தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 5 maart 2014

ஜி.எல்.பீரிஸின் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸில் உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்


[ புதன்கிழமை, 05 மார்ச் 2014, 09:17.10 PM GMT ]
இன்று (புதன்கிழமை) இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கையின் சார்பில் சமர்ப்பித்த நாட்டின் அறிக்கை உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் சுதந்திரமான நிதி நிர்வாகத்தில் இல்லை. அதனால் அந்த அலுவலகத்தின் முழுமையான செயற்பாடுகளும் சுதந்திரமான செயற்பாட்டிலிருந்து விலகிச் செல்கின்றன.
உதாரணத்துக்கு நாடுகள் தொடர்பான விசேட நடவடிக்கையைப் பொறுத்த வரையில் மனித உரிமை மீறல்கள் மிக முக்கிய, அவசர கவனிப்பைப் பெறவேண்டிய கட்டாயத்தில் உலகின் வேறு பல நாடுகளில் தொடரும் அதேசமயம் அந்நாடுகளை விட்டுவிட்டு மற்றும் சில நாடுகள் இலக்கு வைத்துத் தெரிவு செய்யப்பட்டு அவற்றுக்கு எதிராக ஏறுமாறான விகிதத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
இதன் மூலம் சில நாடுகளுக்கு எதிராக அரசியல் நோக்கங்களை எட்டுவதற்கான கருவியாக மனித உரிமைகள் விவகாரம் பயன்படுத்தப்படும் சுரண்டல் நிலைமை தொடர்கின்றது. கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைப் போக்கும் இத்தகைய விதத்தில் தொடருவது கவலைக்குரியது.
இத்தகைய அரசியல் உள்நோக்கம் கொண்ட செயற்பாடுகள் கவுன்ஸிலின் உயர்நோக்கங்களுக்கும் கொள்கைகளுக்கும் மாறானவை. அதனால் அத்தகைய போக்கு கட்டுப்படுத்தப்பட வேண்டும். எனவே, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் நிதி விடயத்தில் சுதந்திரமாகச் செயற்படக்கூடிய பொறிமுறை அவசியம். எங்கள் நாட்டுக்கு எதிராக 'நாடுகளின் செயற்திட்டம்' என்ற பெயரில் சில குறிப்பிடப்பட்ட நாடுகளின் பணிப்பின் பேரில் இந்தக் கவுன்ஸிலில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை நாம் நிராகரிக்கும் அதேசமயத்தில் ஐ.நா.வுடன் தொடர்ந்து ஒத்துழைத்துப் பணியாற்றி வருகிறோம். எமது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைச் செயற்படுத்தி நல்லிணக்கத்தை முன்னெடுக்கும் முயற்சியில் எமது தேசிய நடவடிக்கைத் திட்டம் கடந்த பன்னிரண்டு மாதங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருக்கின்றது.
இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டு 19 மாதங்களே ஆகின்றது. அதன் செயற்பாடுகள் எமது ஜனாதிபதியின் செயலாளரின் மேற்பார்வையில் அமைச்சரவையின் செயலணி ஒன்றின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்படுகின்றன. முப்பது ஆண்டுகால பயங்கரவாதப் பிரச்சினைகளுக்குப் பின்னர் நாம் வெளிப்படுத்தி வரும் இந்த முன்னேற்றத்தை நன்நோக்குக் கொண்ட அவதானிகள் எவரும் பாராட்டுவர். காணாமற்போனோர் தொடர்பான ஆணைக்குழு ஒன்று 12 ஓகஸ்ட் 2013 இல் நியமிக்கப்பட்டு அதன் முதல் ஆறு மாத பதவிக் காலம் முடிவுற்ற நிலையில் அதன் பணியை அது பூர்த்தி செய்வதற்காக அந்தப் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆணைக்குழுவுக்கு இதுவரை 16 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது தனது விசாரணையை யாழ்.மாவட்டத்தில் பூர்த்தி செய்துள்ளது. மார்ச் இறுதியில் கிழக்கில் ஆரம்பிக்கவுள்ளது. இந்த விசாரணைகள் வெளிப்படையானவை. பொதுமக்கள் அவற்றைப் பார்வையிட முடியும். காணாமற்போனோர் குறித்த முறைப்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்காக இலங்கையைச் சேர்ந்த அகதிகளுக்கு இடமளித்து வரும் வெளிநாடுகளிடம் அத்தகைய அகதிகள் குறித்த தகவல்களை நாம் வேண்டியிருந்தோம். ஆனால் தனிப்பட்டவர்களின் தகவல்களைத் தரமுடியாது என அவை கைவிரித்து விட்டன. இத்தகைய நிலைப்பாடு மேற்படி ஆணைக்குழுவின் செயற்பாட்டை பெரிதும் பாதித்துள்ளது. விருப்புக்கு மாறாக பலவந்தமாகக் காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான செயலணிக் குழுவின் அறிக்கையாளரினால் 2014 பெப்ரவரி 14 ஆம் திகதி பொதுவான குற்றச்சாட்டுகளோடு எமது அரசுக்கு அனுப்பட்ட கடிதத்துக்கு நாம் விவரமான - விளக்கமான - பதிலை வழங்கியுள்ளோம்.
