தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 2 april 2011

பின்நோக்கி நகர்ந்திருக்கும் வரலாறு – முன்னாள் பெண் போராளிகளை முன்னிறுத்தி

கருத்துகள்: 002-04-2011
மிகுதி நேரில் 5
வரலாறு பின் நோக்கி நகர முடியுமா? முன்னர் என்றால் இப்படியொரு கேள்விக்கு எனது பதில் இல்லை என்பதாக இருந்திருக்கும். ஆனால் இப்போது என்னால் அப்படிச் சொல்ல முடியாது. நாம் வரலாற்றின் சாட்சியாக இருப்பின் வரலாறு, நமது நிலையில் எவ்வாறு பினநோக்கி நகர்ந்திருக்கிறது என்பதை பேசியாக வேண்டும். இந்தப் பத்தி சமகால நிலைமைகளை முன்னிறுத்தி பெண் போராளிகள் குறித்து சில விடயங்களை பகிர்ந்து கொள்ள விழைகிறது.
நான் இதனை வரலாற்றோடு தொடர்புபடுத்துவதற்கு என்னளவில் ஒரு காரணமுண்டு. விடுதலைப்புலிகள் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த காலத்தில் பெண் போராளிகள் மிகவும் உயர்வாக மதிக்கப்பட்டனர். அடிப்படையிலேயே கட்டுப்பெட்டித்தனமான தமிழ்ச் சமூகத்தின் பொதுப்புத்தி நிலையில் இது பெரியளவில் அதிர்வை ஏற்படுத்தியது. இது ஒரு நிரந்தரமான உடைவைக் கொண்டு வருமென்றே நாங்கள் நம்பினோம்.

இது குறித்து அப்போது நான் எழுதிய கட்டுரையொன்றில் (தமிழ்த் தேசியமும் பெண் விடுதலையும் – (கீற்று.கொம்) – வரலாற்றில் உடைவுண்ட பகுதிகள் எப்போதுமே உடைவுண்ட பகுதிகள்தான் என்று குறிப்பிட்டிருந்தேன்.

தமிழ்த் தேசியம் பெண்விடுதலை நோக்கில் ஒரு பெரும் பாய்ச்சல் என்ற புரிதலே எனக்கிருந்தது. அன்றைய சூழல் அப்படியொரு நம்பிக்கையை தந்தது. ஆனால் இன்றைய சூழல் அத்தகையதொரு நம்பிக்கையை தரவில்லை. இன்று முன்னாள் பெண் போராளிகளின் நிலைமை தலைகீழாக இருக்கிறது. முன்னைய நிலைமைகளுக்கு நாம் சாட்சியாக இருந்தது உண்மையெனின் இன்றைய சூழலுக்கும் சாட்சியாக இருப்பதே சரியானது. அதுவே எழுத்தறமும் ஆகும்.

பெண் போராளிகள் என்றதும், கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுதிய கவிதை வரியொன்றே நினைவுக்கு வருவதுண்டு. ‘சுவரில் ஏறிய அட்டையைக் கூட தட்டிவிடுவதற்கு அண்ணன்களைக் கூப்பிட்ட தங்கைகளிலிருந்து அங்கையற்கண்ணிகள் உருவாவது எப்படி’ – ஆனால் இன்று தோல்வியடைந்திருக்கும் அந்த அங்கையற்கண்ணிகளின் வாழ்வே ஒட்டிக் கொள்வதற்கு சுவர் தேடியலையும் அட்டை நிலைக்கு தாழ்ந்து விட்டது என்பதுதான் உண்மை. ஒரு காலத்தில் அவர்களை நேர்காண்பதற்கும், அவர்களின் படங்களைப் பிரசுரிப்பதற்கும் முண்டியடித்துக் கொண்டு நின்ற ஊடகங்கள் எவையும், இன்று அவர்கள் குறித்து வாய்திறப்பதில்லை ஏனெனில் இப்போது அவர்கள் நமது அரசியல் சந்தையில் (Political Market) வெறும் குப்பைகள்.

ஈழத் தமிழரின் அரசியலானது, மிதவாதத் தலைமைகளின் செல்வாக்கிலிருந்து இயங்கங்களின் செல்வாக்கிற்கு இடம்பெயர்ந்த பின்னரே அதுவரை சாதிய ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களும் இரண்டாம் தரமாக கருதப்பட்ட பெண்களும் நமது அரசியல் அரங்கில் செல்வாக்கு மிக்கவர்களாக வெளித்தெரியத் தொடங்கினர். ஆரம்பத்தில் EPRLF, PLOTE போன்ற ஆயுத அமைப்புக்களே பெண்களை போராட்டத்தில் உள்வாங்கிய இயக்கங்களாக இருந்தன. இந்த இயக்கங்கள் பெண்களை உள்வாங்கும் போது புலிகள் அதில் பெரியளவில் ஆர்வம் காட்டியிருக்கவில்லை. புலிகள் அவ்வாறு ஆர்வம் காட்டாமைக்கு தமிழ்ச் சமூகத்தின் மரபார்ந்த புரிதல்களுடன் தாம் மோதவிழைவது தமது இயக்கத்தின் வளர்ச்சிக்கு தடையாக அமையலாம் என்று அவர்கள் கருதியிருக்கலாம்.

