தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 juni 2011

வை.கோ ஆற்றிய பிரசெல்ஸ் பெல்ஜிய உரையில் வெளிவந்த உண்மைகள்!!

ஐரோப்பாவில் வசந்த காலத்தை இப்போது அனுபவித்தீர்கள். அதுபோல, ஈழத்தமிழ் மக்களுக்கும் வசந்தம் விடியட்டும். அதற்கு, உலகின் ஜனநாயக நாடுகள், பாதை அமைக்கட்டும். பிரஸ்ஸல்சில் நடக்கும் இந்தக் கூட்டம் அதற்கு வழி காட்டட்டும்.

ஈழத் தமிழரின் கண்ணீரை, அனைத்து உலக நாடுகள், பல ஆண்டுகள் கண்டு கொள்ளவில்லை. அவர்களின் மரண ஓலம் உலக நாடுகளின் செவிகளில் ஏறவில்லை. ஐ.நா. மன்றம் தன் கடமையை ஆற்றவில்லை. இருப்பினும், ஈழத் தமிழர்களுடைய கொடுந்துயரத்தை உணர்ந்து, ஐரோப்பிய நாடாளுமன்றம், 2009 மார்ச் 12ம் நாள், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதற்காக, தரணி வாழ் தமிழர்களின் சார்பில், என் இதயத்தின் அடித்தளத்தில் இருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மார்சுகி தாருஸ்மன் தலைமையில் அமைக்கப்பட்ட ஐ.நாவின் மூவர் குழு, வெளியிட்டு உள்ள அறிக்கையில், சில பக்கங்களை வாசிக்கவே மனம் நடுங்கியது. இதோ, இதயத்தை ரணமாக்கும் அந்தப் பகுதிகளை இங்கே நான் வாசிக்கின்றேன்.

மருத்துவமனைகள் மீது குண்டு வீசப்பட்டது. படுகாயமுற்றவர்களுக்கு மருந்து இல்லை. அறுவைச் சிகிச்சை செய்து அகற்ற வேண்டிய நிலையில், அதற்கான மயக்க மருந்துகள் இல்லை. கசாப்புக் கடைகளில் பயன்படுத்தப்படும் பட்டாக் கத்திகளைக் கொண்டு, உறுப்புகளை வெட்டினார்கள். குழந்தைகளுக்குப் பால் பவுடர் வாங்க வரிசையில் நின்ற தாய்மார்கள் குண்டுவீச்சில் கொல்லப்பட்டுச் செத்துக் கிடந்தபோது, அவர்கள் கைகளில் பால் பவுடர் அட்டைகள் இருந்தன.

தமிழர்களின் பிணங்கள் ஆங்காங்கு சாலை ஓரங்களில் சிதறிக் கிடந்தன. பக்கத்திலேயே படுகாயமுற்றவர்கள் மரண வேதனையில் துடிதுடித்தபோது, எந்த உதவியும் கிடைக்கவில்லை. தமிழர் பிணங்களின், அழுகிப் போன உடல்களின் நாற்றம், காற்று மண்டலத்தை நிறைத்தது. தமிழ்ப்பெண்கள் தனியாக இழுத்துச் செல்லப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டனர். கற்பழித்துக் கொல்லப்பட்டனர்.

விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசனையும், அமைதிச் செயலகத்தின் தலைவர் புலித்தேவனையும், ஆயுதங்களை மெளனித்து விட்டோம் என்று அறிவித்து விட்ட நிலையில், அவர்கள் தங்களை ஒப்படைத்துக் கொள்ளலாம் என்று சிங்கள அரசு அறிவித்து விட்டு, ஐ.நா. அதிகாரிகளுக்கும், நோர்வே, பிரிட்டன், அமெரிக்க அரசுகளுக்கும் தெரிவித்து விட்டு, அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வெள்ளைக் கொடி பிடித்து வந்தபோது, சுட்டுப் படுகொலை செய்தது கொடுமையிலும் கொடுமை அல்லவா?