காணாமற்போனோர், தேடப்படுவோர் போன்ற விவகாரங்களில் எமது அரசு செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவுடன் இணைந்து காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. 1982 இற்குப் பின்னர் உள்நாட்டு யுத்தத்தில் சிக்கி உயிரிழந்தோர், காயமடைந்தோர் மற்றும் சொத்து, உடைமைகள் இழப்பு போன்ற விடயங்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தகவல் திரட்டின் அடிப்படையிலான பூர்வாங்க அறிக்கை சில வாரங்களில் கிடைக்கும் என நம்புகிறோம்.
திருகோணமலையில் 5 மாணவர்கள் உயிரிழந்தமை தொடர்பான சுருக்க முறையற்ற நீதிவான் விசாரணை 2013 செப்டெம்பர் 9 ஆம் திகதி ஆரம்பித்துள்ளது. 14 பேரின் சாட்சியங்கள் நிறைவுற்றுள்ளன. மூதூரில் 'அக்‌ஷன் பாம்' தொண்டு நிறுவன ஊழியர்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் வழிகாட்டலில் புலன் விசாரணைகள் நடக்கின்றன. இராணுவக் கொமாண்டோக்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களை அடையாளம் கண்டு வாக்குமூலம் பதியும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஷெல் தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்ட விடயம் தொடர்பில் இராணுவ நீதிமன்றின் முதற்கட்ட விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளன.
அத்தாக்குதல்கள் இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்டவை அல்ல, புலிகளின் தாக்குதல்களினால் பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்ற தீர்மானத்துக்கு அந்த இராணுவ நீதிமன்றம் வந்துள்ளது. 'சனல் 4' குற்றச்சாட்டுக்களை மேற்படி இராணுவ நீதிமன்றம் இரண்டாம் கட்டத்தில் தனது விசாரணைக்கு இப்போது எடுத்துக் கொண்டுள்ளது.
சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டோரைப் பாதுகாக்கும் சட்டத்தைத் தாயரிக்கும் நடவடிக்கையில் இலங்கை இப்போது ஈடுபட்டுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாக இதுவரை யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் மற்றும் நஷ்டஈட்டைப் பெற்றுத் தருவதற்கான நிதியைத் திரட்டுவதில் எமது அரசு ஈடுபட்டுள்ளது. அதேபோன்று யுத்தப் பிரதேசத்தில் உடற்பாதிப்புற்றோருக்கு வீடு, வாழ்வாதார உதவிகளை வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வடக்கு, கிழக்கில் ஏறத்தாழ 4 ஆயிரம் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. காணிப் பிணக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டு வருகின்றது. பலாலியிலும் சம்பூரிலும் உயர்பாதுகாப்பு வலயப் பிரதேசங்கள் மிகவும் சிறியவையாகக் குறைக்கப்பட்டு பெரும்பாலான இடங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. வடக்கிலும், கிழக்கிலும் உற்பத்தி வீதம் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது. வேலையில்லாப் பிரச்சினை குறைந்துள்ளது. வடக்குக்கான ரயில் பாதை சீர்செய்யப்பட்டு வருகின்றது. பிரதான மின் விநியோக வலையமைப்புடன் வடக்கும் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் அல்லாதோரை குடியேற்றுவதன் மூலம் வடக்கின் குடிப்பரம்பலை மாற்ற முயற்சிகள் எடுக்கப்படுகின்றன எனக் குற்றம் சுமத்தப்படுகின்றது.
1980 களில் விடுதலைப் புலிகளினால் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட முன்னர் வடக்கில் 75 ஆயிரம் முஸ்லிம்களும், 35 ஆயிரம் சிங்களவர்களும் இருந்தனர். சிங்களவர்களும் வடக்கில் அமைதியாகச் சேர்ந்து வாழ முடிந்தது. பிணக்கு வெடித்ததும் புலிகளால் அவர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.
இன்று கொழும்பு நகரில் 51 வீதத்தினர் சிங்களவர்கள் அல்லாதோர். இது, இலங்கை மக்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப இடத்தைத் தெரிவு செய்து வாழமுடியும் என்பதற்கும், எந்த இடத்தையும் பிரத்தியேகமான இனம் சார்ந்த பிரதேசமாக்கும் முயற்சிகள் எடுக்கப்படவேயில்லை என்பதற்கும் நல்ல சான்றாகும்.
