தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 26 maart 2014

‘புலி’ப் புரளியும், புளுகு மூட்டைகளும் - சேரமான்




மீண்டும் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்து அண்மைக் காலமாக தமிழீழத் தாயகப் பகுதிகளில் தேடுதல் வேட்டைகள், கைதுகள், ஆட்கடத்தல்கள், சத்தம் சந்தடியற்ற படுகொலைகள் எனப் பல வழிகளில் தமிழின அழிப்பு நடவடிக்கைகளை சிங்களம் முடுக்கி விட்டுள்ளது.
ஈழத் தீவிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை வேரோடு பிடுங்கியெறிந்து விட்டதாக கடந்த ஐந்தாண்டுகளாக உலகெங்கும் பறைதட்டி வந்த சிங்களம், இப்பொழுது ஜெனீவாவில் எழுந்துள்ள இராசரீக அழுத்தங்களைத் திசைதிருப்பும் நோக்கத்துடன் ‘புலி’ப் புரளியைக் கிளப்பி விட்டிருப்பதாகப் பொதுவான பார்வை ஒன்று உண்டு. தவிர ஈழத் தீவில் தமது ‘இறையாண்மையை’ மீறி எந்தவொரு வெளிச்சக்தியாலும் எதனையும் செய்ய முடியாது என்ற செய்தியைத் தமிழ் மக்களுக்கு உணர்த்தும் நோக்கத்துடனேயே தற்பொழுது தமிழீழத் தாயகத்தில் படையாட்சியை சிங்களம் இறுக்கமாக அமுல்படுத்தி வருவதாகவும் தமிழ்த் தேசிய அரசியல் உலகில் இன்னொரு கருத்தும் உண்டு. இவை மட்டுமன்றி இவ்வாரம் தென்னிலங்கையின் இரண்டு மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் சிங்கள வாக்கு வங்கியை இலக்கு வைத்தும் இவ்வாறான நடவடிக்கைகளை சிங்களம் மேற்கொண்டு வருவதாகவும் இன்னொரு கண்ணோட்டமும் உண்டு.
இக்கண்ணோட்டங்கள் சரியா? பிழையா? என ஆராய்வது இப்பத்தியின் நோக்கமன்று. ‘புலி’ப் புரளியை சிங்களம் கிளப்பி விட்டிருப்பதற்கான பின்னணி பற்றிய புரிதலை வெள்வேறு கோணங்களில் இருந்தும் இம் மூன்று கண்ணோட்டங்களும் வழங்குவதை நாம் மறுக்க முடியாது. ஆனால் இப்பொழுதுதான் ஏதோ ‘புலி’ப் புரளியை சிங்களம் கிளப்பி விட்டிருப்பது போன்றும், கடந்த ஐந்தாண்டுகளில் இவ்வாறான புரளி எதனையும் சிங்களம் கிளப்பியதில்லை என்ற தொனியிலும் இக் கண்ணோட்டங்கள் அமைந்திருப்பதுதான் இப்பத்தியின் ஆதங்கமாகும்.
முள்ளிவாய்க்காலில் காயமடைந்த போராளிகளினதும், அங்கு நிர்க்கதியாக நின்ற பொதுமக்களினதும் நலன்களைக் கருத்திற் கொண்டு சிங்களப் படைகளுடன் பேசுவதற்காக 2009 மே 18ஆம் நாளன்று வெள்ளைக் கொடியுடன் நிராயுதபாணியாக தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் அணி சென்ற பொழுது இடைநிறுத்தம் பெற்ற ஆயுதப் போராட்டம் இன்று வரை மீளவும் ஆரம்பிக்கப்படவில்லை. மீண்டும் தமிழீழ மண்ணில் ஆயுதப் போராட்டம் வெடிக்குமா? இல்லையா? என்ற ஆராய்ச்சிகளுக்கு அப்பால் ஆயுதம் தழுவிய அடக்குமுறைகள் முடிவுக்கு வராத வரைக்கும் ஆயுதம் தழுவிய எதிர்ப்புப் போராட்டங்களும் முடிவுக்கு வருவதில்லை என்ற யதார்த்தத்தையே இப்பத்தியூடாக நாம் சுட்டிக் காட்டி வந்துள்ளோம். இந்த வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையில் மீண்டும் ஆயுதம் தழுவிய மண்மீட்புப் போராட்டம் ஆரம்பிக்குமா? இல்லையா? என ஆராய்வது அபத்தமானது என்பதே இப்பத்தியின் கருத்தாகும்.
