுங்கின்றி சிதறிப் போயிருந்தனர்.தளபதி பானு அவர்களின் மன்னார் வருகையைத் தொடர்ந்து மன்னாரில் போர் எழுச்சி மீண்டும் புத்துயிர் பெற்றது.போராளிகளை ஒன்றுபடுத்தினார்.புதிய போராளிகளை இணைத்து பயிற்சிப் பாசறையை ஆரம்பித்தார். நூற்றுக்கு மேற்பட்டவர்களை போராளிகளாக உருவாக்கி தலைவரின் பாதுகாப்புப் படைப்பிரிவுக்கும் அனுப்பி வைத்தார்.பானு அவர்கள் முதலில் தளபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டதும் விடுதலைக்காக முதல் களமாடிய மன்னார் மாவட்டத்தில் தான் என்பதை நினைவு கூர்வது பொருத்தமானது.ஏனெனில் மன்னார் போராளிகளையும்,மக்களையும் மிகவும் நெஞ்சார நேசித்தார்.அக்காலத்தில் தான் பிறந்த யாழ் மண்ணை விட மன்னார் மண் தளபதி பானுவுக்கு மிகவும் பரீட்சியமானது.
களத்தில் அனைத்தும் தெரிந்த தளபதியாக பானு காணப்பட்டார்.இயக்கத்தின் பாசறைகளில் தேவையான அனைத்து உபகரண அமைப்புக்களையும்,மின்சார இணைப்புக்களையும் முன்னின்று செய்து தளபதிக்குரிய முன்மாதிரியை வெளிப்படுத்தினர். தளத்தில் , களத்தில் தளபதி பானு தலைசிறந்த போராளியாக தென்பட்டார்.ஆரம்ப காலத்தில் நீண்ட காலம் மன்னாரில் பணியாற்றி மன்னார் மக்களின் பாசத்திற்குரியவரானார்.
மன்னார் மாவட்டத்தின் தெற்குப் புறமாக அமைந்துள்ள வயலும்,காடும், கடலும் ஒன்றாக பிணைந்து இருக்கின்ற வட்டமாக முள்ளிக்குளம் இருக்கின்றது.
மன்னார் மாவட்டத் தளபதியாக பானு பணியிலிருந்த வேளையில் இந்தியப் படையினரின் ஆதரவோடு இயங்கிய தமிழ்த் தேசத்துரோகக்கும்பல் ( PLOT ) முள்ளிக்குளத்தில் தங்கியிருந்தனர்.இங்கு 25 .11 .1984 அன்று யாழ்ப்பாணம் சுழிபுரம் என்னுமிடத்தில் சுவரொட்டிகளை ஓட்டுவதற்காக சென்றிருந்த விடுதலைப் புலிகளான புவி , தேவன் ,ஈஸ்வரன் ,சின்னச்சிவா,சிவா ,சிவம், சீலன் ஆகியோரை படுகொலைசெய்த சங்கிலி தலைமையிலான குழுவினர் தங்கி மேலும் கொலைகள், காசு பறிப்பு கொள்ளை ,என்பவற்றில் ஈடுபட்டிருந்தனர்.
இவர்களை தாக்கியழிப்பதற்காக 1990 .01 .01 அன்று கடல் வழியாக தரையிறங்கிய விடுதலைப் புலிகள் போராளிகளுக்கு தளபதி பானு தலைமை தாங்கியிருந்தார்.இத் தாக்குதலில் தேசத்துரோகக் கும்பல் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் மேஜர் அகத்தியர் உட்பட்ட 10 போராளிகள் வீரச்சாவடைந்தனர்.
தளபதி பானு விழுப்புண் அடைந்த நிலையில் தேசியத் தலைவர் அவர்களின் ஆணையின்படி தாய்த் தமிழகத்துக்கு மருத்துவ சிகிச்சைக்காகச் சென்று குணமடைந்து திரும்பியிருந்தார்.
சுபன் மன்னார் மாவட்ட தளபதியாக பொறுப்பேற்றவுடன் தளபதி பானு அவர்கள் யாழ் மணியம் தோட்டத்தில் தங்கியிருந்த விடுதலைக்கான எதிர்ப்பாளர் குழுவினரை விரட்டியடிக்கும் நோக்கோடு தான் பிறந்த மண்ணில் மீண்டும் கால்பதித்து குறிப்பிட்ட பணியை நிறைவு செய்து 1990 ம் ஆண்டு தான் பிறந்த மண்ணின் தளபதியாக தேசியத் தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டார்.
பலம் பொருந்திய அமைப்பாகவும், படைத்துறை விரிவாக்கம் பெற்ற நிலையிலும்,நிருவாக்கக் கட்டுமானங்கள் உருவாக்கம் பெற்ற காலத்திலும் மக்கள் போராட்டமாக தேசிய விடுதலைப் போராட்டம் மாற்றியமைக்கப்பட்ட காலத்திலும் தளபதி பானு யாழ் மாவட்டத்தில் தளபதியாக பணியிலிருந்ததனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ் மாவட்ட செயலகத்தை திறம்பட,சிறப்பாக,தேசியத் தலைவர் பாராட்டுமளவுக்கு செய்து காட்டினார்.
