தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 13 juni 2011

இந்தியாவிடம்; இருந்து தப்பிச்சென்றார் பிரபாகரன் நிராஜ் டேவிட்!

24.05.1982 அன்று சென்னை பாண்டி பஜாரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் அவர்களுக்கும், புளொட் அமைப்பின் தலைவர் உமா மகேஸ்வரனுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை ஒன்று இடம்பெற்றதைத் தொடர்ந்து, அந்த இரண்டு தலைவர்களும் இந்தியப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டது பற்றி கடந்த வாரம் பார்த்திருந்தோம். கைது செய்யப்பட்ட போராளித் தலைவர்கள் ஸ்ரீலங்காப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட இருந்த தறுவாயில், தமிழ் நாட்டில் உள்ள 20 கட்சிகள் ஒன்று கூடி தீர்மாணம் நிறைவேற்றி, அதை தடுத்து நிறுத்தியது பற்றியும் பார்த்திருந்தோம்.

பாண்டிபஜார் சம்பவத்தைத் தொடர்ந்து இடம்பெற்ற வேறு சில சம்பவங்கள் பற்றியும், அவற்றில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் வெளிக்காண்பி;த்த அர்ப்பணிப்புக்கள் பற்றியும், இந்த வாரம் பார்ப்போம்.
தமிழனின் கடமை

பாண்டிபஜார் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ் நாட்டில் தங்கியிருந்த விடுதலைப் போராளிகளைத் தேடி, தமிழ்நாட்டுப் பொலிசார் வேட்டையில் இறங்கியிருந்தார்கள். தமிழ் நாட்டில் துப்பாக்கிக் கலாச்சாரம் உருவாகுவதைத் தடுக்கவேண்டும் என்று பல்வேறு பிராமணியப் பத்திரிகைகள் வரிந்துகட்டிக்கொண்டு எழுத ஆரம்பித்திருந்ததாலும், இந்தியாவின் நடுவன் அரசின் அழுத்தங்களினாலும், இப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு பொலிசார் நிர்பந்திக்கப்பட்டார்கள்.

சென்னையிலுள்ள நெடுமாறனின் வீட்டையும் தமிழ்நாடு பொலிசார் சோதனையிட்டார்கள். அவரிடம் ஒரு வாக்குமூலத்தையும் வாங்க விரும்பினார்கள். பழ.நெடுமாறன் பின்வருமாறு வாக்குமூலம் வழங்கினார்: ‘பிரபாகரனுக்கும், மற்ற விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் நான் எனது வீட்டில் அடைக்கலம் கொடுத்தது உண்மைதான். ஒரு தமிழன் என்ற முறையில் எனது வரலாற்றுக் கடமையை நான் செய்தேன். சிங்கள வெறியர்களின் கொடுமைக்கு ஆளாகி உயிர் தப்பியோடிவரும் ஈழத்தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்து, ஆதரிக்கவேண்டியது ஒவ்வொரு தமிழ்நாட்டுத் தமிழனினதும் கடமையாகும். இந்தக் கடமையைத்தான் நான் செய்தேன் எதிர்காலத்திலும் அவ்வாறே செய்வேன்’ என்று வாக்குமூலம் கொடுத்தார்.

பொலிசார் திடுக்கிட்டுப் போனார்கள். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். ‘குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயங்கரவாதிகள். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கம் அவர்கள் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியிருக்கின்றது. இந்த நிலையில் நீங்கள் இப்படியான வாக்குமூலத்தைக் கொடுப்பது உங்களுக்கு அவ்வளவு நல்லதல்ல. ஒருவேளை உங்களுக்கே இது ஆபத்தைத் தோற்றுவித்துவிடலாம்’ என்று பொலிசார் நெடுமாறனுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.

‘அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. எந்த விளைவுகளையும் சந்திப்பதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்’ என்ற தெரிவித்தார் நெடுமாறன்.

மறைந்திருந்த புலிகள்:
இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும், சென்னையில் தங்கியிருந்த விடுதலைப் புலி முக்கியஸ்தர்களையும், புலிப் போராளிகளையும் காப்பாற்றவேண்டிய பொறுப்பை பழ.நெடுமாறன் எடுத்திருந்தார். கிட்டு, ரஞ்சன், பண்டிதர், சீலன், புலேந்திரன், பொன்னம்மான், பேபி சுப்பிரமணியம் போன்ற விடுதலைப் புலி முக்கியஸ்தர்களை ‘பாபநாசம்’ என்ற இடத்திலுள்ள தனது வீட்டில் நெடுமாறன் மறைத்துவைத்தார். ஒரு நாள், இரண்டு நாட்கள் அல்ல, மாதக்கணக்கில் அவர்கள் அங்கு தங்கியிருக்க ஏற்பாடு செய்தார்.

அதேபோன்று பாண்டிபஜார் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களையும், மதுரையில், ‘மேலமாசி வீதி’யிலுள்ள தனது இல்லத்தில் தங்கவைத்திருந்தார். சுமார் ஏழு மாதங்கள் வரை, புலிகளின் தலைவர் அங்கு தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது.

