தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 maart 2014

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்தின் அறிக்கையை கவுன்ஸிலுக்கு சமர்ப்பிப்பதில் திருப்தியடைகிறேன்- நவநீதம்பிள்ளை!.

தன்னுடைய கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதில் அரசு எட்டிய முன்னேற்றங்களை இந்த அறிக்கை ஆராய்வதோடு, 2013 இல் என்னால் சமர்ப்பிக்கப்பட்டு கவுன்ஸிலினால் அங்கீரிக்கப்பட்ட அறிக்கை மற்றும் 2013 ஓகஸ்ட்டில் அந்த நாட்டிற்கு நான் விஜயம் செய்தமை ஆகியவை குறித்தும் ஆராய்கிறது.
மீள் கட்டமைப்பு, நாட்டுக்குள் இடம்பெயர்ந்தோரை மீளக்குடியமர்த்துதல், வடக்கு மாகாண சபைத் தேர்தல், மும்மொழிக் கொள்கையின் செயலாக்கம் போன்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் விடயங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கவுன்ஸிலின் 24ஆவது அமர்வில் அறிக்கையிடப்பட்டிருந்தது.
கவுன்ஸிலின் 22/1 பிரேரணையாலும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினாலும் அடையாளப்படுத்தப்பட்ட மிக முக்கிய விடயங்களில் – குறிப்பாக கடந்த காலங்களில் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் நம்பகரமான, சுயாதீனமான விசாரணை நடைபெறுவது உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்ற விடயத்தில் – மிகச் சிறியளவு முன்னேற்றமே உள்ளது என்பதை கவலையுடன் அறியத் தருகிறோம்.
பொறுப்புக் கூறல் மற்றும் மீள் நல்லிணக்கத் திட்ட நிரலை மேம்படுத்துவதற்கான குறிப்பான உள்ளீடுகள் விடயத்தில் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு முன் வருகின்றமை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் மீண்டும் மீண்டும் விடுக்கப்பட்ட அழைப்புக்கு இலங்கை அரசு சாதகமான பிரதிபலிப்பைக் காட்டவில்லை.
நாட்டுக்குள் இடம்பெயர்ந்தோர் தொடர்பான விடயங்களைக் கையாளும் விசேட அறிக்கையாளரின் இலங்கை விஜயம், கல்வி மற்றும் குடியேற்றம் தொடர்பான விடயங்களைக் கையாளும் விசேட நடைமுறைத் தரப்புகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு ஆகியவற்றை நாம் வரவேற்கும் அதேசமயம், சம்பந்தப்பட்ட ஏனைய உரிமைத் தரப்புகளையும் அழைக்குமாறு இலங்கை அரசைக் கோருகின்றோம்.
இலங்கையில் மனித உரிமைகளுக்காகப் போராடுவோரை இலக்கு வைத்து தொடர்ந்து மேற்கொள்ளப்படும் தொந்தரவுகள், அச்சுறுத்தல்கள் போன்றவற்றினால் நாங்கள் குழப்பமடைந்துள்ளோம். மனித உரிமைகள் பணியை முன்னெடுத்துக் கொண்டிருந்த இரண்டு முன்னணி அரச சாராத் தொண்டர் நிறுவனச் செயற்பாட்டளர்கள் கடந்த வாரம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டமை உட்பட இந்தக் கவுன்ஸிலின் அமர்வு நடைபெறுகின்ற இந்தச் சமயத்திலும் கூட அது தொடர்கின்றது.
அந்த இருவரின் விடுவிப்பை நாம் வரவேற்கிறோம். எனினும், அவர்கள் தொடர்ந்து கண்காணிப்புக்குள்ளும், கட்டுப்பாட்டுக்குள்ளும் வைக்கப்பட்டிருக்கின்றமை குறித்து நாம் கவலைப்படுகிறோம். யுத்தப் பிணக்கு முடிவுற்று ஐந்து வருடங்கள் கடந்து விட்டது. எனினும், ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கொல்லப்பட்டு, காயப்பட்டு, காணாமல் போகும் அளவுக்கு மோசமாக இடம்பெற்ற வன்முறைகளின் அதிர்வுகளையும் தாக்கத்தையும் கவுன்ஸில் நினைவு கொள்வது முக்கியமானதாகும்.
அவற்றில் பாதிக்கப்பட்டோர் மற்றும் தப்பிப் பிழைத்தோரின் வருத்தம் மற்றும் உள அதிர்ச்சி ஆகியவற்றை கவனிக்கத் தவறுவது நாட்டின் மீதும், மீள் நல்லிணக்கத்தின் மீதுமான நம்பிக்கையைப் பங்கப்படுத்தும். கடந்த கால மீறல்கள் குறித்து விசாரிக்கும் இலக்கோடு பல்வேறு பொறிமுறைகளை அரசு அண்மைய வருடங்களில் ஸ்தாபித்தது. எனினும் அவற்றில் எதுவும் பாதிப்புற்றோர் மற்றும் சாட்சிகள் இடையே நம்பிக்கையைத் தூண்டும் செயல்திறனுள்ள விதத்தில் சுயாதீனமானதாக அமையவேயில்லை. அதேசமயம் சாட்சியங்கள் புதிதாக வெளிவந்து கொண்டிருப்பதுடன், தாங்கள் நம்பிக்கைக் கொண்டிருக்கின்ற – அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய – சர்வதேச பொறிமுறை ஒன்றின் முன்னால் வந்து சாட்சியமளிக்க சாட்சிகள் தயராகவும் உள்ளனர்.
இது, சர்வதேச விசாரணையைக் காட்டாயமாக்குவதுடன் சாத்தியமாக்குகின்றது என்பதையும், உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை தோல்வியடைந்துள்ள சூழ்நிலையில், புதிய தகவல்களை வெளிக்கொணர்ந்து உண்மையை நிலைநாட்டுவதில் சாதகமாகப் பங்களிக்க முடியும் என்பதையும் காட்டுகின்றது.
ஆகவே, சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்பட்டன என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் மேலும் விசாரணை நடத்துவதற்கும் உள்நாட்டு நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்க்கும் சர்வதேச, சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்றை அமைக்குமாறு நாம் கவுன்ஸிலுக்கு பரிந்துரை செய்கிறோம்.
இது, இலங்கையில் எல்லோருக்கும் உண்மையின் உரிமை கிட்டுவதற்கும், நீதி, பொறுப்புக் கூறல், நிவாரணம் போன்றவற்றுக்கு மேலும் சந்தர்ப்பம் கிடைப்பதை உருவாக்கவும் அவசியமானதாகும். மத சிறுபான்மையினர் மற்றும் மனித உரிமைகளைப் பேணும் செயற்பாட்டாளர்கள் மீதும் கருத்து மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் மீதுமான தாக்குதல்கள் உட்பட நாட்டில் அண்மைக்காலத்தில் நிலவும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் மேலோட்டமான பார்வையை இந்த அறிக்கை தருகின்றது.
திருமதி நவநீதம்பிள்ளை
ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர்.
26/03/2014
- See more at: http://www.canadamirror.com/canada/23662.html#sthash.2Nt6ruOu.dpuf

Geen opmerkingen:

Een reactie posten