தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 20 mei 2011

உயிருள்ள வரைக்கும் ஒரு தமிழன் மறப்பானா? சிதைத்து வீசப்பட்ட உறவுகளின் நினைவுகளை..

[ வியாழக்கிழமை, 19 மே 2011, 02:24.02 PM GMT ]
முடிவுரையில்லாத ஒரு நிசப்தப்பொழுதில் முள்ளிவாய்க்கால் சாம்பல் மேடுகள் தழுவிவரும் காற்று காதோரம் விழுகிறது. அழுகுரல்கள் நிறைந்த அந்த அவல ஓசை இதயம் பிழிந்து விடுகையில் கண்ணில் ஒரு துளி நீர்…. நாம் வாழவேண்டி தம் வாழ்வை மறுத்தவர்களின் அந்த மகாத்மாக்களின் உயிர் உறையும் தியாகங்களுக்கு அது அர்ச்சனை..
மறக்க முடியுமா? உயிருள்ள வரைக்கும் ஒரு தமிழன் மறப்பானா? சிதைத்து வீசப்பட்ட உறவுகளின் நினைவுகளை. யுத்தம் முடிந்து இரண்டு வருடங்கள் கடந்தோடி விட்டன. இயற்கையின் நியதியில் காலங்கள் இறந்து கொண்டிருக்கின்றன. ஆனால் காலத்தால் மறக்கடிக்கப்பட முடியாத சாத்வீகம் பேசிய பௌத்த பயங்கரவாதம் எங்கள் சதைதின்று குருதி குடித்த நினைவுகள் மட்டும் வாழ்ந்து கொண்டேயிருக்கும்.
எங்கள் மக்கள் வார்த்தைகளால் வரிசைப்படுத்த முடியாத துயரங்களைச் சுமந்தார்கள். அதைப்போக்கவே ஆயுதங்களையும் சுமந்தார்கள் அது குற்றமென்று புகட்டிய மகாவம்ச அடிவருடிகள் உறக்கத்தில் இருந்தவனைக் கொலை செய்வதைப்போல் பசித்தவரையும், புசித்த வஞ்சகத்தை புதிய மாகவம்சத்திலும் எழுதுவார்கள். நாங்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்று நினைத்தபோதும் அகதிகளாக நடந்துகொண்டிருந்தோம். எங்கள் சுதந்திரக்கனவுகள் சிதைத்து வீசப்பட்டபோதும் நாங்கள் அகதிகளாகவே நடந்து கொண்டிருந்தோம்.
இன்றும் அகதி ஆடையைக் களையாத ஏழைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஒன்றை மட்டும் தமிழர்கள் தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டும். வரலாற்றில் தமிழர்களை தலைநிமிரவைத்த பெருமகன் உலகவோட்டத்தில் வல்லாதிக்க சக்திகளால் தாயக மண் இரத்தக்கறை சுமந்தபோது அங்கேதான் தமிழரின் சுதந்திரமான வாழ்வையும் புதைத்து வைத்திருந்தான்.
அதைத்தான் இன்று உலகம் பெருமெடுப்பில் தோண்டிக் கொண்டிருக்கின்றது.
முள்ளிவாய்க்காலில் மூச்சுறைந்துபோன எம் சொந்தங்கள் ஒவ்வொருவரினதும் அழுகுரல்களிலும் இருந்தே எங்கள் சுதந்திர வாழ்வு பிறக்கவேண்டும் என்ற நியதியை விடுதலைப் போராட்டம் இன்று உலகத்திற்குக் எடுத்தியம்பியிருக்கின்றது. ஆனால் இந்த நிலையிலிருந்து எமது சுதந்திரமான வாழ்வியலுக்கான அடுத்தக் கட்டப் போராட்டத்தை நாம் எங்கு நகர்த்தப் போகின்றோம் என்பதே இன்றுள்ள கேள்வி.
விடுதலைப் போராட்டம் குறித்து தாயகத்தில் சில அடிவருடிகள் பேசிக்கொள்ளும் கீழ்த்தரமான பேச்சுக்கள் அவர்களின் சுயலாபங்களுக்காக அவர்கள் பேசிக்கொள்வதே தவிர அதில் வெறெந்த உண்மையும் கிடையாது.
உண்மையான உணர்வும் தமக்காக இறந்து போனவர்கள் மீதான உன்மையான பற்றுதலும் தாயக உறவுகளிடம் செத்துவிடவில்லை வாழ்ந்துகொண்டிருக்கும். எமக்காக மடிந்து போனவர்களின் கனவுகள் அடையப்படும் வரைக்கும் எங்கள் பயணங்கள் ஒய்ந்துவிட வேண்டாம் எமக்காக உயிர்நீத்துப்போன ஆயிரமாயிரம் மாவீரர்களை நினைவில் கொள்ளுவோம்.
சுதந்திரன்…

Geen opmerkingen:

Een reactie posten