அனைத்து உலக நாடுகளின் மனசாட்சி செத்துப் போய் இருந்ததா?. ஐ.நா. மன்றம் தன் கடமையைச் செய்யவில்லை என்று மூவர் குழு சொல்லிவிட்டது.

ஈழத் தமிழரின் தேசியப் பிரச்சனையின் அடிப்படை என்ன, வரலாறு என்ன என்பதை, இந்த அமர்வு ஆய்வு செய்கிறது. ஈழத் தமிழர்கள்தான், இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு பகுதிகளின் பூர்வீகக் குடிமக்கள். வரலாற்றின் வைகறைக் காலத்தில் இருந்து, சுதந்திர அரசு அமைத்து, தனித்துவமான நாகரிகத்தோடு வாழ்ந்தனர். அவர்கள்தான் பூர்வீகக் குடிமக்கள் என்று, இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார், இந்திய நாடாளுமன்றத்தில் ஆற்றிய தன் கடைசி உரையில் குறிப்பிட்டார்.

போர்த்துகீசியர் படை எடுத்தனர். 1619ல் தமிழர்கள் தங்கள் அரசை இழந்தனர். 1638ல் டச்சுக்காரர்கள் தமிழ் ஈழத்தைக் கைப்பற்றினர். பின்னர், பின்னர் 1796ல் பிரிட்டன் படைகள் வந்தன. நிர்வாக வசதிக்காக, தமிழர்களையும், சிங்களவர்களையும் தங்கள் காலனி ஆட்சியின் கீழ் ஒன்றாக்கினர்.

1948 பிப்ரவரி 4ல் இங்கிலாந்து ஆட்சியாளர்கள் இலங்கைக்கு சுதந்திரம் தந்தபோது, அதிகாரத்தை சிங்களவர்களிடம் ஒப்படைத்தனர். இலங்கை சுதந்திரம் பெற்றது. ஆனால், ஈழத் தமிழர்கள் அடிமைகள் ஆனார்கள். பத்து இலட்சம் இந்தியத் தமிழர்களின் குடி உரிமை பறிக்கப்பட்டது.

1956ல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என அறிவிக்கப்பட்டது. புத்த மதமே அரச மதம் ஆயிற்று. தமிழர்கள் தந்தை செல்வா தலைமையில் அமைதி வழியில், அறவழியில், காந்திய வழியில் உரிமைக்குப் போராடினர். காவல்துறையையும், இராணுவத்தையும் கொண்டு, சிங்கள அரசு அடக்குமுறையை ஏவியது. தமிழர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

1957ல் பண்டாரநாயகா- செல்வநாயகம் ஒப்பந்தமும், 1965ல் சேனநாயகா- செல்வநாயகம் ஒப்பந்தமும், சிங்கள அரசால் கிழித்துக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டன. தமிழர்களின் வழிபாட்டுத் தலங்கள் தகர்க்கப்பட்டன. சிங்களர் குடியேற்றத்தைத் தமிழர் தாயகத்தில் அரசே நடத்தியது.

கற்பழிப்பு, கொலை, கொள்ளை, தமிழர்கள் மீது ஈவு இரக்கம் அற்ற தாக்குதல்கள் அன்றாட நிகழ்வுகள் ஆயின. தமிழர் அமைப்புகள் அனைத்தும் கூடி, தந்தை செல்வா தலைமையில், 1976 மே 14ம் நாள் வட்டுக்கோட்டையில் கூடி, சுதந்திரத் தமிழ் ஈழ தேசத்தை நிர்மாணிப்பது என்று பிரகடனம் செய்தன.

1977 பொதுத் தேர்தலில், தமிழ் மக்கள் சுதந்திரத் தமிழ் ஈழத்தை ஆதரித்து வாக்கு அளித்ததால், அதுவே ஒரு பொது வாக்கெடுப்பு ஆயிற்று. ஆனால், இதன்பிறகு, சிங்கள அரசு, தமிழர்களைக் கொடூரமாகத் தாக்கத் தொடங்கியது.

