தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 april 2011

தமிழினத் துரோகிகள் இவர்களே...! : தினமணி!!!!!

28 April, 2011 


இலங்கை அரசு திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தி வருகிறது என்று 2009-ல் எல்லோரும் கூறியதைத்தான் இப்போது ஐக்கிய நாடுகள் குழு அறிக்கை உறுதிப்படுத்தி இருக்கிறது. அப்போது, இந்தியா எப்படி, இந்த இனப்படுகொலை குறித்து எல்லோரும் குரல் எழுப்பியபோதும் அமைதி காத்ததோ, அதே அமைதியை இப்போதும் கையாள்கிறது.

இலங்கை அதிபர் ராஜபக்ச ஒரு போர்க் குற்றவாளி என்று தண்டிக்கப்படுவதற்கான அனைத்துக் காரணிகளும் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கை அரசு இதுபற்றித் துளியும் கவலை கொள்ளவில்லை. மாறாக, முழு அறிக்கையை வெளியிட்டால் இலங்கையில் நடைபெற்றுவரும் தமிழர்களின் இணக்கமான வாழ்க்கைக்கான அரசின் முயற்சிகள் பாதிக்கப்படும் என்று எதிர்ப்புத் தெரிவிக்கிறது.

நம் ஒற்றுமையைக் காட்டும் விதமாக மே முதல் தேதி ஐ.நா. அறிக்கைக்கு எதிரான விளக்கம் தருவதாக மே தின ஊர்வலம் அமையட்டும் என்று அறைகூவல் விடுகிறார் அதிபர் ராஜபக்ச. இந்த அளவுக்கு இலங்கை எனும் சிறிய நாட்டுக்குத் தைரியம் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இந்தியா தரும் துணிவும், ஆதரவும்தான் என்றால் மிகையில்லை. துணையோடு அல்லது நெடுவழி போகேல் என்கிறது நீதிநூல். ராஜபக்சவின் வழித்துணை இந்தியா.

இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் ஜெனீவா மாநாட்டில் தீர்மானம் கொண்டுவந்தால் அதை எதிர்ப்பதும், சர்வதேச நிதியத்தில் நிதிபெற்றுத் தருவதும் என எப்போதும் அன்பு காட்டி ஆதரவு தந்துகொண்டிருப்பது இந்தியாதான்.

இலங்கை நடத்திய தாக்குதல், போர்ப்பயிற்சி, ஆயுத விநியோகம், கண்ணிவெடி அகற்றம் என எல்லாவற்றிலும் இந்திய அரசின் நேரடியான - மறைமுகமான உதவிகள் இருந்துள்ளது என்கிற குற்றச்சாட்டுகள் மறுக்கப்படவே இல்லை.

இந்த ஆதரவு தரும் மனவலிமையால், இப்போதும் எங்களை ஐ.நா. ஒரு போர்க் குற்றவாளியாகச் சித்திரிக்குமானால், இந்தியா தடுத்துக் காப்பாற்றும் என்று வெளிப்படையாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள் என்றால், இந்தியா குறித்து அவர்களது மதிப்பீடு என்னவாக இருக்கிறது என்பது வெளிப்படை.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் தாற்காலிக உறுப்பு நாடாக இந்தியா இடம்பெற்றிருக்கிறது. உறுப்பு நாடுகள் கேட்டுக்கொண்டால்தான், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் மற்றும் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ராஜபக்ச மீது சர்வதேச விசாரணை நடத்தப்படும் என்கிறார் ஐ.நா. சபை பொதுச் செயலர் பான் கீ மூன். இந்தியாவோ மௌனம் காக்கிறது. இந்திய அரசின் சார்பில் ஐ.நா. குழுவின் அறிக்கை பற்றி அதிகாரபூர்வமான கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டிலிருந்து எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா, இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்கிறார். தேமுதிக, பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் என்று காங்கிரஸ் தவிர, ஏனைய கட்சிகள் அனைத்துமே ஐ.நா. குழுவின் அறிக்கையின்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குரலெழுப்பி இருக்கின்றன.

