தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 1 mei 2011

இறந்துபோன பல்லாயிரக்கணக்கான ஆத்மாக்களை விற்று அரசியல் செய்கின்ற தமிழர் அமைச்சர் டக்ளஸ்

 
[ சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2011, 04:34.51 PM GMT ]
அமைச்சர் டக்ளஸ் அடிக்கடி சொல்வதுண்டு பட்டாடைக் கனவுக்கு ஆசைப்பட்டு கட்டிய கோவணத்தையும் இழக்கின்ற நிலை ஏற்பட்டதாக. இன்று ஒரு துண்டு கோவணமும் இல்லாமல் இறந்துபோன பல்லாயிரக்கணக்கான ஆத்மாக்களை விற்று அரசியல் செய்கின்ற அளவுக்கு இணக்க அரசியல் தரமிறங்கிப் போயிருக்கின்றது.
 ஒரு சொந்த இனத்தின் விடுதலைப் போராட்டத்தையே நீர்த்துப் போகச் செய்த தமிழர் அமைச்சர் டக்ளஸ்.
இணக்க அரசியல் என்பது அபிவிருத்திக்கானது எனவும் துவண்டுபோன மக்களின் மீட்பர்தானே எனவும் வார்த்தை அலங்காரங்களால் அரசியல் செய்து வருபவர் இவர்.
உண்மையில் இணக்க அரசியல் என்பது கூட யாருக்கானது? சொந்த மக்களுக்கு நன்மையளிக்கின்ற ஒரு விடயமாக இருப்பின் மகிழ்ச்சிக்குரியது.
ஆனால் இரசாயனக் குண்டுகளாலும் பல்குழல் பீரங்கிகளாலும் பிய்த்தெறியப்பட்டவர்கள் மீது கை எது மெய் எது என்று தெரியாத சதைக்குவியல்களுக்குள் தங்களின் தாயை, தந்தையை, கணவனை, மனைவியை, அக்காவை, தங்கையை, பிஞ்சுக்குழந்தையை, காதலனை, காதலியை தேடித் தொலைந்தார்களே! அந்த நான்கு இலட்சம் மக்களின் உயிர்களையும் உணர்வுகளையும் விற்று ஐ.நா அறிக்கைக்கு எதிராகப் பேசியிருக்கும் பெருமகன் டக்ளஸ் ஜயா!
உண்மையில் நீங்கள் தமிழனா? நாம் இப்படிச் சொன்னால் அவலங்களை அரசியலாக்கக்கூடாது என்பீர். அப்படியென்றால் செத்தவர்கள் உயிர்த்தார்கள் என்றும் காணாமல் போனோர் காணப்பட்டார்கள் என்றும் ஊனமுற்றோர்கள் வலுக்கொண்டார்கள் என்றும் அகதிகளானோர் அரசு வழங்கிய வசதிகளால் ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறார்கள் என்றும் கூறி அரசாங்கத்தை மகிழ்ச்சிப்படுத்துவதே உங்கள் இணக்க அரசியலின் இலட்சணமோ?
அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறுதிப்போரில் கொல்லப்பட்டது பற்றியும் மனித உயிர்கள் ஜனநாயக அரசினால் வேட்டையாடப்பட்டது குறித்தும் நீதிக்குப் புறம்பான போர் நெறிமுறை குறித்தும் வெள்ளை மனிதன் காட்டுகின்ற இரக்கம் கரிசனை உங்களிடம் அற்றுப்போனது ஏன் ஜயா?
இறுதிப்போரில் யாரும் கொல்லப்படவில்லை எனவும் அரசிற்கு வக்காளத்து வாங்குகின்ற தங்களின் அரசியல் சொந்த மக்களின் அவலங்களின் மீதே நிகழ்த்தப்படுகின்றது.
நீங்கள் இந்த அறிக்கையை வெளியிடுகின்றபோது முள்ளிவாய்க்கால் வரை சென்று மீண்ட அந்த நான்கு இலட்சம் மக்கள் உங்களைப்பற்றி என்ன நினைப்பார்கள் எனச்சிந்திப்பதில்லையா?
இத்தனை அவலம் சுமந்த மக்களுக்கான ஐ.நாவின் பரிந்துரைகளை மக்களின் நிரந்தரத் தீர்வுக்கு வாய்ப்பாக்கி அதனை பயன்கொள்ளத் தெரியாத நீங்கள் இருந்தென்ன லாபம்?
இத்தகைய அப்பட்டமான பொய்யை அரசிற்காக உரைக்கின்ற தாங்கள் ஒவ்வொரு குடும்பங்களிலும் இருந்து இறந்த உயிர்களை அவர்களின் உறவுகளின் கதறல்களை அந்த மக்களின் உணர்வின் வலிகளை, ஏக்கங்களை எல்லாம் அப்பட்டமாகவே விற்று விட்டு அவர்களின் வீடுகளுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டு எப்படிப்போவீர்கள்?
நீங்கள் போவீர்கள்! சுயலாபங்களுக்காக அரசியலால் சுபீட்சம் அடைந்தவரல்லவா நீங்கள்?
ஐ.நா அறிக்கைக்கு எதிராக கருத்துக்களை மட்டுமா நீங்கள் தெரிவித்தீர்கள். யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் எங்கள் சொந்த மக்களையே அதிகாரங்களை கோலோச்சி கொழும்புக்கு அழைத்துச் செல்லுகிறீர்கள். அங்கே கையொப்பம் இடவும் கருத்துச் சொல்லவும் எங்கள் மக்கள் கொழும்புக்கு கொண்டு வரப்படுகிறார்கள்.
தமிழ்த் தேசிய இனத்தின் உண்மையான குரல், உணர்வு என்பன நிலத்தில் ஆட்சியாளர்களால் மாத்திரமின்றி தமிழ் அடிவருடிகளாலும் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும். ஐ.நாவின் தர்மப் பரிந்துரைகள் சர்வதேச ஆசியோடு செயற்படுத்தப்பட்டாலொழிய தமிழ் மக்களின் எதிர்காலத்தில் மகிழ்ச்சி மலர வாய்ப்பேயில்லை.
உயிர் உறையும் முள்ளிவாய்க்கால் யுத்தக்களத்தில் 2009ம் ஆண்டு மே மாதம் வரைக்கும் இருந்து உரிமைக்காக போரிட்ட காரணத்திற்காக வீரம் மிகுந்த சமூகம் வேரோடு பிடுங்கி வீசப்பட்ட கோரத்தை கண்கொண்டு பார்த்த ஈழ உணர்வாளன் என்ற வகையில்.
இராணுவத்தின் சப்பாத்து ஒசைக்கும் அதிரும் ஓட்டைக் கூடாரங்கள் தொலையாத தாயகத்திலிருந்து………
வன்னிமகன்.

Geen opmerkingen:

Een reactie posten