தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 20 februari 2013

புலித்தடம் தேடி...இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!- பாகம் 15 !


சரணடைந்த தமிழ் மக்களை, வதை முகாம்களில் அடைத்து உயிரைக் குடைந்து உதிரம் உறிஞ்சிய மாணிக்கம் பண்ணையில் நடக்கிறேன். இப்படிச் சொன்னால் இந்த இடத்தைப்பற்றி உலகுக்குத் தெரியாது... தமிழர்களான நமக்கும் கூட தெரியாது. ஆம், இந்த மாணிக்கம் பண்ணைதான், மெனிக் பார்ம் என அழைக்கப்படுகிறது.
சாலையில் இருந்து உள்ளே நுழையும் போதே ஆளரவமற்ற இடமாகக் காட்சியளித்தது.
இந்த செட்டிக்குளம் பகுதியில்தான் லட்சக்கணக்கான மக் களை அடைத்து வைத்து இருந்தார்களா என்பதை நம்ப முடியாமல் உடன் வந்த நண்பரிடம், ''இங்குதான் முள்வேலி முகாம்கள் இருந்தனவா?'' என்று பலமுறை கேட்டேன்.
இந்த இடத்தைப் பார்த்தால் உங்களுக்கும் இந்தக் கேள்வி தோன்றும். இந்தப் பகுதியில்தான் ஆனந்த குமாரசாமி, இராமநாதன், அருணாசலம், ஜோன் 4, ஜோன் 6, உளுகுளம், மருதமடு என்ற முகாம்கள் இருந்தன.
போரில் இடம்பெயர்ந்த மக்கள் இங்குதான் கழிவுக் குப்பைகளைப்போல கொட் டப்பட்டனர். இந்த முகாம்கள் 'வதை முகாம்கள்’ என்ற முன்மொழியோடுதான் வெளி உலகுக்கு அடையாளப்படுத்தப்பட்டன.
2012-ல் இந்த முகாம்களை இராணுவம் அகற்றியது. ஆனால், வதைகளை நடத்திய முகாம்களை விடுவதற்கு மனம் இல்லாமல், இந்த முகாம்களின் நிலம் தங்களுக்கு வேண்டும் என்று உரிமை கோருகிறது இலங்கை இராணுவம்.
தொழில் நிறுவனங்களும் இந்த இடத்துக்குப் போட்டி போடுகின்றன. ''இரத்தம் குடித்த முகாம்களின் காணிகளில் அப்படி என்னதான் உள்ளதோ, இவர்கள் இன்னும் அடைவதற்கு?'' என்று கடிந்து திட்டினார் உதவிக்கு வந்த நண்பர்.