மேலும் தமிழர்களின் சனத்தொகையில் 32 வீதத்தினரே வடக்கில் வாழ்க்கின்றார்கள் என்பதும் எஞ்சியோர் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வாழ்கின்றனர் என்பதும் இதனை மேலும் சான்றுப்படுத்தும்.
சரணடைந்த 12 ஆயிரத்து 288 புலி வீரர்களில் 2014 மார்ச் 3 ஆம் திகதி வரை 96.9 வீதத்தினர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுவிட்டனர். 157 பேருக்கு இப்போது புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகின்றது. 85 பேர் சட்ட நடவடிக்கைகளின் கீழ் உள்ளனர். யுத்தம் முடிவடைந்தமையை அடுத்து முன்னர் யுத்தம் நடைபெற்ற இடங்களில் இருந்து இராணுவப் பிரசன்னம் ஒழுங்கு முறையில் குறைக்கப்பட்டு வருகின்றது.
2009 இலிருந்து, 2013 ஒக்ரோபரில் வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் ஆளணி வலிமை 30 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. இந்தக் குறைப்பு தொடர்கிறது.
கிழக்கு மாகாணத்தில் இந்தக் குறைப்பு ஏறத்தாழ 26 வீதமாகும்.
வடக்கில் பாலியல் ரீதியாக பெண்கள் துன்புறுத்தப்படும் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய ஆபத்துக்கும் இராணுவ பிரச்சனத்துக்கும் இல்லாத ஒரு தொடர்பை - முடிச்சை - போடும் எத்தனம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் விடயத்தை இலங்கை பொறுத்துக் கொள்ளவே மாட்டாது என்பதைத் தெளிவுபடுத்தும் அதேசமயத்தில் பாதுகாப்புப் படையினர் தொடர்புபட்ட அத்தகைய வழக்குகளில் அரசு திட்டவட்டமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது, இனியும் எடுக்கும் என்பதை உறுதிப்படத் தெரிவிக்கிறேன்.
வடக்கிலும், கிழக்கிலும் சிவில் நிர்வாகம் முழு அளவில் செயற்படுகின்றது. வடக்கில் மாகாண சபைத் தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மாகாண சபையின் ஊழியர்களை, குறிப்பாக ஆளுநரை நியமிக்கின்றமை நிறைவேற்று அதிகாரத்தின் முடிவாக இருக்கின்றபோது, அதில் அரசுக்கு அழுத்தங்களைத் தரமுடியும் என வெளிச்சக்திகள் நினைப்பது கவலைக்குரியதாகும். அரசின் செயற்பாடு தொடர்பில் அத்தகைய அழுத்தங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல; அத்தோடு சர்வதேச உறவுகளின் செயற்பாட்டுக்கும் ஏற்புடையதல்ல.
இறுதியான அரசியல் தீர்வை எட்டுவதற்காக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 21 அரசியல் கட்சிகளினதும் பங்குபற்றுதலுடன் நாடாளுமன்றத் தெரிவுக்குழு உருவாக்கப்பட்டது. அதன் நோக்கம் பற்றிய வசன வடிவம் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்துதான் உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் நடவடிக்கைகளில் பங்குபற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து மறுத்து வருகின்றமை துரதிஷ்டவசமானது.
கூட்டமைப்பின் இந்த அணுகுமுறைதான் எந்தத் தீர்வுக்கும் இடையூறு ஆகும். எனினும், கூட்டமைப்பின் பங்குபற்றுதலின்றியே நாடாளுமன்றத் தெரிவுக் குழு தனது ஆராய்வுகளை முன்னெடுக்கிறது.
இலங்கையில் நான்கு பிரதான மதங்களும் இணைந்தே இருந்து வந்துள்ளன. அனைவருக்கும் மதச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
நான்கு மதங்களினதும் வழிபாட்டுத் தலங்களுமே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன என்பது கவனிக்கத்தக்கது. மதத் தலங்கள் மீதான தாக்குதல்களை அரசு பொறுத்துக் கொள்ளவே மாட்டாது. அத்தகைய தாக்குதல்களில் ஈடுபட்டோர் மீது பாரபட்சம் காட்டப்படாமல் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
நீதித்துறைச் சுதந்திரம் முழு அளவில் பேணப்படும் நிலையில் நீதித்துறை நிர்வாகம் முன்னெடுக்கப்படுகின்றது.
மனித உரிமைகளுக்காகப் போராடுவோரைப் பாதுகாப்பதற்கு இலங்கை அரசு முழு அளவில் திடசித்தம் கொண்டுள்ளது.
ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம், மனித உரிமைகள் கவுன்ஸில் மற்றும் ஐ.நாவின் இத்தகைய அலுவலகங்கள், அது போன்ற சர்வதேச அமைப்புகள் போன்றவை எல்லாவற்றுடனும் இலங்கை சுமுக உறவைப் பேணி செயற்பட்டு வருகின்றது.
இலங்கை தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை நாம் நிராகரிக்கின்றோம் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten