ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அசைந்து கொடுக்கவில்லை. இப்போது திருகோணமலையில் தனது 65 ஆவது சுதந்திர நாள் பேச்சில் இலங்கைத் தமிழர்களின் சுயாட்சி உரிமையை மகிந்த ராஜபக்ச முற்றாக நிராகரித்திருக்கிறார்.
தமிழருக்கு சுயாட்சி கிடைப்பதை அவர் அடியோடு விரும்பவில்லை. அவர் ஆற்றிய உரை இதனைத் துலாம்பரமாக வெளிப்படுத்துகிறது.
இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் சமமான உரிமை உள்ளது எனவும் இன மற்றும் மொழி அடிப்படையில் எந்தப் பிரிவினைகளுக்கும் இந்த நாட்டில் இடமில்லை என்றும் இறைமையுள்ள நாடொன்றின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு இன்னொரு நாட்டுக்கு உரிமையில்லை என்றும் தனதுரையில் குறிப்பிட்ட மகிந்த ராஜபக்ச அதனூடாக வெளிநாட்டுத் தலையீடுகளையும் கண்டித்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சிங்களப் பேச்சு ஆங்கிலத்தில் "இந்த நாட்டில் இன அடிப்படையில் வெவ்வேறு நிருவாகங்களை வைத்திருப்பது நடைமுறைச் சாத்தியமில்லை" (it is not practical for this country to have different administrations based on ethnicity") என மொழிபெயர்க்கப்பட்டது.
இதனை வைத்துத்தான் திமுக தலைவர் மு. கருணாநிதி ராஜபக்ச தனது சுயவடிவத்தைக் காட்டிப் போட்டார் என தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் அவர்களுக்கு ஒரு காட்டமான கடிதத்தை எழுதியிருந்தார்.
பின்னர் மகிந்த ராஜபக்சவின் ஆங்கிலப் பேச்சு இந்த நாட்டை இன அடிப்படையில் பிரிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது" ('it is not practical for this country to be divided based on ethnicity") என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவால் திருத்தப்பட்டது.
எது எப்படியிருப்பினும் தமிழர்களுக்கு சுயாட்சி உரிமை கொடுப்பதில்லை என்பதில் மகிந்த இராசபக்சா உறுதியாக இருக்கிறார். இது அவரது பேரினவாத சிந்தனையின் வெளிப்பாடாகும்.
பதின்மூன்றாவது சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்ற யோசனையை முதலில் முன்வைத்தவர் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் அடியெடுத்துக் கொடுத்ததை சிங்கள பேரினவாத கட்சிகளான ஜாதிக ஹெல உறுமய, வீர விதானய, சிஹல உறுமய, சிங்களயே மகா சம்மத்த பூமி புத்திர பக்க்ஷய, மகா சங்கத்தினர், ஜாதிக்க சிந்தனய, எக்சத் பிக்கு பெரமுன, தேசிய சுதந்திர முன்னணி போன்ற அமைப்புக்கள் வழிமொழிந்து நாடு தழுவிய பரப்புரையை மேற்கொண்டன.
மே 23, 2009ம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்த பின்னர் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூனும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்கள்.
அந்த அறிக்கையில் இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் இனச் சிக்கலுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு தமிழ்க் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுடனும் விரிவான பேச்சுக்கள் நடத்தப்படும் என மகிந்த ராஜபக்ச வாக்குறுதி அளித்திருந்தார்.
அதன் பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சராக இருந்த எஸ்.எம்.கிருஸ்ணா இலங்கைக்கு மே 15 - 17, 2011ல் பயணம் செய்திருந்த போது மகிந்த ராஜபக்சவை அலரி மாளிகையில் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.
அந்தப் பேச்சின்போது 13வது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று இனச் சிக்கலுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் என இலங்கை ஜனாதிபதி தனக்கு வாக்குறுதி அளித்ததாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா தனது இலங்கைக்கான பயணத்தின் முடிவில் தெரிவித்திருந்தார்.