புலிகள் சுதந்திரப் பறவைகள் அமைப்பை உருவாக்கிய போதும் ஆரம்பத்தில் அது பெரியளவில் முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. ஆனால் காலப்போக்கில் ஏற்பட்ட இயக்க மோதல்கள், அதில் பெருந்தொகையானோர் அழிக்கப்பட்ட சூழல், இதனால் இளைஞர்கள் மத்தியில் ஆயுதப் போராட்டம் குறித்து ஏற்பட்ட அச்சங்கள் என்பவற்றின் திரட்சியாக பெண்களை அதிகளவில் இணைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இந்தச் சூழலில்தான் புலிகள் அதிகளவில் பெண்களை இயக்கத்தில் உள்வாங்கிக் கொள்கின்றனர்.

ஏனைய இயக்கங்கள் போலல்லாது புலிகள் பெண்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்து அவர்களை முறையானதொரு அமைப்பாக்கினர். ஆரம்பத்தில் புலிகளின் சுதத்திரப்பறவைகள் அமைப்பில் மத்தியதரவர்க்க மேட்டுக்குடிப் பெண்களே அதிகம் இணைந்து கொண்டிருந்தனர். ஆரம்ப காலங்களில் நிர்மலா நித்தியானந்தன் போன்றவர்கள் புலிகளின் மகளிர் அணியில் செல்வாக்குச் செலுத்துமளவிற்கு மேட்டுக்குடிப் பெண்களே அதிகம் புலிகளால் ஈர்க்கப்பட்டிருந்தனர். நிர்மலா போன்றவர்கள் இயக்கத்தில் இருப்பதை புலிகளின் தலைவர் பிரபாகரன் விரும்பியிருக்கவில்லை என்று அடேல் பாலசிங்கம் தனது ‘சுதந்திர வேட்கை’ நூலில் குறிப்பிடுகின்றார். நிர்மலா போன்றவர்களின் செல்வாக்கு சாதாரண பெண்கள் இயக்கத்தில் சேர்வதை தடுக்கலாம் என்பதாலேயே பிரபாகரன் அதனை விரும்பவில்லை என்றும் அடேல் குறிப்பிடுகின்றார்.

ஆனால் காலப்போக்கில் பல்வேறு அக முரண்பாடுகளால் அவர்கள் வெளியேற அந்த இடத்தை அங்கையற்கண்ணி போன்ற சாதாரண ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நிரப்புகின்றனர். புலிகளின் முடிவு வரை அதில் தங்களை அர்ப்பணித்த பெண்கள் எவ்வகையான குடும்பப் பின்னணிகளைக் கொண்டிருந்தனர் என்பதற்கு அங்கையற்கண்ணி தாக்குதலுக்கு செல்லும் முன்னர் தனது நண்பர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றே சான்றாகும் – ‘நான் மரணிக்கும் காலம் நல்லூர் கோவில் திருவிழாவாக இருக்க வேண்டும். ஏனெனில் அப்போது தான் எனது தாயிடம் கோவில் திருவிழாவில் கடலை விற்ற பணம் இருக்கும். அப்போதுதான் எனது தயாரால் எனது தோழிகளுக்கு, எனது இறப்பை நினைவு கூர்ந்து உணவு பரிமாற முடியும்’ (சரிநிகர் – பெ 10, 2000)

தமிழ் சமூகத்தின் மரபார்ந்த சிந்தனையினை உடைத்து நொறுக்கும் நம்பிக்கையாக இருந்த அங்கையற்கண்ணிகள் இன்று எவ்வாறு நோக்கப்படுகின்றனர்? அவர்களை முன்னர் போற்றிப் புகழ்ந்தவர்கள் எல்லாம் இன்று எங்கு ஓடி ஒழிந்து கொண்டனர்?

இன்று விடுவிக்கப்படும் முன்னாள் பெண் போராளிகள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். ஒரு வரியில் சொல்வதாயின் சூனியமாய் கழிகிறது அவர்கள் எதிர்காலம். முன்னாள் போராளிகளை சமூகம் தங்களின் ஒரு அங்கமாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. ஏன் பெற்றோர்களே பலரை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. சமீபத்தில் விடுவிக்கப்பட்ட இரு பெண் போராளிகள் பெற்றோர்கள், உறவினர்கள் எவருமே ஏற்றுக் கொள்ளாமையால் மீண்டும் முகாமிற்கே சென்றிருக்கின்றனர்.

