தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 6 mei 2011

போர்க்குற்றவாளிகளுக்கு ஜேர்மனி, பிரித்தானியா, சுவிற்சர்லாந்து, மலேசியா, வத்திக்கான் ஆகிய நாடுகள் பாதுகாப்பு வழங்கிவருவதாக குற்றச்சாட்டு

 
[ வெள்ளிக்கிழமை, 06 மே 2011, 04:28.32 AM GMT ]
சிறீலங்கா இராணுவத்தினரின் பெருமளவான போர்க்குற்றவாளிகளுக்கு ஜேர்மனி, பிரித்தானியா, சுவிற்சர்லாந்து, மலேசியா, வத்திக்கான் ஆகிய நாடுகள் பாதுகாப்பு வழங்கிவருவதாக மனித உரிமைகளுக்கும், அரசியல் சட்டவாக்கத்திற்குமான ஐரோப்பிய நிலையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஈ.சி.சி.எச்.ஆர். அமைப்பும் அதன் துணை அமைப்புக்களும் இணைந்து இதனை வலியுறுத்தியுள்ளன.
ஜகத் டயஸ், சிறிலங்கா இராணுவத்தின் 57ஆவது படைப்பிரிவின் தளபதியாக இருந்த காலத்தில் போர்க்குற்றங்களை புரிந்துள்ளார் என்றும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டிருந்தார் என்றும் 2009ம் ஆண்டு நடந்த யுத்தத்தில் இவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருப்பதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இராணுவ அதிகாரியான ஜகத் டயஸ் என்பவருக்கு ஜேர்மனி, சுவிற்சர்லாந்து, வத்திக்கான் ஆகிய நாடுகள் வழங்கியிருக்கும் இராஜதந்திர அந்தஸ்தை விலக்கி கொள்ளுமாறு மனித உரிமைகளுக்கும், அரசியல் சட்டவாக்கத்திற்குமான ஐரோப்பிய நிலையம் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் 40ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், இந்த படுகொலைகளுக்கு ஜயத் டயஸ் முக்கிய பொறுப்பாளி என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இவர் யுத்தம் முடிந்த பின் சிறிலங்கா அரசாங்கத்தினால் பேர்ளினில் உள்ள ஜேர்மன் தூதரகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட ஒருவர் என்றும் மனித உரிமைகளுக்கும் சட்டவாக்கத்திற்குமான ஐரோப்பிய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. இவர் ஜேர்மன், சுவிட்சர்லாந்து, வத்திக்கான் ஆகிய நாடுகளின் சிறிலங்கா தூதரகங்களில் பணியாற்றி வருகிறார் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
2011 ஜனவரி மாதம் ஜேர்மன் சமஷ்டி வெளிவிவகார அமைச்சு, சுவிற்சர்லாந்து வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றிற்கு இவரின் விபரங்களை வழங்கியதாகவும், ஏப்ரல் மாதத்தில் வத்திக்கான் வெளிவிவகார அலுவலகத்திற்கும் இவ்விபரங்கள் வழங்கப்பட்டதாகவும் ஈ.சி.சி.எச்.ஆர். தெரிவித்துள்ளது.
இவருக்கு வழங்கப்பட்டிருக்கும் இராஜதந்திர விசாவை உடனடியாக ரத்து செய்யுமாறு தாம் இந்த மூன்று நாடுகளையும் கேட்டிருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நாடுகள் தமது கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருந்த போதிலும் இன்றுவரை அதனை நடைமுறைப்படுத்தவில்லை என மனித உரிமைகளுக்கும் சட்டவாக்கத்திற்குமான ஐரோப்பிய நிலையம் தெரிவித்துள்ளது.
மிகப்பெரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கும் இராணுவ அதிகாரி ஜகத் டயஸிற்கு இராஜதந்திர விசா வழங்கப்பட்டிருப்பது ஒரு தந்திரமான நடவடிக்கை என்றும், மிகப்பெரிய மனித உரிமை மீறல்களையும் போர்குற்றங்களையும் புரிந்த ஒருவருக்கு ஜேர்மனி சுவிட்சர்லாந்து வத்திக்கான் ஆகிய நாடுகள் இராஜதந்திர அந்தஸ்த்து வழங்கப்பட்டிருக்கிறது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜகத் டயஸ் தலைமைதாங்கிய 57ஆவது படைப்பிரிவு திட்டமிட்டு ஏறிகணைத்தாக்குதல்களை நடத்தி பொதுமக்களை கொன்றதாகவும், வைத்தியசாலை, தேவாலயங்கள், பொதுமக்கள் தங்கியிருந்த இடங்களில் எறிகணைத்தாக்குதல்களை நடத்தி 40ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களை கொலை செய்திருப்பதாகவும் அந்த அமைப்பு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
57ஆவது படைப்பிரிவு அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்ததற்கான ஆதாரபூர்வமான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும் இதுவரை நீதியான விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
யுத்தம் முடிந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் கடந்த வாரம் முதல் தடவையாக ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு போர் குற்றம் பற்றி அறிக்கை வெளியிட்டிருப்பதாகவும், ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவிற்கு மனித உரிமைகளுக்கும் சட்டவாக்கத்திற்குமான ஐரோப்பிய நிலையம் பூரண ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாகவும் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றத்திற்கான ஆதாரங்களையும் வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் போர்க்குற்றங்களிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்ட சிரேஷ்ட இராணுவ தளபதிகளை சிறிலங்கா அரசாங்கம் உலகளாவிய ரீதியில் இராஜதந்திர பிரதிநிதிகளாக அனுப்பவைத்திருப்பதாகவும் ஈ.சி.சி.எச்.ஆர் சுட்டிக்காட்டியுள்ளது.
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர பிரதிநிதியாகவும், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கும், மேஜர் ஜெனரல் உதய பெரேரா மலேசிய தூதரகத்திற்கும், மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி இந்தோனேசியா தூதரகத்திற்கும், மேஜர் ஜெனரல் அமல் கருணசேகர எரித்திரியாவுக்கும், ஜயத் டயஸ் ஜேர்மன் சுவிட்சர்லாந்து வத்திக்கான் தூதரகங்களுக்கும் இராஜதந்திர பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என ஈ.சி.சி.எச்.ஆர் சுட்டிக்காட்டியுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten