தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 12 mei 2011

ஆனந்த விகடனுக்காக உருத்திரகுமாரனின் பதில்

'அவதி' முகாம்கள்! (தமிழ்நாட்டின் இலங்கை அகதிகள்) அந்நிய மண்ணில் கையேந்தி நிற்கும் அவலத்துக்கு இணையாக எதைச் சொல்வது?
[ வியாழக்கிழமை, 12 மே 2011, 08:17.14 AM GMT ]
முள்ளிவாய்க்கால் பேரழிவின் இரண்டாம் ஆண்டு நிறைவு, இலங்கை இறுதிப் போர் தொடர்பான ஐ.நா சபையின் அறிக்கை, உலகிலேயே இனப் படுகொலைகள் அதிகம் நடந்த சூடானில் இப்போது நடந்திருக்கும் பிரிவினை ஆகியவற்றின் பின்னணியில் உருத்திரகுமாரன், ஆனந்த விகடனுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியின் தொடர்ச்சி.
''உலகிலேயே மிக மோசமான இனப் படுகொலைகள் நடந்த சூடான் பிரிவதையும், தெற்கு சூடான் உதயமாவதையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?''
 ''தென் சூடானிய விடுதலைப் போராட்டத்துக்கும், எமது விடுதலைப் போராட்டத்துக்கும் இடையில் சமாந்திர நிகழ்வுகள் பல உள்ளன. ஈழத் தமிழ்த் தேசிய இனமும், தென் சூடானிய மக்களும், ஒரே வகையில் அமைந்த இனப் படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்டோம். இருவருமே, தத்தமது போராட்டத்துக்குக் கடுமையான விலை கொடுக்க நேர்ந்தது. சமாதானப் பேச்சுவார்த்தைகளும், ஏறத்தாழ ஒரே காலத்தில் இடம் பெற்ற நிகழ்வுகள்தாம். இந்த இரண்டு பேச்சுவார்த்தைகளையும் நெறிப்படுத்தியவர்கள்கூட ஏறத்தாழ ஒரே நாடுகள்தாம்.
ஆனால், தென் சூடானிய மக்களுக்குத் தமது அரசியல் வேட்கைகளைப் பூர்த்திசெய்யவென்று வழங்கப்பட்ட சந்தர்ப்பம் எமக்குக் கிடைக்காமல் போய்விட்டது. தமக்கென்று ஒரு நாட்டை உருவாக்க, ஐ.நா. சபையின் மேற்பார்வையின் கீழ் அமைந்த கருத்துக் கணிப்பை நடத்தும் சந்தர்ப்பம் அவர்களுக்குக் கிடைத்தது; அது எமக்குக் கிடைக்கவில்லை.
கருத்துக் கணிப்பு நடத்த எமக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையானது, நீதிக்கு அப்பாற்பட்ட - அரசியல் பண்பாடற்ற ஒன்று. பன்னாட்டுச் சமூகம் மேற்கொண்ட இந்த மாறுபட்ட முடிவுகள் காரணமாகத்தான், ஜூபாவின் தெருக்களில் புன்னகை பூத்த முகங்களையும் அழகுறு நடனங்களையும் நாம் காணும் அதே வேளையில், தமிழீழத்தின் தெருக்களில் அவலத்தின் குரல்களையும் பெருகியோடும் ரத்த ஆற்றையும் மட்டுமே காண முடிகிறது!''
''இந்திய அரசையும் அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளையும் இன்னமும் நீங்கள் நம்புகிறீர்களா?''
''அனைத்துலக உறவுகளில் நிரந்தர நண்பனோ, எதிரிகளோ இருப்பது இல்லை; நலன்களே உண்டு என்று கூறுவார்கள். அமெரிக்காவும் இந்தியாவும், ஈழத் தமிழ்த் தேசத்தின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யக்கூடிய உலகப்பெரும் சக்திகள்தான். இங்கு கேள்வி, யார் நண்பன் அல்லது எதிரி என்பது அல்ல. எவ்வாறு இந்த உலக சக்திகளின் நலன்களையும், ஈழ தேசத்தின் நலன்களையும் பொருந்தச் செய்வது என்பது தான்!''
''யதார்த்தத்தை உணராததால்தான் வீழ்ந்தார்கள் புலிகள் எனச் சொல்லப்படுவது உண்டு. இன்னமும் நாம் யதார்த்தத்தை உணரவில்லையா?''
''இன்றைய யதார்த்தம், அன்றைய நிலையைவிட முற்றாக மாறுபட்டது என்பதுதான் எமது வாதம். முழுப் பூசணிக்காயைச் சோற்றில் புதைக்கும் சிறீலங்காவின் செயற்பாடுகளை, பன்னாட்டுச் சமூகம் அப்படியே நம்பிவிடத் தயார் இல்லை என்பதுதான் இன்றைய நிலைமை.
தமிழ் மக்களுக்குச் சிறீலங்கா அரசாங்கமும் ராணுவமும் புரிந்துள்ள கொடுமைகள், திருத்தப்படக்கூடியவை அல்ல. தன்னாட்சி பொருந்திய தமிழீழம் மட்டுமே தமிழரைக் காப்பாற்றும்; இந்தப் பிராந்தியத்துக்கு அமைதியைக் கொண்டுவரும் என்று உலக வல்லரசுகளுக்கும் பிராந்திய வல்லரசுகளுக்கும் தெளிவாகப் புரியவைக்க அரியதொரு சந்தர்ப்பம் உருவாகி இருக்கிறது. அதைச் சரியாக உணர்ந்து, தமிழ் மக்களின் விடிவுக்கு வழி தேட வேண்டியது எமது கடமை. உண்மை ஒருநாள் வெல்லும். தெற்கு ஆசியாவிலும், இந்து சமுத்திரத்திலும், தற்போது விரைவாக மாறிவரும் பூகோள-அரசியல் இயக்கப்பாடுகள் தெளிவுறும்போது, எமக்கென்று அரசு ஒன்றை நிறுவிக்கொள்ளும் வாய்ப்பும் அதற்குத் தேவையான அரசியல் வெளியும்கூடத் தாமாகவே வந்து அமையும்!''
''நாடு கடந்த தமிழீழ அரசு கனவா, கற்பனையா, ஏமாற்று நாடகமா?''
''நாடு கடந்த தமிழீழ அரசாங் கம் என்பது, கனவு அல்ல. கற்பனையும் அல்ல. நாடகமும் அல்ல. தமிழர்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும் என்பது உலகத் தமிழரின் கனவு. அதை நனவாக்கும் வகையில், ஈழத் தமிழரின் பாரம்பரியத் தாயகப் பிரதேசத்தில் தமிழீழத் தனி அரசை அமைக்கும் முயற்சியில், நாம் இறங்கி இருக்கிறோம். இது உலகுக்கு தமிழர்கள் வழங்கும் ஒரு முன் மாதிரி. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், உலகில் ஒரு வலு மையமாக உருவாவது உலகத் தமிழர்கள் கையில்தான் இருக்கிறது!''
  ''விடுதலைப் புலிகள் அமைப்பு சர்வதேச அளவில் ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில், அதன் நீட்சிபோல அதே அடையாளங்களுடன், உங்கள் அமைப்பை முன்னெடுப்பது ராஜதந்திரரீதியில் புத்திசாலித்தனமான நடவடிக்கைதானா?''
''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம். உலக வல்லாதிக்க நலன்களுடன் ஒத்திசைந்து, தமிழ் மக்களின் சுதந்திர உணர்வைச் சமரசம் செய்துகொள்ள மறுத்ததால்தான் விடுதலைப் புலிகள் இயக்கம் ராணுவ ரீதியில் அழிக்கப்பட்டது. ஆனாலும், தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வு இப்போதும் உயிர்ப்போடுதான் உள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இருந்த மக்கள் ஆதரவை அனைத்துலகச் சமூகம்நன்கு அறியும். இது தமிழ் மக்கள் தமக்கெனத் தனிஅரசு அமைக்கும் பெருவிருப்புடன் வழங்கப்பட்ட ஆதரவு என்பதனையும் அனைத்துலகச் சமூகம் அறியும்.''
''ஈழத்தில் தமிழர்கள் எல்லோரையும் ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு தலைவர் இல்லையா?''
''அனைத்து ஈழத் தமிழரும் இலக்கில் ஒன்றுபட்டே உள்ளனர்.''
''ராஜபக்ஷே... சுதந்திரா கட்சியின் ஏகபோக வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?''
''சிங்கள இன வெறி மேலாதிக்கத்தின் திரட்சியாக!''
''கே.பி?''
''கே.பி. சிறீலங்கா அரசின் ஒரு கைதியாக உள்ள காரணத்தால், தற்போதைய கட்டத்து விடுதலைப் போரில், அவர் ஒரு பொருட்டு அல்ல!''
''மதுக் கடைகள், கேளிக்கை விடுதிகள், விபசாரம் என ஈழத் தமிழர்கள் இடையே இப்போது காணப்படும் கலாசார மாற்றத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?''
''இவற்றை சிறீலங்கா அரசு, ஈழத் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட முறையில் நடத்தும் பண்பாட்டு வடிவிலான இனப் படுகொலையின் பகுதியாகத்தான் நாம் பார்க்க வேண்டி உள்ளது. தமிழ் மக்களின் விடுதலை உணர்வை மழுங்கடிப்பதற்கு சிங்களம் எடுக்கும் முயற்சிகள் இவை!''
''ஈழத்தில் இப்போது ஆங்காங்கே முளைவிடும் ஆயுதக் குழுக்கள்பற்றி?''
''இந்த ஆயுதக் குழுக்களானவை, தமிழீழ மக்களைத் தொடர்ந்தும் அடக்கி ஆள்வதை அனைத்துலகத்தின் கண்களில் நியாயப்படுத்தும் ஒரே நோக்கத்துக்காக, சிறீலங்கா அரசினால் ஏற்படுத்தப்பட்டு வழிகாட்டப்பட்டு வருபவை!''
''கடைசிக் கேள்வி. பிரபாகரன் - பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார்களா?''
''காலம் பதில் அளிக்க வேண்டிய ஒரு கேள்வி இது!''

முந்தைய கேள்விகளும் பதில்களும்
நன்றி
ஆனந்தவிகடன்

Geen opmerkingen:

Een reactie posten