புலிகள் இயக்க ஒழுங்கில் சாதி, பிரதேச ரீதியான பாகுபாட்டின் அடிப்படையில் உறவுகள் அமைந்திருக்கவில்லை. புலிகளுக்குள் நடக்கும் திருமணங்களும் அவ்வாறானதொரு ஒழுங்கில்தான் அமைந்திருந்தன. அவ்வாறு சாதி, பிரதேசம் கடந்து திருமணம் செய்த பெண்களின் கணவன்மார் யுத்தத்தில் இறந்துவிட தற்போது இருபகுதி உறவுகளாலும் அவர்கள் ஏற்றுக் கொள்ளப்படாத நிலை. தனித்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் அவர்கள் குறித்து பல்வேறு தவறான கண்ணோட்டங்களும் சமூகத்தின் மத்தியில் நிலவுகிறது. சாதாரணமாகப் படித்து நல்ல தொழிலில் உள்ள பெண்களே திருமணம் செய்வதில் பல்வேறு குறைகள் காணும் நமது பெருமைமிக்க தமிழ்ச் சமூகத்தில் முன்னாள் பெண் போராளிகள் மீண்டும் குடும்ப வாழ்வில் ஈடுபடுவது, அவர்களை சமூகத்தின் ஆண்கள் ஏற்றுக் கொள்வது என்பதெல்லாம் நடந்துவிடும் விடயங்களல்ல. இவ்வாறான நிலைமைகளால் தத்தளிக்கும் முன்னாள் பெண் போராளிகளின் வாழ்வை எவ்வாறு சீர்செய்வது?

இவர்கள் குறித்து நமது அரசியல்வாதிகள் கரிசனை கொள்வார்களா? நிட்சயமாக இல்லை. அரசு கரிசனை கொள்ளுமா அது ஒருபோதுமே நடைபெறப் போவதில்லை. அப்படியானால் இவர்கள் குறித்து கடமையுணர்வுடன் யார் தலையிட முடியும். இன்றைய சூழலில் இவர்களைக் கரைசேர்க்க வேண்டிய வரலாற்றுப் பொறுப்பும் அதனைச் செய்யக் கூடிய ஆற்றலும் நமது புலம்பெயர் அமைப்புக்களுக்கு மட்டுமே உண்டு. புலம்பெயர் சமூகம் என்பதற்கும் புலம்பெயர் அமைப்புக்கள் என்பதற்கும் அடிப்படையிலேயே வேறுபாடுண்டு.

எனது முன்னைய ‘முன்னாள் போராளிகளும் புலம்பெயர் சமூகத்தின் பாராமுகமும்;’ என்னும் பத்தி குறித்து பேசிய நண்பரொருவர் அதில் ஒட்டுமொத்த புலம்பெயர் சமூகத்தையும் குற்றம் சாட்டுவதுபோன்ற சாயல் தெரிகிறது. அது பொருத்தமானதல்ல என்று குறிப்பிட்டிருந்தார். அது உண்மைதான். அதனை இந்தப் பத்தி திருத்திக் கொள்கிறது. இங்கு பிரச்சனை புலம்பெயர் சமூகமல்ல. புலம்பெயர் மக்களின் நிதி ஆதரவுகளைப் பெற்ற, இன்றும் பெற்றுக் கொண்டிருக்கிற அமைப்புக்களின் செயற்பாடுகளே இங்கு பிரச்சனையாக இருக்கிறது. இவ்வாறான அமைப்புக்கள், களத்தில் போராடியவர்களின் தியாகத்தால்தான் நாங்கள் இப்படியெல்லாம் இருக்க முடிகிறது, பேச முடிகிறது என்பதை ஒரு கணமாவது எண்ணிப் பார்க்க வேண்டும்.

இதில் பிறிதொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட விழைகிறேன். புலிகள் அதிகாரத்தில் இருந்த காலத்தில் – புலிகளின் பெண்கள் அமைப்பை கடுமையாக விமர்சிப்பதிலேயே தங்கள் காலத்தைச் செலவழித்துக் கொண்டிருந்த பெண்ணியவாதிகள் என்போர் சகலரும் இப்போது நடுவீதியில் கிடக்கும் அந்த முன்னாள் (புலிகளின்) பெண் போராளிகளுக்கு உதவ முன்வரலாம். புலிகள் – பெண் விடுதலை கருதி பெண்களை அழைக்கவில்லை என்று அறிக்கை விட்டவர்கள் – இது குறித்து புலிகளுக்கு அறிவுரைகள் வழங்கியவர்கள் என்று, நீங்கள் அனைவரும் வென்று விட்டீர்கள். அப்போது அதனை விமர்சித்த நாங்கள் அனைவரும் தோற்று விட்டோம். இப்போது உங்களின் காலம். இது பற்றி ஆய்வாளர் தி.வழுதி குறிப்பிட்டிருப்பது மிகவும் சரியானது- ‘புலிகள் இயக்கம் இப்போது இல்லை நீங்கள் ‘சந்தர்ப்பவாதிகள்’ அல்ல என்பதையும் நீங்கள் மக்கள் நேயம் மிக்கவர்களே தான் என்பதையும் நிரூபிக்க இதுவே சந்தர்ப்பம். இது உங்களுக்கான நேரம் தயவு செய்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’

(ஆதாரம் – http://www.puthinappalakai.com/view.php?20110310103361

Geen opmerkingen:

Een reactie posten