மீண்டும் கிருஷ்ணா ஜனவரி 17, 2012ல் இலங்கை வந்த போது இதே மாதிரியான வாக்குறுதி கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார். ஆனால் அதனை மகிந்த ராஜபக்ச அடுத்த நாளே மறுத்துவிட்டார்.
இந்நிலையில் மகிந்த ராஜபக்சவின் சுதந்திர நாள் உரை மேற்குறிப்பிட்ட அனைத்து உறுதிமொழிகளையும் அப்பட்டமாக மீறுவதாக அமைந்திருப்பதாக அனைத்துலக ஊடகங்கள் பலவும் சுட்டிக்காட்டியுள்ளன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சுதந்திர நாள் பேச்சை அமெரிக்காவின் பிரபல ஆங்கில நாளிதழான "நியூயோர்க் ரைம்ஸ்' கடுமையாக விமர்சித்து செய்தி வெளியிட்டது. அவரது உரையின் முக்கிய பகுதிகள் குறித்து விளக்கத்தையும் அளித்துள்ளது.
மகிந்த ராஜபக்சவின் உரை நாட்டின் சிறுபான்மைத் தமிழர்களுக்கு அதிகாரப் பரவல் மூலம் கூடுதலான அரசியல் சுயாட்சி கொடுக்கத் தயாரில்லை என்பதைக் காட்டுகிறது. மேலும் அவரது உரை போர் முடிந்த கையோடு தமிழ்மக்களுக்கு 13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் தீர்வு காணப்படும் எனப் பல ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு அளித்த வாக்குறுதிகளை முற்றாக நிராகரித்துள்ளது.
அது மட்டுமல்ல பிரிவினை கேட்டவர்கள் சொந்தம் கொண்டாடிய திருகோணமலையில் அவர் ஆற்றிய சுதந்திர நாள் உரை தமிழர் ஆதிக்கம் வகிக்கும் மாகாணசபைகளுக்கு புதிய அதிகாரம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது என்பதோடு வெளிநாடுகள் உள்நாட்டு அலுவல்களில் தலையிடக் கூடாதென்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என "நியூயோர்க் ரைம்ஸ்' குறிப்பிட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவதற்குத் தயாரில்லை என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்த உரை வெளிப்படுத்தியிருப்பதாக அனைத்துலக நெருக்கடிக் குழுவைச் சேர்ந்த அலன் கீனன் தெரிவித்துள்ளார் என்றும் "நியூயோர்க் ரைம்ஸ்' தெரிவித்துள்ளது.
எனவே மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருக்கு மட்டும் இனச் சிக்கல் தீர்க்கப்பட மாட்டாது என்பது தெளிவாகிறது. பின் எதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை பேச வருமாறு அழைப்பு விடுகிறார் என்பது தெரியவில்லை.
வேறொரு ஜனாதிபதியாக இருந்தால் ஜெனீவாவில் நடைபெற இருக்கும் ஐக்கிய நாடுகள் .மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தில் சிறீலங்கா மீது அடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதில் கூறவேண்டிய சூழ்நிலையில் இந்த மாதிரி பேசியிருக்க மாட்டார்.
மகிந்த ராஜபக்ச உள்நாட்டு வெளிநாட்டு எதிர்ப்புக்களை சட்டை செய்வதாக இல்லை. அவற்றை தன்னால் முறியடித்து வெற்றிவாகை சூட முடியும் என்று நினைக்கிறார்.
இலங்கையில் தமிழர்களுக்கு சுயாட்சி உரிமை தேவையில்லை எல்லா இன மக்களும் சமத்துவமாக வாழலாம் என மகிந்த ராஜபக்ச உபதேசம் செய்வது உண்மையானால் வடகிழக்கில் சிங்களக் குடியேற்றம் அசுர வேகத்தில் நடைபெறுவது போல தென்னிலங்கையின் ஏன் தமிழர்கள் குடியேற்றப்படவில்லை?
சிங்களவர்களுக்கு கல்வீடு கட்டிக் கொடுக்கும் அரசு ஏன் தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கவில்லை? ஏன் அவர்களை அவர்களது சொந்த வீடு வாசல்களில் குடியிருத்தாமல் காடுகளில் வாழுமாறு விட்டிருக்கிறது?
வலிகாமம் வடக்கில் 30,000 மக்கள் கடந்த 28 ஆண்டுகளாக இடம்பெயர்ந்து நலன்புரி மையங்களில் வாழ்கிறார்கள். போர் முடிந்து நான்கு ஆண்டுகள் கழிந்த பின்னரும் ஏன் அவர்களை அவர்களது வீடுகளில் மீள்குடியமர்த்தவில்லை?
ஏன் அவர்களது வீடுகளை இராணுவம் இடித்துத் தள்ளுகிறது? ஏன் அவர்களது காணிகள் விரைவில் சுவீகரிக்கப்படும் என இராணுவ தளபதி மகிந்த ஹத்துருசிங்க கொக்கரிக்கிறார்? போர்தான் முடிந்து விட்டதே?
இந்த வாரம் யாழ்ப்பாணம் போன ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வலிகாமத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்களை சந்தித்த காட்சி காணொளியில் வெளிவந்தது. அந்த மக்கள் தங்கள் வீடுவாசல்களை திருப்பித் தருமாறு கெஞ்சினார்கள். ஜனாதிபதி என்ன பதிலளித்தார் என்பது தெளிவாகக் கேட்கவில்லை.
ஆனால் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த அந்த மக்கள் எலும்பும் தோலுமாக கந்தல் உடையில் காட்சி அளித்தார்கள். ஜனாதிபதிக்கு பக்கத்தில் நின்றிருந்த ஜனாதிபதியின் மதிமந்திரி டக்லஸ் தேவானந்தா மட்டும் வண்டியும் தொந்தியுமாக எதிர்மாறாக காட்சி தந்தார்.
போர் முடிந்து நான்கு ஆண்டுகள் கழிந்த பின்னரும் வட கிழக்கில் ஏன் இராணுவ ஆட்சி நீக்கப்படவில்லை? ஏன் ஆட்சிப் பொறுப்பு சிவிலியன் கைகளில் கொடுக்கப்படவில்லை?
வடக்கு மாகாண ஆளுநர் இராணுவத தளபதி ஜி.ஏ. சந்திரசிறீ என்ற ஒரு சிங்களவர். கிழக்கு மாகாண ஆளுநர் கடற்படைத் தளபதி மொஹான் ஜயவிக்கிரம. தென்னிலங்கையில் சிவிலியன்கள் ஆளுநர்களாக நியமிக்கப்படும் போது வட கிழக்கில் மட்டும் சிங்களவர், அதிலும் ஓய்வு பெற்ற சிங்கள தளபதிகள் ஏன் நியமிக்கப்படுகிறார்கள்? அந்தப் பதவிக்கு தகுந்த தமிழர்கள் இல்லையா? ஆனந்தசங்கரி போன்ற ஒத்துழைப்புத் தமிழர்கள் இல்லையா?
தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வவுனியா, மன்னார், திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் சிங்களவர்கள். ஏன்? எதற்காக? இதற்குப் பெயர் சமத்துவமா?
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் உட்பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இந்தப் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் ஏன் சிங்களவர்கள் கைது செய்யப்படுவதில்லை?
தமிழர்களுக்கு ஒரு சட்டம் சிங்களவர்களுக்கு இன்னொரு சட்டமா? அதற்குப் பெயர் சமத்துவமா?
வட கிழக்கில் நடைபெறும் அபிவிருத்திக் கூட்டங்களுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்படுவதில்லை. அவர்கள் தீண்டத்தகாதவர்கள் போல் நடத்தப்படுகிறார்கள். இதற்குப் பெயர் சமத்துவமா? அதனை நாம் நம்ப வேண்டுமா?