மெனிக் பார்மில் உள்ள ஒரு தமிழ்ப் பெண்ணைச் சந்தித்தேன். அவர், ''எங்களுக்குக் கொடுத்தது எல்லாம் பள்ளக் காணிகள். எனக்கு நாலு பிள்ளைகள். மழ காலத்துலலாம் தற்காலிக வீட்ல இருக்கவே முடியாது. படுக்க இடமில்லாம தம்பி வீட்லயும் அம்மா வீட்லயும்தான் தூங்குவம். இன்னும் எங்களுக்கெல்லாம் வீடே கொடுக்கலை.
ஆனா, அதிகாரிகள்ட்ட போய் கேட்டா, 'மெனிக் பார்ம்க்கு வீடுகள் கொடுத்தாச்சு... இனி வீடுகள் இல்லை’னு சொல்றாங்கள். எங்களுக்கு எல்லாம் வீடே வரலைன்னு கேட்டா, 'வரும்... வரும்’னு தப்பவே வழி பார்க்கிறாங்கள்.
யுத்தத்துல பாதிச்சு குடும்பத்தை இழந்தவங்களா இருந்தாலும், வீடு இல்லைன்னு சொல்றாங்க. குடும்பத்துல நாலு பேரு இருந்தாதான் வீடுனு சொல்றாங்கள். இந்தியன் வீட்டுத் திட்டத்துல நிறையக் குளறுபடிகள் நடக்குது'' என்றார் வேதனையுடன்.
போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசு உதவவில்லை என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக அறிவிக்கப்பட்ட திட் டம்தான் 'இந்திய வீட்டுத் திட்டம்’. ஆமை வேக செயல்பாடுகளும், நடக்கும் முறைகேடுகளும் அதை நிரூபிக்கிறது.
முதலில் ஒரு வீட்டுக்கு ஒன்பது லட்ச ரூபாய் (இலங்கை ரூபாய்) என அறிவிக்கப்பட்டது. பின் ஏழு லட்சத்துக்கு வந்துள்ளது. இப்போது ஐந்து லட்சத்துக்கு வந்து விட்டது. ஆனால், இன்னும் சில ஆயிரம் வீடுகளைக்கூட முழுமையாக கட்டி முடிக்கவில்லை.
வீட்டை யாருக்குக் கொடுப்பது என்பதை முடிவுசெய்வது அரசு முகவர்கள். இவர்கள் தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு வீடுகளை ஒதுக்குகிறார்கள். 1,000 வீடுகளைக் கட்டத் திட்டம் போட்டால், 50 வீடுகள்தான் கட்டப்படுகின்றன. உண்மையில் இந்த நிவாரணப் பணம் மொத்தமும் இலங்கை அரசுக்குத்தான் போய்ச் சேருகிறது.
நேரடியாகக் கொடுத்தால் எதிர்ப்புக் கிளம்பும் என்பதற்காக, 'தமிழ் மக்களின் பெயரால்’ இலங்கை அரசுக்கு இந்தியா உதவுகிறது. அதேபோல், 'இந்திய அரசு மற்றும் மக்களின் அன்பளிப்பாக’ சென்ற சைக்கிள்கள் அனைத்தும் சிங்களர்கள் வாழும் தென் இலங்கைக்குத்தான் அதிகபட்சமாக சென்று அடைந்தது.
மெனிக் பார்மில் உள்ளூர் அரசியல் பிரமுகர் ஒருவரைச் சந்தித்தேன். அவர், 'மெனிக் ஃபார்ம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு பிரிவுக்கு நான் பொறுப்பு. நான் ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் உள்ளேன். மற்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் அரசின் பக்கமும் தமிழ் கூட்டமைப்பின் பக்கமும் உள்ளனர்.
இப்போது இங்கு இருக்கிறதில் யார் நல்லவன், கெட்டவன்னு பார்க்க முடியவில்லை. அதனால், நான்கு பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் ஒவ்வொரு பக்கம் உள்ளோம். எப்படியாவது ஒருவகையில் மக்களுக்கு உதவி கிடைக்காதா என்றுதான் யார் யார் பக்கமோ உள்ளோம். அப்படித்தான் சில உதவிகளை மக்களுக்குச் செய்து வருகிறேன்.
மக்களுக்கு அத்தியாவசியத் தேவையே இன்னும் நிறைவேற்றப்படவில்லை. மின்சாரம் இல்லை. பள்ளி க்குப் போகும் பிள்ளைகள், காலை ஆறு மணிக்கே இங்கிருந்து பேருந்துக்கு நடந்து செல்றாங்கள். பேருந்து இல்லாமையால் பள்ளியைவிட்டு சீக்கிரமே திரும்பி விடுகிறார்கள்.
இங்கே ஒவ்வொரு குடும்பத்துக்கும் நான்கு ஏக்கர் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அது அவர்களுக்குச் சொந்தமானது அல்ல. அதற்கு எந்தவிதமான சான்றுகளும் இல்லை. அரசோ, ராணுவமோ இது தேவை என்றால், கதைக்காமல் தந்துவிட்டுப் போகணும். மக்கள் வாழும் நிலத்துக்கான சான்றைக்கூட கொடுக்க அரசு ஒப்புக்கொள்ளவில்லை’ என்றார்.
மகன் காணாமல் போய் பிணமாகக் கண்ட ஒரு தாயைச் சந்தித்தேன். அவர், ''2007-ம் ஆண்டு என்ட மகன் காணாமல் போனான். தலை மயிர் வெட்டிட்டு வரன் என்று சொல்லி செட்டிக்குளம் போனவன், இரவாகியும் வரலை. அந்த நேரத்துல எங்களுக்கு போன் தொடர்பும் இல்ல.
