தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 5 april 2011

புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரப் பெருஞ்சண்டை – பேரழிவின் ஆரம்பம்

 
[ செவ்வாய்க்கிழமை, 05 ஏப்ரல் 2011, 06:53.20 AM GMT ]
ஏப்ரல் 05, 2009 – ஆனந்தபுரம். புதுக்குடியிருப்பின் உள்நுழைவுப் பகுதி சண்டையிடமாக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் கட்டளை மையம் தகர்க்கப்பட்ட ஒரு சண்டையிது. யாருமே நம்ப மறுத்த, இப்போதும் நம்ப மறுக்கின்ற அழிவுகளை தமிழ்மக்கள் பெற்றுக் கொண்ட மண் இது.
போரின் இறுதிக்கட்டம். 2009ம் ஆண்டு மார்ச் 29ம் திகதி சிறுக ஆரம்பிக்கப்பட்டு ஏப்ரல் 5ம் திகதி வரைத் தொடர்ந்த இச் சண்டை தமிழீழ ஆயுதப் போராட்ட வரலாற்றையே புரட்டிப் போடும் என யாருமே எதிர்பார்க்கவில்லை.
இரண்டு வருடங்கள் என்ன இருநூறு வருடங்கள் போனாலும் மறக்கமுடியாததாய் அமைந்து போன அச் சண்டை நடைபெற்ற போது பெரிதாகத் தோன்றவில்லை.
ஒரு பெரும் எதிர்த்தாக்குதலிற்குத் தயாராகிக் கொண்டிருந்த எங்கள் மண்ணின் மைந்தர்களை சிங்களம் லாவகமாக வளைத்துத் தொடுத்த தாக்குதல் அது.
இச் சண்டை எங்களிற்குப் பேரிழப்பொன்றை ஏற்படுத்திச் சென்றதை நாங்களும் பதிந்தேயாக வேண்டும். ஏனென்றால் இச் சண்டையில் இழந்தவர்கள். அசாதாரண தமிழ் மறவர்கள். ஒரு தேசத்தையல்ல, பல தேசங்களின் ஆதரவுடன் பொருதிய எதிரியை புறமுதுகிடச் செய்தவர்கள்.
சிங்கள இராணுவத்தின் 55ம் படையணி, 53வது படையணி, 8வது விசேட படையணி என பல்லாயிரம் இராணுவத்தை எதிர்கொண்டு புரியப்பட்ட இப் போரில் நாங்கள் பலிகொடுத்தவர்கள் சாதாரணமறவர்கள் அல்ல.
விடுதலைப்புலிகளின் இராணுவக் கட்டமைப்பின் சிறந்த தளபதியான கேணல் தீபன், கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் தளபதியான பிரிகேடியர் மணிவண்ணன், சோதியாப் படையணியின் தளபதியான கேணல் துர்கா, மாலதிப் படையணியின் தளபதியான கேணல் விதுசா, ஜெயந்தன் படைப்பிரிவின் தளபதியான கேணல் கீர்த்தி, கேணல் நாகேஸ்,
படைப்பள்ளிப் பிரிவின் தளபதியான கேணல் கடாபி, ராதா படைப்பிரிவின் தளபதியான கேணல் சிலம்பரசன், “குட்டி சிறி மோட்டார் படைப்பிரிவின்” தளபதியான கேணல் கோபால், பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவின் தளபதியான அன்பு,
தவிர இன்னமும் பலர் பிரிகேடியர்கள், கேணல்கள் என மாத்திரமல்ல எங்கள் மண்ணிற்காக 550க்கும் மேற்பட்ட போராளிகள் களமாடி வீழ்ந்த மண் ஆனந்தபுரம்.
இத் தாக்குதலில் சிறீலங்கா இராணுவம் “எதிர்பாராமல்” பெற்ற வெற்றியே அதற்கு பெரு வெற்றிகளைத் தேடிக் கொடுத்தது.
இத் தாக்குலின் போது இழக்கப்பட்ட தளபதிகளையும் போராளிகளையும் விட இவ்வளவு நாளும் தமிழர்களிற்கு தற்காப்பு வழங்கிய ஆயுதங்கள் பலவும் இழக்கப்பட்டன.
40 கிலோ மீற்றர் வரையும் சென்று தாக்கும் 130 மில்லி மீற்றர் ஆட்டிலறிகள் மூன்றை சிறீலங்கா கைப்பற்றியது. இது விடுதலைப் போராட்ட ஆயுத சமநிலையில் விழுந்த பேரிடி. அத்தோடு 81 மில்லி மீற்றர் ஆட்டிலறிகள், விமான எதிர்ப்புப் பீரங்கிகள், களப் பீரங்கள், நவீன சுடுகலன்கள் என இத்தியாதிகள்.
தாங்கள் தயாராகிக் கொண்டிருந்த சண்டைக்கு என விடுதலைப்புலிகள் வைத்திருந்த பாரிய எறிகணை, ரவைகள், வெடிபொருட்கள் என்பனவும் இதனுள் அடக்கம்.
அதைவிட கரும்புலிப்படகுகள், பாரிய படகுகள், சிறிய ரக நீர்மூழ்கிகள் என பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த கடற்புலிகளின் பாரிய ஆயுதத் தொகுதியும் இச் சண்டை இடம்பெற்ற இடமருகே கைப்பற்றுமளவிற்கு இச் சண்டை சென்றிருந்தது.
போராட்ட வரலாற்றைத் திருப்பிப் போட்டு எம்மை முள்ளிவாய்க்கால் வரை இழுத்துச் சென்று பேரவலம் ஒன்றிற்குள் தள்ளிச் சென்றதற்கான ஆரம்ப முடிவுரைப் புள்ளியாக ஆனந்தபுரம் அமைந்துவிட்டது.

Geen opmerkingen:

Een reactie posten