ஆனால் அதற்காகச் சிங்களம் கிளப்பும் ‘புலி’ப் புரளியின் பின்னணி பற்றியும், இப்புரளிக்கு சிகரம் வைக்கும் வகையில் ஆயுதப் போராட்டத்தை மீண்டும் தொடங்குவதற்கான பிரயத்தனங்கள் இடம்பெற்று வருவதாகக் கடந்த ஐந்தாண்டு காலமாக மாறி மாறி அவிழ்த்து விடப்படும் புளுகு மூட்டைகள் பற்றியும் மக்களிடையே உண்மைகளை வெளிக்கொணரும் கடப்பாட்டிலிருந்து எந்தச் சூழலிலும் நாம் விலகி நிற்க முடியாது.
மே 18இற்குப் பின்னரான சூழமைவில் சிங்களத்தின் தாளத்திற்கு ஏற்ப முதன் முதலில் ‘புலி’ப் புரளியைக் கிளப்பி விட்டவர் வேறு யாருமல்ல: சாட்சாட் கே.பி தான் அப்புரளியைக் கிளப்பியவர். 2009 மே 19ஆம் நாளன்று சிறீலங்கா அரச ஊடகங்களில் தமிழீழத் தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்துக் காணொளிகள் காண்பிக்கப்பட்ட பொழுது உடனடியாக உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட கே.பி, ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருப்பதை உலகத் தமிழர்களுக்கு அறிவிக்கும் வகையில் தலைவருக்கான ‘வீரவணக்கப் பாடல்’ ஒன்றை எழுதித் தருமாறு கேட்டுக் கொண்டார். இதற்கு கவிஞர் காசியானந்தன், பழ.நெடுமாறன் ஐயா, வைகோ, அப்பொழுது தமிழகத்தில் தங்கியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாண சபையின் தற்போதைய உறுப்பினருமான ம.க.சிவாஜிலிங்கம் ஆகியோர் விளக்கம் கேட்ட பொழுது, ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டதாக விளக்கம் கொடுத்த கே.பி, இனிமேல் தமிழீழம் பற்றிப் பேசுவதில் பயனில்லை என்றும், மாற்றுத் தமிழ் இயக்கங்களுடன் (சிங்கள அரசின் ஒட்டுக்குழுக்கள் உட்பட) இணைந்து தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்றும் வேதாந்தம் பேசினார்.
எனினும் கே.பியின் பருப்பு கவிஞர் காசியானந்தன் அவர்களிடமோ, அன்றி பழ.நெடுமாறன் ஐயா, வைகோ, சிவாஜிலிங்கம் போன்றோரிடமோ வேகவில்லை. இதனால் செய்வதறியாது தடுமாறிய கே.பி, தமிழ்த் தேசிய எதிர்ப்பு ஊடகங்களைத் தொடர்பு கொண்டு, அவற்றின் வழியாக இதே கருத்தை உலகத் தமிழர்களிடம் கொண்டு செல்வதற்கு முற்பட்டார். கே.பி அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக இது உலகத் தமிழர்களின் கடும் எதிர்ப்பிற்கும், கண்டனத்திற்கும் ஆளாகியது. இதனையடுத்து ‘புலி’ப் புரளி கிளப்பும் புதிய யுக்தியை கே.பி அவர்கள் கையாளத் தொடங்கினார்.
இதன் முதற்கட்டமாக தமிழீழத்தை அமைப்பதுதான் தனது குறிக்கோள் என்று மீண்டும் அந்தர் பல்டி அடித்த கே.பி, விசுவநாதன் உருத்திரகுமாரன் தலைமையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கப் போவதாகப் பறை தட்டத் தொடங்கினார். ‘தமிழீழம்’, ‘அரசாங்கம்’ போன்ற கவர்ச்சிச் சொற்பதங்களைக் கையாண்டு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அலாவுதீன் மாயக் குகைக்குள் உலகத் தமிழர்களை சிக்க வைத்து, அதன் ஊடாக தமிழீழத் தேசியத் தலைவரின் கருத்தியல் தளத்தில் உறுதியாக நின்ற தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களை அந்நியப்படுத்துவதே கே.பியின் நோக்கமாக இருந்தது.
