தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 9 februari 2013

பிரபாகரணை கைதுசெய்யச் சொன்னது ஜெயலலிதா தான்: அ.தி.மு.க !


சட்டசபையில் நேற்று(07) கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரங்கராஜன், “இலங்கை தமிழர்களுக்கு எதிராக காங்கிரஸ் எப்போதும் செயல்பட்டதில்லை” என்று தெரிவித்ததை அடுத்து, இந்த விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.

அமைச்சர் நத்தம் விசுவநாதன், “இலங்கை தமிழர்களுக்கு எதிராக ராஜபக்ஷே செயல்பட்டதில் காங்கிரசுக்கு பங்கு உண்டு. அதற்கு தி.மு.க.வும் உதவுகிறது. தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் பலமுறை பிரதமருக்கு கடிதம் எழுதியும், நேரில் பேசியும் அதை மத்திய அரசு இன்னும் தீர்க்கவில்லை. கடந்த ஆட்சியில் முதலமைச்சராக இருந்தவர் (கருணாநிதி) பேசும்போது, ‘சில பேராசை பிடித்த மீனவர்களால்தான் பிரச்சினை ஏற்படுகிறது’ என்றார். இது இப்போதும் சட்டமன்ற குறிப்பில் உள்ளது” என்றார்.

உடனே தி.மு.க.வினர் எழுந்து நின்று பேச அனுமதி கேட்டனர். அனுமதி கிடைக்கவில்லை.

அ.தி.மு.க. உறுப்பினர் செங்கோட்டையன், “முன்னாள் முதலமைச்சர் 2 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் பிரச்சினை தீர்ந்து விட்டதாக வாபஸ் பெற்றார். இதையடுத்து அங்கு குண்டு மழை பொழிந்து 80,000 பேரை கொன்று குவித்தனர். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்.

கேள்விக்கு பதில் சொல்ல தி.மு.க.-வினர் எழுந்தனர். அனுமதி கிடைக்கவில்லை.

அமைச்சர் கே.பி.முனுசாமி, “எப்போதும் எல்லா காலத்திலும் எல்லோரையும் ஏமாற்ற முடியாது. ராஜபக்ஷேவிடம் விருந்து சாப்பிட்டு பரிசு பெற்றவர்களில் இவர்களுடைய தலைவர் மகள் கனிமொழியும் உண்டு”

ஒருவழியாக தி.மு.க.-வை சேர்ந்த சக்கரபாணிக்கு பேச சந்தர்ப்பம் கிடைத்தது. அவர், “பிரபாகரன் குற்றவாளி. அவரை கைது செய்ய வேண்டும் என்று சொன்னது அ.தி.மு.க. அல்லவா ? போர் நடந்தால் அப்பாவி மக்கள் இறப்பார்கள் தான் என்று சொன்னதும் அ.தி.மு.க. அல்லவா ?” என்று பழைய சம்பவங்களை ஞாபகப் படுத்தினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.பி.முனுசாமி, ‘பிரபாகரன் குற்றவாளி, அவரை கைது செய்யவேண்டும்’ என்று கூறப்பட்டதை நியாயப்படுத்தினார். “புரட்சித் தலைவி எப்போதும் தீவிரவாதத்தை ஏற்றுக் கொண்டதாக வரலாறு இல்லை” என்றார். தொடர்ந்து பேசிய கே.பி.முனுசாமி, “புரட்சித் தலைவி தீவிரவாதத்தைதான் எதிர்த்தார். ஆனால், இலங்கை தமிழர்களை எப்போதும் ஆதரித்து வருகிறார். ஆனால் நீங்கள் ஆட்சியில் இருந்தால் ஒரு நிலை, எதிர்க்கட்சியாக இருந்தால் ஒரு நிலை என்று இலங்கை தமிழர் பிரச்சினையில் நடந்து கொள்கிறீர்கள் என்றார். நீங்கள் ஆட்சியில் இருந்த போது, இந்தியா சார்பில் ஒரு எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றது. அதில் கனிமொழியை இடம் பெற வைத்து 3-ம் தர அரசியல் நடத்தியவர் உங்கள் தலைவர்” என்றார்.

இதைக் கேட்டதும் தி.மு.க.வினர் ஆவேசம் அடைந்து அமைச்சரை நோக்கி வேகமாக வந்தனர். அவரிடம் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அமைதிப்படுத்த முயன்றார். என்றாலும் தி.மு.க.வினரும், அ.தி.மு.க.வினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூச்சல், அமளி நிலவியது. தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனை வரையும் அவையில் இருந்து வெளியேற்ற துணை சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரையும் சபை காவலர்கள் வெளியேற்றினார்கள்.

வெளியேற்றப்பட்ட தி.மு.க.வினர், வெளியே வந்த பின்பும் கோஷம் எழுப்பியவாறு சென்றனர். அமைச்சர் பேசியதை வாபஸ்பெற வேண்டும் என்று கூறினார்கள்.


Geen opmerkingen:

Een reactie posten