தப்பிய புலிகளின் தலைவர்:
பாண்டிபஜார் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும் புளொட் அமைப்பின் தலைவர் உமாமகேஸ்வரனும், சில மாதங்களின் பின்னர் பிணையில் விடுதலையானார்கள். புலிகளின் தலைவர் பிரபாகரன் மதுரையிலும், உமாமகேஸ்வரன் சென்னையிலும் இருக்கவேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் ஒருவரை ஒருவர் சந்திக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருந்தது. நீதிமன்ற ஆணையின் பிரகாரம்தான் புலிகளின் தலைவர் பிரபாகரன் மதுரையில் நெடுமாறன் அவர்களது இல்லத்தில் தங்கியிருக்கவேண்டி ஏற்பட்டது. மதுரையில் தங்கியிருந்த பிரபாகரன் தினமும் பொலிஸ் நிலையம் சென்று கையொப்பம் இடவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அத்தோடு அவருக்கு காவலாக மூன்று பொலிஸார் 24 மணி நேரமும் கூடவே இருந்தார்கள்.

இந்த நிலையில், ஈழத்தில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகள் காரணமாக, புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஈழத்திற்குத் திரும்பவேண்டிய அவசியம் உருவானது.

நிலமையை பழ.நெடுமாறனிடம் எடுத்துக் கூறினார். அதற்கு நெடுமாறன் தடை எதுவும் கூறவில்லை. ‘உங்களுக்கு எது உசிதம் என்று படுகின்றதோ, அப்படியே செய்யலாம்’ என்று பதிலளித்தார் நெடுமாறன்.
தலைவர் பிரபாகரன் தப்பிச்செல்வதற்கான உதவிகளையும் அவர் செய்யத் தயங்கவில்லை.

வழக்கிற்காக சென்னைக்கு புறப்பட்ட புலிகளின் தலைவர் பிரபாகரன் நடுவழியில் திடீரென்று மாயமாக மறைந்துவிட்டார். அவருக்குப் பாதுகாப்பாகப் பயணம் செய்துவந்த பொலிஸ் அதிகாரிகள் சென்னைக்கு வந்து சேர்ந்தபின்னர்தான், பிரபாகரன் பயணம் செய்த வாகனத்தில் பிரபாகரன் இல்லாதது கண்டு திகைப்படைந்தார்கள்.�

‘யாழ்பாணம் போய்விட்டார்’:
உடனடியாக பழ.நெடுமாறனை பிடித்துக்கொண்ட தமிழ்நாடு காவல்துறையினர் ‘பிரபாகரன் எங்கே?’ என்று அவரைத் துளைத்தெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். விசாரணைகளின் போது நெடுமாறன் உண்மையைக் கூறினார். ‘பிரபாகரன் பத்திரமாக யாழ்பாணம் போய்ச் சேர்ந்துவிட்டார்’ என்று அவர் தெரிவித்தார். நெடுமாறன் கூறியதை பொலிசார் நம்பவில்லை.

‘பாண்டிச்சேரியில் அல்லது பெங்கலூரில்தான் பிரபாகரன் மறைந்துகொண்டிருக்கவேண்டும். உண்மையைக் கூறுங்கள்’ என்று நெடுமாறனை நெருக்கினார்கள். ‘அப்படியானால் பிரபாகரனை அங்கு போய் தேடுங்கள்’ என்றார் நெடுமாறன்.

அவர்களால் நெடுமாறன் கூறியதை நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
அதன் பின்னர் உயர் அதிகாரி ஒரவர் நெடுமாறனைச் சந்தித்து, ‘பிரபாகரன் தப்பிச் சென்றதன் விளைவாக சில அப்பாவிப் பொலிசார் கடும் நடவடிக்கைக்கு ஆளாகி இருக்கின்றார்கள். தயவுசெய்து அவரைத் திரும்பி வரச்சொல்லங்கள். அவர் வெளியே இருப்பது அவரது உயிருக்கே ஆபத்தாக முடிந்தவிடும். அவர் எங்கே இருக்கின்றார் என்ற கூறுங்கள். அவருக்கு எந்த ஊறும் விளைவிக்காமல் அவருக்கு நாங்கள் பாதுகாப்புக் கொடுக்க ஏற்பாடு செய்கின்றோம்..’ என்றெல்லாம் கூறிப்பார்த்தார். அதற்கு நெடுமாறன், ‘பிரபாகரன் இங்கில்லை. நீங்கள் எங்கு தேடினாலும் பயனில்லை. அவருடைய நாட்டிற்கு அவர் போய்ச் சோந்துவிட்டார். அவர் தப்பிச் செல்வதற்கு உதவியாக இருந்தேன் என்பதற்காக வேண்டுமானால் என்னைக் கைது செய்யுங்கள். இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை’ என்ற கூறிவிட்டார்.
நெடுமாறன் கூறியதை அவர்கள் நம்பவில்லை. தமிழ் நாடு முழுவதும் பிரபாகரனைச் சல்லடை போட்டுத்; தேடினார்கள். தமிழ் நாட்டிற்கு வெளியேயும் அவர்கள் தேடினார்கள். புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்தியாவை விட்டுத் தப்பிச் சென்றதை உறுதிப்படுத்த அவர்களுக்குப் பல மாதங்கள் தேவைப்பட்டன.

பழ.நெடுமாறன் என்ற தமிழ்நாட்டுத் தலைவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு உதவியாகவும், உறுதுணையாகவும் செயற்பட்ட பல சந்தர்ப்பங்களுள் இதுவும் ஒன்று.
தொடரும்….
12 Jun 2011

Geen opmerkingen:

Een reactie posten