சிங்கள தேசிய கீதத்தை தமிழர்களது தொண்டைக்குள் வலுக்கட்டாயமாகத் தள்ளுவதற்குப் பெயர் சமத்துவமா?
பொத்துவில் - பொத்துவிலா, வாகரை - வாகரா, ஆனையிறவு - அலிமன்கடுவா, பரந்தன் - பரந்தேனா, இரணைமடு - ரணமடுவா, மணலாறு - வெலிஓயா, வவுனியா - வன்னிமவா, புளியங்குளம் - கொட்டியாவேவா, மாங்குளம் - மாயூரவேவா இப்படி 89 தமிழ் ஊர்ப் பெயர்களை சிங்களத்தில் மாற்றியதற்குப் பெயர் சமத்துவமா?
இந்திய - இலங்கை உடன்பாடு என்பது இரண்டு நாடுகளுக்கு இடையில் எழுதப்பட்ட உடன்பாடாகும். அதனை மகிந்த ராஜபக்ச ஒருதலைப்பட்சமாக நிராகரித்து விடமுடியாது. அப்படிச் செய்தால் அதற்கான விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும். ஏற்கனவே மகிந்த ராஜபக்ச பல நாடுகளது எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டு வருகிறார்.
தமிழர் சிக்கல் ஒரு புறம் இருக்க நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க மீது பழிவாங்கும் நோக்கோடு குற்றவியல் தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் அவசர அவசரமாக நிறைவேற்றி அதனடிப்படையில் மின்னல் வேகத்தில் விசாரணை நடத்தி அவரை மிகவும் கேவலமான முறையில் வீட்டுக்கு அனுப்பி வைத்த ஜனநாயகப் படுகொலையை பல நாடுகள் கண்டித்துள்ளன.
அவரை ஜனநாயகத்தை மற்றும் சட்டத்தின் மாட்சியை மதித்து நடக்கும் ஆட்சித் தலைவராக பல நாடுகள் பார்க்கவில்லை. சிறீலங்கா ஒரு இறைமையுள்ள நாடு அதில் ஐக்கிய நாடுகள் அவை உட்பட யாரும் தலையிட முடியாது என்ற வாதம் இன்றைய உலக ஒழுங்கில் செல்லுபடியாகாது.
மனித உரிமை சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள் வெளியிட்டுள்ள 18 பக்க அறிக்கை அவரது ஆட்சிமீது பாரதூரமான குற்றச்சாட்டுக்களை அடுக்கிக் காட்டியுள்ளது.
குடிபெயர்ந்த மக்களை மீள் குடியேற்றுவதில் முன்னேற்றம் காணப்பட்டாலும் மனித உரிமை மீறல் குறித்து நல்லிணக்க ஆணைக்குழு அளித்த பரிந்துரையின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
போர் முடிந்த பின்பும் தமிழர்கள் பலர் கடத்தப்பட்டுள்ளனர். சிலர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் பலரைக் காணவில்லை. இவை தொடர்பாக சிறீலங்கா அரசு மெத்தனமாகச் செயல்பட்டு வருகிறது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படும் என அரசு உறுதியளித்துள்ளது. ஆனால், இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை, அனைத்துலக அளவில், நம்பிக்கைக்குரிய, பாகுபாடு அற்ற விதத்தில் சுதந்திரமாக இருக்க வேண்டியது அவசியம் என நவநீதம்பிள்ளை தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படித்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணையம் செய்த பெரும்பாலான பரிந்துரைகளை சிறீலங்கா அரசு நடைமுறைப்படுத்தவில்லை என நவநீதம்பிள்ளை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பல முனைகளில் இருந்தும் மகிந்த ராஜபக்சவின் கழுத்தைச் சுற்றிப் பாசக்கயிறு இறுகுகிறதா? பொறுத்திருந்து பார்ப்போம்.
http://news.lankasri.com/show-RUmryCSZNXir1.html
Geen opmerkingen:
Een reactie posten