முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு பின்னர் பல நிலைகளிலும் சீர்குலைந்து தமிழீழ மக்களில் பெரும்பான்மையானோர் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். ஏறக்குறைய 65 வருடகால அரசியல் பிரச்சினை, இலங்கை சுதந்திரமடைந்தது முதல் பல பேச்சுவார்த்தைகள், பல போராட்டங்கள், உடன்படிக்கைகள், பல ஏமற்றங்கள்.....
...ஜனநாயகமற்ற சிறிலங்கா அரசுகளினால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறோம்.
தமிழர் தரபினரால் வேறுபட்ட சிறிலங்கா அரசுகளுடன் செய்து கொள்ளப்பட்ட சகல ஒப்பந்தங்களும், வெளிநாட்டவர் மத்தியஸ்தத்துடன் செய்து கொள்ளப்பட்டது உட்பட, யாவற்றையும், சிங்கள அரசுகள் தமக்கு சாதகமாக்கியதுடன், இறுதியில் குப்பை தொட்டிகளில் வீசிவிட்டனர்.
எமக்கிடையே மாறி மாறி குறைகூறுதல்கள், கூக்குரல்கள், பிரிவினைகள், பழிவாங்கல்கள், துரோகிப் பட்டங்கள், காட்டிக் கொடுப்புக்கள், வீரம் பேசுதல்கள், இறுமாப்பு அரசியல் போக்குகள் தொடர்கின்றன. ஆனால் யதார்த்த ரீதியாக பார்ப்போமானல், தமிழ் மக்களாகிய நாம், காலம் காலமாக பின்நோக்கியே செல்கிறோம்.
நாளுக்கு நாள் சிறிலங்கா அரசினால் அடிமைகள் ஆக்கப்பட்டு, எமது தாயகபூமியை படிப்படியாக இழந்து வருகிறோம். எமது பலவீனங்களை, எமது பிரிவினைகளை தமக்கு சாதகமாக பாவிக்கும் சிங்கள அரசுகள் – சிங்களக் குடியேற்றம், சிங்கள இராணுவமயப்படுத்தல், பௌத்தமயப்படுத்தல் போன்றவற்றை எமது தாயகபூமியில் வெற்றியாக செய்துவருவதை காண்கிறோம்.
நாம் என்ன செய்கிறோம்?
காலை எழுந்தவுடன் பத்திரிகைகள், இணைய தளங்களை புரட்டுகிறோம். எங்கு, என்ன பிழைகளை எமது உடன்பிறவா சகோதரர்கள் செய்துள்ளார்கள் என்பதை பார்க்கிறோம். நாட்டில் மக்களினால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகள், தமிழர் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனும் மற்றவர்களும் என்ன தவறு செய்துள்ளார்கள் என்பதை ஆராய்கின்றனர்.
அவரவர் தமது ஒரு பக்கச்சார்பான ஆய்வின் முடிவுகளை, உடன் மின்னஞ்சல் மூலமாகவோ, கைத்தொலைபேசி மூலமாகவோ ஊர் உலகமெல்லாம் தொடர்ந்து பிரிவினைகளை பேணுவதற்காகவென பரப்பப்படுகிறது. இச் செயலை செய்பவர்கள் சிறிலங்கா அரசின் செயற்திட்டத்திற்கு துணை போகிறார்கள் என்பதே உண்மை.