இதுபற்றி 2009 யூன் மாதம் மலேசியாவில் உருத்திரகுமாரனின் தலைமையில் சந்திப்பொன்றை கே.பி ஏற்பாடு செய்த பொழுது அதில் ம.க.சிவாஜிலிங்கம், கலாநிதி முருகர் குணசிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். இச் சந்திப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பற்றி உருத்திரகுமாரன் விளக்கிக் கொண்டிருந்த பொழுது குறுக்கிட்ட சிவாஜிலிங்கம் அவர்கள், “நீங்கள் கூறுவதைப் பார்த்தால் நீங்கள் அமைக்கப் போகும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிறீவ் கேசில் (சிறிய பயணப் பெட்டியில்) இயங்கப் போகின்றது போன்று அல்லவா தெரிகின்றது?” என்று எள்ளிநகையாடினார். அப்பொழுது கே.பி, உருத்திரகுமாரன் ஆகியோரின் முகத்தில் ஈயாடவில்லை என்று அக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகிறார்கள்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை கே.பி உருவாக்கியதன் பின்னணி பற்றிக் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த நூல் ஒன்றில் விளக்கியிருக்கும் கலாநிதி முருகர் குணசிங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகளையும், தமிழ்த் தேசிய அமைப்புக்களையும் சதி வலையன்றுக்குள் சிக்கவைத்து, தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதைப்பதே கே.பி, உருத்திரகுமாரன் போன்றோரின் அன்றைய நோக்கமாக இருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கவர்ச்சிப் பொருளை உலகத் தமிழர்களிடையே சந்தைப்படுத்த முற்பட்ட கே.பி, மறுபுறத்தில் ஆயுதப் போராட்டம் பற்றி இறுக்கமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த தமிழின உணர்வாளர்களைக் கவர்ந்திழுக்கும் நோக்கத்துடன் ஆயுதப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பது பற்றிய அறிவித்தல் ஒன்றை சனல்-4 தொலைக்காட்சி ஊடாக வெளியிட்டார். 2009 யூன் மாதம் சனல்-4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களை வலிந்து மலேசியாவிற்கு அழைத்த கே.பி, தனது தலைமைத்துவத்தை ஏற்று தமிழீழத்தின் வனப்பகுதிகளில் ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமான போராளிகள் நிலைகொண்டிருப்பதாகவும், தான் கட்டளை பிறப்பித்தால் மீண்டும் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்குவதற்கு அவர்கள் தயாராக இருப்பதாகவும் புதிய அறிவித்தலை விடுத்தார். இதுதான் கே.பி கிளப்பி விட்ட ‘புலி’ப் புரளி.
ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக 2009 மே மாதம் அறிவித்த அதே கே.பி தான், ஒரு மாதத்திற்குள் அந்தர் பல்டி அடித்து ஆயுதப் போராட்டத்தை தொடங்குவது பற்றிய அறிவித்தலை விடுத்தார். அத்தோடு கே.பி நின்றுவிடவில்லை. அப்பொழுது தென்தமிழீழத்தின் வனப்பகுதிகளில் மறைந்திருந்ததாக அறியப்பட்ட ராம், நகுலன் போன்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளையும், இந்தியாவில் தங்கியிருந்த தமிழீழ அரசியல்துறையை சேர்ந்த அமுதன் அல்லது சுரேஸ் (இப்பொழுது மாறன் என்று அறியப்படுபவர்) என்பரையும், தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையை சேர்ந்த விநாயகம் அல்லது அறிவழகன் என்றழைக்கப்படுபவரையும் தனது உதவிக்கு அழைத்து, தனது தலைமையை ஏற்றிருப்பதாக வெளிநாட்டுக் கிளைகளுக்கும், தமிழ்த் தேசிய அமைப்புக்களுக்கும் அறிவிக்குமாறு கட்டளை பிறப்பித்தார். இதனை சிரமேற் கொண்டு செயற்படுத்திய இவர்கள், கே.பியை ‘தேசியத் தலைவராக’ ஏற்குமாறு தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்களையும், வெளிநாடுகளில் இருந்த போராளிகளையும் நிர்ப்பந்திக்கத் தொடங்கினர்.
