சிறிலங்கா இராணுவம் நடத்திய போர்க்கருத்தரங்கில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரும் உரையாற்றியுள்ளார்.
வன்னியில் இடம்பெற்ற போர் நடவடிக்கையின் போது சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட மனிதாபிமான உதவிகள் குறித்து யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள், இராஜதந்திரிகள் மத்தியில் விளக்கமளித்துள்ளார்.
நேற்றைய இறுதிநாள் அமர்வில் சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால், பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க ஆகியோருடன் இமெல்டா சுகுமாரும் மனிதாபிமான உதவிப் பணிகள் பற்றி விளக்கமளித்தார்.
இங்கு இமெல்டா சுகுமார் உரையாற்றிய போது,
"முல்லைத்தீவில் அரச அதிபராக இருக்கும் காலப்பகுதியில் மக்களுக்கான பணிகளை முன்னெடுக்கக் கூடிய சூழலை புலிகள் இல்லாதொழித்து இருந்தனர்.
போர் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் பொதுமக்களின் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காக பெரும் சிரமப்பட்டனர்.
மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அரசாங்கத்துக்கு கோரிக்கைகளை அனுப்பும் போதும் புலிகளால் பெரிதும் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளானேன்.
புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் வடக்கில் புலிகளின் அரசியல் நடவடிக்கைகளுக்கு தடையான எனது அறிக்கைகள் இருப்பதாகக் கூறி அரசாங்கத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டாம் என்று கடுமையாக எச்சரித்தார்.
வடக்கு மக்களை புலிகள் பணயமாக வைத்துக் கொண்டே போர் செய்தனர். இந்த மக்களை பாதுகாப்பாக மீட்டெடுப்பதற்கு சிறிலங்கா இராணுவம் மிகவும் நியாயபூர்வமாக செயற்பட்டது.
மனிதாபிமான நடவடிக்கைகளின் போது இராணுவம் எந்த வகையிலும் பொதுமக்களுக்கு தீங்கிழைக்கவில்லை. வடக்கு மக்களை பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து மீட்டெடுத்தனர்.
மிகவும் சட்டபூர்வமாகவும் ஒழுக்கமான முறையிலும் மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்து இராணுவம் புலிகளிடம் பணயக் கைதிகளாக இருந்த அப்பாவி தமிழ் மக்களை மீட்டெடுத்தனர்.
புலிகளின் அச்சுறுத்தலில் இருந்து என்றைக்கும் அப்பாவி தமிழ் மக்களை மீட்டெடுத்தமைக்காக இராணுவத்தினருக்கு நன்றி கூற இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கின்றேன்.
புலிகளின் அச்சுறுத்தல் இருந்த போதிலும் அதன் பின்னர் அரசாங்கம் மனிதாபிமான தேவைகளை நிறுத்தாது தொடர்ந்து அனுப்பி வந்தது.
குறிப்பாக உணவு மற்றும் மருந்து வகைகள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் அரசாங்கம் இராணுவத்தினர் ஊடாக மக்களுக்கு வழங்கியது.
போர் நடைபெற்ற காலப்பகுதியில் புலிகள் எந்தளவிற்கு பொதுமக்களை துன்புறுத்தினார்கள் என்று எனக்கு நன்கு தெரியும். எனவே விடுவிக்கப்பட்ட வடக்கில் மக்கள் சகல வசதிகளுடன் சுதந்திரமாக வாழ்கின்றனர்.
மீள்குடியேற்றம் உள்ளிட்ட அடிப்படை கட்டுமானங்கள் அனைத்தும் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழர்களுக்கான இராணுவத்தினரின் மனிதாபிமான நடவடிக்கைகளையும் மறந்து விடமுடியாது“ என்று தெரிவித்துள்ளார்.
போர் நடைபெற்ற காலத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசஅதிபராக இருந்த இமெல்டா சுகுமார், 2009 ஜனவரி மாத இறுதியில் அறிவிக்கப்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்துடன் அங்கிருந்து வெளியேறி வவுனியாவில் தங்கியிருந்தார்.
இவர் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளித்த போதும் சிறிலங்காப் படையினர் போர்க்குற்றங்கள் எதிலும் ஈடுபடவில்லை என்று கூறியிருந்தார்.
இந்தநிலையிலேயே, நேற்று போர் அனுபவக் கருதரங்கிலும் இவர் போர் நடந்த பகுதிக்குப் பொறுப்பான அரசஅதிகாரி என்ற வகையில் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
இந்தப் போர்க் கருத்தரங்கில் சிறிலங்கா அரசுக்கு மிகவும் நெருக்கமான- தெரிவு செய்யப்பட்ட சில இராணுவ அதிகாரிகளும், அதிஉயர் நிர்வாக அதிகாரிகளும், வெளிநாட்டுப் பேராளர்களுக்குமே உரையாற்றச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தது.
யாழ்.படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவின் ஏற்பாட்டிலேயே இந்த போர்க் கருத்தரங்கில் இமெல்டா சுகுமார் உரையாற்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
Geen opmerkingen:
Een reactie posten