தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 22 juni 2011

ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிவிப்பும் தமிழ்வின்னின் வேண்டுகோளும்!

[ புதன்கிழமை, 22 யூன் 2011, 03:23.05 AM GMT ]
ஈழத்தமிழர்கள் ஜனநாயக வழியில் தேர்ந்தெடுத்தவர்களுடன் புலம்பெயர்ந்த மக்கள் இணைந்து வேலை செய்ய வேண்டும் என்ற ஒரு அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ளது. புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிற்காக விடுக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை ஏதோ பத்தோடு பதினொன்றாக விட்டுச் செல்லக் கூடியது ஒன்றல்ல.
ஐரோப்பிய ஒன்றியமானது 27 ஐரோப்பிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பாரிய, பலம் பொருந்திய பிராந்தியம். பொது நாணயப் புழக்கம், எல்லைகளற்ற தங்குதடையின்றிய போக்குவரத்து, நிபந்தனையற்ற வர்த்தகம் என இந்த நாடுகள் இணைந்து செயற்படும் இந்த நடவடிக்கை குறைந்தது இன்னொரு நூற்றாண்டாவது தொடர்ந்து செல்லப் போகிறது.
இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, இத்தாலி, டென்மார்க், பெல்ஜியம் என இந்த 27 நாடுகளிலும் வாழும் தமிழர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் உலகில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அதிகமாக இருப்பது பூமிப்பந்தின் இந்தப் பரப்பிலேயேயாகும்.
இவ் வகையில் இந்த அறிக்கை என்ன சொல்லவருகின்றது என்பதை ஆராய்ந்து நன்மை தீமைகளை மக்கள் முன் வைக்கவேண்டும் என்பதை புலம்பெயர்ந்த தமிழ் மக்களிற்கு தமிழ்வின் வலியுறுத்த விரும்புகிறது.
நாங்கள், ஆராயுங்கள், விமர்சியுங்கள், நன்மை தீமைகளை கணக்கிடுங்கள், சாதகமாயின் அவதானமாக தேர்ந்தெடுத்து அனுசரியுங்கள், பாதகமாயின் தூக்கியெறியுங்கள் என்றே வேண்டுகோள் விடுக்கிறோமே தவிர, ஏதோ கண்மூடித்தனமாக ஐரோப்பிய ஒன்றியம் சொல்வதை ஏற்று நடக்க வேண்டும் என் எழுந்தமானமாகச் சொல்லவில்லை.
சில நேரங்களில் சில விடயங்கள் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாதாய் இருக்கும். புறச்சூழ்நிலைகளின் திணிப்பாகக் கூட இருக்கும். ஆனால் அதுவே அன்றைய காலத்தின் யதார்த்தமாக இருந்தால் அதனை நாங்கள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். அதன் சாதக பாதகங்களை ஆராய வேண்டும்.
ஏனென்றால் இந்த உலக ஒழுக்கு இலங்கைத் தீவில் இனங்கள் ஒற்றுமையாக வாழும் ஒரு தீர்வுக்கு இயைபாக சிங்கள அரசை வற்புறுத்தும் செயற்பாட்டில் ஈடுபடுவதைத் தவிர மேலதிக எந்தச் செயற்பாட்டிலுமே ஈடுபடப் போவதில்லை என்பதை அவற்றின் நடவடிக்கைகள் கச்சிதமாகக் காட்டுகின்றன.
இதனால் தான் அந்த நாடுகள் தமிழர்கள் இணைந்து வாழும் இணக்கப்பாட்டிற்கு ஏற்ற தீர்வுக்கான திணிப்பை படிப்படியாக சிறீலங்கா அரசு மீது திணித்து வருகின்றன. புலம்பெயர்ந்த தமிழர்களின் தலைமைகளுடன் சிறீலங்கா பேச வேண்டும் என்று அறிவித்த அமெரிக்கா படிப்படியாக அதைக் கைவிட்டு மக்கள் தேர்ந்தெடுத்த தலைமையுடன் பேச வேண்டும் என்ற நிலைக்கு தன்னை மாற்றிக் கொண்டதை றொபேட்  ஓ பிளாக்கின் அண்மைய விடயம் காட்டி நின்றது.