யாழ் நூலகத்தைத் தீயிட்டுக் கொளுத்தியது. 1983ல் வெலிக்கடைச் சிறையில், தமிழர்களைக் கொடூரமாகப் படுகொலை செய்தது. தமிழர்கள் தாயகம் என்பதையும், சுய நிர்ணய உரிமையையும், சிங்கள அரசு ஏற்காது என்று திம்பு பேச்சுவார்த்தையில் கூறியது.

இந்தப் பின்னணியில், உலகின் பல தேசிய இனங்கள் கடைப்பிடித்த போர்முறையான ஆயுதப் போராட்டத்தை, பிரபாகரன் தலைமையில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் முன்னெடுத்தனர். போர்க்களத்தில் வெற்றிகளைக் குவித்தனர். யுத்தகள அதிசயமாக யானை இறவைக் கைப்பற்றினர். தங்கள் பலத்தை நிருபித்த நிலையில், விடுதலைப் புலிகள்தான் போர் நிறுத்தத்தைத் தாங்களாக அறிவித்தனர்.

2001 டிசம்பர் 24ம் நாள், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள், 30 நாள்களுக்கான போர் நிறுத்தத்தையும், அதன்பின்னர் மேலும் 30 நாள்களுக்கான போர் நிறுத்தத்தையும், விடுதலைப் புலிகள் பிரகடனம் செய்தனர்.

ஐரோப்பிய நாடுகளின் தலையீட்டால், வேறு வழி இன்றி, சிங்கள அரசும் போர் நிறுத்தத்தை அறிவித்தது. பின்னாளில் 2008 ஜனவரியில், போர்நிறுத்தத்தைச் சிங்கள அரசு முறித்தது. சிங்கள அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில், முதலாம் கட்ட, இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் தாய்லாந்திலும், மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நோர்வேயிலும் நடந்தன.

இந்த முயற்சிகளை இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்க பாழாக்கினார். 2005ல் மகிந்த ராஜபக்சே அதிபர் ஆனார். ஈழத்தமிழர் படுகொலை தீவிரம் ஆயிற்று. ஆழிப்பேரலை நிவாரண முகாமில், 2006 ஆகஸ்ட் 8ம் நாள், 17 தமிழ் இளைஞர்கள் சிங்களரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆறு நாள்கள் கழித்து, செஞ்சோலையில், தாய் தந்தையரை இழந்த குழந்தைகள் காப்பகத்தில், சிங்கள விமானக் குண்டுவீச்சில், 61 சிறுமிகள் கொல்லப்பட்டனர்.

வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் இலங்கைக்குள் செல்ல முடியவில்லை. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4 பேர் பட்டப்பகலில் சிங்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஏழு வல்லரசுகளின் ராணுவ உதவியோடு, சிங்கள அரசு, கொடூரமாக தமிழ் மக்களைக் கொன்று குவித்தது. எங்கும் தமிழர் பிணங்கள். தமிழ்நாட்டில் முத்துக்குமார் உள்ளிட்ட 17 பேர் தீக்குளித்து மடிந்தனர். ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் போரை நிறுத்தச் சொல்லியும், இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை.

2009ல் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டபோது, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக, ஜெர்மனி கொண்டு வந்த தீர்மானத்தை, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆதரித்தன.

இலங்கை அரசைப் பாராட்டி, போர் நிலைமையை வெற்றிகரமாகச் சமாளித்ததாக வாழ்த்தி, இலங்கைக்குப் பொருளாதார உதவி செய்ய வேண்டும் எனக்கோரி சிங்கள அரசு தயார் செய்த தீர்மானத்தை, கியூபா, பொலிவியா, இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, உள்ளிட்ட 29 நாடுகள் ஆதரித்தன.

மனித உரிமைக் கவுன்சிலில் 2009 மே 27ல் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றின. 12 நாடுகள் அந்த அக்கிரமமான தீர்மானத்தை எதிர்த்தன. அவ்வாறு, இலங்கைக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என தற்போது ஐ.நா. மூவர் குழு பரிந்துரைத்து விட்டது.

2010 ஜனவரியில் டப்ளின் தீர்ப்பு ஆயம் சிங்கள அரசின் போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டுமென்று அறிவித்தது.

Geen opmerkingen:

Een reactie posten