மறுபுறம் உணர்ச்சிவச அரசியல் செய்வோர், குழப்பவாதிகள் தமது பக்கச் சார்பான கண்டுபிடிப்புக்களுக்கு - கண் மூக்கு வாய் வைத்து அநோமதேய மின்னஞ்சல் மூலமாகவோ, அல்லது தமது அறிவுக்கு எட்டியவகையில் ஊர் பெயர் அற்ற இணைய தளம் அல்லது இனமாக விநியோகிக்கப்படும் பத்திரிகைகள் மூலமாக, துரோகப் பட்டியலுடன், இல்லாதது பொல்லாதது எல்லாம் எழுதி தொடர்ந்து தமிழ் மக்கள் பிரிந்து வாழ்வதற்கான செயற் திட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களை பொறுத்தவரையில், இதற்கு பெயர் அரசியல் வேலை அல்லது அரசியல் ஆய்வு. இவ் பெயர்வழிகள் முன்பு ஆயுதப்போராட்டத்தை உண்மையில் ஆதரித்தார்களா? அல்லது அதில் குளிர் காய்ந்தார்களா? என எண்ணத் தோன்றுகிறது.
இந்த அபாயகரமான நிலையில், தமிழ் மக்கள் இலங்கைத் தீவில் எதைச் சாதிக்க முடியும்? இது தான் ஓர் இனவிடுதலைக்கான அரசியல் விடுதலைப் போராட்டமா? அல்லது சகலரையும் பிரிக்கும் வேலைத்திட்டமா?
தமிழீழம்
இலங்கைதீவில் தமிழீத்திற்கான குரல், 1972ம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், 1983ம் ஆண்டு முதல் ஆரம்பமான ஆயுதப் போராட்டம் மூலமே வடிவம் பெற்றது. இத்துடன் நின்றுவிடவில்லை.
தமிழ் மக்களின் தாயக பூமியான வடக்கு கிழக்கில், மூன்றில் இரண்டு பங்கு ஆயுதப் போராட்டம் மூலம் மீட்கப்பட்டு, அங்கு சகல கட்டமைப்புக்கள் அடங்கிய தமிழீழ அரசு ஒன்று தமிழீழ விடுதலைப் புலிகளினால் நடாத்தப்பட்டதை நாம் நேரில் பார்த்தோம்.
இவற்றை நாம் மட்டுமல்லாது, பல வெளிநாட்டடின் முக்கிய புள்ளிகளும் நேரில் பார்வையிட்டார்கள். இவ் முக்கிய புள்ளிகள், அங்கீகாரத்திற்கு காத்திருக்கும் தமிழீழ அரசு ஒன்று இலங்கை தீவில் உள்ளதாகவும் வெளிப்படையாக கூறினார்கள். துரதிஷ்டவசமாக யாவற்றையும் இழந்தோம்.
விடுதலைப் போராளிகள் கைது, சித்திரவதை, சிறை, கொலை, காணமற்போதல், கற்பழிப்பு என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. பொதுமக்கள் வீடு வாசல் சொத்துக்களை பறிகொடுத்து வதைமுகாங்களில் காலத்தை கழிக்க நேரிட்டது. இன்று தமிழர் தரபில் எதுவும் நத்தை வேகத்தில் கூட முன்னேறவில்லை.
நாட்டில் உள்ள மக்களின் இன்னல்களை ஒரு கணம் தன்னும் சிந்தியாது, புலம்பெயர் வாழ்வில் தைரியம் வைராக்கியத்துடன் பெரும் தொகை பணத்தை செலவு செய்து, அரசியல் தீர்வுகள் பற்றி வட்டமேசை மகாநாடுகள், விருந்துபசாரங்கள் நடைபெறுகின்றன.
கடந்த மூன்றரை வருடங்களாக இவ் வட்டமேசை மகாநாடுகள், விருந்துபசாரங்கள் மூலம் இவர்கள் எதை சாதித்துள்ளார்கள்? தமிழர் கூட்டமைப்பு தமிழீழத்தை, சுயநிர்ணய உரிமையை கைவிட்டுவிட்டார்கள் (தாயகம், தேசியம், தன்னாட்சியை) என்று வலிந்து குறை கூறப்பட்டபொழுதும், வடக்கு கிழக்கில் இன்னல்களின் மத்தியில் வாழும் மக்கள் இறுதியாக நடைபெற்ற பாரளுமன்றத் தேர்தலில் தமிழர் கூட்டமைப்பையே ஆதரித்தார்கள்.
இன்று பல மிரட்டல்கள் இன்னல்கள் மத்தியிலும், தமிழர் கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர்களே தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகளாக திகழ்கிறார்கள். தமிழர் கூட்டமைப்பை குறை கூறியவர்கள் மக்களால் நிராகரிப்பட்டார்கள். இப்பொழுது திடீரென யாரும் - தாயகம், தேசியம், தன்னாட்சி பற்றி தமிழ் மக்களுக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை.
காரணம் இவற்றின் முக்கியத்துவத்தை திம்பு முதல் முள்ளிவாய்க்கால் வரை தமிழ்மக்கள் அறிந்திருந்த காரணத்தினால் தான், தமிழீழத்திற்கான ஆயுத விடுதலை போராட்டத்தை ஆதரித்தார்கள். சிலர் தாம் தான் இன்று இவற்றை கண்டுபிடித்தது போல் மக்களுக்கு போலி வேசம் போட முனைவது, பல சந்தேகங்களை உருவாக்குகின்றன.
என்ன செய்ய முடியும்?
சில தசாப்பதங்களாக மார்புதட்டி வாழ்ந்த தமிழ் மக்கள் இன்று எந்தவித்திலும் பேரம் பேசும் நிலையில் இல்லை என்பது யதார்த்தம். ஆயுத போராட்டம் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ மௌனித்துள்ள நிலையில், சிறிலங்கா அரசு இன்று தமிழ் மக்களை எந்தவிதத்திலும் கணக்கெடுப்பதே இல்லை.
ஆனால் தாம் தமிழர் தாயகபூமியில் மேற்கொள்ளும் சிங்களக் குடியேற்றம், சிங்கள இராணுவமயப்படுத்தல், பௌத்தமயப்படுத்தல் போன்றவற்றிலிருந்து சர்வதேசத்தை திசை திருப்புவதற்காகவும், தமது திட்டங்களை நிறைவாக நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதனாலும், தமிழர் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைக்காக தாம் காத்திருப்பது போன்ற ஓர் மாயையை சிறிலங்கா அரசு கடைப்பிடித்து வருகிறது என்பது இன்னுமொரு யதார்த்தம்.
உண்மையில் தமிழர் கூட்டமைப்பு சிறிலங்கா அரசுடன் பேச்சுவார்த்தைக்கு சென்றாலும் அங்கு எந்தவித அரசியல் தீர்வும் தமிழ் மக்களுக்கு கிடைக்கப் போவதில்லை. காரணம் 225 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில, 14 பாராளுமன்ற உறுப்பினார்களை கொண்ட தமிழர் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி, தமிழ் மக்களின் ஏகபோக அரசியல் உரிமைகளை, மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் கொண்ட அரசு செய்யவிருக்கிறது என்பது 21ம் நூற்றண்டின் தலைசிறந்த பகிடியாகவே இருக்கும்.
அப்படியானால் நாம் என்ன செய்ய முடியும் என்பது தான் அரசியல் முதிர்ச்சி கொண்டு கபடமற்ற முறையில் சிந்திக்கும் ஒவ்வொரு தமிழ் மக்களின் இன்றைய கேள்வி. பொதுவாக 80 வீதத்திலிருந்து 85 வீதமான தமிழ் மக்களது லட்சியம் கொள்கை என்பது - சுதந்திர தமிழீழமே என்பதில் எவ்வித ஐயமில்லை.
இவ் கொள்கையிலிருந்து யாரும் மாறவேண்டிய அவசியமுமில்லை. ஆனால் எமது லட்சியத்தை, தற்போதைய நிலையில் இரவோடு இரவாக அடைய முடியாது என்பது யதார்த்தம். ஆனால் எமது இலக்கை லட்சியத்தை எதிர்கால தலைமுறையினரினால் தன்னும் அடைவதற்காகன பதைகளை நாம் சீர் செய்ய வேண்டும். இது தான் ராஜதந்திரம்.
இதன் மூலமே நாம் எமது இனத்தை, எமது நிலத்தை, எமது தாயகபூமியை இலங்கைத்தீவில் காப்பாற்ற முடியும். இது தான் உண்மை. இது தான் உலக அரசியல் நடைமுறை.
இவற்றை இலகு மொழியில் கூறுவதனால், நாம் நீண்ட ஓர் பிரயாணத்தை மேற்கொள்ளும் வேளையில், நாம் பிரயாணம் செய்யும் வாகனம் சில சிக்கல்களில் மாட்டிக்கொண்டால், நாம் பிறரின் உதவிகளை நாடுவதில் என்ன தவறு? நாம் ஆக்கபூர்வமான அரசில் சிந்தனை கொண்டவர்களானால், நாம் எமது இலட்சியத்திற்கு ஏற்ற வகையில் மற்றவர்களின் உதவிகளை மனம் திறந்து உள உண்மையுடன் மனப்பூர்வமாக நாடவேண்டும்.
ஆபத்திலிருந்து வெளியேற வேண்டும்
மேல் கூறப்பட்டது போல், எமது அரசியல் தீர்வுக்கான வேறுபட்ட சிறிலங்கா அரசுகளுடன் செய்துகொள்ளப்பட்ட சகல ஒப்பந்தங்களும், குப்பபை தொட்டிகளில் வீசப்பட்டுள்ளன. ஆனால் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வையும் ஒரு நோக்காக கொண்டு மேற்கொள்ளப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தம் மட்டும் இன்றுவரை குப்பைத் தொட்டிகளில் வீசப்படவில்லை.
ஆனால் செயல் வடிவம் கொடுக்கப்படாது இவ் உடன்படிக்கை ஓர் மந்தநிலையில் உள்ளது. காரணம், இது இரு நாட்டிற்கான ஓர் சர்வதேச ஒப்பந்தம் என்பதும் தான் உண்மை.
அன்று நாம் பலமுடன் காணப்பட்ட வேளையில் இவ் ஒப்பந்தம் எமக்கு ஏற்றதாக காணப்படவில்லை என குறை கூறியது உண்மை. ஆனால் இன்று நாம் நமது தாயகபூமி உள்ள நிலையில,; இவ் இலங்கை-இந்திய ஒப்பந்தம் தன்னும் இன்று நடைமுறைப்படுத்தப்படுமானால், தொடர்ந்து அடிமைப்பட்டு அழிந்து வரும் எமது இனத்தை, எமது நிலத்தை காப்பாற்ற முடியும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
இவ் ஒப்பந்தம் பற்றி கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நாம் அக்கறை கொள்ளாது இருந்தமைக்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று, தமிழீழ ஆயுதப் போராட்டம் வெற்றிகரமாக முன்னேறியது என்பது ஒரு காரணியாகும். இன்று நாம் உள்ள நிலையில் எமது தாயகமியில் ஆயுதப் போராட்டம் என்ற கதைக்கே இடமில்லை என்பது யதார்த்தம்.
ஆகையால் தற்பொழுது மிக துரிதகராமாக சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றம், சிங்கள இராணுவமயப்படுத்தல், பௌத்தமயப்படுத்தல் போன்றவற்றிலிருந்து எமது தாயகபூமியை உடன் காப்பாற்ற வேண்டியது உணர்வுள்ள தமிழர்களின் கடமையாகும்.
இந்த வகையில் மீண்டும் உடனடியாக, இலங்கை இந்தியா ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துமாறு நாம் ஒருமித்து இந்தியாவிடம் வேண்டுகோள் விடவேண்டும். இவ்விடயத்தில் இந்தியாவிற்கு ஓர் கடமைப்பாடு உள்ளது என்பதை இந்திய மறுக்க முடியாது.
இதற்கு மாறாக, யாரும் தமது சுயநல நோக்குடன,; இந்தியா மீது வலிந்து குறைகண்டு, இந்தியாவின் உறவில் சூதாடுவது, சிறிலங்கா அரசின் செயற்திட்டத்திற்கு உருவம் கொடுப்பவர்களே என்பது தான் உண்மை. கடந்த 2003ம் ஆண்டு நடைபெற்ற ஓர் சம்பவத்தை எம்மில் பலர் அறவே மறந்துள்ளனர்.
சிலர் தமது சுயநல நோக்கங்களுக்காக தமிழ் மக்கள் இச் சம்பவத்தை அறவே மறக்க வேண்டுமென கங்கணம்கட்டி நிற்கிறார்கள்.
இடைக்கால தீர்வு திட்டம் (ISGA)
இது மட்டுமல்லாது இந்திய எதிர்ப்பு கொள்கையை கொண்ட சகலரும் தலைவர் பிரபாகரனின் 2008ம் ஆண்டு மாவீரர் தின உரையை மிகவும் கவனமாக படிக்க வேண்டும். இவ்வுரையின் பின்னர், தலைவர் பிரபாகரனின் உரை எதுவும் வெளியாகவில்லை.
அடுத்து, தமிழீழ விடுதலைப் புலிகளினால் 2003 ஆண்டு நவம்பர் மாதம் 1ம் திகதி, அன்றைய சிறிலங்கா அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்காலத் தீர்வுத் திட்டத்தை நாம் மிக கவனமாக ஆராய வேண்டும்.
இவ் தீர்வு திட்டத்தை ஆங்கிலத்தில், “Interim Self-Governing Authority – ISGA” என்பார்கள். இவ் இடைக்கால தீர்வு திட்டம், ஐக்கிய சிறிலங்காவிற்குள்ளான ஓர் தீர்வு என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதாவது சிறிலங்காவின் அரசியல் யாப்பிற்கு உள்பட்டது.
இரண்டு சகாப்தங்களுக்கு மேலாக சகல கட்டமைப்புக்கள் அடங்கிய தமிழீழ அரசை அன்று நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகள் அன்று ஐக்கிய சிறிலங்காவிற்குள்ளான இடைக்கால தீர்வு ஒன்றை முன்வைத்தார்களேயானால், இன்று நமது மக்கள் உள்ள நிலையில், 1987ம் இலங்கை இந்திய ஒப்பந்த்ததை நடைமுறைபடுத்துமாறு இந்தியாவை நாம் வலியுறுத்துவதில் என்ன தவறு? இதற்கு, பிரித்தானியாவில் ஸ்கொட்லாந்தை நாம் ஓர் முன் ஊதாரணமாக பார்க்க முடியும்.
சகல போராட்டங்களிலும் தோல்வியடைந்த ஸ்கொட்லாந்து மக்கள் தமது லட்சியத்தை அடைவதற்கான மாற்றுத் திட்டங்களை முழு மனத்திருப்தியுடன் ஏற்றுக் கொண்டார்கள். காலம் கனிந்து வந்தவேளையில், ஸ்கொட்லாந்து பிரித்தானியாவிடமிருந்து பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பு 2014 நடைபெறுவதற்கான ஒழுங்குகள் இப்பொழுது மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த தீர்க்கதரிசனமான எண்ணங்களை தவிர்த்து மக்களை சூதாட்டப் பொருளாக எண்ணி, இரவோடு இரவாக தமிழீழத்தை பெறுவோம், பெற்றுத் தருவோம் எனக் கூறுவது, அநாதரவான மக்களை ஏமாற்றும் செயலாகும். இவ் அர்த்தமற்ற நிகழ்ச்சி நிரல் தொடருமானால், தமிழ் இனம் இலங்கை தீவில் ஒட்டுமொத்தமாக அழிவதற்கு வழிவகுப்பீர்கள்.
சர்வதேச ஆதரவும் உண்டு
இந்தியாவை அலட்சியம் பண்ணி நாம் ஒருபொழுதும் எந்த அரசியல் தீர்வையும் அடைய முடியாது. இந்தியாவை பகைக்க வேண்டும் என எண்ணுபவர்கள் யாவரும் சிறிலங்காவின் மறைமுக நிகழ்ச்சி நிரல்களுக்கு துணை போவபர்கள்.
இரண்டு சகாப்தங்களுக்கு மேலாக சகல கட்டமைப்புக்கள் அடங்கிய தமிழீழ அரசை அன்று நிர்வகித்த தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம் ஏற்கனவே கிடைத்து விட்டது என்றோ, அல்லது தமிழீழம் இன்னும் சில நாட்களில் முழுதாக மலருமென்றோ, மக்களுக்கு ஏமாற்று வித்தை காட்டவில்லை.
ஆனால் இன்று எம்மில் சிலர், தமிழீழம் இந்தா வருகிறது, நாளை வருகிறது என அப்பாவி மக்கள் மீது சவாரி செய்வது மிக வேதனை தரும் விடயமாகும். இப்படியான பெயர்வழிகள் சிறிலங்காவின் நாசகார வேலைகளுக்கு துணைபோகும் கைபொம்மைகளா என எண்ணத் தோன்றுகிறது.
இப்படியாக கூறுபவர்கள் யாவரும் - உதாரணமாக, எதற்கும் வழி இல்லாத ஒரு பிச்சைக்காரன், தான் ஐந்து நட்சத்திர விடுதியில் உணவருந்தவுள்ளதாக கூறுவதற்கு சமமான செயலாகும்.
நாம் கடந்த மூன்றரை வருட காலமாக இருக்குமிடத்தை விட்டு இல்லாத இடங்களுக்கு மனுக்களும் சந்திப்புகளும் நடத்திக் காலத்தை வீண் விரயம் செய்து கொண்டிருக்கிறோம். இதற்காக நாளுக்கு நாள் பெரும் தொகை பணம் விரயம் செய்யப்படுறது.
இந்தியாவின் உதவியை நாம் தேடும் கட்டத்தில், எந்த ஒளிப்பு மறைப்புமின்றி நிச்சயம் சர்வதேச சமுதாயத்தின் வெளிப்படையான உதவி அங்கீகாரம் எமக்கு கிடைக்கும். இதற்காகவே எமது முன்னோடிகளும் இந்தியாவின் நட்பை பேணுமாறு வற்புறுத்தியிருக்கிறார்கள்.
ஓர் இனத்தின் சுதந்திரத்தை நிர்ணயிக்கும் வாக்கெடுப்பாக ஏந்த நாட்டினாலும், இதற்கு ஐ. நா. பாதுகாப்பு சபையினரின் அங்கீகாரத்தை பெற வேண்டும். பாதுகாப்புச் சபையில் உள்ள சீன, ரஷ்ய சிறிலங்காவிற்கு எதிராக எதையும் நடைமுறைப்படுத்த அனுமதிக்கமாட்டார்கள் என்பது எமது அனுபவம்.
பிரித்தானியாவில் ஸ்கொட்லாந்தின் நிலைமை வித்தியாசமானது. பிரித்தானிய அரசு அவ்வாக்கெடுப்பிற்கு பூரண சம்மாதம் தெரிவித்துள்ளது. ஆகையால் நாம் பகற்கனவு காணாது நடைமுறைக்கு சாதகமான விடயங்களை தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.
“அச்சம் என்பது மடைமையடா, அஞ்சாமை தமிழர் உடமையடா! ஆறிலும் சாவு நூறிலும் சாவு!, தாயகம் காப்பது கடமையடா”
Geen opmerkingen:
Een reactie posten