இதனை ஐரோப்பிய நாடொன்றில் உள்ள போராளி ஒருவர் ஏற்க மறுத்த பொழுது, அவரைக் கடுமையாகத் திட்டித் தீர்த்த அமுதன், ‘வெளிநாட்டில் ஏசி அறைக்குள் இருந்து கொக்கக் கோலா குடித்துக் கொண்டு தமிழீழம் பற்றிப் பேசுகிறாயா? போராட்டத்தை எப்படி நடத்துவது என்று உன்னைவிட எங்களுக்குத் தெரியும்?’ என்று சீறிப்பாய்ந்தார்.
இதன் பின்னர் 2009 யூலை மாதத்தில் கே.பியை தலைவராகக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீளமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து ராம், அமுதன் ஆகியோரால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. ‘தலைமைச் செயலகம்’ அல்லது ‘செயற்குழு’ என்று சுருக்கமாக அறியப்பட்ட இக்கும்பலின் பொறிக்குள் கணிசமான தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களும், ஊடகங்களும் அன்று சிக்கிக் கொண்டன. இதனை எதிர்த்து நிற்கத் திராணியற்றவர்கள் தாம் ‘உறைநிலையில்’ செல்வததாகக் கூறி, தமது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தினர்.
ஆனால் இக்கும்பல் உருவாக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் கே.பியின் கைது நாடகம் மலேசியாவில் அரங்கேறியது. இந் நாடகம் நிகழ்ந்தேறி ஓரிரு மாதத்திற்குள் தென்தமிழீழத்தில் ராம், நகுலன் ஆகியோரின் கைது நாடகமும் கனக்கச்சிதமாக அரங்கேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து கே.பி, ராம் ஆகியோருக்கு அடுத்தபடியாக நின்ற அமுதன் என்பவர் இக்கும்பலின் புதிய தலைவராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இருந்த பொழுதும் இவர்களின் பருப்பு புலம்பெயர்வாழ் தமிழர்களிடம் வேகவில்லை. இதனை சீர்செய்யும் நிமித்தம் அமுதனைத் தலைவராக ஏற்றுக் கொண்ட விநாயகம் என்பவரின் தலைமையிலான குழுவொன்று ஐரோப்பிய நாடுகளில் களமிறங்கியது. இறுதிப் போரில் சிங்களப் படைகளிடம் சரணடைந்த போராளிகளைக் கொண்ட இக்குழு, தமிழீழத்தில் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் நிமித்தம் தம்மை வெளிநாடுகளுக்கு தலைவர் அவர்களும், பொட்டு அம்மானும் அனுப்பி வைத்ததாகப் புதுக்கதையளந்து, கிளைகளையும், தமிழ்த் தேசிய அமைப்புக்களையும் உடைக்கும் முயற்சிகளில் முழுவீச்சுடன் இறங்கியது. இதன் ஓர் அங்கமாக 2011ஆம் ஆண்டு புலம்பெயர் தேசங்களில் போட்டி மாவீரர் நாள் நிகழ்வுகள் அறிவிக்கப்பட்டன. தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் மீது நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சேறு பூசும் படலம் தொடங்கப்பட்டது.
ஆனாலும் தமிழீழத் தேசியத் தலைவரின் கருத்தியல் தளத்திலிருந்து மக்களை அந்நியப்படுத்துவதற்கு இவர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் மண்கவ்விக் கொண்டன. போட்டி மாவீரர் நாள் நிகழ்வுகள் எதுவும் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடம் எடுபடவில்லை. இந்நிலையில் ஒற்றுமையின் பெயரிலும், வெளிநாட்டில் இருந்து தமிழீழ மண்ணில் ஆயுதப் போராட்டத்தை இறக்குமதி செய்வதற்கான ஆதரவைத் திரட்டுதல் என்ற போர்வையிலும், இப்பொழுது மீண்டுமொரு சூழ்ச்சிப் படலத்தை இக்குழு ஆரம்பித்துள்ளது. 2009 யூன் மாதம் கே.பியால் கிளப்பப்பட்ட ‘புலி’ப் புரளியின் தொடர்ச்சியாகவே இச்சூழ்ச்சியை இக்கும்பல் புரிகின்றது.
பேச்சை விட செயலுக்கே முன்னுரிமை கொடுப்பவர் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள். அப்படிப்பட்ட தலைவரின் வழிவந்த எந்தபொரு புலிவீரர்களும் பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள். அதே போன்று எந்தவொரு விடயத்திலும் முழுமையான இரகசியத்தைக் கடைப்பிடிப்பவர் தலைவர் அவர்கள். இது புலிவீரர்கள் ஒவ்வொருவருக்கும் பொருந்தும்.
எனவே தமிழீழத்தில் ஆயுதப் போராட்டத்தை இறக்குமதி செய்யப் போவதாக கே.பியின் வாரிசுகளால் தொடர்ச்சியாக அவிழ்த்து விடப்படும் புளுகு மூட்டைகள் அனைத்தும் வெறும் வாய்ச் சவடால்கள் என்பதை ஒவ்வொரு தமிழர்களாலும் புரிந்து கொள்ள முடியும். சாராம்சத்தில் இவ்வாய்ச் சவடால்கள் சிங்களம் கிளப்பி விட்டுள்ள ‘புலி’ப் புரளியை உண்மையாக்கும் நோக்கத்தைக் கொண்டிருப்பதையும் மறுக்க முடியாது.
தமிழீழ மண்ணில் மீண்டுமொரு ஆயுதப் போராட்டம் தொடங்கக் கூடாது என்பதில் சிங்கள அதிகார வர்க்கம் கங்கணம் கட்டி நிற்கின்றது. அதே நேரத்தில் ‘புலி’ப் புரளி கிளப்பிக் குளிர் காய வேண்டும் என்றும் சிங்கள அதிகார வர்க்கம் விரும்புகின்றது. இப்புரளி மூலம் தேசியப் பாதுகாப்பின் போர்வையில் தமிழின அழிப்பு நடவடிக்கைகளைத் தொடர்வதற்கான நியாயங்களை உலக அரங்கில் முன்வைக்க முடியும் என்றும், அதன் விளைவாக சிங்கள வாக்கு வங்கியை மடியில் கட்டி வைத்திருக்கலாம் என்றும் சிங்கள அதிகார வர்க்கம் திடமாக நம்புகின்றது.
தவிர ‘புலி’ப் புரளி கிளப்புவதன் மூலம் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் நிதிவளத்தைத் திசைதிருப்பிவிட்டு, தமது கஜானாவை நிரப்ப முடியும் என்றும் சிங்கள அதிகார வர்க்கம் கனவு காண்கின்றது. இதற்காகவே தமிழீழத்தில் ஆயுதப் படைகளையும், புலம்பெயர் தேசங்களில் தனது கைப்பாவைகளையும் சிங்களம் களமிறக்கியுள்ளது. தமது காவல்துறைக் காவலர் ஒருவரின் காலில் துப்பாக்கியால் சுட்ட புலிகளின் ‘புதிய தலைவருக்கு’ அடைக்கலம் கொடுத்தமைக்காக திருமதி ஜெயக்குமாரி அவர்களைக் கைது செய்ததாக சிங்களம் அறிவித்த பொழுது, அதற்குப் பதிலளித்து வடக்கு மாகாண சபையில் கருத்துக் கூறிய மாகாண சபை உறுப்பினர் ரவிகரன், ‘புலிகள் சுட்டால் குறிதவறுமா?’ என்று கேள்வியெழுப்பியிருந்தார். ஆயிரம் அர்த்தங்களுடைய இந்தக் கேள்வியை நாம் ஆராய்ந்தால் இன்னொரு உண்மை புலனாகும். குறிதவறாது சுடும் புலிகள் வாய்ச்சவடால் விடவும் மாட்டார்கள்: இரகசியங்களைப் பகிரங்கப்படுத்தவும் மாட்டார்கள் என்பதுதான் அது.
நன்றி: ஈழமுரசு
http://www.sankathi24.com/news/39796/64//d,fullart.aspx

Geen opmerkingen:

Een reactie posten