இதனையே தான் இப்போது ஐரோப்பிய ஒன்றியமும் கூறுகிறது. நாங்கள் இப்போது இந்த நாடுகளின் பிரஜைகள்,  இந்த நாடுகளின் வளர்ச்சியில் அங்கம் வகிப்பவர்கள். ஐரோப்பாவை இரண்டாவது தாயகமாகக் கொண்டவர்கள். எனவே இந்த அறிக்கை குறித்த சாதக பாதகங்களை விமர்சிப்பது எமது கட்டாயக் கடமையாகிறது.
இந்த இனங்களிடையேயான மீள் ஒன்றிணைவும் அதனூடான தமிழர்களிற்கான ஒரு தீர்வுத் திட்டமுமே சாத்தியமான செயற்பாடுகள் என்பதை சர்வதேசம் கணக்கிட்டிருப்பதில் நாங்கள் உடன்பாடு கொள்ளாமல் போகலாம். ஆனால் சர்வதேசத்தின் வேண்டுகோள்களை தொடர்ச்சியாக புறந்தள்ளிச் சென்றால் எங்கள் குரல்கள் எடுபடாமல் போய்விடும் ஆபத்து உள்ளதை கருத்திலெடுக்க வேண்டும்.
ஏனெனில் இப்போது விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் “புலம்பெயர்ந்த தமிழர்களிற்கே”, அவர்களின் “தலைமைகளிற்கே” தவிர சிங்கள அரசிற்கு அல்ல. மறைமுகமாக இந்த வேண்டுகோள் ஒரு கடமையை எங்கள் மீது திணிக்கிறது. அதாவது அங்குள்ள மக்களின் வாழ்விற்காக “தங்களால் பரிந்துரைக்கப்படும்” சாதகமான வழிகளில் செயலாற்ற முனையுங்கள் என்பதே அதுவாகும்.
இவ்வாறான ஒரு வேண்டுகோளில் உள்ள உண்மைகளை, தாற்பரியங்களை, பாதகங்களை ஆராய்ந்து நாம் இது பற்றிய அறிவைப் பெற்றவர்களாக மாற வேண்டும். ஏனெனில் தாயகத்தில் மக்களைப் பிரதிநிதித்துப்படுத்தும் பிரதிநிதிகளாக சர்வதேசம் ஜனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையென “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை” மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறது.
இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச வேண்டும் என்ற அழுத்தம் சிறீலங்கா அரசிற்கு சர்வதேசத்தால் கொடுக்க ஆரம்பிக்கப்பட்டு விட்டது.
இதனையே தான் இந்த வாரம் இடம்பெற்ற இரண்டு சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றியடையக் கூடாது என அதன் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் இராணுவம் தாக்கியது முதலாவது சம்பவம்.
நாங்கள் அரசுடன் பேச வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு எங்களை சர்வதேசம் தள்ளியுள்ளது என்ற திரு. சம்பந்தன் அவர்களின் அறிவிப்பு இரண்டாவது சம்பவம்.
எனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் உறவுகளை வலுப்படுத்தி அவர்களூடாக சந்தர்ப்பங்களை வழங்கி, சிறீலங்காவின் கோர முகத்தை வெளிக்காட்ட சர்வதேசம் தந்துள்ள இந்த வாய்ப்பை நாங்கள் பரிசீலிக்க, ஆராய வேண்டுமென தமிழ்வின் உங்களை உரிமையோடு கேட்கிறது. ஏனெனில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முறைய வேண்டுகோள் புலம்பெயர்ந்த தமிழர்களிற்கானதே தவிர வேறு யாருக்குமானதல்ல.
நாம் எடுத்த முன்னெடுப்புக்களையோ, சிறீலங்காவின் இன அழிப்புக்கு எதிரான எமது குரலையோ நாங்கள் நிறுத்தப் போவதில்லை. மறுபுறத்தே தாயக மக்களின் தீர்வுக்கான சக்தியாக சர்வதேசம் அங்கீகரித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான ஒன்றுபட்ட ஆதரவை வெளிப்படுத்துவது பற்றிய ஒரு உள்ளக விமர்சனத்திற்கு நாம் உள்ளாகியே வேண்டும்.

Geen opmerkingen:

Een reactie posten