தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 23 februari 2013

நோர்வேயில் ஈழப் பெண் ஒருவா கடந்த வருடம் தனது மகனுடன் தீக்குளித்து இறந்த அவலம்! குறும்படமாகிறது!!


அலைபேசி மணி ஒலிக்கிறது. மறுமுனையில் நோர்வே தொலைக்காட்சியான என்.ஆர்.கே நிறுவனத்தில் இருந்து நண்பர் ஒருவர் பேசுகிறார். சிந்து பைரவி படத்தில் வரும் பாடல் ´´ நானொரு சிந்து காவடிச் சிந்து ´´என்கிற பாடலின் சில வரிகளின் தமிழாக்கம் மற்றும் அதன் உள்ளூடே விளங்கும் அர்த்தங்களை விளக்குமாறு வினவுகிறார். விளக்கியதும்,பணி நிமித்தம் இணைப்பு துண்டிக்கப் படுகிறது.
ஏன் இந்தப் பாடலை இவர்கள் கேட்கிறார்கள் என குழம்பியவாறே இருந்தேன் பிறகுதான் அதற்க்கான காரணத்தைத் தெரிந்து கொண்டேன்.
கடந்த 2003 ஆம் ஆண்டு புலிப்படையில் இணைத்தவர் வினோதா நேசராஜா. ஆறு மாதம் கழித்து தன் தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க விடுப்பில் வந்துள்ளார். நான்கு பிள்ளைகள் கொண்ட நேசராஜா தம்பதியினரின் மூத்த பிள்ளை என்பதால், குடும்பச் சுமை காரணமாக புலிப்படைக்குத் திரும்பவில்லை. அப்போதிருந்த புலிகளுக்கும் மனித உரிமை ஆணையத்திற்கும் இடையில் இருந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இயக்கத்தில் இருந்து விடுவித்துக் கொண்டுள்ளார். பின் கிருத்தவ மார்க்கத்தைத் தழுவி கரோலின் வினோதா நேசராஜாவாக மாறியுள்ளார்.
2005 காலகட்டங்களில் புலிப்படையில் பயிற்சி பெற்றவர்களை சிங்கள ராணுவத்தினர் தேடித் பிடித்து கொடுமைப் படுத்திய சமயத்தில், நோர்வேயில் வசிக்கும் தம் உறவினர் ஒருவர் உதவியுடன் நோர்வே நாட்டிற்க்குத் தப்பி வந்துள்ளார். அகதிகள் முகாமில் சிறிது காலம் வசித்துள்ளார். பின் தனது உறவினர் வீட்டில் சிறிது காலம் வசித்துள்ளார். உறவினருடன் கருத்து வேறுபாடு ஏற்படவே, மறுபடியும் அகதி முகாமிற்கே திரும்பிவிட்டார். பின்னாளில் அதே முகாமில் வசித்த குரிதிஷ் (ஈராக்) இனத்தைச் சேர்த்த ஒருவருடன் காதல் மலர்ந்து, இருவருக்கும் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நிம்மதியாக சிறிது காலம் கடந்துள்ளது. பின் இலங்கையில் வாழும் தன் சகோதரியின் கணவன் ராணுவத்தால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளார், தன சகோதரியும் மர்மமான முறையில் இறந்துவிட்டார் என்கிற செய்தி கிடைக்கிறது. துடி துடித்துப் போகிறாள். இதற்கிடையில், வெந்த புண்ணில் சூட்டுக்கோல் திணிப்பதைப் போல, அவளுக்கும் அவளது காதலன் இருவருக்கும் அகதிக்கான விண்ணப்பம் நார்வே அரசால் நிராகரிக்கப் பட்ட செய்தி கிடைக்கிறது. அவள் இலங்கைக்குத் திரும்பச் செல்ல வேண்டும் என்கிற நிர்பந்தம். மேல்முறையீடு செய்வதற்கோ அல்லது மாற்று வழிகளையோ அவள் அறிந்திருக்க வில்லை. மனமுடைந்து போன கரோலின், ஓராண்டிற்கு முன் (2012), தன் ஒரு வயது மகனை மடியில் வைத்தவாறு நெருப்பைப் பற்றவைத்துக் கொண்டு தீக்குளித்து இறந்து போனார்.
நோர்வே நாட்டில் இப்படி ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை. ஆகவே நோர்வே நாட்டின் தொலைக்காட்சியான என்.ஆர்.கே தொலைகாட்சி இச்சம்பவம் குறித்து ஒரு ஆவணப் படம் தயாரித்து ஒளிபரப்புகிறது. ஊடக சுதந்திரத்தில் முதலிடம் வகிக்கும் நார்வே நாட்டில் தயாரிக்கப்படும் உலகத் தரம் வாய்ந்த இம்மாதிரியான ஆவணப் படங்கள், தமது சமூக மற்றும் அதிகார கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நடுநிலையுடன் சுட்டிக் காட்டுவதாகவே அமையும். மார்ச் மாதம் முதல் வாரத்தில் இந்தக் குறும்படம் ஒளிபரப்பாகிறது.
இதற்கும் சிந்து பைரவியில் உள்ள ´நானொரு சிந்து காவடிச் சிந்து´ பாடலுக்கும் என்ன சம்பதம் என்று கேட்பீர்களேயானால், தன் துயர் மிகுந்த சோக வாழ்வின் நடுவே, நீண்ட மனப்போராட்டத்தில் இருந்த கரோலின் தனிமையில் இந்தப் பாடலைப் பல முறை கேட்டுக் கொண்டு இருந்துள்ளார். எண்ணிப் பார்க்கிறேன், தனிமையில் அவர் கேட்ட இந்தப் பாடல் அவரது சோகமான மனநிலையுடன் எவ்வாறு ஒத்திசைத்துள்ளது என்று. முன்பு இந்தப் பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம் ஒரு களிப்பு, ரசிப்பு, சில இளமைக்கால சுக அனுபவங்கள் வந்து போகும், தற்போது கரோலின் என்கிற பெண்ணின் நினைவும் அவளது மனப் போராட்டமும் நினைவில் வந்து செல்கிறது.
ஒரு உணர்வை வளர்த்துக் கொண்ட காரணத்தால் இம்மாதிரி எத்தனை பாடல்கள் , நினைவுகளில் தேக்கி வைத்திருந்த மகிழ்ச்சி, களிப்பு அனைத்தும் பறிபோயுள்ளது? தொலைவில் எங்கோ, நம் இனத்திற்கு ஏற்ப்பட்ட கொடுமை ஒரு தனிமனித வாழ்வை இவ்வாரெல்லாம் பாதிக்கின்றது. இப்படிதான் என் சக தமிழகத் தமிழனையும் இது பாதிக்கும்?இருந்தும் அவன் ஏன் இத்தகைய கையறு நிலையில் உள்ளான் என்கிற ஆதங்கதுடனே விடிகிறது பொழுது, முடிகிறது ஒவ்வொரு நாளும் !! :
கோபால்சாமி

Geen opmerkingen:

Een reactie posten