தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 29 juni 2011

மீண்டும் தலைதூக்கும் வன்முறைகள்…!!! மே18 இயக்கம்

By athirady • June 28, 2011

அண்மையில் புலம் பெயர் நாடுகளில் நடைபெற்ற சம்பவங்களின் தொடர்ச்சியாக, லண்டன் நகரில் மாற்று கருத்துக்களைக் கொண்டிருந்தவர்கள், புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டுள்ளார்கள், ஒரு மாபெரும் விடுதலைப் போராட்டமானது இப்படியாக முள்ளிவாய்க்காலில் சென்று முடிந்தது ஏன் என்பது தமிழ் மக்களுக்கும், அதன் நேச சக்திகளுக்கும் இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது. இந்த நிலையில் விரிவான விவாதங்களும், மனம் திறந்த உரையாடல்களும் மிகவும் அத்தியாவசியமானவையாகும். இந்த விதமான வன்முறைகள் இந்த உரையாடல் வெளியை மூடுவதற்கு பிற்போக்கு சக்திகள் செய்யும் முயற்சிகளின் வெளிப்பாடுகளேயாகும். காற்று வருவதற்குள்ள அத்தனை கதவுகளையும் அடைத்துவிடுவதன் மூலமாக தேசத்தின் ஆன்மாவை கொன்றுவிடுவதற்காக சிலர் முனைகிறார்கள்.
கடந்த முப்பது வருடமாக, மக்களை நேசித்த பல போராளிகளும், மக்களும் தமது கருத்துக்களுடன் முரண்பட்டார்கள் என்ற ஓரே காரணத்திற்காக புலிகள் உற்பட அனைத்து ஆயுதம் தாங்கிய அமைப்புக்களினாலும் வன்முறை கொண்டு நசுக்கப்பட்டார்கள்: அழித்தொழிக்கப்பட்டார்கள். ஆனால் இந்தவிதமான ஒடுக்குமுறைகள் எதுவுமே புலிகளையோ அல்லது தமிழ் மக்களது போராட்டத்தையோ பாதுகாக்க பயன்படவில்லை என்பதும், புலிகளது அழிவுக்கு மாத்திரமல்லாது, மக்களுக்கு இருந்திருக்கக்கூடிய மாற்று தலைமைகளையும் இல்லாமற்செய்து, மக்களை அரசியல் அநாதைகளாக ஆக்கியுள்ளது. முள்ளிவாய்க்காலில் இருந்து நாம் பெறக்கூடிய முக்கிய படிப்பிணை இதுவாகும்.
ஒரு மாபெரும் தோல்வியில் இருந்து மீண்டெழ முயற்சிக்கும் நாங்கள், சிறீலங்கா அரசை தனிமைப்படுத்தவும், அனைத்து முற்போக்கு, ஜனநாயக, தேசபக்த சக்திகளையும் ஒன்றுபடுத்த எம்மாலான அனைத்தையும் செய்தாகவேண்டிய நிலையில் இருக்கிறோம். இப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான தருணத்தில் மாற்று கருத்தைக் கொண்டுள்ள போராட்ட சக்திகள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவது என்பது மீண்டும் போராட்ட சக்திகளை சிதறடித்து எதிரிக்கு உள்நாட்டிலும், சர்வதேச அரங்கிலும் சாதகமான நிலைமையை தோற்றுவிக்கும் என்பதை திட்டவட்டமாக சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
சிறீலங்கா அரசானது புலம்பெயர்ந்த தமிழர்களால் முன்னெடுக்கப்படும் அத்தனை முயற்சிகளையும் சிதறடிப்பது என்ற ஒரு நிகழ்ச்சிநிரலுடன் திட்டமிட்டு செயற்படுகிறது. இந்த குண்டர்கள், தெரிந்தோ தெரியாமலோ, தமிழ் மக்களது தேசிய அபிலாசைகளுக்கு குழிபறிக்கும் சிறீலங்கா அரசின் முயற்சிக்கு துணைபோகும் காரியத்தைத்தான் இத்தகைய செயற்பாடுகள் மூலமாக செய்து முடிக்கிறார்கள். இப்படிப்பட்ட அரசியல் அநாதைகளினால் தமிழ் மக்களது நியாயமான போராட்டமானது திசைதிருப்பப்படுவது தொடர்ந்தும் அனுமதிக்கப்பட முடியாது. சிறீலங்கா அரசின் முயற்சிகளுக்கு, உள்ளிருந்து துணைபோகும் இத்தகைய கருங்காலிகளை தனிமைப்படுத்துவது அவசியமானது.
கடந்த காலத்தில் இப்படிப்பட்ட சக்திகளினால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறுபட்ட தனிநபர் தாக்குதல்கள், படுகொலைகள், ஜனநாயக மறுப்புக்கள் போன்ற அனைத்தையும் பயன்படுத்தித்தான் சர்வதேச அரங்கில் உள்ள பிற்போக்கு சக்திகள், புலிகள் அமைப்பை தடைசெய்யவும், எமது போராட்டத்தை பயங்கரவாத போராட்டமாக சித்தரிக்கவும் செய்தன. இந்த நாடுகளில் உள்ள பிற்போக்கு சக்திகளுக்கு எமது போராட்தை காட்டிக்கொடுக்கும் செயலாகவே இவை புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
அரசியல் கருத்துக்களை கருத்துக்களால் முகம்கொடுக்க முடியாத பலவீனம் கொண்டவர்கள் எந்தவொரு போராட்டத்திற்குமே இலாயக்கற்றவர்கள்.. மாற்று கருத்துக் கொண்டவர்கள் மீதான இப்படிப்பட்ட தாக்குதல்களை நாம் வன்மையாக கண்டிப்பதுடன், எமது தேசத்தின் எதிர்காலம் குறித்த அக்கறை கொண்டவர்கள் இப்படிப்பட்ட வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர தம்மால் ஆன அனைத்தையும் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அனைத்து முற்போக்கு, ஜனநாயக, தேசபக்த சக்திகளும் இப்படிப்பட்ட அர்த்தமற்ற வன்முறைகளை பகிரங்கமாக கண்டிக்க முன்வரவேண்டும் என்று நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்.
தோல்விகளில் இருதுந்து கற்றுக் கொள்வோம்!

மக்கள் மீதும், மாற்றுக் கருத்தாளர்கள் மீதும் நடத்தப்படும் வன்முறைகளுக்க முடிவு கட்டுவோம்!!
விரிவான ஜனநாயகத்தை உத்தரவாதப்படுத்தாமல் தமிழ் தேசத்திற்கு விடிவு கிடையாத என்பதை மனதில் பதித்துக் கொள்வோம்!!!
தேடகம்
அசை
மே18 இயக்கம்.
ஜுன் 27, 2011

Geen opmerkingen:

Een reactie posten