யாழ் மண்ணின் மூலைமுடுக்கெல்லாம் தமிழ்ப் படையின் தேசியசீருடையில் பவனிவந்த பானு மக்கள், போராளிகள் எல்லோரிடமும் அன்பாகப் பழகி எல்லோருடைய அபிமானத்தையும் பெற்றிருந்தார்.படைத்துறையில் நிருவாகச் செயல்பாட்டில் சிறந்து விளங்கியவர், போராளிகள் தங்குகின்ற முகாம்கள்,பயிற்சி பெறுகின்ற பாசறைகள்,எதிரியை தடுத்து நிறுத்தும் தடை முகாம் அமைப்புக்கள் என்பவற்றில் தனித்திறமையை வெளிக்காட்டி தலைவரின் பலமான தளபதிகளில் ஒருவரானார்.
மூத்த போராளிகளை மதிக்கும் திறன் அவர்களுக்குரிய பணியை பகிர்ந்தளித்து சிறப்பான பயன்பாட்டை பெற்றுக்கொள்ளும் முறை என்பவற்றில் தளபதி பானு அவர்களின் நிருவாகத்திறன் வெளிப்படுத்தப்பட்டதை போராளிகளின் கருத்துக்களிலிருந்து தெரிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது.
யாழ் மாவட்டம்,தமிழீழத்தில் மக்கள் தொகை கூடிய மாவட்டமாகும் தமிழர்களின் தனிச் சிறப்புக்கு அடையாளமாகவும்,மண்வாசனையோடு தமிழரின் பண்பாடு மேலோங்கிய இடமாகும் இருக்கின்றது ஆனால் இம் மண்ணில் எம்மை ஆண்டாண்டு காலமாக அடிமைநிலையில் வைத்திருந்த அன்னிய ஆதிக்கத்தின் அடையாளமான யாழ் கோட்டை தீவுகளோடு இணைந்ததாக யாழ் தீபகற்பத்தில் அழிக்க முடியாதவாறு அமைக்கப்பட்டிருந்தன. இக் கோட்டை தமிழர்களின் தனித்துவத்தைப் பொறுத்தமட்டில் அவமானச்சின்னமாகும்.எம்மை அடக்கி ஒடுக்கியவர்கள் வாழ்ந்த இடமாகவும் இருப்பதனால் தமிழரின் அடிமை வரலாற்றிலிருந்து இது அழிக்கப்பட வேண்டும் என்பதுதான் விடுதலை வீரர்களின் நினைவாகவுமிருந்தது.
ஆக்கிரமிப்பு முகமூடியை அகிம்சைப் போர்மூலம் கிழித்தெறிந்த தற்கொடைப் போராளி லெப்கேணல் திலீபன் 1987 ம் ஆண்டு அகிம்சைப் போர் மேடையில் கூறிய கருத்துக்களின்போது இக் கோட்டையைப் பற்றி பின்வருமாறு கூறினார் .
அன்னியர்கள் மாறி மாறி நிலைகொண்டிருந்த யாழ் கோட்டையில் தமிழரின் தேசியக் கொடியான புலிக்கொடி பறக்கின்ற நாள்,தமிழ் மக்களின் விடுதலையின் ஆரம்ப நாள் என்று குறிப்பிட்டார்.
தீர்க்கதரிசனமாக திலீபன் கூறியவைகள் அமைந்ததுபோல் 1990 ம் ஆண்டு யூனி மாதம் யாழ்கோட்டை மீதான தாக்குதல் போர் தொடுக்கப்பட்டது. தேசியத் தலைவர் அவர்களின் திட்டமிடலில்,தளபதி பானு அவர்களின் வழிநடத்தலில்,மட்-அம்பாறைத் தளபதி லெப்கேணல் யோய் அவர்கள் ஆர் .பி. ஜி . உந்துகணைத் தாக்குதலைத் தொடுத்து யாழ் கோட்டை அழிப்பிற்கான விடுதலைப்போர் ஆரம்பிக்கப்பட்டது .உத்வேகத்துடன் போராளிகள் எழுச்சியுடன் தாக்குதலில் ஈடுபட்டனர் தமிழ் மக்களின் குரல்கள் போர்ப்பறையாகமாறி போராளிகளுக்கு புதுத்தென்பைக் கொடுத்தன. 107 நாள்கள் நடந்த கோட்டை அழிப்பிற்கான வரலாற்றுச்சமரைத்தொடந்து அடிமைச்சின்னமான யாழ்கோட்டை 1990 ம் ஆண்டு 09 ம் மாதம் 26 ம் நாள் தமிழர் படையிடம் வீழ்ந்தது,தமிழரின் வீரம் தரணியில் எழுந்தது. விடுதலை ஒளி எங்கும் பரவியது.
தேசியத்தலைவரின் ஆணையில் தளபதி பானு தமிழீழத்தேசியக்கொடியை யாழ் கோட்டையில் ஏற்றி, வரலாற்றுத் தளபதிகளில் ஒருவராக யாழ் மண்ணில் உயர்ந்து நின்றார்.
அதற்குப் பிறகு யாழ் கோட்டையை அழித்து அகற்றும்பணியை தமிழ் மக்கள் ஆரம்பித்தனர்.
1985 ம் ஆண்டு காலப்பகுதியில் கோட்டையில் நிலைகொண்டிருந்த சிங்களப்படை தமிழர் ஊருக்குள் முன்னேறுவதை முதன்முதலில் தடுத்து நிறுத்தி கோட்டைக்குள் முடக்கி வைத்தவர் தளபதி கேணல் கிட்டு,
இதே கோட்டையை விடுதலைப் புலிகள் வீழ்த்திக்கைப்பற்றியபோது கோட்டையில் புலிக்கொடியை ஏற்றிப்பறக்கவிட்டவர் தளபதி பானு என்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் அழிக்கமுடியாத வரலாற்றுப் பதிவாகும்.
தேசியத் தலைவர் அவர்களின் ஆணையின்படி,1991 ம் ஆண்டு காலப்பகுதியில் தேசியத் தலைவர் அவர்களின் பாதுகாப்புப் படைப்பிரிவில் பணியிலிருந்த லெப் கேணல் ஜோய், மேஜர் வினோத், லெப் கேணல் விஜயகாந்த் போன்றவர்கள் மட்-அம்பாறை மாவட்டத்திற்கு அனுப்பப்பட்ட வேளையில் இவர்களுடைய படைத்துறை ஆலோசகராக தளபதி பானு அவர்களும் உடன் சென்றார்.
இவர்களுடைய வருகையைத் தொடர்ந்து மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் சிங்கள இராணுவத்தினருக் கெதிரான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப் பட்டன.ஒரு நாள் ஒரு சிங்கள இராணுவத்தினன் என்றரீதியில் தொடராக சிங்களப் படையினர் அழிக்கப்படுமளவுக்கு தாக்குதல்கள் உக்கிமடைந்தன.தளபதி பானு மட்டக்களப்பு மாவட்டத்தில் 49 மாவடி முன்மாரிக்கோட்டத்தில் (படுவான்கரை பிரதேசம் ) என்றழைக்கப்பட்ட தனது விடுதலைப் பணியை தொடந்தார்.
எப்போதும் எங்கும் சிறந்த ஒரு போராளியாக தன்னை நிலைநிறுத்தும் பானு வயலும்,வயல் சார்ந்த காடும் அமைந்துள்ள ஊர்களை உள்ளடக்கிய இக் கோட்டத்தில் மக்களோடு மக்களாக,போராளிகள் வேறுபட்டவர்கள் இல்லை,அவர்கள் மக்களிலிருந்து உருவானவர்கள் என்பதற்கமைய வேலைத்திட்டங்களை திட்டமிட்டு மேற்கொண்டார்.
எங்கு சென்றாலும் மக்களுடன் அன்பாகப் பழகி ஆதரவோடு செயல்படும் தளபதி பானுவுக்கு மக்களின் அபிமானம் விரைவில் கிடைத்துவிடும்.மன்னார், யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு அம்பாறை என கால்பதித்த இடங்கள் எல்லாம் தமிழ் மக்கள் தங்கள் தோள் கொடுத்து விடுதலைக்கு பலம் கொடுத்தனர் .ஒரு போராளியின் புனிதத் தன்மையே மக்கள் பானு அவர்களிடம் கண்டுகொண்டதனால் மக்களினால் மறக்க முடியாத தளபதிகளில் பானு அவர்களும் ஒருவரானார்.
மட்டக்களப்பின் வடபுலத்தில் 46 என அழைக்கப்பட்ட ஆண்டான்குளம் ( வாகரை ) கோட்டத்திற்கு பானு அவர்களின் அடுத்த பயணம் அமைந்திருந்தது.இயற்கை எழில் கொஞ்சும், மகாவலி கங்கை ஊடறுத்து ஓடுகின்ற,தேனும், பாலும் பழமும் மலிந்து கிடக்கின்ற, ஆறும் கடலும் தொட்டு நிற்கின்ற அழகிய ஊர்கள் அடுத்து ,அடுத்ததாக நீண்ட நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ளடங்கியிருக்கின்ற இக்கோட்டம் தமிழரின் பாரம்பரிய தாயகத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்றாகும்.
பானு அவர்கள் ஆண்டான்குளம் கோட்டத்தில் விடுதலைக்கான பணியிலிருந்த போது அவ்வூர்களில் வாழ்ந்த மக்களுடன் மிகுந்த பாசப்பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டார்.மிகக் குறுகிய காலத்தில் அம்மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட தளபதிகளில் உள்ளடங்கப்பட்டிருந்தார்.
தமிழரின் பூர்வீகக் குடிகளான இம்மக்கள் தாங்கள் வாழ்ந்த பாரம்பரியத் தாயகப் பூமியை ஆழமாக நேசித்தனர்.இதனால் என்றும் இம் மண்ணை விட்டு வெளியேறி வாழ்வதற்கு விருப்பமில்லாமல் இருந்தனர்.இம் மக்களின் இவ்வாறான பற்று தளபதி பானு அவர்களை மிகவும் கவர்ந்திருந்தது.இதனால் மக்களோடு மக்களாக இக் கோட்டத்தில் தனது விடுதலைக்கான பணியை மிகவும் மகிழ்ச்சிகரமாக மேற்கொண்டார்.தமிழீழத்தில் வளர்ச்சியடைந்த ஊர்கள் பொருண்மிய மேம்பாடடைந்த மக்கள் இருந்த போதும் வாகரையண்டிய ஊர்களில் வாழ்ந்த மக்கள் இயற்கையோடு ஒன்றித்து தமிழர் பண்பாட்டோடு வாழ்ந்தது,தளபதி பானு அவர்களின் மனதில் உயர்ந்த இடத்தில் இம் மக்களை வைத்து பார்க்கமுடிந்தது.
தனது இறுதிக்காலம் வரையும் இவ்வுறவுகளை எண்ணி தனது போராளி நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டதை குறிப்பிட்ட போராளிகள் மூலமாக அறியமுடிந்தது. போராளி என்பவன் எதற்காக தான் போராளியானான் என்பதைப் பொறுத்து வாழ்க்கை அமைந்து விடுகின்றது. உண்மையான போராளி தான்சார்ந்த இனத்தின் விடுதலையை கையில் எடுத்தபின் இனத்தின் மீது கொண்ட பற்றுக்காரணமாக உறவுகளோடு பிரிக்கமுடியாத உறவினை உணர்த்தும் உன்னதமான போராளியாக தன்னை மாற்றிக்கொள்ளுகின்றான். இறுதிவரை இனப்பற்றோடு வாழ்ந்து தனது இறுதிக்காலத்தை நிறைவு செய்கின்றான்.இவ்வாறானவர்களில் ஒருவராகத்தான் தளபதி பானு அவர்களை வரலாற்றில் பதிவு செய்கின்றோம்.
1992 ம் ஆண்டு காலப்பகுதில் சிங்கள இராணுவத்தினருக்கான முக்கிய இரண்டு தாக்குதல்களை வாகரை கோட்டத்தில் தங்கியிருந்த தளபதி பானு மிகவும் திட்டமிட்டு,உணர்வுமிக்க போராளிகளுடன் இணைந்து வெற்றிகரமாக மேற்கொண்டார். தமிழீழத்தின் தலைநகர்,தமிழரின் பாரம்பரியத்தை,நிலைநிறுத்தி கொண்டிருக்கின்ற,இயற்கைத் துறைமுகத்தோடு இணைந்ததாக தமிழீழத்தின் பெருமையை உலகிற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கின்ற திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் கோட்டத்தில் கல்லாறு என்ற ஊரின் அருகாமையில் சிங்கள இராணுவத்தினரை வழிமறித்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.இத் தாக்குதலில் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டும், போர்க்கருவிகளும் கைப்பற்றப்பட்டன.போராளிகளும் வீரச்சாவடைந்தனர்.
அடுத்த தாக்குதல் நாவலடி வெருகல் நெடுஞ்சாலையில் பால்சேனை என்ற கடற்கரை ஊரில் குறுகியகால இடைவெளியில் போராளிகள் ஒருங்கிணைக்கப்பட்டு,பானு அவர்களின் கட்டளையில் வீரத்துடன் எழுந்த விடுதலைப் புலிப்போராளிகள் ஏழு மைல்களுக்கு அப்பால் அமைந்திருந்த வாகரை சிங்களப் படைமுகாம் வரை படையினரை விரட்டியடித்தனர். தமிழர் படை சீற்றத்தால் சிங்களப் படை சிதறி ஓடிய வரலாற்று நிகழ்வை எமது தாய் மண்ணில் அன்று நாம் பார்த்தோம்.
வன்னியிலிருந்து கடல் வழியாக வந்த விடுதலைப் புலிப் போராளிகள் அதிகாலை வேளை தரையிறங்கி பால்சேனைக் கடற்கரையில் இருந்தபோது வாகரை ஊரில் நிலை கொண்டிருந்த சிங்கள இராணுவத்தினர் நடு இரவு நேரத்திலிருந்து முன்னேறி குறிப்பிட்ட கடற்கரையில் போராளிகள் மீது தாக்குதல் நடத்திய வேளையில் தளபதி பானு அவர்கள் கதிரவெளி ஊரையண்டிய காட்டுப்பகுதியில் போராளிகளின் தளத்தில் தங்கியிருந்தார்.செய்தி யறிந்து படையணியுடன் குறித்த இடம் விரைந்து சிங்கள இராணுவத்தினர் மீது ஓட ஓட விரட்டியடித்து வாகரை வரை தாக்குதல் நடத்தினர்.இத் தாக்குதலில் 20 க்கு மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டு,போர்க் கருவிகளும் கைப்பற்றப்பட்டன.லெப்கேணல் பாலேந்திரா உட்பட்ட முன்னணி இளந் தளபதிகள், தளபதி பானு அவர்களுக்கு துணையாக நின்று களமாடினர்.
மடடக்களப்பு மண்ணில், மண்ணின் வாசனையோடு,மக்களோடு ஒன்றித்து, ,உறவாடி விடுதலைக்காய் களமாடிய தளபதி பானு தேசியத் தலைவரின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பு - அம்பாறை படையணி வட தமிழீழம் சென்ற போது அவர்களோடு இணைந்ததாக மீண்டும் யாழ் மண்ணில் கால் ஊன்றினார்.
மட்டக்களப்பு மக்களையும் போராளிகளையும் அன்பாக நேசித்தவர் அந்தப் போராளிகளோடு இணைந்திருந்து யாழ் மண்ணில் போர் நடவடிக்கையில் ஈடுபட விரும்பி தேசியத் தலைவர் அவர்களுக்கு விரிவான கடிதமொன்றை அனுப்பி இருந்தார். மக்களையும்,அவர்களுடைய இனப்பற்று,விடுதலைப்பற்று,மண்பற்று போராளிகளின் தன்னலமற்ற தமிழீழத் தாய் நாட்டுப்பற்று என்பவற்றையும்,வயலோடு சார்ந்த ஊர்களில் வாழ்கின்றமக்களின் வாழ்க்கைத் தரம் பற்றியும் தனது மடலில் குறிப்பிட்டியிருந்தார்.
ஒரு சிறந்த போராளியின் எண்ணங்களில் நிறைந்திருக்க வேண்டிய மக்களின் விடுதலை சார்ந்த அனைத்தும் தளபதி பானு அவர்களிடம் இருந்ததை தலைவர் அவர்கள் உள்வாங்கி மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட படையணியோடு செயலாற்ற அனுமதித்தார்.போராளிகளோடு,போராளியாக இருந்து அவர்களுக்கான வசதிகளை மேம் படுத்தி மிகவும் தீவிரமாக படையணி மாற்றமடைவதற்கும்,எதிர் காலத்தில் சாதிப்பதற்கும் பானு அவர்கள் காரணமாக விருந்தார் என்பதை மாவட்ட போராளிகள் கூறக்கேட்டிருக்கின்றோம்
எந்தவொரு நாட்டிலும்,எந்தவொரு இனத்திலும் விடுதலைப் போராட்ட காலத்தில் நடத்தப்படாத சமர்கள் தமிழீழத்தில் நடந்தேறியுள்ளன.இந்த வகையில் தமிழீழத்தில் முதல் யாழ்கோட்டைத்தளம் புலிகளிடம் வீழ்ச்சியடைந்த வரலாற்றுச் சமரைத் தொடர்ந்து 1991 .11 .12 அன்று ஆகாயம்,கடல் வெளிச்சமர் ஆணையிறவில் எமது தேசியவிடுதலை இயக்கத்தினால் மேற்கொள்ளபட்டது. அடுத்தசமர் வட தமிழீழத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த எமது வரலாற்றை நிலை நிறுத்துகின்ற பூநகரி சிங்களப்படைத்தளம் மீது மேற் கொள்ளப்பட்டது.
இந்த வரலாற்றுச்சமருக்கு ``தவளைப் பாய்ச்சல்`` எனத் தேசியத் தலைவரால் பெயர் சூட்டப்பட்டது.இச் சமரில் தமிழீழத்தில் எல்லாப் பகுதிகளிலிருந்தும் படையணிகள் வரவழைக்கப்பட்டிருந்தன.மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட பெரியதோர் படையணி,மன்னார் படையணி,மணலாறு படையணி, யாழ்ப் படையணி, வன்னிப்படையணி,மகளிர் படையணி,இதனோடு இணைந்ததாக கடல் புலிகள் மற்றும் பின்தள வேலைகளுக்காக அரசியல் போராளிகள் நிதித்துறைப் போராளிகள் என அனைவரும் அணிதிரண்டு தேசியத் தலைவர் அவர்களின் நெறிப்படுத்தலில் தளபதி பொட்டம்மான் அவர்களின் ஒருங்கிணைப்பில்,கடல் புலிகளை தளபதி சூசை வழிநடத்த, தரைப்புலிகளை தளபதி சொர்ணம் வழி நடத்த, முன்னணித் தளபதிகள் இணைப்புடன் இச்சமர் வெற்றிகரமாக மேற் கொள்ளப்பட்டது.
மடக்களப்பு - அம்பாறை பெரியதோர் படையணியின் நிருவாக ஒழுங்கமைப்பை மேற் கொண்டவாறு தளபதி பானு தாக்குதல் நடவடிக்கைகளில் முழு வீச்சாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இச் சமரின் மூலம் மரபுவழிப் போர்முறையில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு படி மேலுயுயர்ந்து தமிழரின் போர் ஆற்றலுக்கு ஒரு முகவரியை உலகத்தில் பதிவுசெய்தனர்.
இச் சமரில் பங்கெடுத்த ஒவ்வொரு தளபதியும் தலைவரினால் போரியலில் வார்த்தெடுக்கப்பட்ட வல்லமையுள்ளவர்களாக இருந்தனர்.இச் சமரில் களமாடிய மணலாற்று மாவட்டத் தளபதி லெப்கேணல் அன்பு, லெப்கேணல் குணா உட்பட பல போராளிகள் வீரச்சாவடைந்தனர். பெறுமதி மிக்க போர் உபகரணங்கள் உட்பட போர்க்கருவிகள் தமிழர் மண்ணில் ஆக்கிரமிப்புப் படையாக நிலைகொண்டிருந்த சிங்களப் படையினரிடமிருந்து கைப்பற்றப் பட்டன.
இச்சமரினைத் தொடர்ந்து தளபதி பானு தேசியத் தலைவர் அவர்களினால் படைத்துறை அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது படைத்துறை அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரி தேசியத் தலைவரால்,ஆரம்பிக்கப்பட்டபோது அதன் பொறுப்பாளராக லெப் கேணல் ராஜன் நியமிக்கப்பட்டார். தேசியத் தலைவரின் மிகவும் நம்பிக்கைக்குரிய தளபதியாகவும்,இயக்கத்தின் மீதும் விடுதலையின் மீதும் அளவற்ற பற்று வைத்திருந்த லெப் கேணல் ராஜன் படைத்துறை அதிகாரிகளாக போராளிகளை பயிற்றுவிப்பதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டது பொருத்தமான ஒன்றாக அன்று கருதப்பட்டது. நிருவாகத்திலும்,திட்டமிடலிலும் அதிக ஆற்றலை தேசியத்தலைவரினால் பெற்றுக்கொண்ட தளபதி பானு சிறந்த முறையில் அப்பணியை நிறைவு செய்து ஆற்றல் மிக்க இளந்தளபதிகளை போர்க் களத்திற்குப் பெற்றுக்கொடுத்தார்.
யாழ் தீபகற்பத்துடன் இணைக்கப்பட்டதாக தீவுகள் பல அமைந்ததுதான் யாழ் மாவட்டம்.பாக்கு நீரிணைக்குள் அமைந்துள்ள இத்தீவுகள் பார்பதற்கு மிக அழகாக காட்சியளித்து தமிழீழத்தின் இயற்கை வனப்புக்கு மேலும் சிறப்பைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றது.சிங்களத்தின் கோரப்பிடிக்குள் அகப்பட்டுக்கிடக்கும் இத் தீவுகளில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ்ந்ததாக இன்றைய வரலாறு சொல்லவில்லை.தமிழீழத்தின் பிறபகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டபோதும் இத் தீவுகள் சிங்களத்தின் ஆக்கிரமிப்புக்குள் இருந்துவந்தன.
யாழ் கோட்டையை தொட்டதான நிலையில் அமைத்திருக்கின்ற மண்டைதீவில் தமிழர் வாழ்விடத்தில் சிங்களத்தின் படைத்தளமொன்று சிங்களக் கடல்படையின் உதவியோடு அமைக்கப்பட்டு இத் தீவு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன.யாழ் கோட்டையைக் கைப்பற்றிய விடுதலைப்புலிகளின் அடுத்த இலக்கில் மண்டைதீவு சிங்களப் படைத்தளம் வீழ்த்தப்படுவதன்மூலம் தீவுகளை படிப்படியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென்று விடுதலைப் புலிகளின் எதிர்கால எண்ணமாகவிருந்தது.
படைத்துறை அதிகாரிகள் பயிற்சிக் கல்லுரி தளபதியாக பானு பணியிலிருந்த வேளையில் தேசியத்தலைவரின் நெறிப்படுத்தலில் தளபதி சொர்ணம்,தளபதி சூசை ஆகியோரின் இணைப்புடன் தளபதி பானு அவர்களின் கட்டளையில் 1995 .06 . 28 அன்று அதிகாலை வேளையில் மண்டைதீவு படைத்தளம் கடற்புலிகளின் உதவியோடு தாக்கியளிக்கப்பட்டது.இத் தாக்குதலில் கடல் புலிகளின் அதிரடிப் பிரிவு ஒன்றுக்கு லெப்கேணல் சூட்டி தலைமையேற்றிருந்தார்.கடல் புலிகளின் தளபதி சூசை அவர்கள் இந்த அதிரடித் தாக்குதலுக்குரிய ஆலோசனைகளை வழங்கியிருந்தார்.படைக்கருவிகள் பல அள்ளப்பட்ட இத் தாக்குதல் வெற்றிகரமாக அமைந்தபோதும் இத் தாக்குதலில் லெப் கேணல் சூட்டி உட்பட எட்டு போராளிகள் வீரச் சாவடைந்தனர்.
ஒவ்வொரு தாக்குதலிலும்,தனிமுகவரி ஒன்றைப் பதிவு செய்த தளபதி பானு தேசியத் தலைவர் அவர்களுக்குப் பக்கபலமாகவும், தமிழரின் படைத்துறை விரிவாக்கத்துக்கு வலுச்சேர்த்தவராகவும் தனது விடுதலைப் பயணத்தைத் தொடந்தார். வரலாற்றில் இடம்பெற வேண்டுமென்றால் வரலாறு படைக்கவேண்டும்.இவ்வாறு வரலாறு படைத்தவர்கள்தான் எமது வீரமிகு தளபதிகள் என்பதுவும் அழிக்க முடியாத வரலாற்றுப் பதிவாகும்.
வன்னிப்பெருநிலத்தை நோக்கிய சிங்களப்படையின் ஜெயசிக்குரு தாக்குதலின் எதிர் சமரின்போது தலைவரின் ஒழுங்கமைப்புக்கு ஏற்றவாறு கிட்டு பிரங்கி படையணி உருவாக்கப்பட்டு அதற்கு பொறுப்பான தளபதியாக பானு அவர்கள் களத்தில் பணியாற்றினார்.ஒவ்வொரு பணியிலும்,உயர்ந்த நிலையில் சிறப்பாக செயலாற்றிய தளபதி பானு தமிழீழமெங்கும் களமாடிய காவிய நாயகர்களில் ஒருவராக தமிழர் வரலாற்றின் சிறப்பு மிக்க போர்க் காவிய படைப்புகளில் பதிவாகியுள்ளார்.
எமது தேசியத் தலைவர் சமர்களுக்கும்,தொடர் போர்களுக்கும் பெயர் சூட்டும் போது அதற்குள் பொதிந்துள்ள அர்த்தம் ஆயிரம் பலத்தை போராளிகளுக்குப் பெற்றுக்கொடுக்கும்.தமிழனின் பெருமையை தமிழோடு பறைசாற்றும், இந்தவகையில் ஆகாயம் கடல் வெளிச்சமர்,புலிப் பாய்ச்சல், தவளைப் பாய்ச்சல்,இதய பூமி, ஓயாத அலைகள் 1 ,2 ,3 போன்றவைகளை குறிப்பாகச் சொல்ல முடியும் ஓயாத அலைகள் 3 ன் ஒரு கட்டத்தின் போது கட்டளைத் தளபதியாக தேசியத் தலைவரால் நியமிக்கப்பட்டதளபதி பானு தேசியத்தலைவரின் நெறிப்படுத்தலில், 40 ஆண்டுகளைக் கடந்தும் சிங்கள ஆக்கிரமிப்புக்குள் இருந்த ஆனையிறவு மண்ணை போராளிகளுடன் இணைந்து களமாடி, மீட்டெடுத்து சாதனை படைத்தார்.பல போராளிகள் சிந்திய செங்குருதியினால் நனைந்து சிவந்து கிடந்த மண்ணை மீட்டெடுத்த தளபதி பானு ஒவ்வொரு வரலாற்று நிகழ்வுகளிலும் ஒவ்வொரு வரலாற்றைப் பதிவு செய்தார்.