போனவர் காணலை என்று எல்லா இடத்திலும் தேடினம். போலீஸ் இடமும் பொடியனை காணயில என்று சொன்னோம். எங்காவது தகவல் அறிஞ்சு பாருங்கள் என்று சொன்னது போலீஸ். செட்டிகுளத்தில் இருந்த இராணுவத்திடம்கூட பொடியனோட போட்டோவக் காட்டி, காணலை என்று கேட்டோம்.
என்ட மகனோடு மன்னார்ல இருந்த எங்கட வீடு கட்ட வந்த பொடியனும் போனது. அவனையும் காணயில. அவங்களத் தேடிப்போன இன்னொரு ஆளும் காணலை. பெரிய பெரிய ராணுவ முகாம்கள்லகூட போய் கேட்டுப் பாத்தம். எந்தத் தகவலும் இல்ல. மூன்றாம் நாள் விடிய பாடி கிடக்குதுன்னு தகவல் வந்தது.
யார் வம்புதும்புக்கும் போகாத பொடியன். மளிகக் கடைதான் வெச்சிருந்தான். இதுவரைக்கும் என்ட மகனை எதுக்கு யார் காட்டிக் கொடுத்தா, யார் கொன்னானுகூட எனக்குத் தெரியல. இன்னும் அந்த கடவுள்ட்ட மன்றாடிக்கிட்டுதான் இருக்கன், யார் என்ட பிள்ளைய கொன்னான்னு காட்டம்மான்னு'' கலங்கினார்.
அருகில் இருந்த நண்பர், ''நானும் இதற்குப் பயந்துதான் ஈராக் சென்று அங்கு இரண்டு வருடம் ஓட்டுநராக வேலைபார்த்தேன்'' என்றார்.
தகரமும் முள்வேலிக் கம்பிகளும் ஆங்காங்கே கிடந்தன. முகாம்களின் பெயரோடு நிவாரணக் கிராமங்கள் என்ற பலகைகள் இருந்தன. ஒற்றை இராணுவர் மட்டும் மூடப்பட்ட முகாம்களின் நுழைவாயிலில் உட்கார்ந்திருந்தார். முகாம்களின் வழிகள் தடுக்கப்பட்டிருந்தன. உள்ளே செல்ல யாருக்கும் அனுமதி இல்லை.
வவுனியாவுக்குத் திரும்பினேன். அங்கே தமிழ்க் கைதியாக இருந்து, விடுவிக்கக் கோரி உண் ணாவிரதம் இருந்தவேளையில் தாக்கப்பட்டு, உயிர் தப்பிய ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. உயிர் தப்பியவர் என்று குறிப்பிடக் காரணம், இவரோடு இருந்த தமிழ்க் கைதி நிமலரூபன் சிறையிலேயே கொல்லப்பட்டார்.
அவர், ''விசாரணைக்காக அழைத்துச் சென்றவர்களைத் திருப்பிக் கொண்டு வரணும். இனி யாரும் அழைத்துச் செல்லப்படக் கூடாது என்றுதான் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினோம். இந்த வேளையில் நாங்கள் அதிகாரிகளிடம், 'நீங்கள் விசாரணைக்குக் கூட்டிச் செல்வது என்றால், நீதிமன்றம் ஊடாகக் கூட்டிப் போங்கள்’ என்றோம்.
அதிகாரிகள், 'அப்படி எல்லாம் சட்டம் இல்ல. நாங்க செய்வதுதான் சட்டம்’ என்று சமாதானம் பேசுவதுபோல் வந்துதான் கண்ணீர் புகைக்குண்டு அடிச்சுத் தாக்கினாங்கள். அப்பதான் வெலிக்கடா சிறையில இருந்த எங்கள மகர சிறைச்சாலைக்கு மாத்தனாங்கள். அங்கதான் நிமலரூபன் செத்தது.
கால், கை எல்லாம் எனக்கு உடைஞ்சது. இடிப்பு முறிஞ்சது. அது ஸ்குரு பூட்டப்பட்ட நிலையில்தான் இப்ப உள்ளது.
2008-ம் ஆண்டும் அக்டோபர் 28-ம் தேதி 10.45-க்கு இதே வீட்ல இருந்துதான் 'கொஞ்ச வேல இருக்கு... வாங்க, போய்ட்டு வருவம்’ என்றுதான் கூட்டிப் போனார்கள். கொஞ்ச தூரம் சென்று கையில் விலங்கை மாட்டி, கண்களைக் கட்டித் தாக்கினார்கள். பின் பாதுகாப்புச் செயலர் நீதிமன்ற அனுமதியோடு 90 நாட்கள் மேலதிக விசாரணைக்கு எடுக்கப்பட்டு, அனுராதபுர சிறையில் தனிமையில் அடைக்கப்பட்டேன்.
அங்கதான் என்னைச் சித்திரவதை செஞ்சாங்கள். அதுலதான் என்னோட கண் பார்வை பாதிக்கப்பட்டது. 2010-ல் நீதிமன்றத்துக்கு அழைத்துப் போனாங்கள். ஆயுதம் வைத்திருந்ததாகச் சொல்லி பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் என்னைக் கைது செய்துள்ளதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
உண்மையில் அப்படி என்னிடம் இருந்து எந்த ஆயுதத்தையும் எடுக்கவில்லை. எப்படியோ இப்ப நான் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கன். ஆனா, என்னால என்ட குடும்பத்துக்கு எந்தப் பயனும் இல்லை. ஒரு நடைப் பிணமாகத்தான் உள்ளன்'' என்று நொந்தார்.
இப்படியான அத்துமீறல் சட்டங்கள்தான், எல்லாத் தமிழர்களையும் ஊமையாக்கி, ஊனமாக்கி உலவ விட்டிருக்கிறது.
ஊடறுத்துப் பாயும்...
ஜூனியர் விகடன்

Geen opmerkingen:

Een reactie posten