ஆனால், மத்திய அரசில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கும் தி.மு.க.வின் உயர்நிலைக் குழு கூடியது. விவாதித்தது. தமிழினத்தின்மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலையை எதிர்த்துச் சிலிர்த்தெழ வேண்டிய இயக்கம், தயக்கத்துடன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றித் தனது கடமையை முடித்துக் கொண்டுவிட்டது.

"(ஐ.நா. குழு) விசாரணை இன்னும் அதிகாரபூர்வமாக, முழுமையாக வெளியிடப்படவில்லை. நமது இந்திய அரசு இந்த அறிக்கை மீது எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற விவரமும் வரவில்லை'' என்று அதற்குக் காரணம் கூறியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.

இலங்கைத் தமிழருக்காக இவர் நடத்திய 2 மணி நேர உண்ணாவிரதத்தை ஜெயலலிதா கபட நாடகம் என்று சொன்னதைத் தமிழருக்கு நினைவூட்டத் தவறாத முதல்வர், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு "இப்போதாகிலும் செயல்படுங்கள்'' என்று நினைவூட்டினாரா என்றால் இல்லை.

பிரதமரிடமும் சோனியாவிடம் நினைவூட்டுவதற்குத் தமிழினத்தைப் பாதிக்கும், தமிழனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சுட்டிக்காட்டும் ஐ.நா. குழு விசாரணையைவிடத் தனது குடும்பத்தினரைப் பாதிக்கக்கூடிய முக்கியமான விசாரணைகள் நடைபெற்று வருவதுகூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

இந்திய அரசும், தன்னைத் தமிழினத் தலைவர் என்று அழைத்துப் பெருமை தட்டிக்கொள்ளும் முதல்வர் கருணாநிதி கூறுவதைப்போல, இன்னும் அறிக்கை முழுமையாக அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை என்று சொல்லக்கூடும். அதைவிட ஒருபடி மேலேபோய், போர்க் குற்றங்களில் விடுதலைப்புலிகளும் ஈடுபட்டனர், மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினர் என்று ஐ.நா. அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, நடுநிலை வகிப்பதற்குக் காரணம் தேடக்கூடும்.

இந்த வாதங்களை இந்திய அரசு முன்வைக்கும்போது அதை மறுக்கவோ எதிர்க்கவோ துணிவில்லாத கூட்டணிக் கட்சியாக, தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்றும், தமிழர்களும் இந்தியர்கள்தான் என்றும் தமிழர் நலனைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே இந்தியாவின் ஒற்றுமையைப் பாதுகாக்க முடியும் என்றும் மத்திய அரசுக்கு உணர்த்தும் கட்சியாக இன்றைய தி.மு.க. தலைமை இல்லை என்பதுதான் தமிழினத்துக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பின்னடைவு.

தமிழர் குரல் டில்லியில் ஒலியிழந்து போனதற்குக் காரணம் தமிழினத்துக்காகக் குரல் கொடுக்க வேண்டியவர்கள் தங்கள் சுயநலத்துக்காகக் கைகட்டி, வாய்பொத்தி, தலைகுனிந்து நிற்பதால்தானே?

இலங்கை அதிபர் ராஜபக்ச மீது சர்வதேச விசாரணை வேண்டும் என்று களத்தில் இறங்கிப் போராட வேண்டிய நேரத்தில், இவர்கள் சம்பந்தப்பட்ட வேறு விசாரணை நடந்து கொண்டிருக்கிறதே, இவர்கள் அதைப்பற்றித்தானே கவலைப்படுவார்கள்.

இவர்களே குற்றவாளிகளாக இருக்கிறபோது யாரைப் போர்க் குற்றவாளியாக்குவதற்காகப் போராடுவது?

தமிழினத் துரோகிகள் இவர்களே...!

Geen opmerkingen:

Een reactie posten