தமிழீழத்தின் கழுத்தை இறுக்கிப்பிடித்துக்கொண்டிருந்த ஆனையிறவு ஆக்கிரமிப்புத்தளம் எமது நிலத்தொடர்பை மறித்து வைத்திருந்தது. இத்தளம் கைப்பற்றப்பட்டதிலிருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரிய வரலாற்று வெற்றியை எமது தேசிய விடுதலை இயக்கம் பெற்றிருந்தது.
2000 .04 .02 ம் நாள் அன்று ஓயாத அலைகள் மூன்றின் வெற்றிநாளாக அமைந்தது.ஆனையிறவு மீட்கப்பட்டு எமது தேசியக் கொடியை தளபதி பானு ஏற்றிவைத்தார்.
எண்ணற்ற எமது போராளிகளின் அர்பணிப்புக்களுக்கு மத்தியில் 19 ம் நூற்றாண்டின் இறுதியில் தமிழரின் இழந்த தாயாகமீட்பில் இன்னோர் அத்தியாயத்தை எமது தேசிய விடுதலை இயக்கம் உருவாக்கியது.
யாழ் கோட்டையைக் கைப்பற்றி புலிக்கொடியை ஏற்றியவன்.ஆனையிறவுச் சமரில் பல ஆண்டு காலம் சிங்களவன் காலில் மிதிபட்டுக்கிடந்த தமிழீழ மண்ணை மீட்டெடுத்து புலிக்கொடியை ஏற்றினான்.இவன் சாதனை வீரன், எமது முப்பாட்டன் சோழனின் தளபதிகள் போல் காலம் எமக்குத் தந்த தலைவன் கரிகாலன் தளபதிகளில் ஒருவன் தளபதி பானு எமது வரலாற்றை எம்மால் நினைத்துப் பார்க்க வைத்தவர்களில் ஒருவர் என்பது எமது விடுதலை வரலாற்றில் பதிவான ஒன்றாகும்.
2001 ம் ஆண்டு நான்காம் மாதம் 25 ம் , 26 ம் , 27 ம் நாட்கள் தீச்சுவாலை முறியடிப்புச் சமரை முன்னின்று எதிர்கொண்ட தளபதிகளில் பானு அவர்களும் களமிறங்கினார்.போராளிகளின் முன்னேறிய பாய்ச்சல் எதிரியை புறமுதுகிட்டு ஓட வைத்தன.மீட்கப்படும் தமிழர் நிலங்களில் புலிக்கொடியை ஏற்றி,பறக்கவிடும் தளபதியாக பானு அவர்களை வரலாறு எமக்கு ஏற்படுத்தித்தந்தது.
என்றும் பழைய நினைவுகளோடு தான் நேசித்த இடங்களையும்,மக்களையும் நினைவு கூருவது இறுதிவரை பானுவிடம் காணப்பட்ட,பற்றோடு அமைந்த குணங்களில் ஒன்றாகவிருந்தது.
2004 ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத்தின் சிறப்பு தளபதியாக பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் ஆழிப் பேரலையின் அனத்தத்தினால் மட்டக்களப்பு கடற்கரை ஊர்கள் மிகவும் பாதிப்புக்கு உட்பட்டிருந்தது.தளபதி பானு தனது பாதுகாப்பையும் கருத்தில் கொள்ளாது போராளிகளுடன் இணைந்து மக்களுக்கான சேவைகளை தன்னால் இயன்ற வரை செய்து அந்த மக்களின் புனர்வாழ்வு நடவடிக்கையிலும்,சிதைந்து போன பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் முன்னின்று பணியாற்றினார்.
மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத்தில் வாகரை கோட்டத்தில் பானு அவர்கள் பணியிலிருந்த வேளையில் மக்களோடு பழகிய நினைவுகளை பகிர்ந்து கொள்ளும்போது கண்கள் பனிக்க கதை சொல்வதை போராளிகள் எம்மிடம் கூறக்கேட்டிருக்கின்றோம்.அங்கு இருந்த போது தான் பாவித்த சவர்காரப் பெட்டியை உடைந்த போதும் காலம் கடந்தும் நினைவுக்காக பாதுகாத்து வைத்திருந்ததை போராளி ஒருவர் எம்மிடம் கூறிய போது அந்த மண்ணையும்,மக்களையும் இறுதிவரை அவரால் மறக்க முடியவில்லை என்பதற்கு அடையாளம்தான் இந்தபெட்டி என்றார்.உண்மையான ஒரு போராளிக்கு உணர்வான உறுதியான மக்களை என்றும் மறக்கமுடியாது என்பதற்கு தளபதி பானு அவர்கள் ஒரு உதரணமாகும்.
இதே போல் இன்றும் அம்மக்கள் தளபதி பானு அவர்களை நினைவு கூர்ந்து கதைப்பதை எண்ணி எமது மனம் நிறைவாக இருக்கின்றது.உண்மையான போராளிகளை மக்கள் என்றும் நினைவில் வைத்திருப்பார்கள்.
