தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 12 april 2011

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரிடமிருந்து தமிழக முதலமைச்சருக்கு அவசரக் கடிதம்

[ திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2011, 02:16.23 PM GMT ]
இராணுவத்தினருடனான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசன் தமிழக முதலமைச்சருக்கு அவசரக் கடிதமொன்றை அனுப்பியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் விடுதலைப் புலிகள் மீதான தாக்குதல்களை நிறுத்தி, சமாதானப்  பேச்சுவார்த்தையொன்றுக்கான சூழலையேற்படுத்த உதவுமாறு அக்கடிதம் மூலம் அவர் கேட்டுக் கொண்டதாகவும், அது தொடர்பில் இரண்டு மூன்று கடிதங்கள் பரிமாறப்பட்டதாகவும் பிரஸ்தாப செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின்  மகளும் ராஜ்ய சபா உறுப்பினருமான கனிமொழி எம்.பி. ஊடாகவே குறித்த கடிதப் பரிமாற்றங்கள் நடைபெற்றதாகவும் மேலும் தெரிய வருகின்றது.
ஆயினும் இறுதிக்கட்டம் வரை இந்தியத் தரப்பில் இருந்து விடுதலைப் புலிகளின் கோரிக்கைகள் தொடர்பில் சாதகமான பதில்கள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் பா.நடேசன் கனிமொழி எம்.பி.க்கு அனுப்பியிருந்த ஒரு கடிதம் பின்வருமாறு அமையப்பெற்றிருந்துள்ளது.
“அன்புடன் சகோதரி கனிமொழிக்கு,
தற்போது இங்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் கொண்டிருக்கின்றனர். நாம் நீண்டகாலமாகவே யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி வருகின்றோம். எமது அவலங்களை போக்குவதற்காகவே நாம் இதனை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.
ஆனால் சிங்கள அரசு யுத்தத்தை தொடர்ச்சியாக நடாத்தி வருகின்றது. சிங்கள அரசின் அதிமுக்கிய மூத்த அமைச்சர்கள் இந்திய அரசின் உதவியினாலேயே தாம் இந்த யுத்தத்தை வென்றுகொண்டிருப்பதாக பகிரங்கமாக அறிவித்த வண்ணம் உள்ளனர்.
இது எமக்கு மிகுந்த வேதனையை தருகின்றது. இந்த நேரத்திலாவது நீங்களும் அப்பாவும் சேர்ந்து இந்திய அரசை வலியுறுத்தி யுத்த நிறுத்தத்தை கொண்டுவந்தால் எமது மக்களை காப்பாற்றலாம். நிபந்தனையற்ற யுத்தநிறுத்தமே எதிர்காலத்தில் அரசியல் பேச்சுவார்த்தைக்கும் நிரந்தர சமாதானத்திற்கும் வழிவகுக்கும்.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியை செய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றேன்.
நன்றி.
என்றும் உங்கள் அன்பான,
சகோதரன் பா.நடேசன் "

Geen opmerkingen:

Een reactie posten