தமிழீழத்தின் இதய பூமியில் தனியரசு அமைத்து தமிழர்கள் தங்களை ஆட்சிசெய்து வாழ்ந்த வேளையில் உலகத்தின் சில நாடுகளின் உதவியோடு தமிழீழ மண்ணை முழுமையாக ஆக்கிரமிக்க சிங்கள அரசு தொடுத்த போரை மன்னார் பகுதியில் தடுத்து களமாடிய பானு இரண்டு வருடங்களாக நடந்த வரலாற்றுப் போரில் களமாடி எதிரியை அழித்தொழிப்பதில் முன்னணி தளபதிகளுடன்,தலைவரின் வழிநடத்தலில் முள்ளிவாய்க்கால் வரைத் தொடந்தார். சிங்கள அரசின் தகவலின்படி 40 ஆயிரத்திக்கு மேற்பட்ட சிங்கள இராணுவத்தினரை இழந்து தமிழர் தாயகத்தை முழுமையாக ஆக்கிரமித்த சிங்கள அரசின் உண்மையான தமிழின அழிப்பு நடவடிக்கையை உலகத்திற்கு வெளிப்படுத்துவண்ணமாக இப்போர் அமைந்திருந்தது.
சில நாட்டின் ஆதரவோடும்,படைக்கல விநியோகத்தோடும் தமிழீழ மண் இறங்கிய சிங்கள ஆக்கிரமிப்புப் படையை எந்த நாட்டின் ஆதரவு மில்லாமல்,நீண்ட காலம் எதிர்த்துக் களமாடிய முதல் விடுதலை இயக்கம் என்ற வரலாற்றுப் பெருமையையும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் பெற்று தமிழரின் வரலாற்றில் உயர்ந்து நிற்கின்றார்கள்.
தளபதி பானு இறுதிக்களமாடிய முள்ளிவாய்க்கால் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருக்கின்ற பழந்தமிழ் வரலாற்று ஊர். இக்காலத்தில் எழுச்சி கொண்ட தமிழினம் தாய்நாட்டை மீட்டெடுக்கும் புனிதப்போரில் இறுதிப்போர் கண்ட வரலாற்றுமண்,இந்தமண்ணில் சிங்கள எதிரியின் படைகள் சிதறடிக்கப்பட்டு, முற்றாக அழிக்கப்பட்ட சிறப்பான வரலாற்றுச் சமரைச் சந்தித்த எமது மூதாதையர்கள் குடிகொண்டிருந்த முல்லை மண்ணின் கடற்கரை ஊர். சோழன் கொண்டகப்பல்படை தேசியத் தலைவர் பிரபாகரன் கண்ட கடல்புலிகள் ஆண்ட எங்கள் கடலின் ஓரத்தில் அமைந்துள்ள சிவந்த மண்.
எமது தளபதிகள் நிமிர்ந்து நின்று,நேருக்குநேர்,எதிரியுடன் களமாடி நிமிர்ந்து விழ்ந்து தமிழரின் புறநானுற்று வீரத்தை மீண்டும் நினைவுபடுத்திய தமிழரின் பாரம்பரியமண்.தமிழ் உறவுகள் அழிக்கப்பட்டு,சிந்திய செங்குருதியால் நனைந்தமண்.
இந்த மண்ணில் எமது வீரத்தளபதி பிரிகேடியர் பானு அவர்களும் களமாடி விழ்ந்தார்.
நிமிர்ந்து நெஞ்சினை உயர்த்தி தாய்மண்ணின் வீரத்தை சிங்களத்திற்கும்,உலகத்திற்கும் தெரியப்படுத்தினார்.தமிழர்கள் கோழைகள் அல்ல,வீரம் செறிந்தவர்கள்,என்பதை ஒவ்வொரு தமிழனையும் உணரவைத்தனர்
. தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைகளுக்கு செயல்பாட்டு வடிவம் கொடுத்த தளபதிகளில் பானு அவர்களும் ஒருவராகவுள்ளார்.தேசியத் தலைவர் அவர்களின் நெறிப்படுத்தலில் தளபதி பானு கண்ட களங்கள்,வீரமிகு தாக்குதல்கள்,சாதனை மிகுந்த செயல்பாடுகள் என அடுக்கிக்கொண்டே போகமுடியும்.ஏனெனில் முள்ளிவாய்க்கால்வரை தனது விடுதலைக்கான பயணத்தைத் தொடர்ந்த தளபதி பானு தமிழர்களின் வரலாற்றில் வீரமிகு தளபதிகளில் ஒருவராக என்றும் தமிழர்களின் வாழ்க்கை வட்டத்தில் வலம்வந்துகொண்டிருப்பார்.
தளபதி பானு அவர்களை பெற்றதிலிருந்து பெற்றோர்கள் பெருமை கொள்ளுகின்றனர்.
இவரை பெற்றதிலிருந்து யாழ் அரியாலைமண் போராட்டவரலாற்றில் மேலும் சிறப்பான இடத்தில் உயர்ந்து நிற்கின்றது.
தமிழீழத்தில் விடுதலைப் பற்றோடு வாழ்கின்ற மக்களின் நெஞ்சங்களில் இவருடைய நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும்.
உலகத்திற்கு வீரத்தைக் கற்றுக்கொடுத்தவர்கள் தமிழர்கள் .
``வீரம் என்றால் பிரபாகரன் என்று அர்த்தம் இது உலகத்தில் பதியப்பட்ட புதுத்தமிழ் அகராதி``
அடுத்த மாவீரர் தொடரில் ........
என்றும்
எழுகதிர்.
paramathevaranjan@yahoo.com

Geen opmerkingen:

Een reactie posten